புதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019

லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

DIN | Published: 23rd April 2019 02:55 AM
நென்மேலி லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள்.


செங்கல்பட்டை அடுத்த நென்மேலி கிராமத்தில் பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இங்கு பிள்ளை இல்லாத தம்பதியருக்கு பெருமாளே பிள்ளையாக இருந்து ஈம காரியங்களைச் செய்து பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்ததாக ஐதீகம். இதனால் பித்ரு தோஷம் போக்கும் தலமாக இக்கோயில் கருதப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. இதையடுத்து, கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கான திருப்பணி அண்மையில் தொடங்கின.
அப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையொட்டி கடந்த 20ஆம் தேதி மாலை அனுக்ஞை, எஜமான சங்கல்பம், புண்யாஹவசனம், அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம் ஆகியவை நடத்தப்பட்டன.
இரவு கும்ப ஆராதனம், முதல் கால ஹோமம், முதல் கால பூர்ணாஹுதி, ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாகபூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல், மகா சாந்தி ஹோமம், மாலை மகா சாந்தி திருமஞ்சனம், இரவு 3ஆம் கால யாக ஹோமம், திங்கள்கிழமை காலை விஸ்வரூபம் புண்யாஹவாசனம், மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கும்பப் புறப்பாடும் நடத்தப்பட்டன. 
இதையடுத்து, கோயில் கோபுரக் கலசங்களுக்கு பட்டாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேககத்தை நடத்தினர். சாற்றுமுறை வழிபாடுகளுக்குப் பின் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி அன்னதானம் செய்யப்பட்டது.  
விழாவிற்கான ஏற்பாடுகளை சம்பத் பட்டாச்சாரியார், கோயில் விழாக் குழுவினர் மற்றும் நெம்மேலி கிராம மக்கள் செய்தனர். 
லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோயிலில் அமாவாசை திதிகளில் பெருமாளே தனது பக்தர்களின் முன்னோர்களுக்காக  விரதமிருந்து சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளை செய்வார் என்பது நம்பிக்கை. எனவே, இக்கோயிலில் மதியம் 12 மணி வரை மட்டுமே வழிபாடுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

 சித்தர்களின் பூமி என்றழைக்கப்படும் திருவாரூர் சித்தாடி சிவன்கோயில்!
காஞ்சிபுரம் சிவன் ஸ்தலங்கள்: 2. திருக்கச்சூர் விருத்திட்ட ஈஸ்வரர் மற்றும் ஒளஷதபுரீஸ்வரர்
சொர்க்கத்தை அடைய இதுவும் ஒரு வழி!
திருவாலங்காடு திருத்தலத்தில் உழவாரப்பணி
உண்டியல் காணிக்கை ரூ 3.92 கோடி