ராம்.. ராம்.. ராம் இன்று சொல்லவேண்டிய உயர்ந்த தாரக மந்திரம்!

ஒரு நாள் அக்பர், வேட்டை ஆடும் பொருட்டு அடர்ந்த வனம் ஒன்றிற்குச் செல்ல எண்ணம் கொண்டார். தன்னுடைய..
ராம்.. ராம்.. ராம் இன்று சொல்லவேண்டிய உயர்ந்த தாரக மந்திரம்!

ஒரு நாள் அக்பர், வேட்டை ஆடும் பொருட்டு அடர்ந்த வனம் ஒன்றிற்குச் செல்ல எண்ணம் கொண்டார். தன்னுடைய மந்திரியான பீர்பாலையும் தன்னோடு கானகத்திற்கு வரும்படி பணித்தார்.

இருவரும் ஒன்றாகக் கிளம்பி வனத்திற்குச் சென்றார்கள். வெகு நேரம் சுற்றித் திரிந்தும் வேட்டை ஆடும்படி ஒரு விலங்கும் அரசர் கண்களுக்குப் புலப்படவில்லை. பொழுதுதான் வீணானதே தவிர வந்த காரியம் கைகூடவில்லை.

அரசருக்கு ஏமாற்றம் மிகுந்தது. சுற்றி அலைந்ததில், காட்டிலிருந்து ஊர் திரும்பும் வழி தவறிப் போனது. இருவரும் வழி தேடும் படலத்தினை ஆரம்பித்தார்கள். கொடுமையான வனம். இதில் திக்கு திசை தெரியாமல் இருவரும் திண்டாடிப் போனார்கள். எல்லாவற்றையும் விடக் கொடுமையான பசி இருவரையும் வாட்டி வதைத்தது.

பீர்பால் அழகான அந்த வனத்தின் சூழலிலும், ரம்மியத்திலும் மனதைப் பறி கொடுத்தார். அழகை ரசித்துக் கொண்டிருந்ததில் பசி கூட சிறிது குறைந்தாற்போல் தோன்றியது.

ஒரு பெரிய விருட்சத்தின் கீழ் அமர்ந்து கொண்டார். இரு கண்களையும் மூடிய வண்ணம் 'ராம் ராம்' என்று ஜபிக்கத் தொடங்கினார். 

சக்கரவர்த்தி அக்பருக்கோ அதீத பசி வந்து விட்டது. எதைப் பற்றியும் கவலைப்படாத பீர்பாலைப் பார்த்தார். தன்னைத் தவிக்க விட்டு விட்டு பீர்பால் ஆண்டவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்ததை அவரால் சிறிதும் பொறுக்க முடியவில்லை.

அக்பர், மெதுவாக பீர்பாலை தொட்டு கூப்பிட்டார். 'எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைத்தால் சேகரித்துக் கொண்டு வாருங்கள், மந்திரியாரே' என்று கூறினார். ஆனால் பீர்பாலோ, 'என் வயிறுகூட வேண்டுமானால் உணவிற்கு ஏங்கலாம். ஆனால் என் உள்ளம் ராம நாமத்திற்காகத்தான் ஏங்குகிறது. எனக்கு உணவு வேண்டாம். என்னை விட்டு விடுங்கள்' என்று கூறினார்.

அரசருக்கு அசாத்திய கோபம் வந்து விட்டது. நாட்டின் அரசர் என்கிற எண்ணம் கூட அல்லாது ஜெபத்தில் மூழ்கிய பீர்பாலை நாட்டிற்குச் சென்ற பின் தண்டித்துக் கொள்ளலாம் என்று எண்ணிய அரசர், 'உன் உதவி எனக்குத் தேவை இல்லை. நானே என் வயிற்றுப் பாட்டினை கவனித்துக் கொள்கிறேன்' என்று சத்தம் போட்டு விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

ஏதாவது இளைப்பாற இடம் கிடைக்குமா என்று நினைத்த அரசரின் எண்ணம் வீண் போகவில்லை. தொலைவில் ஒரு வீடு தென்பட்டது. நடையை துரிதப்படுத்தி அவ்விடம் அடைந்தார். இல்லம் தேடி வந்த சக்கரவர்த்தியைக் கண்டு மனம் மகிழ்ந்த அவ்வீட்டினர், அவருக்கு அறுசுவையான உணவினை அளித்து பசிப் பிணியைத் தீர்த்தனர்.

என்னதான் பீர்பாலின்மேல் கோபம் இருந்தாலும், அவர் காட்டில் உண்ண உணவு இன்றி ஜபம் செய்து கொண்டிருப்பதை எண்ணிக் கலங்கினார். தன் பொருட்டு வந்த பீர்பாலுக்காக அவர்களிடம் இருந்து உணவைப் பெற்றுக் கொண்டார்.

மீண்டும் வனத்தை அடைந்த அரசர், தான் கொண்டு வந்த உணவை பீர்பாலிடம் கொடுத்துப் புசிக்க வைத்தார். பீர்பாலும் வயிறு நிரம்ப உண்டு முடித்தார். அதற்காகவே காத்திருந்ததுபோல், அரசர், பீர்பாலிடம், 'நான் சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் உமக்கு உணவு கிடைத்திருக்காது. நீங்கள் சொன்ன ராம நாமமா உங்களின் பசியை போக்கியது?' என்று கேட்டார்.

பீர்பால், கடகடவென்று சிரித்தார். 'அரசே ஒரு வேளை உணவிற்காக மகா பெரிய சக்கரவர்த்தியான நீங்கள் ஒரு சாதாரண பிரஜையிடம் யாசிக்க நேர்ந்து விட்டது. ஆனால், என் பிரபுவான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியானவர், எனக்குத் தேவையான உணவினை இந்நாட்டு அரசரிடமே கொடுத்து அனுப்பி இருக்கிறார். இதுதான் அரசே ராம நாமத்தின் மகிமை. புரிந்து கொண்டீர்களா?' என்றார். 

அதற்கு மேல் அக்பருக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை. வாயடைத்து நின்று விட்டார். ராம நாமத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. கலியுகத்தில் கூற வேண்டிய மந்திரமே ராம நாமம் தான். 

ஸ்ரீ' ராம ஜெயம்..! ஸ்ரீ ராம ஜெயம்..! நம்பியோருக்கு ஏது பயம்?' ஜெய் ஸ்ரீ ராம்.

ராம நவமியான இன்று ராம நாமத்தை ஜெபித்து வாழ்வில் அனைத்து வளங்களும் பெருவோமாக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com