யுகாதி பண்டிகை: விகாரி வருஷத்தில் தர்மம் தழைத்தோங்கச் செய்யும் சனைச்சர பகவான்!

தெலுங்குப் புத்தாண்டான யுகாதி பண்டிகை இன்று. தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டை யுகாதி..
யுகாதி பண்டிகை: விகாரி வருஷத்தில் தர்மம் தழைத்தோங்கச் செய்யும் சனைச்சர பகவான்!

அனைத்து தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்கும் யுகாதி தின நல்வாழ்த்துகள்!!

தெலுங்குப் புத்தாண்டான யுகாதி பண்டிகை இன்று. தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டை யுகாதி என்று கூறுவர். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவற்றாகக் கொண்டாடுகின்றனர். யுகத்தின் ஆரம்பத்தை யுகாதி என அழைக்கப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால் கூட மறுநாள் தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. எனவே வெள்ளிக்கிழமை மதியத்திலிருந்துதான் பிரதமை திதி வருவதால் சனிக்கிழமை யுகாதி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

சனிக்கிழமையின் நாயகனான வெங்கடாஜலபதி ஆட்சிபுரியும் திருப்பதியில் கோவில் உற்சவம் அனைத்தும் யுகாதி முதல் தொடங்கப்படுவது வழக்கம். யுகாதி தினத்தையொட்டி யுகாதி ஆஸ்தானம் என்னும் சிறப்பு வழிபாடு நடக்கும். கோவில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்படும். அதிகாலை மூலவர் ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், அபிஷேகம், தோமாலை சேவை நடக்கும். பின் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவர் மலையப்ப சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும் அதன் பின் ஜீயர் சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து வரும் பட்டு வஸ்திரம் சுவாமிக்கு அணிவிக்கப்படும். ஆஸ்தான பண்டிதர்கள் பஞ்சாங்கம் படித்து புத்தாண்டின் பலன் கூறுவர். கோவில்களில் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடக்கும். இன்று ராமாயணம் கேட்டால் புத்தாண்டு சுபிட்சமாக அமையும் என்பது நம்பிக்கை.

யுகாதி

சைத்திர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தைப் படைத்ததாகப் பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாகக் கருதப்படுகிறது. மேலும் சைத்திர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பைக் குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது

இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து உகாதி பச்சடி செய்வதிலிருந்து நாள் ஆரம்பிக்கிறது. உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும். உகாதி அல்லது யுகாதி  தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டு ஆகும். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவற்றாகக் கொண்டாடுகின்றனர். 

யுகாதி பச்சடி

யுகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்துச் செய்யப்படுகிறது. இந்த புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தைக் கன்னட மொழியில்பேவு பெல்லா என அழைப்பர்.

யுகாதியும் ஜோதிடமும்

சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் 0 டிகிரி புள்ளியில் இணைவதைத் தான் ஜோதிடத்தில் ‘யுகம்’ என்று குறிக்கின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் அதே ஆரம்ப இடத்தில் இணையும். ஆனால் சூரிய, சந்திர சுழற்சி நாட்காட்டியைப் பயன்படுத்துபவர்கள் முறையே சூரியன், சந்திரன் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் அந்த 0 டிகிரியைத் தொடும் தினங்களை அவரவர் வருடப் பிறப்பாகக் கொண்டாடுவர்.

ஜோதிட ரீதியாக சூரியன் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத பாஷைகளின் அதிபதியாகவும் செவ்வாய் தெலுங்கு தமிழ் மராட்டியம் ஆகிய மொழிகளின் அதிபதியாகவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும் அரசியல், அரசாங்கம் ஆகியவற்றின் காரகரும் சூரிய பகவானே! அந்த சூரிய பகவான் உச்சம் அடையும் இடம் செவ்வாயின் வீடு என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு பேசுபவர்கள் மற்றும் ஆந்திர மக்கள் செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகின்றனர். ஒல்லியான தேகம், முரட்டுத்தனம் கடின உழைப்பு, எளிதில் உணர்ச்சி வசப்படுவது, அதிக காரம் மிகுந்த உணவுகளை விரும்பி சாப்பிடுவது செவ்வாயின் காரக குணங்களாகும். 

தெலுங்கு வருடப்பிறப்பு எந்த தினத்தில் வருகிறதோ அந்த தினத்தின் கிரகம் அந்த வருடத்தின் ராஜாவாக அமைவார். இந்த வருடம் யுகாதி பண்டிகை ஜோதிட நாளான சனிக்கிழமையில் கர்ம காரகனான சனைச்சர பகவான் ஆதிக்கம் பெற்று அமைந்துள்ளது. எனவே விகாரி வருடத்தின் ராஜாவாக சனைச்சர பகவான் அமைந்துள்ளார். 

அதே போன்று சித்திரை மாதம் பிறக்கும் நாளின் அதிபதியே அந்த வருடத்தின் மந்திரியாகும். விகாரி வருடத்தின் தமிழ்ப் புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமையில் சூரியன் ஆதிக்கம் பெற்று அமைந்துள்ளது. அவ்வாறே சூரிய பகவான் விளம்பி வருட மந்திரியாவார். இந்த வருடத்தில் தந்தையும் மகனுமான சூரிய பகவானும் சனைச்சர பகவானும் தங்கள் பதவிகளைப் பரிவர்த்தனை அதாவது மாற்றிக்கொள்கின்றனர்.

வரும் விகாரி வருடம்  நீதி நேர்மை நிறைந்த ராஜாவும் அதிகாரமும் அரவணைப்பும் நிறைந்த சேவை மனப்பான்மை மந்திரியும் இனைந்து ஆளப்போகும் அற்புத வருடமாகும். எனவே மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மக்களுக்குப் பயன்படும் வகையில் பல நலத் திட்டங்களை நிறைவேற்றுவதை எதிர்பார்க்கலாம். 

மேலும் அரசியில் மாற்றங்களுக்கும் காரக கிரகங்கள் சூரியன் மற்றும் சனியாகும். எனவே அரசியல் மாற்றங்களை மனதில் கொண்டாடுவது பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்கூடாகக் காணலாம். புத்தாண்டையொட்டி தேர்தல் வருவதிலிருந்தே ராஜா சனைச்சரனும் மந்திரி சூரியனும் அரசியலில் நல்லதொரு மாற்றம் ஏற்படுத்தப் போவதை உணரலாம்.

தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் பலரும் அரசியலில் மாற்றத்தை நோக்கிக் காத்திருக்கின்றனர். தற்போது உள்ள ஆட்சியே தொடர வேண்டும் என ஒரு சாரரும், ஆட்சியாளர்களைச் சமாளிக்கமுடியாத நிலையில் ஆட்சி மாற்றம் வேண்டி ஒரு சாரரும் தேர்தலை ஆவலுடன் காத்திருக்கின்றனர். கர்ம காரகன் எனப்படும் சனைஸ்வர பகவானும் கால புருஷ ஒன்பதாமிடமான தனுர் ராசியில் வரும் ஜனவரி மாதம் வரை தனது பயணத்தைத் தொடர்கிறார். 

ராகு மிதுனத்திலும் கேது தனுர் ராசியிலும் தங்களது பயணத்தைத் தொடரும் நிலையில் பிறக்கும் விகாரி ஆண்டில் அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கலாம். கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளை ஆட்சியாளர்கள் திருத்திக்கொண்டு புதிய பலத்துடன் வியப்பூட்டும்படியாக இதுவரை அரசியலில் எதிர்பார்க்காத புதிய சாதனைகள் நிகழ்த்தி உலகளவில் நமது நாடு பேசப்படுவதோடு முன்னணியில் நிற்கும்படி செய்வர். இந்நாள்வரை தொல்லை கொடுத்துவந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். நேற்றுவரை பலராலும் இகழப்பட்டவரின் புகழ் எல்லாராலும் பேசப்படும். அரசியலுக்காகத் தெய்வங்களையும் மதங்களையும் விமர்சித்தவர்கள் முடிவுக்கு வருவார்கள்.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை பத்தாமிடம் இடம் உத்தியோக ஸ்தானமாகப் பார்க்கப்படுகிறது. அந்தவகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும், கர்ம காரகன் எனக் கூறப்படும் சனைஸ்வரன் அரசாங்க உத்தியோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும். சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள். இத்தகைய அமைப்பை ஜாதகத்தில் கொண்டவர்கள் இந்த ஆண்டில் கர்ம காரகனான ராஜா சனைச்சரனையும் அரசாங்க காரகரான மந்திரி சூரியனையும் வணங்கிவர அரசாங்க வேலை விரைவில் கிடைக்கும் என்பது நிதர்சனம்.

மண்ணினை குறிக்கும் கிரகம் சனீஸ்வரன் ஆவார். மண்ணினை குறிக்கும் நில ராசியான மகரத்தையும் மண் குடத்தினை (கும்பம்) ராசியாகக் கொண்ட கிரகமும் திருவாளர் பொதுஜெனம் என செல்லமாக அழைக்கப்படும் சனைச்சவரன் ஆவார். மண்ணிற்கு மாசு விளைவித்தவர்களை மண்ணைக்கவ்வச் செய்து மண்ணின் மகத்துவத்தை அனைவரும் உணரும் விதமாக இந்த விகாரி வருடம் அமையும்.

சனைச்சர பகவானின் அதிதேவதை சாஸ்தா என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மதம் பிடித்தவர்களால் தலைவிரித்து ஆடிய சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்திற்கு தர்ம சாஸ்தாவான ஸ்ரீ ஐயப்பனின் அருளால் நல்ல தீர்வு ஏற்படும். அந்நிய மதத்தினர் பலமிழந்து நிற்பார்கள்.  

மொத்தத்தில் விகாரி வருஷம் நீதி நேர்மையுடன் பொதுமக்களின் நலன் கருதி ஆட்சி புரிபவர்களுக்கு ஒரு நல்ல வருஷமாகவும் குடும்ப சொத்துக்களைப் பெருக்கிக்கொள்ள நினைப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கும் என்பது சர்வ நிச்சயம்!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com