சுய தொழில் மற்றும் கூட்டுத்தொழில் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!  

ஜாதகத்தில், 10-ம் வீடு என்பது மிக முக்கியமான வீடுகளில் ஒன்றாகும். ஒருவரின் வாழ்வென்பது, பிரதானமாக..
சுய தொழில் மற்றும் கூட்டுத்தொழில் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!  

1. ஜாதகத்தில், 10-ம் வீடு என்பது மிக முக்கியமான வீடுகளில் ஒன்றாகும். ஒருவரின் வாழ்வென்பது, பிரதானமாக 10 ஆம் வீட்டை மட்டுமே பொறுத்தது ஆகும். ஒருவரின், வேலை, வணிகம், அல்லது அவரின் சுய மற்றும் கூட்டுத்தொழில் பற்றி அறிய 10-ம் வீடு அவசியமாகிறது. ஒருவரின் வாழ்நாளில், பாதியைக் கழிப்பதும் / நேரத்தைச் செலவழிப்பதும் என்பது அவரவரின் வேலை / தொழில் / வணிகம் அனைத்தும் அவர்தம் வாழ்வு ஆதாரத்திற்காகவும், அவர்தம் குடும்பத்திற்கும் என்பது எள்ளளவும் சந்தேகத்திற்கு இடம் இல்லை. 

2. இந்த 10-ம் வீடு என்பது, தொழில் மட்டும் அல்லாது தாயாரின் மற்றும் தந்தையின் இறப்பைப் பற்றியும் கூறும். பழங்காலங்களில், ஒரு சில தொழில்களான, விவசாயம், சிற்பக்கலை, போதித்தல் / ஆசிரியர், அரசவையில் வேலைகள் (தற்போது அரசு உத்தியோகங்கள்), மருத்துவர், ஜோதிடர், போன்றவைகளே இருந்துவந்துள்ளன. தற்போது, பல துறைகளில் எக்கச்சக்கமான எண்ணிக்கையில் வேலை அளிப்பதற்காக, பலவிதமான வேலைகள், ஆயிரக்கணக்கான துறைகளில் சரிசெய்யப்பட்டு (CROPPED UP) உருவாக்கப்படுகின்றன. சொல்லப்போனால் தற்போதுள்ள இந்த சூழலில் அனுபவ ரீதியாக மிகக் கடுமையாக உணரப்படுகிறது. 

3. ஒரு ஜாதகருக்கு உகந்தது இது என, 10 வீட்டின் குறிப்புகளாலும், வேறு சில கிரக கூட்டு அமைப்புகளாலும், ஒருவரின் ஜாதகத்தில் காணத் தேவைப்படுகிறது. மிகச் சரியான, துல்லியமான, முறையில் பலன் கூறுவதென்றால், 2-ம் வீடு மற்றும் 6-ம் வீட்டையும், 10-ம் வீட்டோடு சேர்த்து ஆய்வு செய்வதினால் மட்டுமே, சரியாக வரும். 10-ம் அதிபதி மற்றும் 10-ல் உள்ள கிரகங்கள், எந்த நவாம்சத்தில் உள்ளது என்பதைக் காண்பதும் மிக முக்கியமாகிறது. தொழிலைப் பற்றி அறிய இரண்டு கிரக கூட்டமைப்பால் மட்டுமே ஒருவரின் ஜாதகத்தில் அறிய முடியும். கூட்டுத்தொழில் அறிய 7-ம் வீடும் தெரியப்படுத்தும். லக்கினத்திலிருந்து 10-ம் வீட்டை ஆய்வு செய்வதைத் தவிர, சில நேரத்தில், சந்திரன் நின்ற ராசிக்கு, 10-ம் வீட்டையும், ஆய்வு செய்தால், அதுவும் சில தொழில் சார்ந்த தகவல்களை நமக்கு அறிவிக்கும். 

4. ஒவ்வொரு கிரகமும் 500-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு துறையில் ஓர் சிலவற்றைத் தனது கட்டுப்பாட்டில்  வைத்திருக்கும். ஆதலால், ஒரு ஜோதிடர் ஒவ்வொரு ராசிக்கான தொழில் மற்றும் ஒவ்வொரு கிரகத்திற்கான தொழிலை அறிந்து வைத்திருப்பதோடு, அவற்றை ஆராய்ந்து வெளிக்கொணர்தல் அவசியமாகிறது. எனவே, நேரம் மட்டுமன்றி பொறுமையும் அவசியம் என்பதைப் பலன் காண வருபவரும் அறிந்திருத்தல் நன்று. 

5. உதாரணத்திற்கு, மருத்துவத் துறையை எடுத்துக்கொண்டால், சூரியன்-பொது மருத்துவத்தையும் மற்றும் இதய சம்பந்தமான துறையையும், சனி - தோல் மற்றும் எலும்பியல் மருத்துவத் துறையையும், புதன் - குழந்தை மருத்துவத்துறை மற்றும் நரம்பியல் துறையைக் குறிக்கும். சுக்கிரன் - குழந்தை பேறு மருத்துவத்துறையைக் குறிக்கும். 

இவை அனைத்தையும் மனதிற்கொண்டு, ஒரு ஜாதகரின் தொழிலைப் பற்றி அறிய ஆய்வு செய்வது ஒரு ஜோதிடருக்கு அவசியமாகிறது. இங்கு கூறவேண்டியது என்ன வென்றால், இது சம்பந்தமாக நிறைய தர்க்கம் (LOGIC) புரிவதோடு, சரியான முறையில் தொடர்புடையதாக ஆய்வு செய்து, ஒவ்வொருவருக்கான தொழிலை நிச்சயம் செய்வது, ஒரு அனுபவம் வாய்ந்த, ஜோதிடரின் கடுமையான பணியாகும். இதற்கு கால அவகாசமும், நிறைய ஆய்வும் தேவைப்படும். 

6. அனைவரும் புரியும் வண்ணம், ஒரு உதாரண ஜாதகத்தைக் காண்போம். ஒரு ஜாதகரின், ஜனன கால ஜாதகத்தில், சூரியன் 10 ஆம் வீட்டோடு தொடர்பு கொண்டிருப்பின், அவர் அரசியல்வாதியாகவோ அல்லது அரசாங்க ஊழியராகவோ அல்லது மருத்துவராகவோ முடியும் எனலாம். சனியானது, 10 ஆம் வீட்டோடு தொடர்பு கொண்டு சூரியனுடன் இணைய நேரிட்டால், ஒரு முக்கியமான புள்ளியை / விதியை கருத்தில் கொள்ளவேண்டும். அதாவது, சூரியனும், சனியும் நேர் எதிர் குணம் கொண்ட ஒன்றுக்கு ஒன்று பகை கிரகங்களாகும் என்பதனை. 

7. சூரியன் உச்சம்பெறும் மேஷ ராசியில், சனி நீச்சம். அது போல் சனி உச்சம் பெறும் துலாத்தில் சூரியன் நீச்சம். இந்தத் தகவலை, கருத்தில் கொண்டு, ஒருவரின் ஜாதகத்தில், 10-ஆம் வீடு மேஷமாக வருகிறது என்றால், மற்றும் சூரியன், சனியுடன் மிக அருகாமையில் இணைந்து இருப்பதாக, அமைந்தால், நாம் பின் வரும் விருப்பத்தை (OPTIONS) காண வேண்டும். இதில் ஒரு பணியைத்தான் அந்த ஜாதகர் செய்ய நேரிடும். 

1. சூரியன், சனி மேஷத்தில் ஒரு மருத்துவரை உருவாக்கும். 

2. ஆனால், சனியின் நீச்ச அமைப்பால், சூரியன் தனது சக்தியை இழந்து, ஒரு நர்சிங் உதவியாளராக, ஒரு மருத்துவரிடம் அல்லது ஒரு கிராமப்புற மருத்துவர் (குறைந்த சுய விலாசத்தை உடையவராக/ LOW PORTFOLIO) அல்லது ஒரு அரசுத்துறையில் உதவியாளராக பணியை உருவாக்கும். 

3. அதே சூரியன் மேஷத்தில் மற்றும் சனி துலாத்தில் இருப்பின், இரு கிரகங்களும் உச்ச நவாம்சம் பெறுவதால், இந்த அமைப்பு எலும்பியல் நிபுணராக உருவாக்கும். ஏனெனில், சூரியன் - மருத்துவம்; சனி - எலும்புக்கு காரகர் என்பதால். மறுபடியும் இது ஒரு மேலெழுந்தவாரியான தகவலே அன்றி, உறுதிப்படுத்த மேலும் ஒரு ஜோதிடருக்கு ஆய்வு தேவைப்படுகிறது.  

8. சில ஜோதிடர்கள் கூறியது போல் நடக்கிறது என்று சொல்பவர்கள் பலருண்டு. ஆனால், அவர்கள் கூறியது போல் மருத்துவத்துறையில் பயின்று, மருத்துவராகி, அதில் சரியாக கால் பதிக்க முடியாமல் திணறி, அதனை அப்படியே பாதியில் விட்டுவிட்டு வேறு பாதையில் சென்றவர்களையும், காணமுடிகிறது. எது எப்படி இருப்பினும், ஜோதிடம் என்பது ஒரு கடல், அதில் முத்து எடுப்பது என்பது சிரமம் தான், என்பதனை, இக்கட்டுரையைப் படிப்பவர்கள், உணர வேண்டும்.

9. ஒரு ஜாதகத்தில், 10-ம் வீட்டில் ஒரு கிரகமாவது, அதாவது ஒரு பாப கிரகமாவது நிற்பது நல்லது என ஜோதிட மூல நூல்களில் கூறப்பட்டுள்ளது. 10-ம் அதிபதி, அம்சத்தில் எந்த வீட்டில் இருக்கின்றாரோ, அந்த வீட்டின் அதிபதி எந்த நட்சத்திரத்தில் வீற்றிருக்கின்றாரோ, அந்த நட்சத்திர அதிபதி, இவர்களுள் யார் பலம் பெற்றுள்ளாரோ, அவரது காரகத்துவத்திற்கான தொழிலை மட்டுமே ஒரு ஜாதகர், நிர்ணயம் செய்தல் சிறப்பு. ஒரு வேலை கிடைப்பதற்கும் ஒரு சில பாவத்  தொடர்புகளை (2,6,10,11) கொண்டு, நிர்ணயம் செய்ய முடியும்.

அதேபோன்று, வேலையை இழப்பதற்கும் பாவத் தொடர்புகளை (1,5,9,12) கொண்டும், இழந்த வேலையைத் திரும்பப் பெறுவதற்கும், பாவத்தொடர்பு 1,5,7,11 தொடர்பு பெற்று இருத்தல் அவசியமாகிறது. இதுபோன்று பாவத் தொடர்புகளை, தசை புத்தி காலங்களுக்கும், கோசார நிலைகளுக்கும் கண்டு முடிவெடுப்பது சரியாகும். இக்கட்டுரை, ஒரு முன் அறிவித்தலுக்கே அன்றி, முழுமையான ஜோதிட வகுப்போ அல்லது பலன் காணுதலுக்கோ உதவாது. ஜோதிடத்தின் மேல் ஆர்வம் வளருவதற்கும், மென்மேலும் கற்பதற்கும் இது உதவுமென, நான் கருதுகிறேன். 

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு - 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com