கோடைக்கால உணவுகள்: இளநீர் குடிச்சா இவ்வளவு நன்மைகளா? சுக்கிரன் கூறும் ரகசியங்கள்!

ஏப்ரல் தொடங்கும்போதே, கோடையும் அதிரடியாகத் தொடங்கி இப்போதே வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்துவிட்டது
கோடைக்கால உணவுகள்: இளநீர் குடிச்சா இவ்வளவு நன்மைகளா? சுக்கிரன் கூறும் ரகசியங்கள்!

ஏப்ரல் தொடங்கும்போதே, கோடையும் அதிரடியாகத் தொடங்கி இப்போதே வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்துவிட்டது. போதிய மழை இல்லாமல், வெயில் தலைகாட்ட முடியாத அளவுக்குக் கொளுத்திக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் வறட்சி மிகுந்த நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டோடு கோடைக்கால நோய்களையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளும், வயதானவர்களும், நோயாளிகளும் இப்போதே வெயிலின் கொடுமையால் வதங்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால் இந்த கோடை வெயில் பாதிக்காத அளவிற்கு எல்லோருமே ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

கோடைக் காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். கோடைக்காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சூழலில் ஏற்படும் அதிக வெப்பம், குழந்தைகளைப் பாதித்து உடலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதேபோல் வயதானவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்து, மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

குழந்தைகளுக்கு நீர்ச்சத்துள்ள ஆகாரத்தை அதிகளவில் தரவேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் தரவேண்டும். சுகாதாரமாக இருக்க வேண்டும். சுத்தமில்லாமல் தயார் செய்யப்படும் உணவு வகைகளை வாங்கி தரக்கூடாது. குழந்தைகளைத் தினமும் இருமுறை குளிக்க வைக்கலாம். பருத்தி ஆடைகளை அணிவிக்கலாம். இளநீர், பழரசங்கள், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு, தர்ப்பூசணி தரலாம். 

கோடைக்காலத்தில் ஏற்படும் நோய்கள்

வெப்ப தளர்ச்சி நோய்
மனித உடலின் இயல்பான வெப்பநிலை வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, இயல்பு நிலையிலிருந்து அதிகமாகிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும், களைப்பு உண்டாகும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

சிறுநீர்க் கடுப்பு

கோடையில் பல பேருக்கு அதிக அளவில் தொல்லை தருவது சிறுநீர்க் கடுப்பு. தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது, அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. குடிக்கும் தண்ணீரின் அளவு குறையும்போது உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடுகிறது. இதன் விளைவால் சிறுநீரின் அளவும் குறைந்துவிடும்.

வியர்க்குரு
கோடையில் சுற்றுப்புற வெப்பநிலை சர்வசாதாரணமாக 40-லிருந்து 45 டிகிரியைத் தொடுகிறது. அப்போது உடலைக் குளிர்விக்க வழக்கத்தைவிட, மூன்று மடங்கு வியர்வை சுரக்கிறது. இந்த வியர்வையை அவ்வப்போதுத் துடைத்து உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும்.

அம்மை நோய்கள்

கோடை வெப்பத்தால் நிலம் உஷ்ணம் அடையும்போது குப்பை, கூளங்களில் குடியிருக்கும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்றின் மூலம் பரவுகின்றன. இவற்றில் ஒன்றுதான் 'வேரிசெல்லா ஜாஸ்டர்' எனும் வைரஸ் கிருமிகள். இந்தக் கிருமியால் நமக்குச் சின்னம்மை ஏற்படுகிறது. அந்நோய் வந்து குணமான பின்னரும் சிலருக்கு இந்த நோய்க் கிருமிகள் நரம்புகளில் தங்கி, பல ஆண்டுகள் கழித்து 'அக்கி அம்மையை ஏற்படுத்தும். இதுபோல் மீசில்ஸ் வைரஸ், தட்டம்மை நோயை ஏற்படுத்தும். 

கோடைக்கால நோய்களுக்கான ஜோதிட தொடர்புகள்

இந்த கோடையில் ஏற்படும் நோய்களுக்கும் ஜோதிடத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா எனப் பார்த்தால் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது. கோடையில் ஏற்படும் நோய்களுக்கு முக்கூட்டு கிரகங்களான சூரியன்-புதன்-சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களோடு செவ்வாயும் சேர்ந்து அதிக விளைவுகளை ஏற்படுத்தினாலும் அனேக வியாதிகளுக்கு சுக்கிரனே காரண கிரகமாக அமைந்துள்ளது.

1. கோடைக்காலத்தில் உடம்பில் நீர்ச்சத்தின் அளவு குறையும்போது காய்ச்சல் ஏற்படுகிறது. உடம்பிலுள்ள நீர்ச்சத்திற்கும் உஷ்ண காய்ச்சலுக்கும் சுக்கிரனே காரக கிரகம் என்கிறது மருத்துவ ஜோதிடம்.

2. கால புருஷனுக்கு ஏழாம் வீடாகிய துலாம் ராசி சிறுநீரகம் சம்பந்தமான வியாதிகளை குறிக்குமிடமாகும். எனவே ஒருவர் ஜாதகத்தில் துலா ராசியில் கிரகங்கள் இருக்கும் நிலையைக் கொண்டும் சுக்கிரன் ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் நிலையைக் கொண்டும் ஒருவரது சிறுநீரக பிரச்னைகளை அறிய முடியும்.

3. கோடைக்காலத்தில் பலருக்கும் அடிக்கடி சிறுநீரக கோளாறுகள், மூத்திர அடைப்பு, நீர்ச் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுகின்றது. இதனால் உடலிலுள்ள கழிவுகள் வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது. சிறுநீரகத்தின் வழியாக வெளியேறமுடியாத கழிவுகள் வியர்வை துவாரங்களின் வாயிலாக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவ்வாறு கழிவுகள் வெளியேற முடியாத நிலையில் அவை சருமங்களில் கொப்புளம், அம்மை, அக்கி போன்ற தோல் நோய்களை ஏற்படுத்தி விடுகிறது. எனவே பலவிதமான சரும நோய்களுக்கு சுக்கிரன் காரக கிரகமாகின்றது.

4. தலையில் படும் நேரடி வெயிலினால் (சூரியன்) மூளை நரம்புகள் பார்வை நரம்புகள் போன்றவை பாதிக்கப்பட்டு பித்தம் அதிகரித்த நிலையில் சந்திராவர்த்தம், சூரியாவர்த்தம், ஒற்றைத் தலைவலி (Migraine) மற்றும் பார்வை கோளாறுகள் (சுக்கிரன்), முடி கொட்டுதல் (சுக்கிரன்) ஏற்படுகின்றது.

கோடை நோய்களுக்கான தீர்வு இளநீர்

கோடை நோய்களுக்குக் காரக கிரகமான சுக்கிரனே அதற்கான தீர்வையும் காட்டுகிறார். கோடை நோய்களைத் தவிர்க்க சுக்கிரனின் அம்சமான சுத்தமான குடிநீரை நிறையக் குடித்துவந்தாலே பல பல வியாதிகளைத் தவிர்த்துவிடலாம் என ஆயுர்வேதமும் மருத்துவ ஜோதிடமும் கூறுகிறது. மேலும் இரண்டுமுறை குளித்து சுத்தமான பருத்தி ஆடைகள் அணிவதும் கோடைக்கால சரும நோய்களைத் தவிர்க்க வழிசெய்கிறது. இன்று பலரும் தாகமெடுக்கும்போதெல்லாம் ரசாயனம் கலந்த பன்னாட்டுக் குளிர் பாணங்களை (சுக்கிர ராகு சேர்க்கை) பருகி உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்வதோடு காசையும் விரயமாக்கி வருகின்றனர். 

இயற்கை நமக்களித்த பலவித செல்வங்களில் ஒன்று இளநீராகும். முற்றிய நிலையான தேங்காய் குருவின் அம்சமாகும். அதனால்தான் அதனைப் பூஜைகளில் பயன்படுத்துகின்றனர். ஆனால் இளநீரின் காரகர் சுக்கிர பகவானாவார்.

ஜோதிடத்தில் இளநீருக்கும் சுக்கிரனுக்கும் உள்ள தொடர்புகள்

கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனிதக் குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. சுத்தமான, சுவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும். குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் (காரகர் சுக்கிரன்) இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.

இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். ஜோதிடத்தில் சாதாரண நீருக்கு சந்திரன் காரகர் ஆவார். சுவைமிகுந்த நீர் மற்றும் குளிர்பாணங்களுக்கு சுக்கிரனும் காரகர் ஆவார்.

சிறுநீரக நோய்களைக் குறிப்பிடுவது காலப்புருஷனுக்கு ஏழாம் வீடு மற்றும் சுக்கிரனின் வீடான துலா ராசியும் அதன் அதிபதியும் ஆகும், சிறுநீரக செயல்பாடு சீர்குலையும் போது உடலிலுள்ள அசுத்தங்கள் வியர்வை வழியாக வெளியேறுவதால் தோல் நோய்கள் ஏற்படுகிறது. சுக்கிர காரகம் பெற்ற தோல் நோய்களுக்கு இளநீர் ஒரு மருந்தாக அமைவது விந்தையிலும் விந்தையாகும். சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது. இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தைச் சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் (அதிபதி சுக்கிரன்) என்று ஆயுர்வேதம் கூறுகிறது. 

ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தைச் சரிசெய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும். ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாகக் காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியோர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.

இளநீர் மிகச் சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.

இளநீர் ஒரு பணப்பயிராகும். ஜோதிடத்தில் பணம், காசு, வங்கி போன்றவற்றின் காரகர் சுக்கிரன் என்பதும் சுக்கிரனின் அதிதேவதை மஹாலக்ஷ்மி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இத்தனை சிறப்புமிக்க இளநீரைப் பருகாமல் கண்ட கண்ட ரசாயனங்களும் நிறமிகளும் சேர்த்த குளிர்பானங்களைக் குறைந்த விலை எனக் கருதி வாங்கி பருகுவது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றதாகும். சுக்கிரனின் ரிஷப லக்கத்தைக் கொண்ட விவசாய நாடான நமது நாட்டில் இயற்கையாக விளையும் இளநீரைப் பருகி கோடையை குளுகுளு கோடையாக மாற்றுவோம்.

தென்னையை பெத்தா இளநீரு! பிள்ளையை பெத்தா கண்ணீரு என்று சும்மாவா பாடி வைத்தார்கள் பெரியோர்கள்!
 
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com