திருமால் ஆமை வடிவம் எடுத்து இறைவனை வழிபட்ட திருத்தலம்!

திருக்கோயில்களுக்குச் சென்று நமக்கு நல்வாழ்வு அளிக்கும் இறைவனைப் போற்றி வழிபடுகின்றோம்.
திருமால் ஆமை வடிவம் எடுத்து இறைவனை வழிபட்ட திருத்தலம்!

திருக்கோயில்களுக்குச் சென்று நமக்கு நல்வாழ்வு அளிக்கும் இறைவனைப் போற்றி வழிபடுகின்றோம். நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும், மலர் மாலை  அணிவித்தும் மகிழ்ச்சி அடைகிறோம். 

பெருமாள் கோயிலில் திருமாலுக்கு பட்டாடை, அழகிய ஆபரணங்கள், மலர் மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்வார்கள். இதனால் பெருமாளை அலங்காரப்பிரியர் எனக் கூறுவர். ஆனால்  சிவபெருமான் அபிஷேகப்பிரியர், நாள்தோறும் பலமுறை அவருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். ஆண்டுதோறும் அவருக்கு நடைபெறும் ஆறு அபிஷேகங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். 

மேலும், அவர் தனது சடையில் கங்கையைத் தாங்கியிருக்கிறார். எனவே சிவபெருமானை "சடையிடைப் புனல் வைத்தசதுரன்" என்றும், "புனலாடிய புன் சடையாய்" என்றெல்லாம் திருமுறைகள்  போற்றுகின்றன. 

மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாள் சிவபெருமானுக்கு உகந்த நாள் ஆகும். இந்நாட்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பொருட்களால் அபிஷேகம் செய்ய வேண்டும் என 'புட்ப விதி' என்ற  தருமையாதீன நூல் கூறுகிறது. ஐப்பசி மாதத்தில் அன்னத்தினால் அபிஷேகம் செய்யப்பட வேண்டும் என அந்நூல் கூறுகிறது. அன்னத்தினால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் அரசவாழ்வு  கிடைக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது. மேலும், அண்ணாமலைச் சதகம் என்ற நூலில் ஒரு பாடலில் சிவபெருமானுக்கு என்னென்னப் பொருட்களில் அபிஷேகம் செய்ய வேண்டும் எனக்கூறும் பொழுது  அன்னாபிஷேகமும் இடம் பெறுகிறது. 

ஐப்பசி மாதம் பௌர்ணமி நாள் அன்று அனைத்து சிவாலயங்களில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் சிறப்பான நடைபெறுகிறது. குறிப்பாக கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் நடைபெறும் அன்னாபிஷேகம் மிகச் சிறந்ததாக விளங்குகிறது. பச்சரியைக் கொண்டு தயாரிக்கப்படும் சுத்த அன்னத்தினால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். இவ்வாறு செய்யப்படும் அன்னத்தின் ஒரு பருக்கையும் (திவலை) சிவலிங்கம் போன்றே காட்சி அளிக்கிறது. மனிதன் மற்றும் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தடையில்லாது உணவு கிடைக்க வேண்டி இத்தகைய சிறப்பான  அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. 

இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தைத் தரிசிப்பவர்கள் இப்பிறப்பில் எல்லா நன்மைகளை அடைவதுடன், பிறவிப் பிணியிலிருந்து விடுபடுவார்கள் என்று பேரூர் புராணம் கூறுகிறது. இறைவழிபாடு முடிந்தவுடன் அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தினை அனைவருக்கும் வழங்கிவிடுவார்கள். 

தானத்தில் சிறந்தது அன்னதானம் ஆகும். அன்ன பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் எனச் சிறப்பித்துப் போற்றப்படுகின்றது. இங்கு வழிபாட்டில் இருக்கும் ஸ்படிகலிங்கத்திற்கு நாள்தோறும் அன்னத்தினால்  அபிஷேகம் நடைபெறுகிறது. இறைவனுக்கு நாம் பல்வேறு அமுதுகள் செய்து படைத்து வழிபடுகிறோம். ஆனால் இறைவனது அடியார்களுக்கு அன்னம் படைப்பது மேலும் சிறந்ததாகும். தமிழகத்தில்  இன்று பல திருக்கோயில்களில் அன்னதான திட்டத்தின்படி அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

பண்டையக்காலத்தில் திருக்கோயில்களுக்குத் தலயாத்திரையாக வழிபட வருவோர்க்கு கோயில்களில் உணவு அளிக்கப்பட்டது. இதனை "சட்டிச்சோறு" எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 

நமது சமய வரலாற்றில் அடியவர்களுக்கும், இறைவனுக்கும் அமுது படைத்து சிறப்புப் பெற்றவர்களைப் பற்றி அறிந்து கொள்வோம். திருமங்கையாழ்வார் நாள்தோறும் பல வைணவ அடியார்களுக்கு அமுதுபடைத்து இறை அருள் பெற்றதை அவர் வரலாறு மூலம் அறிகிறோம். சைவ நாயன்மார்களில் இளையான்குடிமாற நாயனார், அமர்நீதி நாயனார், அப்பூதி அடிகள், மூர்க்க நாயனார், கலிகம்ப நாயனார், இடங்கழி நாயனார் போன்றவர்கள் இறைவனது அடியார்களுக்கு அன்னம் படைத்து இறை அருள் பெற்றனர். ஒருமுறை பஞ்சம் வந்து துன்பப்படும்பொழுது இறை அருளால் பலிபீடத்தில்  வைக்கப்பட்ட காசினை எடுத்து ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் அடியவர்களுக்கு அமுது படைத்ததாக திருவீழிமிழலை திருக்கோயில் தலவரலாறு கூறுகிறது. 

இறைவனுக்கு அமுது படைத்து புகழ்பெற்றவர் சிலர். கண்ணப்ப நாயனார், சிறுதொண்டர், அரிவாட்டநாயனார் ஆகியோர் இறைவனுக்கே அமுது படைத்து மங்கா புகழ்பெற்று விளங்குகின்றனர். 

தனது அடியவர்கள் பசியால் துன்பப்பட்டபொழுது இறைவனே தானே அவர்களுக்காக உணவு பெற்று வழங்கிய வரலாறும் உண்டு. திருச்சிக்கு அருகே உள்ள திருட்பைஞ்ஞீலி கோயிலுக்கு நாவுக்கரசர் பெருமான் வருகிறார். நடந்து வந்த களைப்பு பசியால் மிகவும் துன்பப்படுகிறார். சிவபெருமான் அவருக்காக உணவு பெற்று அளித்தார். இறைவனின் எல்லையில்லா கருணைக்கு எடுத்துக்காட்டாக  இந்நிகழ்ச்சி விளங்குகிறது. சித்திரை மாதத்தில் இத்திருக்கோயிலில் 'அப்பர் கட்டமுது விழா' சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதோபோன்று சுந்தரர் பெருமாளுக்கு சீர்காழிக்கு அருகில் உள்ள  திருக்குருகாவூர் என்ற தலத்தில் அமுதும், நீரும் இறைவன் அளித்தால். இதனை சுந்தரர் பெருமான் பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் என்று தமது திருப்பதிகத்தில் போற்றுகின்றார்.  ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பௌர்ணமியில் இக்கோயிலில் 'கட்டமுது விழா' சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

திருக்கச்சூர் திருக்கோயில்: சென்னைக்கு அருகே உள்ள திருக்கச்சூர் கோயிலிலும் பசியால் வாடிய சுந்தரர் பெருமானுக்கு இறைவன் வீடுவீடாகச் சென்று அமுது கேட்டு பெற்று அவரது பசியைப் போக்கினார். தனது பக்தனுக்கு ஏற்பட்ட துன்பத்தினைப் போக்கிய பெருமை உடையது திருக்கச்சூர் திருக்கோயிலாகும். பசியைப் போக்கிய நிகழ்ச்சியினை வள்ளலார் பெருமானும் தமது பாடலில்  போற்றுகின்றார். 

சென்னை - செங்கற்பட்டு சாலையில், சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீ பெரும்பதூர் செல்லும் வழியில் 2 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. திருமால் ஆமை வடிவம் எடுத்து  இறைவனை வழிபட்டதால் திருக்கச்சூர் என அழைக்கப்படுகிறது. சுந்தரருக்கு இறைவன் அமுது பெற்று வழங்கியதால் இங்கு இறைவன் "விருந்திட்ட ஈசன்" "இரந்திட்ட ஈசன்" எனச் சிறப்பு வழிபாடுகள்  நடைபெற்று வருகின்றன. இத்திருக்கோயிலிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com