பச்சிளங்குழந்தைகளைக் குறிவைக்கும் நிமோனியா காய்ச்சல்! பாலாரிஷ்ட தோஷ பரிகாரம் அவசியம்!

பச்சிளங்குழந்தைகளைக் குறிவைக்கும் நிமோனியா காய்ச்சல்! பாலாரிஷ்ட தோஷ பரிகாரம் அவசியம்!

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கியுள்ள நிலையில்..

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கியுள்ள நிலையில் வங்கக் கடலில் கஜா என்ற புயல் உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை மற்றும் குளிர்காலத்தில் ஏற்படும் நோயான நிமோனியா பரவும் சாத்தியக் கூறுகள் அதிகம். பச்சிளம் குழந்தைகளையே பெரும்பாலும் தாக்கும் ஒரு கொடிய நோய் நிமோனியா. இது சாதாரண காய்ச்சல் போலத் தெரிந்தாலும், இதன் தாக்கம் அதிகம். நிமோனியா சில சமயம் பெரியவர்களையும் ஆட்டிப்படைக்கும். நிமோனியா காய்ச்சலின் பாதிப்புகளையும் அதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிகளையும் நமக்கு நினைவூட்டும் விதமாக 'நிமோனியா தினம்' நவம்பர் 12-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

காற்றின் மூலமாக நுரையீரலில் சில கிருமிகள் பரவுவதால் ஏற்படும் ஒருவகைத் தொற்று இது. இந்தக் கிருமிகள் நுரையீரலைத் தாண்டி, ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் பரவிவிடும் ஆபத்து இருக்கிறது. இதனால், அதிகக் காய்ச்சல் ஏற்படும். ஆரம்பத்தில் சாதாரண சளித் தொந்தரவு போலத் தோன்றினாலும், தொடர்ந்து காய்ச்சல், இருமல், நெஞ்சு வலி, மூச்சுவிடுதலில் சிரமம் ஆகியவை ஏற்பட்டு, கிருமிகளின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல் போய், பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கவலைக்கிடமாக்கிவிடும்.

இருமல், காய்ச்சல், வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத் திணறல், உதடுகள் வெளிறிப்போதல் அல்லது நீலம் பூத்தல், நடுக்கத்துடன் குளிர், நெஞ்சு வலி, பசியின்மை, சோர்வு, சாப்பிட இயலாமை, இவை எல்லாம் நிமோனியாவின் அறிகுறிகள் ஆகும்.

போதுமான காலம் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், சத்துக் குறைபாடு, குறிப்பாக 'வைட்டமின்' ஏ குறைபாடு உள்ள குழந்தைகள், பிறக்கும்போதே எடைக் குறைவுடன் பிறக்கும் குழந்தைகள், அதிக நெருக்கடியான பகுதிகளிலும் மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், சிகரெட், விறகு அடுப்பு போன்றவற்றில் இருந்து வரும் புகையை அதிகமாக சுவாசிக்கும் குழந்தைகள் ஆகியோரை நிமோனியா தாக்கும். பெரியவர்களையும் நிமோனியா தாக்கும். புகை மற்றும் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தவர்கள், சர்க்கரை நோய் மற்றும் எய்ட்ஸ் உள்ளவர்கள் ஆகியோர் நிமோனியா தாக்குதலுக்கு ஆளாகக்கூடும். மாசுபாடான காற்றை சுவாசித்தாலும் நிமோனியா நோய் தாக்கும்.

நிமோனியா காய்ச்சலுக்குக்காண ஜோதிட காரணங்களும் பரிகாரங்களும்

நுரையீரல் அழற்ச்சி எனும் நிமோனியா, நுரையீரல் கிருமி தொற்றால் ஏற்படும் ஒரு காய்ச்சல் நோயாகும். இதன் காரக கிரஹம் புதன் மற்றும் சனியாகும். மேலும் காரக பாவம் தொண்டை மற்றும் நுரையீரலைக் குறிக்கும் காலபுருஷனுக்கு மூன்றாம் பாவமான மிதுனம் மற்றும் ஜெனன ஜாதக மூன்றாம் பாவமாகும்.

காய்ச்சலுக்கான காரக கிரஹங்கள்
மருத்துவ ஜோதிடத்தில் காய்ச்சல் எனப்படும் ஜ்வரத்தை மூன்று வகையாகப் பிரித்து கூறுகின்றனர். அவை:

வாத ஜ்வரம் - உடல் வலியுடன் கூடிய காய்ச்சல்

பித்த ஜ்வரம் - தலைவலி மற்றும் வாந்தியுடன் கூடிய  காய்ச்சல்

கப ஜ்வரம் - ஜலதோஷம், சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல்

வாத ஜ்வரத்திற்கு சனைச்வர பகவானும், பித்த ஜ்வரத்திற்கு செவ்வாய் மற்றும் சூரியனும், கபஜ்வரத்திற்கு சந்திரன் மற்றும் சுக்கிர பகவானும் காரகத்துவம் வகிக்கின்றனர். என்றாலும் சனைச்சர பகவானும் குளிர்ச்சி மற்றும் கபத்திற்கு காரகம் வகிப்பதால் சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்களோடு சனி சேரும்போது தீவிரமான கப ஜ்வரம் ஏற்படுகின்றது.

நிமோனியா காய்ச்சலின் அறிகுறிகளைக் கொண்டு பார்க்கும் போது தொண்டை அழற்ச்சி நோயைத் தொடர்ந்து ஏற்படும் கப ஜுவரத்தின் தன்மைகள் கொண்டதாக காணப்படுகின்றது.
 
நிமோனியா காய்ச்சலுக்கான கிரஹ நிலைகள்

1. தொண்டை மற்றும் நுரையீரலின் காரக கிரஹமான புதன் ஒரு ஜாதகத்தில் 6/8/12ம் பாவ தொடர்புகள், செவ்வாய், சனி, ராகு கேதுவுடன் சேர்ந்து பலமிழந்து நிற்பது போன்றவை ஜாதகருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்படும் நிலையை ஏற்படுத்துகிறது.

2. ஒருவருடைய ஜாதகத்தில் தொண்டை மற்றும் நுரையீரலை குறிக்கும் மிதுன ராசி 6/8/12 தொடர்புகள் பெறுவது, மிதுனத்தில் செவ்வாய், சனி, ராகு கேது போன்ற கிரஹங்கள் நின்று அசுபத்தன்மை பெறுவது.

3. நோய் எதிர்ப்பு சக்தியினை தரும் விட்டமின் A  குறைபாடு நிமோனியாவினை ஏற்படுத்தும் என ஆங்கில மருத்துவம் மற்றும் நவீன மருத்துவ முறைகளில் கூறப்பட்டுள்ளது. விட்டமின் Aவின் காரக கிரகம் சூரியன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் ஜாதகத்தில் சூரியன் நீர் ராசிகளில் நின்று பலமிழக்கும்போது முக்கியமாக மீனத்தில் சூரியன் பலமிழந்து அதனோடு நீச புதன் சேர்க்கை பெறும்போது விட்டமின் A குறைபாட்டினால் நிமோனியா காய்ச்சல் ஏற்படும்.

4. வாத மற்றும் கப கிரஹமான சனைச்சர பகவானே தடை மற்றும் உறைநிலை போன்றவற்றுக்கு காரகராகிறார். நுரையீரலின் காரகரான புதனுடன் சனி தனித்தோ அல்லது கபகிரஹங்களான சந்திரன் மற்றுன் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று நிற்கும் போது தொண்டையில் கிருமி தொற்று, சளிக்கட்டு, மற்றும் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்துகிறது.

5. காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் 6/8/12 தொடர்புகள், சனி, ராகு, கேது தொடர்புகள் பெறும்போது மூச்சுகோளாருகள், சுவாச உறுப்பில் தடை மற்றும் நிமோனியா காய்ச்சல் ஏற்படுகின்றது. 

6. கால புருஷனுக்கு நெஞ்சினை குறிக்கும் வீடு நான்காம் பாவம் எனப்படும் கடக ராசியாகும். எனவே கடக ராசி மற்றும் அதன் அதிபதியான சந்திரன் அசுபத்தன்மை பெற்று புதனுடன் தொடர்பு கொள்ளும்போது நிமோனியா காய்ச்சல் ஏற்படும் சாத்திய கூறுகள் உள்ளதாக மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

7. பச்சிளங்குழந்தைகளையே அதிகமாக நிமோனியா தாக்குகிறது என்பதால் குழந்தைகளின் ஜாதகத்தில் பாலாரிஷ்ட நிலையைக் கருத்தில் கொள்ளவேண்டும். பாலாரிஷ்ட நிலையைக் கொண்டு நிமோனியா காய்ச்சலுக்கான மேற்கூறிய கிரஹ அமைப்புகளும் இருந்தால் குழந்தைகளை இந்நோய் தாக்குகிறது.

பாலாரிஷ்ட தோஷங்கள்

பாலாரிஷ்டத்தை குறிப்பிடுவதில் சந்திரனின் நிலை முதன்மையானது என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. சந்திரனின் பலம்/பலவீனம், சுப அசுப தன்மைகள் ஒரு குழந்தையின் பாலாரிஷ்டத்தை தீர்மானிக்கிறது. சந்திரனின் அசுப தன்மைக்கு ஏற்றவாரு குழந்தையில் ஏற்படும் நோய் மற்றும் குழந்தை இறப்பு ஆகியவை அமைந்து விடுகிறது.

சந்திரனை அடுத்து ஒரு குழந்தையின் லக்னத்தின் பலமே குழத்தையின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளைத் தீர்மானிக்கிறது. லக்னம் மற்றும் லக்னாதிபதி 6/8/12 அதிபதிகளுடன் மற்றும் பாதகாதிபதி, அசுப கிரஹ தொடர்பு ஏற்படாமல் இருப்பதும் அவர்களின் தசா புத்தி குழந்தை பருவத்தில் ஏற்படாமல் இருப்பதும் அவசியம் ஆகும்.

விஷக்கிருமிகளை பெருக்கும் ராகு-கேது

விஷக்கிருமிகளின் உற்பத்தி செய்வது அதிலும் முக்கியமாகக் கண்ணுக்கு தெரியாத நோய்களை பரப்பும் வைரஸ் கிருமிகளைப் பரப்புவதும் ஸர்ப கிரஹங்களான ராகு-கேதுவின் முக்கிய காரகமாகும். மேலும், கிருமிகளை வேகமாகக் காற்றில் பரவ செய்வதில் ராகுவின் பங்கு முக்கியமானதாகும். மிதுனம் மற்றும் அதன் அதிபதியான புதனுடன் ஸ்ர்ப கிரஹ சேர்க்கை ஏற்படும்போது தொண்டையில் அழற்ச்சி மற்றும் நோய் தொற்று ஏற்படுகின்றது.

மருத்துவமனை வாசம்

ஒருவர் மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பெறுவதற்கு கால புருஷ பன்னிரண்டாம் பாவம், அதன் அதிபதியான குரு, சுக்கிரன், ஜென்ன ஜாதக பன்னிரண்டாம் பாவம் மற்றும் அதன் அதிபதியின் தொடர்பு ஜாதகத்தில் அமைந்திருந்தால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார்கள். மேலும், ஜாதகத்தில் 6/8/12 அதிபதிகள் அவர்களுக்குள் வீடு மாறி அமர்ந்து விபரீத ராஜயோகத்தைப் பெற்றிருந்தாலும் மருத்துவமனை வாசம் ஏற்படும். 

நிமோனியா காய்ச்சல் ஏற்படுத்தும் கிரஹ சேர்க்கைகள்

1. உடல் பலம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றிற்கு லக்னம் மற்றும் லக்னாதிபதி பலமாக இருக்க வேண்டும். லக்னம் அல்லது லக்னாதிபதி 6/8/12 தொடர்பு, ராகு/கேது மற்றும் மாந்தி சேர்க்கை, லக்னாதிபதி நீசம் அடைவது, சந்திரன் நீசம் அடைவது ஆகியவை உடல் ரீதியான பிரச்னைகளையும் அதனால் உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வினை ஏற்படுத்தும்.

2. லக்னம்/சந்திர ராசி காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகளாக அமைந்தால் அவர்களுக்கு ஆறாம் வீடு நீர் ராசிகளாக அமைந்துவிடுவதால் பொதுவாகவே நீரினால் ஏற்படும் அனைத்து நோய்களும் தாக்கும். அதிலும் லக்னத்தில் ஆறாமதிபதியே நீர் ராசி அதிபதியாகி நின்றுவிட்டால் அவர்களுக்கு நிமோனியா போன்ற நோய்கள் எளிதில் ஏற்பட்டுவிடும். மேற்கண்ட அமைப்பு பெற்றவர்கள் குளிர்காலங்களில் படும் அவதியைச் சொல்லிமாளாது.

3. ஜெனன ஜாதகத்தில் காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் 6/8/12 ராசிகளாகி அதில் புதன், ராகு/கேது இவர்களோடு காய்ச்சலை தரும் செவ்வாய், சந்திரன், சனி போன்ற கிரஹங்களின் சேர்க்கை பெற்று நிற்பது.

4. ஜெனன ஜாதகத்தில் ஆறாம்பாவதிபதியோடு புதன், ராகு/கேது மற்றும் சனி சேர்க்கை பெறுவது.

5. ஜெனன ஜாதகத்தில் புதன் மற்றும் சனி எந்தவித பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் அவர்களுடன் கோசார ராகு/கேது சேர்க்கை பெறுவது.

6. கால புருஷ எட்டாவது ராசியான விருச்சிகத்தில் சந்திரன் நீசமாகி புதன் மற்றும் சனியுடன் சேர்க்கை பெறுவது.

7. நீர் கிரஹங்களில் ராகு/கேது நின்று, சந்திரன், புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரஹங்களை பார்ப்பது.

8. கும்ப ராசி/லக்னமாகி சந்திரன், புதன், சனி ஆகிய கிரஹங்களின் வீடுகள் 6/8/12 வீடுகளாகி விபரீத ராஜயோகம் ஏற்படுவது.

9. நோய் எதிர்ப்பினை தரும் குருபகவான் 6/8/12 தொடர்பு மற்றும் வக்ர நிலையில் நிற்பது, தனது வீட்டிற்கு 12-ல் நிற்பது.

நிமோனியா காய்ச்சல் எப்போது வரும்?
1. ஜெனன ஜாதகத்தில் தொண்டை/நுரையீரல் நோய்க்கான கிரஹ அமைப்பினை பெற்று தசா புத்தி நடைபெறுவது, அவர்களுடன் கோசார நீச/பலமிழந்த சூரியன் சந்திரன், புதன், சனி மற்றும் ராகு போன்ற கிரஹங்களின் தொடர்பு கொள்வது.

2. தொண்டை நோயை ஏற்படுத்தும் புதன்/சுக்கிரன் போன்ற கிரஹங்களின் தசையில் காய்ச்சலை ஏற்படுத்தும் கிரஹங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், சனி, ராகு போன்ற கிரஹங்களின் புத்தி, அந்தரம் நடப்பது.

3. ஸர்ப கிரஹங்களின் தசைகளில் சந்திரன், புதன், சனி ஆகிய கிரஹங்களின் புத்தி அந்தரங்கள் நடைபெறுவது.

4. கோசாரத்தில் நீர் கிரஹங்களில் ராகு/கேது நிற்பது மற்றும் திரிகோண பார்வையில் சனி மற்றும் புதனை பார்ப்பது.

5. விருச்சிகத்தில் கோச்சார சந்திரன், புதன், சனி  சேர்ந்து பயணம் செய்வது.

நிமோனியா காய்ச்சலுக்கான மருத்துவம் மற்றும் பரிகாரங்கள்

1. நிமோனியா காற்றில் ஏற்படும் மாசினால் ஏற்படும் நோய் என்பதால் வீட்டில் சனியின் காரகம் கொண்ட காற்றினால் ஏற்படும் மாசுகளான தூசி, அழுக்கு, ஒட்டடை போன்றவை வீட்டில் சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்வது. முக்கியமாக ஒவ்வாமை, நுரையீரல் பாதிப்படைந்தவர்கள் தாங்களாகவே சுத்தம் செய்வதை தவிர்க்கவும்.

2. சந்திரனின் அம்சமான குடிநீரை செவ்வாயின் அம்சத்தோடு சேர்த்து வெந்நீராக்கிப் பருகுவது.

3. பொதுவாகக் காய்ச்சலுக்கு காரகர் செவ்வாய் தான் மருத்துவத்திற்கும் காரகர் என்கிறது மருத்துவ ஜோதிடம். செவ்வாய் ஸ்தலமான வைதீஸ்வரன் கோயிலில் உள்ள ஜ்வரஹரேஸ்வரரை பிரார்த்திக்க ஜ்வரங்கள் (காய்ச்சல்) நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள ஜ்வரஹரேஸ்வருக்கு ரஸம் சாத நிவேதனம் செய்வதாக பிரார்த்திப்பதும் ஜ்வரங்கள் நீங்கியபின் அவருக்கு ரசம் சாதம் நிவேதனம் செய்வதும் பிரசித்திபெற்ற பிரார்த்தனையாகும்.
 
4. செவ்வாய் மற்றும் சனியின் காரகம் பெற்ற ஆயுர்வேத மருந்தான கன சுதர்சன வடி எனும் மாத்திரை காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்கிறது.

5. தொண்டை நோய்கள் மற்றும் சுரம், சளி இருமல் போன்ற நோய்களைக் குறிப்பது காலபுருஷனுக்கு இரண்டாம் வீடாடன ரிஷபமும் சுக்கிரனும் ஆகும். சுக்கிரனின் காரகத்தை பெற்ற யாரோ பூக்கள் இருமல், தொண்டை நோய்கள், காய்ச்சல் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுவதும் அதிலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோபதி மருந்தும் குறிப்பிடத்தக்கது.

6. மது யஷ்டி சூர்ணம், சிதோபலாதி சூர்ணம், தாளிசாதி சூர்ணம், த்ரிகடு சூர்ணம், ப்ரவாள பற்பம் ஆகிய மருந்துகளை சம அளவில் கலந்துகொண்டு காலை, மதியம் இரவு மூன்று வேளையும் இரண்டு சிட்டிகை அளவு தேனில் குழைத்து உட்கொண்டு வர விரைவில் குணமாகும். மேலும், கதிராதி குடிகா எனும் மாத்திரையை சப்பி சாப்பிட்டு வருவது இருமல் நின்று தொண்டை புண் குணமாகும்.

7. நிமோனியா காய்ச்சல் பச்சிளங்குழந்தைகளையே அதிகமாகத் தாக்கும் வாய்ப்பு உள்ளதால் குழந்தைகளுக்கு பாலாரிஷ்டம் இருக்கிறதா என்பதை ஜோதிட ரீதியாக அறிந்து தகுந்த புரோகிதர்களைக் கொண்டு பாலாரிஷ்ட தோஷ சாந்தி செய்வது அவசியமாகும்.

8. சனியின் காரகம் பெற்ற ஆடு தீண்டா பாலை எனப்படும் ஆடாதோடை கஷாயம் அல்லது வாக்ஷாரிஷ்டம் உட்கொண்டு வர நல்ல பலனளிக்கும். கசப்பு சுவை கொண்ட மருந்துகளுக்கு சனைச்சர பகவானே காரகர் என்பது குறிப்பிடத்தக்கது.

9. செவ்வாயின் காரகம் நிறைந்த துளசியில் செய்த சிறப்பு மருந்துகள் தொண்டை நோய் மற்றும் இருமலுக்கு சிறந்த பலனளிக்கும்.

10. சனியின் காரகம் நிறைந்த அகஸ்திய ரஸாயனம் எனும் மருந்தை மருத்துவ ஆலோசனையுடன் சாப்பிட்டுவர நாட்பட்ட சுவாச நோய்கள் நீங்கும்.

11. சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை பெற்ற பாரங்கியாதி கஷாய சூரணம், நிம்பாதி சூரணம், தச மூல கஷாய சூரணம் ஆகிய மூன்றையும் நீரில் இட்டுக் காய்ச்சி மூன்றில் ஒரு பங்காக சுருக்கி கஷாயமாக மூன்று வேலையும் பருகி வர கப கட்டு மற்றும் சுரங்கள் முக்கியமாகக் கொசு கடியால் ஏற்படும் சுரங்கள் அனைத்தும் குணமாகும்,

12. நோய் ஏற்பட்டவரின் அருகில் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, சுதர்ஸனாஷ்டகம், ஸ்ரீ லஷ்மி நரசிம்ம மந்த்ர ராஜ பத ஸ்லோகம் பாராயணம் செய்வது.

13. நிமோனியாவினால் பாதிக்கப்பட்டவர்களின் விட்டமின் A அதிகரிக்கும் உணவுகளைச் சாப்பிடுவதோடு சூரிய பகவானுக்கான ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது.

14. மேற்கண்ட கிரகநிலை கொண்டவர்கள் நோய் வருமுன் காக்கும் விதமாக விட்டமின் A,  விட்டமின் C சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, ச்யவண ப்ராச லேகியம், நெல்லிக்காய், திரிபலா சூரணம் போன்றவற்றை சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு மிகுந்து நோய் வராமல் காக்கும்.

15. புதன் மற்றும் விஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி பகவானை புதன் கிழமைகளில் புதன் ஹோரையில் வணங்கி வருவது. 

குறிப்பு: எந்த மருத்துவ முறையானாலும் சுய மருத்துவம் செய்யாமல் சம்மந்தப்பட்ட மருத்துவர் ஆலோசனையுடன் மருந்து உட்கொள்வது சிறந்தது. முக்கியமாகக் குழந்தைகளுக்கு சுயமருத்துவ முயற்சியைத் தவிர்க்கவும்.


- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com