கே.சி.எஸ்.ஐயர் கணித்த ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

2019-ம் ஆண்டுக்கான ஆங்கில புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர்...
கே.சி.எஸ்.ஐயர் கணித்த ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

2019-ம் ஆண்டுக்கான ஆங்கில புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்) ராசிகளுக்கான பலன்களைக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பலனடைவோம். 

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில்  செய்தொழிலில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்கங்கள் மறைந்து சீராக வருமானம் வரத்தொடங்கும். அலைச்சல்கள் குறையும்.  மறைமுகமாக சங்கடங்கள் கொடுத்துக் கொண்டிருந்த நண்பர்கள் இணக்கமாகப் பழகத் தொடங்குவார்கள். 

இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உபரி வருமானங்களும் அவ்வப்போது கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். நீண்ட நாளைய குலதெய்வப் பிரார்த்தனை ஒன்றை செயல் படுத்துவீர்கள். மனதை அரித்துக் கொண்டிருந்த பிரச்னைகள் தானாகவே தீர்ந்துவிடும். உங்களின் அனுபவ அறிவு தக்க சமயத்தில் கைகொடுக்கும். பேச்சினால் தொழில் செய்பவர்கள் சிறப்பான ஏற்றங்களைக் காண்பார்கள். தாய் நலன் கூடும். 

உடல் உழைப்பைக் கூட்டிக் கொள்வீர்கள். பொதுச்சேவையில் ஈடுபடுவீர்கள். எதிரிகளை அவர்கள் போக்கிலேயே சென்று உங்கள் வசப்படுத்திக் கொண்டு விடுவீர்கள். உற்றார் உறவினர்களும் நன்மைகளை அடைவார்கள். திடீரென்று சம்பந்தமில்லாதவர்கள் வந்து உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். பெரிய கடன்களையும் முழுமையாக அடைத்து விடுவீர்கள். தேக ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்துக் கொள்வீர்கள்.

ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். நவீன வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். உங்கள் புத்திசாலித்தனம், தன்னம்பிக்கை இரண்டும் கூடும். மேலும் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிட நேரிடும். தீயோரின் சேர்க்கையை தவிர்த்துவிடவும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். புதிய முயற்சிகளை நண்பர்களைக் கலந்தாலோசித்த பின்பே செயல்படுத்தவும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்தடையும். வருமானத்தில் இருந்த சிரமங்கள் குறையும். தடைப்பட்டிருந்த காரியங்கள் தாமதமின்றி எளிதாக நிறைவேறும். மனவருத்தங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். விலகி இருந்த உறவினர்கள் தேடி வருவார்கள். 

செய்தொழிலில் பலவித புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். அரசாங்கத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சிலருக்கு திடீர் திருமண யோகம் உண்டாகும். சிலர் இருக்கும் வீட்டை விற்று விட்டு புதிய வீடு வாங்கிச் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். வாக்கு கொடுக்கும்போது கவனமாக இருக்கவும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்க சிறிது தாமதமாகும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் சமரசமாகச் செல்வதே நலம் பயக்கும். எவரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். சக ஊழியர்களிடம் நட்போடு பழகுவீர்கள். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும். மனதில் ஓர் அனாவசியப் பதட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். வியாபாரிகள் கடுமையாக உழைத்து வருவாய் ஈட்டி முக்கிய பிரச்னைகளை சமாளித்து விடுவீர்கள். மேலும் சில சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேரிடலாம். 

கூட்டாளிகளிடம் சற்று கவனமாகப் பழகவும். அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று புதிய கடன்கள் வாங்கி வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்தவும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கால்நடைகளாலும் நல்ல பலன் கிடைக்கும். சிலருக்கு வழக்குகளால் மன உளைச்சல் ஏற்படும். இருப்பினும் முடிவு சாதகமாகவே இருக்கும். 

அரசியல்வாதிகள் எந்த வேலையையும் நன்றாகத் திறம்படச் செயல்படுத்துவீர்கள். தொண்டர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு எதிராக தீட்டப்பட்ட சதிகள் உங்களை பாதிக்காது. புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். பெயரும் புகழும் உயரும். பணவரவு எதிர்பார்த்ததுபோல் இல்லாவிட்டாலும் தேவைகள் பூர்த்தியாகும்.

பெண்மணிகள் மன நிம்மதியைப் பெறுவார்கள். தர்ம காரியங்களிலும் தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் அனைவரையும் அவர்கள் போக்கிலேயே விட்டுக்கொடுத்து இணக்கமாக்கிக் கொள்ளுங்கள். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளலாம். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரிகாரம்: பெருமாள்- தாயாரை வழிபடவும்.


துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை விரிவுபடுத்த புதிய வியூகத்தை செயல்படுத்துவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அவர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தயங்காமல் முடிவு எடுக்கும் திறமையினால் முன்னேற்றத்திற்கான வாசற் கதவைத் திறப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் செய்யும்போது விதிவிலக்குகளைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். 

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். உற்றார் உறவினர்கள் தேடி வந்து ஆதரவு கொடுப்பார்கள். பிரச்னை ஏற்படக்கூடிய விவாதங்களில் உங்கள் கருத்தைக் கூறாமல் "கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்' என்பதுபோல் நழுவி விடுவீர்கள். திடமாகச் சிந்தித்து செயல்படுத்துகின்ற காரியங்களில் முன்வைத்த காலைப் பின் வைக்காமல் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். நீண்டகாலமாக நிலுவையிலிருந்த வழக்கு விவகாரங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். பெற்றோர் வழியில் இருந்த பிணக்குகள் மறைந்து சகஜ நிலை உண்டாகும். வரவேண்டிய பணம் எவ்வகையிலாவது உங்கள் கை வந்து சேர்ந்து விடும். நீண்டகால எண்ணம் ஒன்று இந்த காலகட்டத்தில் ஈடேறக் காண்பீர்கள். குடும்பத்துடன் வெளியூர் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வருவீர்கள்.

ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அலைபாயும் மனது தெளிந்த நீரோடை போலாகும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பூர்வீகச் சொத்துகள் உங்கள் கையை வந்தடைந்து அதிலிருந்து வருமானமும் வரத்தொடங்கும். தர்ம காரியங்களுக்கும் சிறிது செலவு செய்வீர்கள். எதிர்வரும் ஆபத்துகளை உங்கள் உள்ளுணர்வால் புரிந்து கொண்டு அவைகளின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். 

நஷ்டத்தில் நடந்து வந்த தொழிலை புதுப்பித்து லாபத்துடன் இயக்குவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு நடப்பார்கள். வெளிவட்டாரத்திலிருந்து நல்ல செய்தியைக் கேட்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். உங்கள் பகைவர்களுக்கு தோல்வி உண்டாகும். உங்களுக்கு எதிராகப் பின்னப்பட்ட சதிவலையிலிருந்து மீண்டு தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மற்றபடி சுயமுயற்சி செய்து உயர்ந்த நிலைக்கு வந்துவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இந்த ஆண்டு குறைவாகக் கிடைக்கும். கொடுத்த வேலைகளை குறித்த காலத்திற்குள் முடிக்க முயற்சி செய்யவும். உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தையும் பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் பொறுமையும் நிதானமும் அவசியம். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். எவரிடமும் அனாவசிய வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சிறிய தடைகளுக்குப்பிறகு வீடு கட்ட கடன்கள் கிடைக்கும். 

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அனுகூலமான சூழ்நிலைக் காணப்படும். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் வருமானம் சீராக இருந்தாலும் தொழிலை பெரிய அளவுக்கு விரிவுபடுத்த முடியாத அளவுக்கு இருக்கும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். புதிய குத்தகைகளின் மூலம் லாபம் பெறுவீர்கள். புதிய வாழ்க்கை வசதிகளும் பெருகும். விவசாயப் பணியாளர்களை அரவணைத்துச் செல்லவும். 

அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையோடு நடந்து கொள்ளும். புதிய பொறுப்புகளையும் வழங்கும். பொதுச்சேவையில் புதிய திருப்பங்கள் உண்டாகும். தொண்டர்களை அனுசரித்துச் சென்று அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளவும். அனாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு புகழும் நற்பெயரும் அதிகரிக்கும். பணவரவுக்கும் குறைவு வராது. சில ஆடம்பரச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நல்ல மதிப்பு கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரிடம் கிடைக்கும் ஆதரவு உங்களுக்கு உந்து சக்தியாக அமையும்.

பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானைவழிபடவும்.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் மனதில் இருந்த குழப்பங்கள் விலகிவிடும். மனம் ஒருநிலைப்படும். முன்யோசனையுடன் செயல்களைச் செய்வீர்கள். வறுமையிலிருந்து விடுபடுவீர்கள். வருமானம் படிப்படியாக கூடத் தொடங்கும். பொன்பொருள் சேர்க்கையும் உண்டாகும். செயல்களில் அவசரம் காட்டாமல் விவேகத்துடன் செயல்படுவீர்கள். 

எதிர்பாராத இடங்களிலிருந்து புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். அகந்தை அகன்று அனைவரிடமும் பணிந்து செல்லும் சுபாவம் கூடும். இதனால் எளிமையாக படாடோபம் இல்லாமல் காரியமாற்றுவீர்கள். உங்களை ஏமாற்ற நினைத்தவர்களே ஏமாறுவார்கள். தெய்வக் காரியங்களில் மனதைச் செலுத்துவீர்கள். மற்றவர்களின் எண்ணங்களை முன்கூட்டியே புரிந்து கொள்வீர்கள். 

ஏழைஎளியவர்களுக்கும் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கும் உதவி செய்வீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். பதவி உயர்வு, புதிய பொறுப்புகளும் கிடைக்கும். மற்றவர்கள் உங்கள் அறிவுரையை கேட்பார்கள். ஆற்றலுடன் சாதனைகள் செய்து வருமானத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள்.

ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்கிற பழமொழிக்கு ஏற்றபடி செலவுகளையும் விரயங்களையும் கட்டுப்படுத்தி சேமிப்புகளை உயர்த்திக்கொள்வீர்கள். எவரையும் பகைத்துக் கொள்ளாமல் நயமாகப் பேசி பழகுவீர்கள். செயல்களில் குறுக்கு வழியைத் தவிர்த்து நேரிடையாகச் செய்து முடிப்பீர்கள். நெடுநாள்களாக பாதிக்கப்பட்டிருந்த உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

சமுதாயத்தில் பெருமைமிக்க புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். உங்கள் நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். உயர்ந்தவர்களின் நட்பு தானாகவே கிடைக்கும். வேகமாக இயங்குவீர்கள். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். புனிதப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். அரசு வழியில் சிலருக்கு பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். பேச்சில் கண்ணியம் கூடும். உங்களை கேலி பேசியவர்கள் மதித்து நடந்துகொள்ளும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் இந்த ஆண்டு கவனம் சிதறாமல் வேலைகளை பட்டிலிட்டு உழைப்பீர்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். அலுவலக ரீதியான பயணங்களில் நன்மை உண்டாகும். திடீர் இடமாற்றம் ஏற்பட்டு உங்களை திக்குமுக்காடச் செய்யும்.  இவ்வாண்டு உழைப்பு வீண் போகாது. 

வியாபாரிகள் கூட்டுத்தொழிலில் நன்மைகளைக் காண்பார்கள். கொடுக்கல் வாங்கல்களில் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள், புதிய சரக்குகளை வாங்கி கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் புதிய வாழ்க்கை வசதிகள் உருவாக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்களை அதிகமாக நம்ப வேண்டாம். கால்நடைகளை கவனமாக பராமரிக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பும் மரியாதையும் உயரும். பல வழிகளிலும் வருமானம் கிட்டும். தங்களைச் சார்ந்துள்ள கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முயல்வீர்கள். எதிரிகளின் தந்திரங்களை எச்சரிக்கையுடன் கவனித்து வரவும். திட்டமிட்ட வேலைகளில் முன்கூட்டியே யோசித்துச் செயல்படவும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழுவதால் எதையும் ஓர் உத்வேகத்துடன் செய்து முடிப்பீர்கள். தொண்டர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். 

கலைத்துறையினர் இந்த ஆண்டு வரவேற்புகள் அதிகரிக்கும். திறமைக்குத் தகுந்த அங்கீகாரமும் விருதுகளும் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். மனதில் எழும் எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டாம்.  பெண்மணிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கணவர் உங்களை மதித்து நடப்பார். 

குடும்பத்தில் குழப்பங்கள் குறைந்து அமைதி நிலவும். உங்கள் வாக்குச் சாதூர்யம் கூடும். பொருளாதார நிலையில் சுபிட்சம் காணப்படும். பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் கல்வியில் பெருமைபடும்படியாக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். நண்பர்களிடம் ஒற்றுமையுடன் இருக்கவும்.
பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு  சிறப்படையுங்கள்.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

இந்த 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்கள் சரியான இலக்கை நோக்கிச் செல்லும். அரசு வகையில் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த சலுகைகளைப் பெறுவீர்கள். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள். சமுதாயத்தில் உங்களது முக்கியத்துவம் கூடும். சோம்பலை மூட்டைக் கட்டிவைத்துவிட்டு சுறுசுறுப்புடனும் தன்னம்பிக்கையுடனும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் பரவி, உங்களுடன் நட்புகொள்ள அந்தஸ்திலுள்ளவர்கள் விரும்புவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறந்தோருக்கு உதவிகரமாக இருப்பீர்கள். 

பெற்றோர்களின் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றமும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அவர்களின் வளர்ச்சிக்கு சமுதாயத்தில் அந்தஸ்தானவர்கள் உதவுவார்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வருமானம் சீராக இருப்பதால் பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். சண்டைச் சச்சரவுகள் முடிவடையும். சிலர் வெளியூர் வெளிநாடுகளிலிருந்து நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.  மணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். கூட்டுத்தொழிலில் லாபமும்  கூட்டாளிகளிடம் நேசமும் மற்றும் அவர்களின் அபிமானமும் உண்டாகும். பயணங்களால் லாபம் உண்டாகும்.

ஜூலை மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்களில் வெற்றி தேடி வரும். எவருடன் பழகுகிறீர்களோ அவர்களால் நற்பலன்கள் பெறுவீர்கள். அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். பெயரும் புகழும் உயரும். உடன்பிறந்தோர் மூலம் நலமுண்டாகும்.  செயற்கரிய சாதனைகள் செய்யவும் மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறவும் வாய்ப்பும் யோகமும் உண்டாகும். எதிர்பாராத வகையில் புதிய சொத்து வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய இடங்களுக்குச் சென்று  அங்கு சிறிதுகாலம் தங்கி வருமானம் உயரக் காண்பீர்கள். மறைமுகமாக பகைமை பாராட்டியவர்கள் பலமிழந்து உங்களுக்கு கைகொடுப்பார்கள். குழந்தைகளிடம் விட்டுக்கொடுத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். கடினமாக உழைத்து செயலாற்றுவீர்கள். உடல் உபாதைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். நிர்வாகத் திறன் கூடும். முயற்சிகளை நேர்வழியிலேயே செய்யவும். போட்டிபந்தயங்களில் கலந்து கொள்ளும் ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அந்தஸ்தும் கௌரவமும் கூடும். சிலருக்கு அலுவலக பயிற்சிக்காக வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகளும் கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதுடன் மேலதிகாரிகளின் நம்பிக்கைகளுக்கும் பாத்திரமாவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். புதிய முதலீடுகளில் சற்று கவனத்துடன் ஆலோசித்து ஈடுபடவும். கடன்கள் அடையத் தொடங்கும்.  விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து அதனால் நல்லெண்ணத்தைப் பெறுவீர்கள். நெருங்கியவர்களுக்கு உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய கடன்கள் கிடைத்து விளைச்சலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். 

அரசியல்வாதிகள் முயற்சிக்குத் தகுந்த பாராட்டுகளை கட்சி மேலிடத்திடம் இருந்து பெறுவீர்கள். தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மேன்மையடைவீர்கள். கட்சியில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். பயணங்களால் நன்மை உண்டாகும். வேலைகளைத் திட்டமிட்டுச் செய்வீர்கள். வெளியிலும் உங்கள் புகழ், செல்வாக்கு உயரும். மேலிடத்தின் கட்டளைகளை நிறைவேற்றி நற்பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினர் புகழும் பெருமையும் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். முயற்சியும் உழைப்பும் நன்மை பயக்கும். கைநழுவிப்போன வாய்ப்புகளும் மறுபடியும் உங்கள கைக்கே வந்து விடும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியை பெற்று ஆன்ம பலத்தைக் கூட்டிக் கொள்ளுவீர்கள். எதையும் புரிந்து கொண்டு செயல்படவும். வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கவும். உடன்பிறந்தோரிடமிருந்த மனக்கசப்புகள் மறைந்து சகஜ நிலைமை உருவாகும். மாணவமணிகளின் நினைவாற்றல் பெருகும். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ஐயப்பனை வழிபட்டு வரவும்.
 

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளுக்காக பலன்களை காண இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com