அஸ்ட்ரோ சுந்தரராஜன் கணித்த முதல் நான்கு ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

ஆங்கில புத்தாண்டு பலன்களை ஜோதிட வாசஸ்பதி A சுந்தரராஜன் முதல் நான்கு...
அஸ்ட்ரோ சுந்தரராஜன் கணித்த முதல் நான்கு ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019

2019-ம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை ஜோதிட வாசஸ்பதி A சுந்தரராஜன் (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்) ஆகிய ராசிக்கான பலன்களை நமக்குத் துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ம் பாதம் முடிய)

செவ்வாயை அதிபதியாகக் கொண்டு எப்போதும் பல பொறுப்புகளைத் தலையில் சுமந்துகொண்டு சுறுசுறுப்புக்கு உதாரணமாகத் திகழ்ந்து கடுமையாகப் பாடுபடும் சர ராசி  மற்றும் நெருப்பு ராசியான மேஷ ராசி/லக்ன அன்பர்களே! உங்கள் ராசிக்கு தர்ம கர்மாதிபதிகளான குரு மற்றும் சனி பகவான் தங்கள் வீடுகளுக்கு 12ல் பயணம் செய்வது  சிறப்பல்ல. மேலும் அஸ்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் தாக்கம் ஜனவரி 2019 முதல் 3 மாதங்களுக்கு அதிகமாகக் காணப்படும் என்றாலும் மார்ச் மாதத்தில் அதிசார கதியில் தனது சுய வீட்டிற்கு வருகை தரும் குரு பகவான் சனியோடு சேர்க்கை பெறுவதால் தொழில் மற்றும் வேலைகளில் சில நன்மைகளைச் செய்ய  வாய்ப்புள்ளது. மீண்டும் ஆகஸ்ட் 2019 முதல் 3 மாதங்களுக்கு அஷ்டம குருவின் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். நீங்கள் உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில்  வளர்ச்சியை எதிர்பார்ப்பதைச் சற்று குறைத்துக் கொள்வது நல்லது. 

உள்ளூரில் வேலை வாய்ப்பு மற்றும் தொழிலில் பிரச்னை ஏற்படுத்தினாலும் 9 மற்றும் 12ம் வீட்டின் அதிபதியான குரு பகவான் வெளிநாட்டில் தொழில் புரியும் வாய்ப்பினை  தர தவறமாட்டார், மேலும் தன காரக குருவின் 8-இடம் சஞ்சாரம் மறைமுக தன வரவினையும் சிலருக்கு ஏற்படுத்துவார். சனி மற்றும் ராகு/கேதுவின் நிலையினால் இந்த  ஆண்டு முழுவதும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். வீடு வாகனங்கள் வாங்குவதில் இருந்துவந்த தடை மார்ச் மாதத்திற்கு மேல் விலகும். 

இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் 4ம் தேதிக்கு பின் குரு உங்கள் ராசியின் 9-ம் வீட்டிற்கு நவம்பர் 2019-ல் இடம் மாறினாலும், கோச்சாரக கேதுவோடு இணைவு  பெறுவதால் முற்றிலும் நல்ல பலன்களை மட்டுமே தருவார் என எதிர் பார்க்க முடியாது என்றாலும் ஆண்டு முழுவதும் தொழில் மற்றும் பொருளாதாரத்தில் நிலவி வந்த  மந்த நிலையில் இருந்து மாறி சகஜ நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கலாம். 

உங்கள் ராசியின் தர்ம கர்மாதிகள் ஒன்பதாம் வீட்டில் இணைவு பெறுவது மற்றும் ராகு கேது சேர்க்கை பெறுவது மருத்துவ அன்பர்களுக்கு ஒரு திடீர் உயர்வை  ஏற்படுத்தும். அரசியல் பிரவேசமும் நன்மை அளிக்கும் விதமாக அமையும்.  உங்களின் உடன் பிறந்த குணமான அவசரத்தைத் தவிர்ப்பதும் பெரியோர்களிடம் ஆலோசனை  செய்வது பல பிரச்னைகளை தவிர்க்கும். எந்த முக்கிய முடிவுகள் எடுக்கும் முன், உங்களது பிறந்த ஜாதக பலனை பார்த்து அதன்படி நடப்பது நல்லது. இந்த ஆண்டில்  முக்கிய கிரஹங்களான குரு, சனி, ராகு மற்றும் கேது உங்கள் 9ம் வீட்டில் இணைவு பெறுவதால் ஆன்மீக ரீதியான யாத்திரைகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: இந்த ஆண்டில் இன்னல்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்க உங்கள் ராசிநாதன் செவ்வாய் மற்றும் தர்ம ஸ்தானாதிபதி குரு இணைவு பெற்ற ஸ்தலமான திருச்செந்தூர் முருகனை வியாழக்கிழமைகளில் வணங்கி வர உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும் என்பது நிச்சயம். 

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ம் பாதம் முடிய)

சுக்கிரனை அதிபதியாகக் கொண்டு அதிக பிடிவாதத்தோடு எதையும் தாங்கும் இதயம் கொண்ட ஸ்திர மற்றும் நில ராசியான ரிஷப ராசி/லக்ன அன்பர்களே! உங்களின்  சிறப்பே எப்போதும் ஆடை அலங்காரத்தோடு மகிழ்ச்சியாக தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விக்கும் குணம்தான். குரு உங்கள் ராசியின் 7-ம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் ஆரோக்கியம் மேம்படும். தன்னம்பிக்கை மிளிரும். 

ராகு 3-ம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். செவ்வாய் உங்கள் ராசியின் 11-ம் வீட்டில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் சஞ்சரிப்பதால் உங்கள்  முயற்சிகள் யாவும் வெற்றி பெற்று வளர்ச்சியும் வெற்றியும் அதிகரிக்கும். உங்களுக்கு அஷ்டம சனியின் தாக்கத்தில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.  எனினும் மார்ச்  2019-ல் நடக்கும் ராகு பெயர்ச்சி மற்றும் சனி கேது இணைந்து சஞ்சரிப்பது அவ்வளவு சிறப்பான பலன்களைத் தராது. ஏப்ரல் 2019 முதல் மூன்று மாதங்களுக்கு சற்று  கடுமையான காலகட்டத்தை நீங்கள் சந்திக்க நேரிடும். இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காகவும் கல்விக்காகவும் கடன் வாங்கும் சூழ்நிலை ஒரு  சிலருக்கு உண்டாகும்.  உங்கள் அஷ்டம ஸ்தானத்தில் சனி கேது இணைவு பெறுவது தொழிலில் முடக்கத்தைச் சந்திக்க நேரும். மீண்டும் ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர்  2019 வரை நீங்கள் சிறப்பான வளர்ச்சியையும் வெற்றியையும் காண்பீர்கள்.

குரு உங்கள் ராசியின் 8-ம் வீட்டிற்கு நவம்பர் 2019-ல் பெயருவார். மேலும், அவர் சனி பகவான் மற்றும் கேதுவுடன் இணைந்து நவம்பர் மற்றும் டிசம்பர் 2019 மாதங்களில்  சஞ்சரிப்பார். இது உங்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் 2019 மாதங்களில் எதிர்பாராத பின்னடைவுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் அஷ்டமாதிபதி ஆட்சி பெற்று சனி  மற்றும் கேதுவின் இணைவு பெறுவதால் வரி மற்றும் காப்பீடு சம்மந்தப்பட்ட பிரச்னைகளும் மறைமுக எதிரிகளின் தொல்லையும் கடன் கொடுத்தவர்கள் திரும்பக் கேட்டு  நெருக்கடி தருவது சிலருக்கு சர்க்கரை நோயினால் மருத்துவ செலவுகள் செய்யும் நிலையும் ஏற்படும். முக்கியமாகக் கணக்கு வழக்குகள் மற்றும் சொத்து பரிமாற்ற  ஆவணங்களை கவனமாகப் பாதுகாப்பாக வைக்கவேண்டும்.

அதனால் நீங்கள் எந்த முக்கிய முடிவுகள் எடுப்பதாயினும் அதனை அக்டோபர் 30, 2019-க்குள் எடுத்து உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவது நல்லது.  மொத்தத்தில்  இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை பல நன்மைகளையும் பிறகு ஆண்டின் கடைசி பகுதியில் சிறு சிறு பிரச்னைகளையும் தரும் ஆண்டாக அமையும், என்றாலும் எந்த முக்கிய முடிவுகள் எடுக்கும் முன், உங்களது பிறந்த ஜாதக பலனை பார்த்து அதன்படி நடப்பது நல்லது.

பரிகாரம்: இந்த ஆண்டில் நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சனியின்  குருவான கால பைரவர். அவரை வணங்கிவர பிரச்னைகள் யாவும் விலகும்.

{pagination-pagination}
மிதுனம்: (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம்3-ம் பாதம் முடிய)

புதனை அதிபதியாகக் கொண்டு புத்திசாலித்தனமும், அனைவரையும் கவரும் பேச்சாற்றலும், பய உணர்வும் நிறைந்த மிதுன ராசி/லக்ன அன்பர்களே! இந்த 2019  வருடம்  தொடங்கும் போது குரு பகவான் உங்கள் ராசியின் ருன ரோக சத்ரு ஸ்தானமான விருச்சிக ராசியிலும் சனி பகவான் கண்டக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கின்றனர். செவ்வாய்  உங்கள் ராசியின் 1௦-ம் வீட்டில் சஞ்சரித்து அதிக பதற்றத்தை இந்த வருடத்தின் தொடக்கத்தில் உங்களுக்குத் தரக்கூடும். மேலும், மார்ச் 2019ல் வரவிருக்கும் ராகு கேது  பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகமாக இல்லை. நீங்கள் உங்கள் உடல் நலத்தை அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கிரஹ நிலை உங்கள் ஆரோக்கியத்தில்  மட்டுமல்லாது உங்கள் மனைவி மற்றும் தாய் தந்தையரின் உடல் நிலையிலும் கவனம் செலுத்த வேண்டிய காலம் எனக் காட்டுகிறது. 

மார்ச் மாதம் வரை உங்கள் வாக்கு ஸ்தானத்தில் பயணிக்கும் ராகு மார்ச் 6-ம் தேதி உங்கள் ராசி/லக்னத்திற்கே வருவதால் உங்கள் வாக்கினால் கணவன்/மனைவிக்குள்  ஏற்பட்டிருந்த சிறு சிறு பிரச்னைகள் பெரியதாகி பிரிவினை வரை கொண்டு செல்லும் நிலையும் ஏற்படும்.  மேலும் உங்கள் ஏழாம் வீட்டில் ஏற்படப் போகும் சனி-கேது  சேர்க்கையால் தொழில் மற்றும் வெளிவட்டார பழக்கங்களும் பாதிக்கும். எனவே, அடுத்த ஆண்டு பிறக்கும் வரை எந்தவித நீண்ட கால செலவுகளை முக்கியமாக புதிய  வீட்டு கடன், இன்ஸ்சூரன்ஸ் போன்ற விஷயங்களை ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது. 

ஏப்ரல் 2019 முதல் அக்டோபர் 3௦, 2019 வரை உள்ள காலம் தான் சற்று கடினமானதாக இருக்கும். கணவன் மனைவி பிரிவு, வேலையில் உடன் பணிபுரிபவர்களால்  அவ்வப்போது பிரச்னை, வேலையிழப்பு போன்றவை ஏற்படும் என்றாலும் வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களுக்கு பிரச்னையின் தாக்கம் குறைவாகவே இருக்கும்.   உங்களது நிதிநிலை அவ்வளவு சிறப்பாக இருக்காது. பயணம் மற்றும் குடியேற்றம் குறித்த விஷயங்கள் உங்களுக்கு பிரச்னைகள் தரக்கூடும். என்றாலும் நவம்பர் மாதம்  வரை உங்கள் தன ஸ்தானத்திற்கும் ஜீவன ஸ்தானத்திற்கும் குரு பகவானின் பார்வை இருப்பதால் பணத்தேவைகளை எப்படியாவது சமாளித்துவிடுவீர்கள்.

குரு உங்கள் ராசியின் 7-ம் வீட்டிற்கு நவம்பர் 4, 2019 அன்று பெயர்ந்த பின் நல்ல நிவாரணம் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம், கணவன் மனைவி உறவுகளில்  மீண்டும் ஒரு வசந்தம் வீசுவது போன்ற நன்மைகள் ஏற்படும்.

பரிகாரம்: இந்த ஆண்டு முக்கிய கிரஹங்களான குரு, சனி, ராகு மற்றும் கேது சேர்க்கை உங்கள் ஏழாம் இடத்தில்  ஏற்படுவதால் நீங்கள் இந்த ஆண்டு முழுவதும் முடிந்தபோதெல்லாம் கும்பகோணம் நாச்சியார்கோயில் அருகில் இருக்கும் குடும்ப சனி கோயிலுக்குச் சென்று வருவதும்  மற்றும் சனைச்சரனின் குருவான கால பைரவரை ராகு கால நேரத்தில் வழிபடுவதும் உங்கள் குடும்பம்., தொழில் ஆரோக்கியம் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகள்  குறைந்து நன்மை ஏற்பட உதவும்.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய)

சந்திரனை அதிபதியாகக் கொண்டு மற்றவர்களிடம் பழகுவதில் முன்னுதாரணமாகவும் அனைவரையும் வசீகரிக்கும் பேச்சு திறமையும் கொண்ட கடக ராசி/லக்ன  அன்பர்களே! உங்களுடைய சிறப்பே நீங்கள் நினைத்ததை அடைய வேண்டும் எனும் வைராக்கியம் தான். இந்த 2019-ம் வருட ஆரம்பத்தில் ராசி/லக்னத்தில் ராகு அமர்ந்து  சில பிரச்னைகளை தந்துகொண்டிருந்தாலும் நவம்பர் மாதம் வரை குருவின் பார்வை உங்கள் ராசி/லக்னத்திற்கு கிடைப்பதால் எல்லா பிரச்னைகளையும் எளிதில் கடந்து வந்துவிடுவீர்கள். 

குரு உங்கள் ராசியின் 5-ம் வீடான பூர்வபுண்ய ஸ்தானத்தில் இந்த வருடம் நவம்பர் 4, 2019 வரை சஞ்சரிப்பார். சனி பகவான் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு  சாதகமான பலன்களைத் தருவார். ராகு உங்கள் ராசியின் 12-ம் வீட்டிற்கும் கேது 6-ம் வீட்டிற்கும் மார்ச் 2019 இடம் மாறுவது சிறப்பாக உள்ளது. அனைத்து முக்கிய  கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் நீங்கள் இந்த வருடம் பல சிறப்பான அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். புத்திர பாக்கியம், ஆன்மீக பயணங்கள்,  கடன் அடைத்தல்,  நீண்ட நாட்களாக ஏற்பட்டிருந்த கணவன் மனைவி பிரச்னைகள் மறைவது போன்ற பல நல்ல அனுகூலமான பலன்களை காணலாம். 

உங்களது நீண்ட கால கனவுகளும் விருப்பங்களும் நினைவாகும். உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சுபகாரியங்கள் நிகழ்த்துவதில் மகிழ்ச்சி  அடைவீர்கள். பலருக்கு இதுநாள் வரை கிடைக்காத வெளிநாட்டு வாய்ப்பு இந்த வருடத்தில் கிடைத்துவிடும். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரும் புகழும்  பெரும்.  ஜெனன ஜாதகத்திலும் நல்ல கிரஹ நிலை அமைந்து சாதகமான தசா புத்தியும் அமைந்துவிட்டால் இந்த வருடம் உங்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு  நல்ல வருடமாக அமையும். என்றாலும் மார்ச் முதல் நவம்பர் வரையிலான கால கட்டத்தில் உங்கள் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் உங்கள் அஷ்டமாதிபதியான சனைச்சர பகவான் பயணம்  செய்வதால் ஒரு சிலருக்கு சர்க்கரை மற்றும் எலும்பு சார்ந்த உடல் உபாதைகள் தோன்றி மறையும். மேலும் மார்ச் மாதத்திற்கு ஒரு சிலர் வெளிநாட்டில் இருந்து திரும்பும் அமைப்பும் ஏற்படும். வேலை மற்றும் தொழிலில் மார்ச் மாதத்திற்கு மேல் சனி-கேது சேர்க்கையால் சற்றும் முடங்கும் நிலை ஏற்படும். 

வருட முடிவில் நவம்பர் மாதத்திற்கு மேல் தனுர் ராசியில் சனி மற்றும் கேதுவோடு இணைந்து பயணம் செய்யப்போகும் குரு பகவான் உங்கள் தன/குடும்ப வாக்கு  ஸ்தானம் மற்றும் ஜீவன ஸ்தானம் மற்றும் அயன/சயன/போக ஸ்தானத்தைப் பார்க்க இருப்பதால் உங்கள் பணவரவு, செல்வம், செல்வாக்கு உயரும். வெளிநாட்டு வேலையில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.

கடக ராசிக்காரர்களுக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும். நீங்கள் இந்த 2019-ம் வருடம் முக்கியத்துவ அந்தஸ்த்தை பெற்றாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும்  இல்லை. இந்தக் காலகட்டத்தை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகா முயற்சி செய்யுங்கள். இருப்பினும் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது ஜெனன ஜாதகத்தின் கிரஹ நிலைகளை ஆய்வு செய்து அதற்கேற்றவாறு நடப்பதே சிறப்பாகும்.

பரிகாரம்: நீங்கள் இந்த வருடத்தில் பட்டீஸ்வரம் துர்கை அம்மனை வணங்கி வர உங்கள்  வாழ்வில் மேலும் நன்மைகள் கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com