திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

தினமணி செய்தி எதிரொலி: வள்ளிமலை முருகன் கோயிலுக்கான புதிய கொடி மரம் மலை மீது ஏற்றும் பணி தொடக்கம்

DIN | Published: 13th December 2018 02:27 AM
புதிய கொடி மரத்துக்கு பூஜை செய்து மலைக்கு கொண்டு செல்லும் ணியைத் தொடங்கிய கிராமத்தினர். 
Advertising
Advertising


காட்பாடி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற வள்ளிமலை முருகன் கோயிலுக்கு சாலை வசதி இல்லாததால் புதிய கொடி மரம் அமைக்கும் பணி தாமதமாகி வருவதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கொடி மரத்தை மலை மீது ஏற்றும் பணியை கிராம மக்களே மேற்கொண்டுள்ளனர். 
காட்பாடி வட்டத்துக்கு உள்பட்ட வள்ளிமலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. மலை மீது அமைந்துள்ள குடவறைக் கோயில் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியாகவும், மலையடிவாரக் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத ஆறுமுக நாதராகவும் முருகப் பெருமான் அருள்பாலித்து வருகிறார்.
அருணகிரியாரால் பாடப்பெற்ற இந்தக் கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறை, வனத் துறை, தொல்லியல் துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. மேலும், 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று இங்குள்ள சமணர் குகையில் உள்ளது. வர்த்தமானர், பார்சுவநாதர், பத்மாவதி ஆகியோரின் உருவங்களும் உள்ளன.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவம் 13 நாள்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 4 நாள்கள் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்துவர். 
வள்ளிமலை மீது அமைந்துள்ள குடவறைக் கோயிலுக்கு சுமார் 444 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்தக் கோயில் நிர்மாணித்தபோது கோயில் கருவறையின் எதிரே பலி பீடத்துக்கு அருகே கொடிமரம் அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கும். இக்கோயிலின் கொடி மரம் போதிய பராமரிப்பு இன்றி பழுதடைந்ததால், பக்தர்கள் தாங்களாக முன்வந்து ரூ. 15 லட்சம் செலவில் புதிய கொடி மரம் அமைக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதற்காக கேரள மாநிலத்தில் இருந்து 60 அடி நீளமும், 3 டன் எடையும் கொண்ட தேக்கு மரம் வரவழைக்கப்பட்டது. 
இக்கொடி மரத்தை மலையின் உச்சிக்கு கொண்டு செல்ல போதிய சாலை வசதி இல்லாததால், மலைக் கோயிலுக்கு பாதை அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமணி நாளிதழில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி செய்தி வெளியானது. 
இதன் எதிரொலியாக 3 டன் எடையுள்ள கொடி மரத்தை மலை மீது ஏற்றும் பணியில் சுற்று வட்டார கிராம மக்களே ஈடுபட்டனர். புதன்கிழமை ஒரே நாளில் சுமார் 150 படிக்கட்டுகள் வரை கயிறு மூலம் நகர்த்தினர். 2 நாள்களுக்குள் கொடி மரம் மலை மீது கொண்டு செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், வரும் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 

More from the section

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் தை அமாவாசை திருவிழா 
வடலூரில் நாளை தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா
தஞ்சை பெரியகோவில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்
காவடியின் தத்துவம் தெரியுமா? 
பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்!