சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் நாளை வைகுந்த ஏகாதசி விழா தொடக்கம்

Published: 06th December 2018 10:45 AM

 

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் நாளை வைகுந்த ஏகாதசி விழா தொடங்க உள்ளது.

பூலோக வைகுண்டம், சொர்க்க பூமி, பெரிய கோயில் என்றும் பக்தர்களால் போற்றப்பட்டு வரும் ஸ்ரீரங்கம் கோயிலின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுவது வைகுந்த ஏகாதசி விழா. இந்த விழா ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் கொண்டாடப்படும். நிகழாண்டில் வைகுந்த ஏகாதசி விழா வரும் 7-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 

தொடர்ந்து பகல்பத்து விழா 8-ம் தேதி தொடங்குகிறது. விழாவின் போது நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் தினசரி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்தின் கடைசி நாளான 17-ம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியரா திருக்கோலம்) எழுந்தருளுகிறார். தொடர்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 18-ம் தேதி வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு அதிகாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் நம்பெருமாள் வருடத்தில் ஒருநாள் மட்டும் அணியும் ரத்தின அங்கியில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இதைக் காணவும் பரமபதவாசலை தரிசிக்கவும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தருவார்கள். இதையடுத்து, கோயிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகிறது.

இராப்பத்து விழாவின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருமாமணி மண்டபத்தில் (ஆயிரங்கால் மண்டபம்) எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். இதற்காக திருமாமணி மண்டபம் முன்பு மிக பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆயிரங்கால் மண்டபமும் அலங்கரிக்கபட்டுள்ளது. இராப்பத்து விழாவின் முக்கிய நிகழ்வான 24-ம் தேதி திருக்கைத்தல சேவையும், 25-ம் தேதி திருமங்கை மன்னனின் வேடுபறி நிகழ்ச்சியும், 27-ம் தேதி தீர்த்தவாரியும், 28-ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமுறையும் நடைபெற உள்ளது.

வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி மூலவர் நம்பெருமாள் 8-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

More from the section

திருவண்ணாமலை கோயிலில் தங்கத் தேர் வெள்ளோட்டம்
மேல்மருவத்தூரில் இலவச கண்சிகிச்சை முகாம்
திருமலையில் சேவார்த்திகள் தங்கும் கட்டடம் திறப்பு
திருமலையில் தம்பிதுரை, பியூஷ் கோயல் வழிபாடு
திருமலையில் ராகுல் காந்தி வழிபாடு: மலைப்பாதையில் நடந்து சென்று தரிசனம்