கட்டுரைகள்

செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை நல்லதா? கெட்டதா?

3rd Mar 2022 05:22 PM | ஜோதிட சிரோன்மணி பார்வதி தேவி 

ADVERTISEMENT

 

ஒருவருக்கு வாழ்க்கையில் குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகள் அனைத்தும் சீராக நடந்தால் பேரானந்தமே.

அந்தந்த வயதில் பணம் சம்பாதிக்கும் வேகம், களத்திர சுகம், சொத்து சேர்க்கும் திறன் மற்றும் வாரிசு ஆகியவை அனைத்தும் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை தொடர்பு உள்ளவர்களுக்கு கிட்டும். இந்த கிரக சேர்க்கையை சிற்றின்பத்தை மட்டுமே சொல்லுவார்கள், அதுதவிர என்னென்ன சுப / அசுப யோகம் உள்ளது என்பதைப் பற்றி ஆராய வேண்டும்.

செவ்வாய் என்பது முன்கோபம், பழிவாங்கும் எண்ணம், தடித்த பேச்சு மற்றும் கரார் பேர்விழியான ஆண் கிரகம். இவரோடு அன்பு, காதல், ஆடம்பர வசதிமிக்க பெண் கிரகம் சேரும் பொழுது நன்மைதானே பயிக்கும். இவர்களால் பல்வேறு ரெட்டிப்பு யோக பலன்கள் கிடைக்கும். 

ADVERTISEMENT

எல்லாவித கிரக சேர்க்கைகளிலும் இனிப்பு கசப்பு கலந்து தான் இருக்கும். அவரவர் பாகை மற்றும் சுப வலுக்கொண்டு இருவரின் சேர்க்கை இருக்கும். அவ்வாறு ஜாதகருக்கு ஏற்படும் பலன்களின் வெளிப்பாடு என்னவென்று சிறு விளகத்தோடு பார்ப்போம்.

செவ்வாய் மட்டுமே இருந்தால், அந்த பாவத்திற்கு ஏற்ப வேக சுழற்சி அதிகம் இருக்கும். இதனால் அந்த ஜாதகர் யோசிக்கும் தன்மை குறைவாகவும், முடிவெடுக்கும் தன்மை தவறாகவும் இருக்கும். அதுவே சுக்கிரனோடு சேரும்பொழுது நின்று செயல்படும் வேகம் மற்றும் அவற்றால் சுப சந்தோஷ திருப்தியான பலன்கள் வெளிப்படும்.

செவ்வாய் நெருப்பு, சுக்கிரன் நீர் தத்துவத்தைக் கொண்டதால், இருவரும் சேரும்பொழுது நெருப்பு குழம்பில் நீர் தெளித்தார் போல நிதான பேச்சு, வேகம் குறைந்த விவேகம் கலந்து இருக்கும். ஆனாலும் செவ்வாய் அதிக பாகை கொண்டு இருந்தால் கோபம் கலந்த பேச்சு அவ்வப்போது வெளிப்படும். இவ்வாறு நிறைய முதலாளி ஜாதகத்தில் இந்த அமைப்பு பார்த்ததுண்டு. இதனால் இவர்கள் தொழிலில் முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளது. நிறைய பேர் சொந்த தொழிலை குறுகிய காலத்தில் செயல்பட்டு, அதன்பின் வெற்றியைக் காண்பார்கள். இவர்கள் குறுகிய காலத்தில் வாழ்க்கையில் எல்லாவித சுப நிகழ்ச்சியிலும் இன்பமுற்று, திகட்டும் அளவு பேரின்பத்தை அடைவார்கள்.

காலபுருஷ தத்துவப்படி லக்கினம், களத்திரம், குடும்ப உறவு மற்றும் மாங்கல்ய ஸ்தானம் என்று பாவத்தின் அதிபதிகளாகச் செவ்வாய், சுக்கிரன் திகழ்கிறார்கள். திருமணத்தின் முக்கிய காரணகர்த்தாவாக, எதிரெதிர் பாவ அதிபதிகளாக வீற்றிருப்பார்கள். இவர்களோடு சேரும் பாவ கிரகத்தால் தோஷம் ஏற்பட்டால் திருமண தாமதம் மற்றும் தடை ஏற்படும் என்பது விதி.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ஆண் கிரகம் செவ்வாய் மற்றும் பெண் கிரகமான சுக்கிரன் சமநிலையில் இருந்து மற்றவரை ஈர்க்கும் ரொமான்டிக் ஹீரோவாக தான் இருப்பார்கள்.

பிருகு மங்கள யோகம்

இந்த  பிருகு என்கிற சுப சுக்ரன் உடன் மங்களம் என்கிற செவ்வாயோடு சேர்ந்து கேந்திரங்களில் வலுத்து இருந்தால் இந்த யோகம் அருமையான முறையில் பிருகு மங்கள யோகத்தைத் தரும். இவர்களுக்கு வாழ்வில் அசையா சொத்து சேரும்; சுகபோக வசதியான வாழ்க்கை, நல்ல நட்பு சுற்றம்,  உயர்வான சந்தோசம் கிட்டும்.

திருமண உறவு

இந்த சேர்க்கை ஆண் பெண் இருவருக்கும் ஏற்படும் காதல் மற்றும் பேரின்பம் வெளிப்பாடு. கணவன் மனைவி இருவரும் அருமையான சீதாராமர் போல அன்னியோன்னிய தம்பதிகளாக வாழ்வார்கள். ஆட்சி அல்லது உச்சம் அல்லது வர்கோத்தமம் பெற்ற நிலையில் இருந்தால் ஜாதகரால் களத்திரத்தைப் பிரிந்து வாழ முடியாத அன்றில் பறவை போல வாழ்வார்கள். இந்த சேர்க்கை விட்டகுறை தொட்ட குறையான பந்த தொடர்பு.

இந்த யோக சேர்க்கையை கெடுபவர் என்றால் அவர் அமரும் பகை கிரகங்கள் முக்கியமாக சனி, ராகு, கேது தொடர்பு. அவற்றால் இருதார தோஷம், விதவை மனம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த சேர்க்கை சிலநேரம் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சுக்கிரனோடு எத்தனை பாவ கிரக சேர்க்கை உள்ளதோ அவ்வளவு மனைவி என்று வழக்கில் சொல்லுவதுண்டு. இது தவிர செவ்வாய் சுக்கிரன் உடன் சனி, சனி வீடு மற்றும் 4ம் பாவ தொடர்பு ஏற்பட்டால் கற்புக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அதுவும் மற்ற கிரக பாவங்களையும் பார்த்து பலன் சொல்ல வேண்டும்.

தார தோஷம்

காம திரிகோணத்தில் மற்றும் அயன ஸ்தானத்தில் (3,7,11,12) களத்திர காரனோடு, அசுப கிரக தொடர்புடன், செவ்வாய் சுக்கிரன் இருந்தால் தார தோஷம் வேலை செய்யும். அதுவே குருவின் பார்வை பெற்றால் அந்த தோஷம் விலகிப் போய்விடும். 

முக்கியமாக இந்த அமைப்பு உள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலையில், பல்வேறு படிப்பில் திறமை, குடும்பம் என்று ரெட்டிப்பாக இருக்கும். அதுவும் உபய ராசியிலிருந்தால் அதீத ஆற்றல் திறமை பன்மடங்கு வேகம் இருக்கும். ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்ற நிலையில் இருந்தால் இன்னும் உயர்வு என்றே சொல்லலாம்.

இது ஒரு ஜாதகரை கட்டாயம் வாழ்வில் உயர்வை ரெட்டிப்பாக்க உதவும் ஒரு ஊன்றுகோலான சேர்க்கை என்று சொன்னால் மிகையாகாது. எந்த பாவத்திலிருந்தாலும் இந்த யோகம் சிறிது அளவாவது நடக்கும், அதாவது விகிதாசாரம் மாறுபடும் என்பது உண்மையே.

இந்த சேர்க்கையில் களத்திர சுகம் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். இன்னும் மாறுபட்ட கோணத்தில் பார்க்க வேண்டும். சிலருக்கு இந்த யோகம் அருமையாக இருந்தாலும் சரிவர இயங்காது. அதற்கு முக்கியமாக ஆராய்ச்சியில் திருமணத்திற்குப் பிறகு மட்டுமே ஜாதகருக்கு யோகத்தையும் வெற்றியையும் நிச்சயம் தரவல்லவர்கள்.

வீடு மனை வாகனம்

செவ்வாய்-சுக்கிரன் சேர்க்கை மற்றும் கேந்திரத்தில் திரிகோணத்தில் இருந்தால் அது யோகம் தரும் ஜாதகம் ஆகும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு நிலம், அழகிய வீடு, ஆபரணம் சேர்க்கும் யோகம் ஏற்படும். ஜாதகர் தான் இருக்கும் வீட்டைச் சுத்தமாக, அழகாக வைத்துக்கொள்வார்கள்.

வருமானம் வரும் வழி 

வீடு கட்டி வாடகை விட்டால் லாபம், வாகனம் மூலம் வருமானம் உண்டு. அதுதவிர Coworking, கட்டட வடிவமைப்பாளர், போக்குவரத்துத் துறை, இயந்திர / கட்டட பொறியியல் துறை மற்றும் சொந்த தொழில் மூலமும் வருமானம் இருக்கும்.

செவ்வாயோ சுக்கிரனோ எதாவது ஒன்று வலுவிழந்து அல்லது நீச்சம் பெற்று சேர்க்கை பெற்றால் இன்பம் இல்லை என்று சொல்ல முடியாது. சிறு சிறு சந்தோஷமான நிலை ஜாதகருக்கு கட்டாயம் இருக்கும்.

இது தவிர இருவரும் திரிகோணத்தில் அமர்ந்தால் கடவுள் அனுக்கிரகத்தால் அன்பான நல்ல குழந்தைகள் பெறுவார்கள். அதோடு கோசார குரு- செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை பார்வை தொடர்பு பெரும் நேரம் அந்த ஜாதகர் அதீத உயர்வு பெறுவார்கள்.

இந்த கிரகங்கள் சுப தன்மையோடு இருந்தால் ஒரு நெருப்பு கிரகத்தோடு நீர் கிரகம் சேரும்போது உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இருந்தாலும் மற்ற பாவ கிரகத்தின் தொடர்பு கொண்ட காலகட்டத்தில் இருவரின் சேர்க்கை நோயின் தாக்கம் இருக்கும். குருகிய காலத்தில் அனைத்து சுகங்களைப் பெரும்பொழுது, அந்த வேகம் நோயின் தாக்கமும் கட்டாயம் இருக்கும். இந்த சேர்க்கையானது ரத்த சோர்வு, இணை உறுப்பு, விந்தணு குறைபாடு, கருப்பை பிரச்னை, நகம், பல், பால்வினை, வயிற்றில் பிரச்னை, அல்சர், சூட்டினால் ஏற்படும் நோய்,  முகப்பரு, சர்க்கரை நோய், அழகைக் கெடுக்கும் மாதிரியான சிறு சிறு வடுக்கல், கண் பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

செவ்வாய் சுக்கிரன் பாகைக்கு ஏற்ப நோயின் தாக்கம் மாறுபடும். முக்கியமாக செவ்வாய் பாகை அதிகம் பெற்றால், அசுபர்கள் தொடர்பு பெற்றால் நோயின் தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதீகம். இவர்கள் வேலையில் செயலில் நிதான தன்மை வேண்டும் அதற்கு யோகா பயிற்சி இவர்களுக்கு அவசியம் தேவை.

இந்த இருவரில் உங்களுக்கு வெற்றியை தரும் கிரகம், அந்த கிரகத்தின் ஆட்சி, உச்சம் மற்றும் அதிக பாகை பெற்ற அமைப்பில் இருந்தால் ஜாதகர் எடுத்து வைக்கும் காரியம் அனைத்தும் வெற்றியே. சில நேரங்களில் வலுக் குறைந்த செவ்வாய் அல்லது நீச்ச செவ்வாய் உடன் சுக்கிரன் சேரும்பொழுது நல்ல பலனைத் தரும். தவறான முடிவை எடுக்காமல் வேகத்தை குறைத்து, நிதானமான முடிவை எடுக்க வைக்கும். இது திருமணம் மற்றும் வேலை சார்ந்த இடத்தில் நன்று. கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும் என்பதற்கு இணங்க அலி கிரகமான புதன் வீட்டில் செவ்வாய் அதனுடன் சுக்கிரன்; சூரியன் சந்திரன் வீட்டில் சுக்கிரன் அதோடு செவ்வாய் இருப்பது சுமாரான பலனை தரவல்லவர். 

உடன் பிறந்த சகோதர மற்றும் சகோதரிகள் செல்வ சுகத்தோடு இருப்பார்கள். சுற்றம் நன்றாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம்.

சுக்கிரன், செவ்வாய் ஆகிய இரண்டும் நட்பும் இல்லை, எதிரியும் இல்லாத சம கிரகங்கள். செவ்வாயின் குருட்டு தைரியம் சொல்லும் கிரகம் அவற்றோடு சேரும் சுகப்போகி கிரகம் சுக்கிரன் உடன் சேரும்போது ஆண் பெண் இருவரும் ஒழுக்கத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவற்றால் சில பிரச்னைகளை ஏற்படுத்தும்.

ஜாதக அலங்காரத்தில் (பாடல்:1036) செவ்வாய் தசை சுக்கிர புத்தியில் செல்வம் சேரும், புதிதாக பெண் வருவாள், ஜாதகர் இறைப்பணி ஆற்றுவான், வாகன யோகமுண்டு, தவசிகள் தொடர்புகிட்டும், சிரங்கு தேமல் தோல் வியாதி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நல்ல கிரக சேர்க்கை பலன் ஜாதகரின் தசை புத்தி மற்றும் கோசார அடிப்படையில் நடைபெறும். அந்த கனியும் காலகட்டத்திற்கு ஏற்ப நாம் குருவின் அனுக்கிரகத்தோடு வெற்றிப் பாதையை நோக்கிச் செயல்பட வேண்டும்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் சுப நிலையில் இருந்தால் நன்று. இவை அனைத்தும் பொதுப்பலனே. சுப-அசுப கிரக பார்வை பெறும்போது இந்த பலன் விகிதசாரம் மாறுபடும்.

Whatsapp message: 8939115647
Email : vaideeshwra2013@gmail.com

ADVERTISEMENT
ADVERTISEMENT