கட்டுரைகள்

குழந்தை பிறப்பின்மையும் ஜோதிடம் தரும் முன்னெச்சரிக்கையும்!

12th Aug 2022 01:26 PM | ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

ADVERTISEMENT

 

கிட்டத்தட்ட உலகின்  0.25  முதல் 2.5% பெண்கள் கருப்பை நீர்க்கட்டி பிரச்னையாலும்(பிசிஓஎஸ்), 10% பெண்கள் கருப்பை சூலக பிரச்னையாலும்(பிசிஓடி) பாதிக்கப்படுகின்றனர். அதன் மூல காரணமும், ஜோதிடம் தரும் முன் எச்சரிக்கை பற்றியும் இந்த கட்டுரையில் காணலாம்.

நிறையப் பெண்கள் பிசிஓஎஸ், பிசிஓடி இருவகையான பாதிப்புகளையும் அடைகின்றனர். ஆனால் அது அவர்களுக்கு எளிதில் தெரிவதில்லை. அதனைக் கீழ் வரும் அறிகுறிகளை வைத்தே இந்த பிரச்னைகளுக்கு அவர்கள் ஆளாகி இருக்கிறார்கள் என அறிய முடியும்.

1. கருப்பை கட்டிகள்
2. ஆணின் தன்மைகளை அதிகமாகப் பெற்றிருத்தல்
3. தவறிய அல்லது நிலையற்ற மாதவிடாய்

ADVERTISEMENT

1. பலநீர்க்கட்டியுடன் கூடிய கருமுட்டை, கருப்பையில் தோன்றும் நோய்க்குறி ஆகும் (பிசிஓடி)

இது ஒரு மருத்துவ நிலையில் (MEDICATION) ஒரு அங்கம் ஆகும். இந்த நிலை பெண்களுக்கு, முதிர்ச்சியற்ற அல்லது ஓரளவு முதிர்ச்சி அடைந்த கரு முட்டைகளை அதிக எண்ணிக்கையில் உருவாவதும் அதனால், காலப்போக்கில் அதுவே கருப்பையை அடைத்துவிடுவதும் ஆகும். இந்த நிலையால், கருப்பை பெரியதாவதும் அதிக அளவில் ஆணின் ஹார்மோன்களை (ANDROGENES ) உருவாக்கி விடுவதும் நிகழும். இதனால், கருப்பையில் இருந்து முட்டையை வெளியே தள்ளிவிடும். இதன் காரணமாக கருவுறாமை, ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், அசாதாரணமான எடை அதிகரிப்பும் ஏற்படக் காரணமாகிவிடுகிறது.

முதிர்ச்சியற்ற அல்லது ஓரளவு முதிர்ச்சி அடைந்த கரு முட்டைகள் அதிக எண்ணிக்கையில் உருவாக முக்கிய காரணிகள் 

1. மோசமான / ஒழுங்கற்ற வாழ்க்கை முறை
2. உடல் பருமன் / அதிக உடல் எடை
3. மன அழுத்தம்
4. ஹார்மோன் சமநிலை இன்மை 

இது கருவுறுதலைப் பாதிக்காது. மேலும் அண்டவிடுப்பு முறையில் சிறிய மருத்துவம் காண, முழுமையான கருவுறும் செயல் நிறைவடைவதைக் காணலாம். இதனால், பெரிய அளவில் எந்த பாதிப்பும் நிகழாது.

2. பலவகையில் தோன்றும் நீர்க்கட்டியால் கருப்பை பாதிப்பு நோய் ஏற்படுத்துதல் (பிசிஓஎஸ்)

இந்த நோய் பொதுவாக ஒரு பெண்ணின் இன பெருக்க வயதான 12 முதல் 51 வயதான கால கட்டத்தில் தோன்றுகிறது. இவ்வாறு கருப்பை உள் மற்றும் வெளிப்புறத்தில் தோன்றும் இந்த நீர்க்கட்டி கருப்பையை பாதிக்கிறது. இந்த பாதிப்பால், பெண்ணிற்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளுக்கு உட்படுவதோடு, கரு உருவாவதை தடுக்கும் சூழலை ஏற்படுத்தவும் செய்கிறது. அதோடு மட்டுமல்லாமல் முகம் மற்றும் உடலின் பல பாகங்களில் அசாதாரணமான முடி வளர்வதை காணமுடிகிறது. இது அடுத்தகட்ட பிரச்னைகளான இதய பாதிப்பு, சர்க்கரை நோய் துவக்கம் போன்றவற்றிற்கு வித்திடுகிறது. இது ஒரு அபாயகரமான மருத்துவ நிலையாகும். இதற்கு மருத்துவ உதவியும் மற்றும் அறுவை சிகிச்சை முறை மருத்துவமும் நிச்சயம் தேவைபடலாம்.

மொத்தத்தில் மேலே கூறப்பட்ட நோய் தரும் பிரச்னைகள்

ஒவ்வொரு பெண்ணிற்கும்  தாம் பாதிக்கப்பட்டிருக்கிறோமா / இல்லையா என்பது தான் முதல் கேள்வியாக இருக்கும். அதிகப்படியான ஆண் தன்மை பெற்றிருப்பவர்களுக்கு இந்த பிரச்னை உள்ளது எனலாம். அது அவர்களின் உடலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பின்வரும் சில அறிகுறிகள், பிசிஓஎஸ் / பிசிஓடி நோய் தாக்கத்திற்கான அறிகுறிகளாக இருக்க அதிக வாய்ப்பு

ஒழுங்கற்ற ரத்தப் போக்கு
கருவுறாமை அல்லது உயர் ரத்த அழுத்தம் காரணமாகக் கருவுறாமை
2 ஆம் வகை சர்க்கரை நோய்
குறைப் பிரசவம் மற்றும் முன்கூட்டியே பிரசவம் ஆதல்
தேவையற்ற முடி வளர்ச்சி மற்றும் சில அறிகுறிகளால் மனச் சோர்வு அடைதல்
தூக்கத்தில் மூச்சுத்திணறல்
கருப்பை தடிமனாவதால் புற்றுநோய்க்கு ஆளாகுதல்
கருச்சிதைவு

நிச்சயம் இதற்கு மருத்துவ ஆலோசனை அதுவும், சிறந்த குழந்தைப் பேறு மருத்துவரை நாடி அவரின் ஆலோசனைப் படி நடந்திடல் அவசியம். அந்த மருத்துவர் பலவித கேள்விகளைக் கேட்பார், அப்போது தான் அந்த நோயாளி எந்த விதமான பிரச்னையில் உள்ளார் என்பதும் அதற்கான சரியான மருத்துவம் அளிக்கவும் உதவுவார்.

மருத்துவர் கேட்கும் ஒரு சில கேள்விகளை பார்ப்போம் :-

1. உங்கள் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் (signs & symptoms ) என்னென்ன ?
2. அந்த அறிகுறிகள் எப்போதெல்லாம் அறியமுடிகிறது ?
3. அந்த அறிகுறிகளால் எந்த அளவு பாதிப்பு ஏற்படுகிறது ?
4. எப்போதிலிருந்து இந்த அறிகுறிகளை நீங்கள் கவனித்து வருகிறீர்கள் ?
5. கடைசியாக மாதவிடாய் காலம் எப்போது நிறைவடைந்தது ?
6. உடல் எடை கூடுவதை எப்போதிலிருந்து உணருகிறீர்கள் ?
7. கருவுறுவதற்கு நீங்கள் திட்டமிட்டிருக்கிறீர்களா ?
8. உங்களின் சகோதரி அல்லது தாய்க்கு இந்த பிரச்னை இருந்துள்ளதா?

போன்ற பலகேள்விகளைக் கேட்கக்கூடும். அதற்கு பிறகே உங்களுக்கு சரியான வைத்தியத்தைத் தொடங்குவார்கள்.

ஜோதிடத்தின் பங்கு இந்த பிசிஓஎஸ் / பிசிஓடி நோய்க்கு எவ்வாறு முன்னமே ஒரு பெண்ணிற்கு ஏற்படும், என்பதை சுட்டிக்காட்டும். இதனை அறிந்துகொண்டால், திருமணத்திற்கு முன்னதாகவே தம்மைச் சீர்படுத்திக் கொள்ளலாம் என்பதனையே இந்த கட்டுரை விளக்கும்.

ஜோதிடம் தரும் தகவல்களை முதலில் பார்ப்போம்.

கர்ப்பப்பையைக் குறிக்கும் காரக கிரகம், சந்திரன். காரக ராசி விருச்சிகம்..பாவகம் - 8 ஆம் பாவகம். இந்த எட்டாம் பாவத்திற்கு அடுத்துக் குறிப்பது 7 ஆம் பாவகம் 7 ஆம் இடத்தாலும், 7 ஆம் இடத்தில் உள்ள கிரகங்களால் தோன்றும் கர்ப்பப்பை நோய்கள் சிறிய அளவில் மருத்துவம் பார்ப்பதால் குணமடையும். ஆனால், 8 ஆம் இடமும் அதில் நிற்கும் கிரகங்களால் தோன்றும் நோயின் தன்மை அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பெரிய அளவில் மருத்துவம் பார்க்க வேண்டியும்,  கர்ப்பப்பையையே நீக்க வேண்டியும் வரலாம்.

யாருக்கெல்லாம் இந்த கர்ப்பப்பை நோய் / கோளாறு ஏற்படுகிறது?

1. எந்த பெண்ணிற்கு ஜனன கால ஜாதகத்தில் விருச்சிக ராசி அல்லது விருச்சிக  லக்கினமாக வருகிறதோ அவர்களுக்கு வரும்.

2. அதே போல் துலா ராசி அல்லது துலா லக்கினம் உள்ளவர்களுக்கு வரும்.

3. ஜனன கால லக்கினத்திற்கு 8ஆம் இடத்தில் சந்திரன் இருப்பின் வரும்.

4. எந்த ராசி, லக்கினமாக இருந்தாலும் ஏதாவது ஒரு ராசியில் / கட்டத்தில் சந்திரனுடன், இயற்கையில் பாவ கிரகங்களான செவ்வாய் , சனி, ராகு , கேது இருப்பின் அதனால் சந்திரன் நிலை பாதிப்படைவதால், கர்ப்பப்பை நோய் வரும்.

5. துலாம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு இருபுறமும் பகை கிரகங்கள் இருந்து பாதிப்படைவதால் வரும்.

மேலே கூறியவை ஒரு சில விதிகளே அவற்றை தகுந்த ஜோதிடரின் ஆலோசனை பெற்று திருமணத்திற்கு முன்னமே, தகுந்த மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவம் பெற்றுக்கொண்டு, தம்மை தயார்ப்படுத்திக் கொள்வதால் குழந்தை பாக்கியத்தை, தடையின்றி பெறலாம்.

கர்ப்பப்பையில் உள், வெளி  நீர்க் கட்டிகள் / கருமுட்டையைப் பாதிக்கும் நீர்க்கட்டிகள் உருவாகக் காரணமாகும் கிரக அமைப்புகள்

1. சந்திரனுடன் ராகு / கேது இணைவு. இது கர்ப்பப்பையில் பல கோளாறுகளை உருவாக்கும்.

2.  செவ்வாய் உடன் ராகு / கேது இணைவு... இது ஒழுங்கற்ற மாதவிடாயைத் தரும்.

3. சந்திரனுடன் செவ்வாய் இணைவு. மன மற்றும் உடல் பாதிப்புகளால், ரத்தம் சீர்கெடுவதால் ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு

4. சுக்கிரனுடன் ராகு / கேது இணைவு. உயிர் அணுக்களின் கழிவுகளால் , முறையற்ற பாலுணர்வு வெளிப்பாடுகளால் கர்ப்பப்பை கோளாறு அளிக்கும்.

5. சந்திரனுடன் சனி இணைவு. மன அழுத்தம் மற்றும் அதிக வேலைப் பளு காரணமாக, கருப்பை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு.

6. சனியுடன் ராகு / கேது இணைவு. இது கழிவு உறுப்புகளின் சுத்தமின்மை அல்லது கருச்சிதைவால்  ஏற்பட்ட கழிவுகள் முழுவதுமாக வெளியேற்றப் படாததால், கர்ப்பப்பை பாதிப்பு ஏற்படுத்தும்.
 
மேற்படி இணைவுகள் கூடிய கிரகங்கள் நீர் ராசிகளான கடகம், விருச்சிகம் மற்றும் மீனத்தில் இருப்பின் கர்ப்பப்பையில் பல கோளாறுகளை அளிப்பதாக இருக்கும். இந்த கட்டுரை, ஒரு தகவல் அடிப்படை மற்றும் முன்னெச்சரிக்கைக்கு மட்டுமே அன்றி முழுமையான விளக்கம் இல்லை என்பதனை உணரவும்.

தொடர்புக்கு : 98407 17857  

ADVERTISEMENT
ADVERTISEMENT