கட்டுரைகள்

51 சக்தி பீடங்களின் மகத்துவம் (முழு விவரங்களுடன்) - நவராத்திரி ஸ்பெஷல்!

ரவி ஷங்கர் சங்ராம் பரி


இந்த பிரபஞ்சம் என்ற நாணயத்தின் இரு பக்கங்களாக விளங்குபவர்கள்தான் சதி (அன்னை பார்வதி தேவி), இறைவன் சிவபெருமான். பிரம்மன் மற்றும் பிரதானும் போல.

இந்தக் கதை ஒரு யாகத்தில் தொடங்கி சதியின் தீக்குளிப்புடன் சக்திக்கு அடிகோலி நிறைவு பெறுகிறது. சிவபெருமானுக்கு அழைப்பு விடுக்காமல், அவமதிக்கும் வகையில், தட்சிணன் மிக வலிமையான யாகம் நடத்த, யாகத்தைத் தடுக்கும் வகையில் சதி, அந்த யாகத்தில் தன்னைத் தானே இட்டு மாய்த்துக் கொண்டதால் உருவானதே 51 சக்தி பீடங்கள்.

இதனால் கடும் உக்கிரம் கொண்டு சதியின் உடலைக் கையில் ஏந்தியபடி சிவபெருமான் இந்த உலகமே அழியும் வகையில் தாண்டவமாட, மகாவிஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தால் சதியின் உடலை 51 துண்டுகளாக்குகிறார் (சில மகான்கள், இதனை 108 துண்டுகள் என்கிறார்கள்.) 

சிவனின் உக்கிர தாண்டவத்தால், சதியின் உடல் பகுதிகளும் இறைவி அணிந்திருந்த அணிகலன்களும் பூமியின் பல பகுதிகளில் சிதறி விழுந்தன. இவ்வாறு தேவியின் உடல் பகுதிகள் ஒவ்வொன்றும் விழுந்த புனித இடங்களே 51 சக்தி பீடங்களாக விளங்குகின்றன, பக்தர்களால் வணங்கப்படுகின்றன. இவை, சமஸ்கிருத மொழியில் உள்ள 51 எழுத்துகளைக் குறிப்பதாகவும் நம்பப்படுகிறது.

இந்த 51 சக்தி பீடங்களிலும் ஒன்றுபோல சக்தி தேவியும், கால பைரவரும் முக்கிய வழிபாட்டுத் தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர். தனிச்சிறப்பு கொண்ட சக்தி பீடங்கள், இந்திய எல்லைக்குள் மட்டுமல்லாமல், அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், திபெத், வங்கதேசம், இலங்கை ஆகியவற்றிலும் விரிந்து பரந்து உள்ளன. இவை அனைத்தும் இந்து மதத்தைப் பறை சாற்றுவதோடு, அந்தந்தப் பகுதியின் சிறப்பியல்புகளை எடுத்தியம்பும் வகையிலும் அமைந்திருப்பது கூடுதல் விசேஷம்.

தெய்வ வழிபாடு என்பது, பல நாடுகளின் எல்லைகளைக் கடந்து, அவற்றை ஒரு குடும்பம் போலக் கருதச் செய்யும் இந்து மதத்தின் மகத்துவத்தையும் கொண்டுள்ளன சக்தி பீடங்கள். காஷ்மீர் முதல் தமிழகம் வரையிலும் குஜராத் முதல் மேற்கு வங்கம் வரையிலும் தியாகம் - காதல், நம்பிக்கை -  மறுமலர்ச்சியின் அம்சங்களாக சக்தி பீடங்களில் இறைவி அருள்பாலித்து வருகிறார்.

சிவ புராணம் மற்றும் காளிகா புராணங்களில், 4 சக்தி பீடங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன - அவை, விமலா (புரி, ஒடிசா), தாரா தாரிணி (கஞ்சம், ஒடிசா), காமாக்யா (குவஹாட்டி), தட்சிண காளிகா (காளிகட், கொல்கத்தா) ஆகியன.

சில சக்தி பீடங்கள், நூறுநூறாண்டுகள் பழைமை வாய்ந்தவையாக உள்ளன. அதோடு, இந்தக் கோயில்கள் இதுநாள் வரை, பல புராதன உள்ளூர் நம்பிக்கைகளையும் ஐதீகங்களையும் தாங்கி நிற்கின்றன. உதாரணமாக, 15 ஆம் நூற்றாண்டில், புத்த மாலிக் என்ற கால்நடை மேய்ப்பவருக்கு, ஒரு துறவி பை நிறைய நிலக்கரியை அளிக்கிறார். அது சிவபெருமானின் சக்தியால் தங்கமாக மாறியது. தனது நன்றியை வெளிப்படுத்த இறைவனைத் தேடிய புத்த மாலிக், அமர்நாத் குகையில் பனி லிங்கமாகக் காட்சியளித்த சிவலிங்கத்தை வணங்கினார் என்ற ஐதீகம் இன்றளவிலும் விளங்கி வருகிறது.

உலகின் மிகப் பெரும் ஆக்கும் சக்தியாகவும் அழிக்கும் சக்தியாகவும் பார்வதி தேவி விளங்குகிறார். சதியின் மறுபிறவியான பார்வதி தேவி, ஆக்கம், மகப்பேறு, மாற்றம், ஆணின் சுதந்திரம் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் சக்தியாகவும் வழிபடப்படுகிறார். சக்தியின் முக்கியத்துவம் சிவராத்திரியின் போது வெளிப்படுகிறது. சதி, மலைகளின் மகளாக பார்வதி தேவியாக மறுபிறவி எடுக்கிறார். பார்வதி தேவி புதிய அவதாரம் எடுத்த மிருகசீரிட மாதத்தின் 14 வது நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு சக்தி பீடமும், ஒளிரும் பார்வதி தேவியின் அருளால் நிரம்பியிருக்கின்றன. அவை, காதல், பழிவாங்குதல், பக்தி என அனைத்தின் உருவமாக உள்ளன. குறிப்பாக, கோயிலுக்குள்ளேயும் வெளியேயும் தீய சக்திகளிடமிருந்து ஆண்களைக் காக்கும் திருத்தலங்களாகவும் சிறப்புப் பெற்றுள்ளன. காளியைக் கருமையாகவும் அழிக்கும் சக்தியாகவும் பார்க்கும் பலரால், அவளை  சரியாக உணர முடியாது. ஆனால் அவளது அழிக்கும் ஆற்றல் முழுக்க முழுக்க தீய சக்திகள் மீதுதான். இந்த தீய சக்தி என்பது மனிதர்களுக்கு உள்ளிருக்கும் தான் என்ற ஆணவம், அதனால் உருவாகும் பொறாமை, எதிர்மறை எண்ணம், இதர தீய குணங்களே. இந்த 51 சக்தி பீடங்களிலும், சிவபெருமான் பைரவர் வடிவில் அதே ஆற்றலுடன் ஆனால் வெவ்வேறு தோற்றங்களில் காட்சியளிக்கிறார். சாக்தர்கள், பார்வதி தேவியை, இறைவனின் பெண் வடிவாகவே வழிபடுகிறார்கள். 

சைவம் (சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டவர்கள்) மற்றும் வைணவத்துக்கு (விஷ்ணுவை வணங்குவோர்) இணையாக, ஒருபுறம் சாக்தம் (சக்தியை வணங்குவோர்) வளர்ந்து வருகிறது.

பெரும்பான்மையான சக்தி பீடங்களில், பைரவர் வடிவில் காட்சியளிக்கும் சிவபெருமான், பீடம் அமைந்திருக்கும் பகுதியின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப பல வடிவங்களில் அருள்பாலிக்கிறார். பழங்காலத்தில் இயற்கையையே தெய்வமாக வணங்கும் முறையை மெய்ப்பிப்பதாக ஹிந்து மதம் இருப்பதை வனங்கள், மலைகள், ஆறுகள், ஏரிகளின் தெய்வமாகவே தேவி விளங்குவது உணர்த்துகிறது. அதனாலேயே, பல சக்தி பீடங்கள், மலைகளின் உச்சியிலும், குகைகள், நீர் நிலைகளுக்கு அருகிலும், எங்கெல்லாம் இயற்கை தனது ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறதோ அங்கெல்லாம் அமைந்திருப்பதும் வெகு சிறப்பு.

பைரவரின் தோற்றம் குறித்து புராணக் கதைகள் ஏராளம் உள்ளன. பிரம்மாவின் தலையை வெட்ட, சிவனின் தலைமுடியிலிருந்து பிறந்தவர் கால பைரவர் என்றும்; சிவபெருமான் காளியையும் அவளது குழந்தையையும் தனக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டபோது உருவானதே அஷ்டாங்க பைரவர்கள் என்றும் கூறப்படுகிறது. அதாவது, சக்தி பீடங்களைக் காக்க சிவபெருமானால் உருவாக்கப்பட்டவர்களே அஷ்டாங்க எனப்படும் 64 பைரவர்கள் என்றும் புராணக் கதைகள் சொல்கின்றன.

மனிதனின் ஆணவத்தை அழித்து, பக்தி மூலம் அவனைப் புனிதமாக்கி, பக்தி வழியில் இறை அருளைப் பெற்று மகிழ வைப்பதே அனைத்து சக்தி பீடங்களின் நோக்கம்.

நவராத்திரி - தசரா பண்டிகை விரைவில் கொண்டாடப்படவிருக்கிறது. இதையொட்டி,  தேவி அருள்புரியும் புனிதமான 51 சக்தி பீடங்களின் மகத்துவத்தை, அவற்றின் முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

***

வட இந்தியா

மகாமாயா சக்தி பீடம்

அமர்நாத், ஜம்மு - காஷ்மீர்
தேவியின் தொண்டைப் பகுதி விழுந்த இடம்
பைரவர் : திரிசந்தியேஷ்வர்

இமாலய மலை மீது (12,756 அடி) அமர்நாத் குகையில் அமைந்திருக்கும் இந்த சக்தி பீடத்தின் இறைவி மகாமாயா. இங்கு விழுந்த தேவியின் தொண்டைப் பகுதியை தீய சக்தி, இயற்கைப் பேரிடரிடமிருந்து காக்க திரிசந்தியேஷ்வரை நியமித்தார் சிவபெருமான். அமர்நாத் யாத்திரையில் பங்கேற்பதால், பக்தர்கள் ஈர்ப்பு சக்தி பெற்று,  கர்ம வினைகள் நீங்கி, ஆத்ம சுத்தியடைவதாக நம்புகிறார்கள்.

பார்வதி தேவிக்கு இந்த தலத்தில்தான் கிரியா குண்டலினி பிராணாயாம் என்ற அழிவின்மையின் ரகசியத்தை சிவபெருமான்  வெளிப்படுத்தினார். இங்கு அருள்பாலிக்கும் மகாமாயா, ஆக்கும் - அழிக்கும் சக்தியாக விளங்குகிறார், இது தெய்வீக சுழற்சித் தன்மையின் உதாரணமாக உள்ளது.

புராணக் கதை: இறைவனுடன் இணைய விரும்பிய பார்வதி தேவி தவமிருப்பதற்காக சிவபெருமான் உருவாக்கியதே அமர்நாத் குகை. இந்தக் குகையில் பார்வதி தேவிக்கு, சிவபெருமான் தந்திர, யோக, பிரம்ம ரகசியங்களுடன், அழிவில்லா ரகசியத்தையும் கூறினார். அப்போது அதனை யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக ருத்ர காலாக்னியை உருவாக்கி, கண்ணில்படும் அனைத்தையும் அழித்துவிட ஆணையிட்டார் சிவன். ஆனால், சிவபெருமான் அமர்ந்திருந்த மான் தோலுக்கு அடியில் இருந்த இரண்டு புறா முட்டைகளுக்குள் இருந்த குஞ்சுகள் மட்டும் அழிவில்லா ரகசியத்தைக் கேட்டதால், அவை முட்டையிலிருந்து வெளியேறி அழிவில்லாமல் உயிர் வாழ்ந்துவருவதாக நம்பப்படுகிறது. இந்த புராணக் கதையை உறுதி செய்யும் வகையில், உறையும் பனி மலையில், இரண்டு புறாக்கள் இருப்பதைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போகிறார்கள் பக்தர்கள்.

செல்வதற்கு உகந்த காலம்: ஜூலை - ஆகஸ்ட்
அருகிலுள்ள விமான நிலையம்: ஸ்ரீநகர் (72 கி.மீ.)
அருகிலுள்ள ரயில் நிலையம்: ஜம்மு - தாவி (176 கி.மீ.)
அருகிலுள்ள பேருந்து நிலையம்: பஹல்காம், பைட்டால், ஜம்முவிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்

***

கண்டகி தேவி சக்தி பீடம்
முக்திநாத், நேபாளம்
வலது கன்னம் விழுந்த இடம்
பைரவர் : சக்ரபாணி

நேபாளத்தில், கண்டகி நதி பெருக்கெடுக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த கோயிலில் நிலப் பகுதியிலிருந்து 3,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. தலத்திலிருக்கும் தேவி கண்டகி சண்டி (தடைகளைத் தகர்ப்பவள்) என அழைக்கப்படுகிறாள். முக்திநாத் கோயில் அருகே அமைந்துள்ள இத்தலம், ஹிமாலயத்தின் பகோடா (கோவில்) மாதிரியில் கட்டப்பட்டுள்ளது. கையில் சக்கரத்துடன் காட்சியளிக்கும் இறைவன் பக்தர்களுக்கு மோட்சம் அளிப்பவராகவும் கஷ்டங்களை தீர்ப்பவராகவும் உள்ளார்.

நதிக்கரையோரம் அமைந்திருக்கும் பல வர்ண சாலிகிராமங்களை விஷ்ணுவுடையது என்று கொண்டாடுகிறார்கள் வைஷ்ணவர்கள். வெள்ளை - வாசுதேவர், கருப்பு விஷ்ணு, பச்சை நாராயணர், நீலம் - கிருஷ்ணர், தங்க, சிவப்பு, மஞ்சள் நிறம் நரசிம்மர், மஞ்சள் - வாமனர் என்று கூறப்படுகிறது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 108 திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. 

புராணக் கதை: திபெத் செல்லும் வழியில், இத்தலத்தில் தவமிருந்த பத்மசாம்பவா, அங்கு திபெத்திய புத்த மதத்தை நிறுவினார். 108 நீரூற்றுகளைக் கொண்ட இந்த நதி - ஜோதிடத்தில் 12 ராசிகள், 9 கிரகங்களின் சேர்க்கையான 108 ஐ உலகுக்கு உரைப்பதாக உள்ளது.

செல்வதற்கு உகந்த காலம்: மார்ச் - மே மற்றும் செப்.- டிசம்பர்
அருகிலுள்ள விமான நிலையம்: காத்மண்டு - போக்ரா - ஜோம்சன். அங்கிருந்து கோயிலுக்குச் செல்லலாம். அல்லது விமானம் மூலம் காத்மண்டிலிருந்து முக்திநாத் செல்லலாம்.
அங்கிருந்து கோயிலுக்கு 30 நிமிடம் நடந்து செல்ல வேண்டும்.

***

ஜ்வாலாஜி சக்தி பீடம்
கங்கரா, இமாச்சலம்
தேவியின் நாக்கு விழுந்த இடம்
பைரவர்: உன்மத்த பைரவர்

இக்கோயிலில் சிலை வழிபாடு இல்லை. இயற்கை வாயு மூலம் எரியும் நீல நிற ஜோதியே ஜ்வாலாமுகியாக வழிபடப்படுகிறது. மகாகாளி, அன்னபூரணி, சண்டி, ஹிங்லாஜ், வித்யா, பாஸ்னி, மகா லட்சுமி, சரஸ்வதி, அம்பிகை, அஞ்சி தேவி ஆகிய 9 தேவிகளுக்கு 9 ஜோதிகள் எரிகின்றன. இங்கு பாண்டவர்கள் கோயில் கட்டி அம்பிகையை வழிபட்டுள்ளனர். கொடுவாள், ஈட்டியுடன் காட்சியளிக்கும் உன்மத்த பைரவரை ஜாதகப் பொருத்தமில்லா காதலர்கள், கிரக தோஷமுள்ளவர்கள், குழந்தைப்பேறு இல்லா பெண்கள் வழிபட்டுப் பலனடைகிறார்கள்.

புராணக் கதை: இங்குள்ள ஜ்வாலாமுகி ஜோதியை மன்னர் அக்பர் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றும் முடியவில்லை. பின்னர், அவரும் அன்னையின் பக்தராகி, கோயில் குளத்தில் எப்போதும் தண்ணீர் கொட்டுமாறு வழிசெய்தார்.

விழாக்கள்: நவராத்திரி
செல்வதற்கு உகந்த காலம்: மார்ச் - ஏப்ரல் மற்றும் செப்டம்பர் - அக்டோபர்
அருகிலுள்ள விமான நிலையம்: தர்மசாலா (40 கி.மீ.)
அருகிலுள்ள ரயில் நிலையம்: உனா (60 கி.மீ.)

***

தாட்சாயிணி தேவி சக்தி பீடம்
மானசா, திபெத்
தேவியின் வலது கை விழுந்த இடம்
பைரவர்: அமர்

மானசரோவர் ஏரிக்கரையில், கைலாசத்தின் நுழைவு வாயிலாக உள்ள இத்தலத்தில் தேவி தாட்சாயிணி அருள்பாலிக்கிறார். இவ்விடத்தில் கோயில் அமையவில்லை, நிலையற்ற உலகைப் பிரதிபலிப்பது போல இவ்விடத்துக்கு வரும் பக்தர்கள் தேவியை வழிபட்டுச் செல்கிறார்கள். கோயில் என்று இல்லாவிட்டாலும், இங்கிருக்கும் மிகப் பெரிய கற்பாறையைப் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

விழாக்கள்: ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் சுக்லபட்ச அஷ்டமியில் எட்டாவது நாளில் திருவிழா நடைபெறுகிறது.

செல்வதற்கு உகந்த காலம்: மே மாத மத்தியிலிருந்து அக்டோபர் வரை.
அருகிலுள்ள விமான நிலையம்: ஜம்மு
சாலை வழி: பொது மற்றும் தனியார் வாகனங்கள், லிபுலேக் மற்றும் நாது லா வழித் தடங்களில் கோயிலுக்கு இயக்கப்படுகிறது.

***

மிதிலை சக்தி பீடம்
மிதிலை, பிகார்
தேவியின் இடதுதோள் விழுந்த இடம்
பைரவர் : மகோதரர் / மகேஷ்வரர்

பார்வதியின் மற்றொரு அவதாரமான உமா தேவியின் திருக்கோயில் இது. உமா தேவி - சிவபெருமான் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் ஆகி, உலகில் ஆண் - பெண் ஆற்றல்கள் இணைந்து சக்தியாக விளங்கிய தலம். இந்த சக்தி பீடமானது மதுபானியில் உள்ள வன துர்க்கை கோயில், சமஸ்டிபூரில் உள்ள ஜெயமங்கலா தேவி கோயில், சஹர்சாவில் உள்ள உக்ரதாரா கோயில்கள் என 3 கோயில்களை ஒன்றிணைத்தது. 

இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் சிவன் - உமாதேவியின் அருளைப் பெற்றால் குடும்ப வாழ்க்கை இனிக்கும், அமைதியான இல்வாழ்க்கை அமையும்.
விழாக்கள்:  ராமநவமி, சிவராத்திரி, துர்கா பூஜை, காளி பூஜை, நவராத்திரி.

செல்வதற்கு உகந்த காலம்: ஆண்டு முழுவதும்
அருகிலுள்ள விமான நிலையம்: பாடன் (4 மணி நேரம்)
அருகிலுள்ள ரயில் நிலையம்: ஜனக்பூர்

***

குஹேஸ்வரி சக்தி பீடம்
காத்மண்டு, நேபாளம்
இரு முழங்கால்கள் விழுந்த இடம்
பைரவர் : கபாலி

பாகமதி நதிக்கரையில் அமைந்துள்ள பசுபதிநாதர் கோயிலில் குஹேஸ்வரி சக்தி பீடம் அமைந்துள்ளது. இங்குள்ள தேவி, உயிரைக் காப்பவளாகவும், உயிரைக் கொடுப்பவளாகவும் விளங்குகிறார். பசுபதிநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் தேவியை வழிபட்டுவிட்டுப் பிறகு பசுபதிநாதரைத் தரிசிக்கச் செல்கிறார்கள். பிரம்மாவின் மண்டை ஓட்டை, பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு கபாலி உலகம் முழுவதும் அலைவதாக இந்தக் கோயிலின் புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. ஆணவத்தை உருவகப்படுத்துவதாகவே இந்த மண்டைஓடு விளங்குகிறது.

புராணக் கதை: பசுபதிநாதர் கோயிலில் இருக்கும் பூசாரி, ஒருவரின் இறப்பு தேதியை மிகச் சரியாகக் கணிப்பதாக நம்பப்படுகிறது.

விழாக்கள்: குஹேஸ்வரி யாத்திரை, நவராத்திரி, நேவார்க் போக்

செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர் - மார்ச்
அருகிலுள்ள விமான நிலையம்: காத்மண்டு
சாலை வழி : தில்லியிலிருந்து 20 மணி நேரப் பயணம்

***

தேவி வராகி சக்தி பீடம்
பஞ்சசாகர், வாராணசி, உத்தரப் பிரதேசம்
தேவியின் கீழ்த் தாடை விழுந்த இடம்.
பைரவர்: சம்ஹாரர் / மகா ருத்ரர்

புகழ்பெற்ற தசாஷ்வமேத் படித்துறைக்கு அருகேயுள்ள மன்மந்திர் படித்துறையில் அமைந்துள்ளது வராகியின் பஞ்சசாகர் சக்தி பீடம். வராகி என்றால் பன்றியின் முகம்கொண்டவர். சிவப்பு நிற சேலையில், விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தைப் போன்ற ஆயுதத்தைக் கையிலேந்தி காட்சியளிக்கிறார். கடவுள் விஷ்ணுவைப் போல காட்சியளிக்கும் இந்தக் கோயில் தனிச்சிறப்பு மிக்கது. தேவி நாராயணியாக காட்சியளிக்கும் இறைவி, எதிரிகளை அழிக்க வல்லவர். தாந்திரிகம் அறிந்தவர்கள், இவளை வணங்கி, நீண்ட மகிழ்ச்சியான ஆயுளைப் பெறுகிறார்கள். 

புராணக் கதை: ஷும்பா என்ற அரக்கன் நேருக்கு நேர் மோதி வதம் செய்ய துர்க்கையை அழைத்தபோது, மாத்ரிகாக்கள், துர்க்கையின் உடலுக்குள் நுழைந்து ஒரு சக்தியாகி, அரக்கனை வதம் செய்தனர்.

செல்வதற்கு உகந்த காலம்: செப்டம்பர் - பிப்ரவரி
அருகிலுள்ள விமான நிலையம்: வாராணசி
அருகிலுள்ள ரயில் நிலையம்: வாராணசி

***

லலிதா தேவி சக்தி பீடம்

சீதாபூர், உத்தரப் பிரதேசம்
தேவியின் விரல்கள் விழுந்த இடம்
பைரவர்: பவா

லலிதா தேவியானவர் அழகின் உருவமாக உள்ளார். இங்கே சதியின் இதயம் விழுந்ததாகவும், விரல்கள் விழுந்ததாகவும் இருவேறு நம்பிக்கைகள் உள்ளன. தேவி மாதவேஷ்வரி, ராஜராஜேஸ்வரி என அழைக்கப்படுகிறார். இங்கு வந்து வழிபட்டு அறிவு, ஆற்றல் பெறும் பக்தர்கள், சாபங்கள் விலகி இறைசக்தி கிடைப்பதாக நம்புகிறார்கள். அலாகாபாத் அருகே நைமிசாரண்யா என்ற வனத்தில் 88 ஆயிரம் சாதுக்கள் தவமிருந்து வேதங்கள், புராணங்கள் உள்ளிட்டவை இயற்றியதாக ஐதீகம்.

புராணக் கதை: சீதாபூரின் இறைத்தன்மையை அதிகரிக்க பிரம்மா, விஷ்ணு, மகேசுவரன் ஒன்றாகக் காட்சியளித்தனர்.

விழாக்கள்: நவராத்திரி
செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர் - பிப்ரவரி
அருகிலுள்ள விமான நிலையம்: லக்னௌ (107 கி.மீ.)
அருகிலுள்ள ரயில் நிலையம்: சீதாபூர்

***

சாவித்ரி தேவி சக்தி பீடம்
தானேசர், குருக்ஷேத்ரா, ஹரியாணா
தேவியின் கணுக்கால் விழுந்த இடம்
பைரவர்: ஸ்தாணு

குருக்ஷேத்திரத்தில் உள்ள பிரம்ம சரோவர், தேவிகூப் பத்ரகாளி கோயில் அல்லது காளிகா பீடத்துக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது. தேவி பத்ரகாளியின் நீண்ட நாக்கால் காளியின் உருவமாகப் பார்க்கப்படுகிறது. போருக்குச் செல்வதற்கு முன், பாண்டவர்களும், கிருஷ்ணரும் தேவியை வழிபட்டுச் சென்றதாக ஐதீகம். அழகிய தாமரை மீது, அலங்கரிக்கப்பட்ட கணுக்காலின் பளிங்குச் சிலைதான் இங்கு வழிபடப்படுகிறது. இங்கு சின்னக் குழந்தைகளுக்கு மொட்டைபோடும் வழக்கம் உள்ளது.

புராணக் கதை: கிருஷ்ணரும் பலராமரும் குழந்தைகளாக இருந்தபோது இங்குதான் மொட்டைபோட்டுள்ளனர்.

விழாக்கள்: சித்திரை நவராத்திரி, ஷோப யாத்திரை.
செல்வதற்கு உகந்த காலம்: செப்டம்பர் - மார்ச், கோடையில் செல்வதைத் தவிர்க்கலாம்.
அருகிலுள்ள விமான நிலையம்: சண்டீகர் (98 கி.மீ.)
அருகிலுள்ள ரயில் நிலையம்: குருக்ஷேத்திரம்
 

***

விசாலாட்சி சக்தி பீடம்
வாராணசி, உத்தரப் பிரதேசம்
தேவியின் காதணி விழுந்த இடம்
பைரவர்: கால பைரவர்

வாராணசியின் மீர் படித்துறை பகுதிக்கு அருகே விசாலாட்சி (மிகப் பெரிய கண்களைக் கொண்டவள்) கோயில் அமைந்துள்ளது. இவள் மணிகர்ணிகை என்றும் அழைக்கப்படுகிறாள். தமிழகத்திலிருந்து சென்ற சாக்த குழுவினர் கோயிலைப் புதுப்பித்த பிறகு, விசாலாட்சியின் கருஞ்சிலை 1970ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. சிலைக்கு வலது பக்கத்தில் தேவியின் உண்மையான சித்திரம் இடம்பெற்றுள்ளது. தென்னிந்தியர்கள், மூன்று தேவிகளான விசாலாட்சி, காமாட்சி (காஞ்சிபுரம்), மீனாட்சி (மதுரை) திருத்தலங்கள் வழிபட வேண்டிய மிக முக்கியத் தலங்களாகக் கருதுகிறார்கள்.
 
விழாக்கள்: அக்டோபர், மார்ச் மாதங்களில் நவராத்திரி.
பருவமழைக் காலத்தின் கடைசி மாதத்தில், ஒவ்வொரு ஆண்டும் கஜலி திஜ் எனும் கோயில் திருவிழா நடைபெறுகிறது.
செல்வதற்கு உகந்த காலம்: ஆகஸ்ட் - மார்ச்
அருகிலுள்ள விமான/ரயில் நிலையம்: வாராணசி

***

தேவி காத்தியாயினி சக்தி பீடம்
பிருந்தாவனம், உத்தரப் பிரதேசம்
தேவியின் கேசம் விழுந்த இடம்
பைரவர் : பூதேஷ

பிருந்தாவன் நகரின் மத்தியில் அமைந்துள்ள இத்தலம் உமா தேவிக்கான கோயில். கம்சனுக்கு எதிரான போரில் கிருஷ்ணருக்கு தேவி உதவியதாக ஐதீகம். ராதை சிறந்த வாழ்க்கைத் துணை வேண்டி தேவியை வழிபட்டு, கிருஷ்ணரை அடைந்தார். ராதா மேற்கொண்ட பூஜையே, இங்கு காத்தியாயினி விரதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. காத்தியாயினி (சாக்த்ம்), சிவன் (சைவம்), லட்சுமிநாராயணர் (வைஷ்ணவம்), கணேசர் (காணாபத்யாய), சூரியன் (சூர்யர்) என ஐந்து தெய்வங்களை வழிபடுவோருக்கென தனித்தனி சன்னதிகள் ஜகத்தாத்ரி தேவியின் சன்னதியோடு அமைந்துள்ளன. பாழடைந்து கிடந்த இக்கோயிலை புனரமைத்ததில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்திமான் ஸ்ரீசைதன்ய மகாபிரபுவுக்கு முக்கிய இடமுண்டு. தற்போது வழிபடப்படும் சிலையானது 1923ஆம் ஆண்டு யோகிராஜ் சுவாமி கேசவானந்த் பிரம்மச்சாரியால் நிறுவப்பட்டது. 

விழாக்கள்: விஜயதசமி, துர்கா பூஜை, நவராத்திரி
செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர் - மார்ச், மழைக் காலங்கள் செல்லத் தகுந்த காலமாகும். 
அருகிலுள்ள விமான நிலையம்: ஆக்ரா (53 கி.மீ.)
அருகிலுள்ள ரயில் நிலையம்:  பிருந்தாவனம்

****

திரிபுரமாலினி தேவி சக்தி பீடம்

ஜலந்தர், பஞ்சாப்
தேவியின் இடது மார்பு விழுந்த இடம்
பைரவர்: விஷான்

மகாசரஸ்வதி, மகாலட்சுமி, மகாகாளி ஆகிய மூன்று தேவிகளின் ஒருங்கிணைந்த சக்தியாக இத்தல தேவி விளங்குகிறார். வசிஷ்டர், வியாசர், மனு, ஜமதக்னி, பரசுராமர் ஆகியோர், இத்தல ஆதி சக்தியை திரிபுரமாலினியாக வழிபட்டுள்ளதாக ஐதீகம். நர்மதா சக்தி பீடத்தைப் போலவே, இத்தலத்தில் உயிரிழக்கும் பறவையாக இருந்தாலும்கூட அது நேராக சொர்க்கத்துக்குச் செல்லும் என்பது நம்பிக்கை. செவ்வாய், ஞாயிறுகள் வழிபட உகந்த நாள்கள்.

திருவிழாக்கள்: நவராத்திரிகள், ஜாக்கிரதா (இரவு முழுக்க பூஜைகள் நடைபெறும்)

செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர் - மார்ச்
அருகிலுள்ள விமான நிலையம்: அமிருதசரஸ் (94 கி.மீ.)
அருகிலுள்ள ரயில் நிலையம்: ஜலந்தர்

***

மங்கல கௌரி சக்தி பீடம்

கயா, பிகார்
தேவியின் வலது மார்பு விழுந்த இடம்
பைரவர்: உமா மகேசுவரர்

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தலம் 18 அஷ்டதசாசக்தி பீடங்களில் ஒன்று என்கிறார் ஆதிசங்கரர். மங்கல கௌரி மலை மீது அமைந்திருக்கும் இக்கோயில், புராணப் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில், பாண்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியபோது இங்குதான் சிரார்த்தங்களை செய்துள்ளதாக ஐதீகம். இங்குள்ள சர்வமங்கல தேவியை வழிபடுவதால், வாழ்வில் அனைத்து செல்வங்களும் தங்கும் என்பது நம்பிக்கை. இங்கு தேவியின் மார்பகங்களைக் குறிக்கும் வகையில், இரண்டு வட்ட வடிவ கற்களைப் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

புராணக் கதை: இங்கு பாயும் ஃபல்கு நதி, ராமரின் மூதாதையர்களுக்கு, சீதாதேவி பிண்டமிட்டு சிரார்த்தம் செய்ததை மறைத்துப் பொய் சாட்சி கூறியதால், அவரது சாபத்துக்கு ஆளானது. திருமணமான பெண்கள் தங்களது நீண்ட நல்வாழ்க்கைக்காக இங்கு செவ்வாய்தோறும் விரதமிருந்து பூஜை செய்கிறார்கள்.

செல்வதற்கு உகந்த காலம்:  செப்டம்பர் - பிப்ரவரி
அருகிலுள்ள விமான நிலையம்: புத்த கயை (10 கி.மீ.)
அருகிலுள்ள ரயில்/பேருது நிலையம்:  கயை (5 கி.மீ.)

***

வடமேற்கு இந்தியா

கோத்தாரி தேவி சக்தி பீடம்

ஹிங்லாஜ், லாஸ்பேலா மாவட்டம், பலுசிஸ்தான், பாகிஸ்தான்
தேவியின் தலை விழுந்த இடம்
பைரவர்: பீமலோசன்

ஹிங்லாஜ் தேவி, தன்னை நாடி வரும் பக்தர்களை, எந்த வேறுபாடுமின்றி அனைவரையும் தாயைப் போல  அருள்பாலிப்பவர். அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்களோ, தேவியைத் தாய்வழிப் பாட்டி என்றே அழைக்கிறார்கள். தேவி குடிகொண்டிருக்கும் குகைக் கோயிலைப் பாட்டி கோயில் என்கிறார்கள். இந்த கோயிலின் கருவறைக்குள் இருக்கும் வடிவமற்ற சிவப்பு நிறத்தைக் கொண்ட கல்தான் தெய்வமாக வழிபடப்படுகிறது. சிவனின் மூன்றாவது கண்ணாக பீமலோசன் அருள்பாலிக்கிறார்.

புராணக் கதை: திரேதாயுகத்தில், ஹிங்கோல் மற்றும் சுந்தரின் கடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுவிக்குமாறு மக்கள் வேண்டினர். இறைவன் கணேசர் சுந்தரை வதம் செய்ததால், ஹிங்கோல் கடும் சினம் கொள்கிறார். மக்களைக் காக்க குகைக்குள் ஹிங்கோலை அடைத்து, அவனது ஆணவத்தை அடக்கிய தேவி, பிறகு அவனது உயிரை மாய்க்கிறார். அதை நினைவுபடுத்தும் வகையில் இந்தக் குகை ஹிங்கோல் என அழைக்கப்படுகிறது.

விழாக்கள்: சாரதா நவராத்திரி, ஏப்ரலில் மூன்று நாள் ஹிங்லாஜ் மாதா விழா.
செல்வதற்கு உகந்த காலம்: குளிர்காலம்
அருகிலுள்ள விமான நிலையம்: கராச்சி (250 கி.மீ., 4 மணி நேரப் பயணம்)
 

***

தேவி காயத்ரி சக்தி பீடம்
மணிபந்த், புஷ்கர், ராஜஸ்தான்
தேவியின் மணிக்கட்டுகள் விழுந்த இடம்
பைரவர்: சர்வானந்தர்

அறிவுக் கடவுளாக விளங்குகிறார் காயத்ரி எனப்படும் சரஸ்வதி தேவி. இது காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க உகந்த இடமாகும். காயத்ரி மலையின் உச்சியில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் மிக நீண்ட தூண்கள், அந்தக் காலத்தைய கட்டடக் கலையையும் எடுத்துரைக்கின்றன.

விழாக்கள்: புஷ்கர் மேளா, நவராத்திரி விழாக்கள், சிவராத்திரி மற்றும் காயத்ரி ஜயந்தி.
செல்வதற்கு உகந்த காலம்: நவம்பர் - பிப்ரவரி
அருகிலுள்ள விமான நிலையம்: ஜெய்ப்பூர் (150 கிமீ.)
அருகிலுள்ள ரயில் நிலையம்: அஜ்மீர் (11 கி.மீ.)


***

சிவகார்காராய் சக்தி பீடம்
கரவீர்பூர், கராச்சி, பாகிஸ்தான்
தேவியின் கண்கள் விழுந்த இடம்
பைரவர்: குரோதிஷா

ஒருசில சக்தி பீடங்களைப் போலவே, இங்கு மஹிஷாசுரமர்த்தினி ஆட்சியதிகாரம் செய்கிறார். சிவபெருமான் கடுங்கோபத்தோடு குரோதிஷாவாக காட்சியளிக்கிறார். புராணங்களில், தேவிக்கும் மூன்று கண்கள் இருந்ததாகவும், அந்த மூன்றாவது கண் இங்கே விழுந்ததாகவும் ஐதீகம்.

விழாக்கள்: துர்க்கை பூஜை, ஆண்டுதோறும் 4 நாள்கள் நடைபெறும் தீர்த்த யாத்திரை.
செல்வதற்கு உகந்த காலம்: ஏப்ரல், அக்டோபர் - நவம்பர்
அருகிலுள்ள விமான நிலையம்: கராச்சி (263 கி.மீ.)
அருகிலுள்ள ரயில் நிலையம்:  பர்காய்
 

***


வடகிழக்கு இந்தியா

காமாக்யா தேவி சக்தி பீடம்
காம்கிரி, குவாஹாட்டி, அசாம்
தேவியின் யோனி விழுந்த இடம்
பைரவர்: பயாநந்தா / உமாநந்தா

51 சக்தி பீடங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும் இத்தலம், குவாஹாட்டி அருகே நிலாச்சல் மலை அல்லது காம்கிரி மலை மீது அமைந்துள்ளது. இக்கோயிலின் கருவறைக்குள் தேவியின் சிலை இருக்காது, மாறாக, தேவியின் யோனியைக் குறிக்கும் வகையில் பாறையில் செதுக்கப்பட்ட வடிவமே வழிபடப்படுகிறது. 

புராணக் கதை: மன்மதனை சிவபெருமான் எரித்த இடம், மன்மதன் விஸ்வகர்மாவின் உதவியோடு தேவியை வணங்கி இக்கோயிலைக் கட்டியுள்ளார். 

குழந்தையில்லாத பெண்கள், இங்குள்ள மரத்தில் வெண்கலத்தால் ஆன மணியைக் கட்டிச் சென்றால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எருமை, ஆடு, குரங்கு, ஆமை, புறா என அனைத்து கருநிற ஆண் உயிரினங்களும் இங்கு பலியிட உகந்தவையாகக் கருதுப்படுகின்றன.

விழாக்கள்: தேவிக்கு மாதவிலக்காகும் மூன்று நாள் நடைபெறும் அம்புவாச்சி மேளா சிறப்பு வாய்ந்தது. இந்த  மூன்று நாள்களும் பிரம்மபுத்திரா நதியில் பாயும் தண்ணீரும் சிவப்பு நிறமாக மாறுகிறது. இந்த நாள்களில் கோயில் மூடப்பட்டிருக்கும். நான்காவது நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும்.

செல்வதற்கு உகந்த காலம்: நவம்பர் - மார்ச்
அருகிலுள்ள விமான, ரயில், பேருந்து நிலையம்: குவாஹாட்டி

***

ஜயந்தி தேவி சக்தி பீடம்
ஜயந்தியா மலை, மேகாலயம்
தேவியின் இடது தொடை விழுந்த இடம்
பைரவர்: கிரமாதீசுவரர்

நார்தியாங் தேவி சக்தி பீடத்தில் கோயில் கொண்டுள்ள ஜயந்தேஸ்வரி தேவி மிகவும் புகழ் பெற்றவர், மகாகாளியும், கிரமாதீசுவரரும், இந்த உலகை இயக்கும் சக்திகளாக விளங்குகிறார்கள். துர்கா பூஜையின்போது இங்கு ஆடுகள் பலியிடப்படுவது பல நூற்றாண்டு வழக்கமாக உள்ளது.

புராணக் கதை: சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு, மன்னரான தன் மாணிக்கின் கனவில் வந்து, அவளது தொடை விழுந்த இடத்தில் தனக்கு ஒரு கோயில் கட்ட  தேவி உத்தரவிட்டார்.

விழாக்கள்: துர்கா பூஜையின்போது ஒரு வாழை மரம் அலங்கரிக்கப்பட்டு தேவியின் ரூபமாக வணங்கப்படுகிறது. நான்கு நாள் கொண்டாட்டங்களின் முடிவில், இந்த வாழைச் மரம் மைந்த்து நதியில் விடப்படுகிறது. 

செல்வதற்கு உகந்த காலம்: மார்ச் - ஜூன்
அருகிலுள்ள விமான நிலையம்: ஷில்லாங் (65 கி.மீ.)
அருகிலுள்ள ரயில் நிலையம்: குவாஹாட்டி (105 கி.மீ.)

***

தேவி திரிபுர சுந்தரி சக்தி பீடம்

உதய்பூர், திரிபுரா
தேவியின் வலது கால் விழுந்த இடம்
பைரவர்: திரிபுரேசுவரர்

உதய்பூரில் உள்ள  ஆமையைப் போன்ற ஒரு மலையில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இங்கு காளியே திரிபுர சுந்தரியாக உள்ளார். மாதாபுரி என்ற பெயரும் உண்டு. மேலும் தாந்த்ரிக வழக்கங்களில் காமாக்ய தேவியோடு நெருங்கிய தொடர்புடைய கோயிலாகும். கருவறையின் உள்ளே சிவந்த கருப்பு நிற கல்லால் செய்யப்பட்ட இரண்டு சிலைகள் உள்ளன, அவை திரிபுர சுந்தரி மற்றும் சோதிமா என்று வணங்கப்படுகின்றன. உதய்பூரில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் விளைச்சலில் கிடைத்த முதல் பயிர் மற்றும் பாலை தேவிக்கு வழங்குவது வழக்கம். 

புராணக் கதை: போரில் வெற்ற பெற்ற திரிபுரா மன்னர், சோதிமா சிலையை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.

விழாக்கள்: தீபாவளி
செல்வதற்கு உகந்த காலம்: டிசம்பர் - மார்ச்
அருகிலுள்ள விமான நிலையம்: அகர்தலா (65 கி.மீ.)
அருகிலுள்ள ரயில் நிலையம்: உதய்பூர் (3 கி.மீ.)
அருகிலுள்ள பேருந்து நிலையம்:  நாகர்ஜலா (55 கி.மீ.)

***

மத்திய இந்தியா 

தேவி அவந்தி சக்தி பீடம்

பைரவ பர்வதம், உஜ்ஜயினி, மத்தியப் பிரதேசம்
முழங்கைப் பகுதி விழுந்த இடம்.
பைரவர்: லம்பகர்ணா

சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் ஷிப்ரா ஆற்றின் மேல் அமைந்துள்ளது. ஆதி சங்கரரின் அஷ்டதச சக்திபீட ஸ்தோத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 18 முதன்மை அஷ்டதச பீடங்களில் இது ஒன்றாகும், அவந்தி மா தேவி, மகாகாளிகா என்ற பெயரில் அழிவுக்கான தெய்வமாக வணங்கப்படுகிறாள். சக்தியின் சிலையானது சிவப்பு நிறத் துணியால் மூடப்பட்டிருக்கும். சக்தியின் நாக்கு வெளியே நீண்டிருக்கும். தான் அறிவு பெற்றதற்கும், குமாரசம்பவம் எனும் காவியத்தை இயற்றியதற்கும் அவந்தி தேவியின் அருள்தான் காரணம் என்று காளிதாசர் நம்புகிறார். கடவுள் விநாயகர் யானையின் நீண்ட காதுகளைப் பெற்றதால் லம்பகர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார். 

புராணக் கதை: அந்தகாசுரன் என்ற அரக்கன் பிரம்மாவிடம் இருந்து ஒரு வரத்தைப் பெற்றான். தன்னுடைய ரத்தம் எங்கெல்லாம் விழுகிறதோ அங்கெல்லாம் அரக்கன்கள் தோன்றும் வரம்தான் அது. அவ்வாறு தோன்றிய அரக்கர்களிடமிருந்து அனைத்து லோகத்தையும் காப்பாற்றுவதற்காக அந்தகாசுரனைக் கொன்று, அவனுடைய ரத்தத்தை நாக்கில் பிடித்துகொண்டாள் அவந்தி தேவி. இதனால் அவந்தி தேவி, உஜ்ஜயினி மக்களின் பாதுகாப்பு தெய்வமாக வணங்கப்படுகிறாள். 

விழாக்கள்: கும்பமேளா, சிவராத்திரி, நவராத்திரி 
செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர்-மார்ச் 
அருகிலுள்ள விமான நிலையம்: இந்தூர்(65 கிமீ)
அருகிலுள்ள ரயில் நிலையம்: உஜ்ஜயினி  

***

காலமாதவ தேவி சக்தி பீடம் 

அமர்கண்டக், மத்தியப் பிரதேசம் 
இடது புட்டம் விழுந்த இடம் 
பைரவர்: அஷிதந்தா

அமர்கண்டக்கின் தெய்வம் மூன்று கண்கள், கருமையான முகத்தைக் கொண்ட காளி. போருக்கு எப்போதும் தயாராக இருக்கும் பயமுறுத்தும் ஒரு உருவம். சக்தியின் அவளுடைய கல் சிலை எப்போதும் பிரகாசமான சிவப்பு நிறத் துணியால் மூடப்பட்டிருக்கும். ‘காலமாதவ’ என்றும் அழைக்கப்படுகிறாள்.

அஷிதந்த பைரவர், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஓவியர்களின் கடவுள். தன்னுடைய விசுவாசிகளின் படைப்பு சக்திகளை அதிகரிக்கிறார். அவர்களுக்குப் புகழையும் வெற்றியையும் தருகிறார். அவர்களுடைய சாபங்களையும் நோய்களையும் நீக்குகிறார். 100 படிகளைக் கொண்ட இந்தக் கோவில், 6,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பந்தல்கண்டின் சூர்யவம்ச மன்னர் சாம்ராட் மந்ததாவால் கட்டப்பட்டது. சாத்புரா மற்றும் விந்திய மலைத்தொடர்கள் இந்த இடத்தில்தான் இணைகின்றன. 

விழாக்கள்: நவராத்திரி, மகர சங்கராந்தி, ஷரத் பூர்ணிமா, தீபாவளி, சோமவதி அமாவாசை, ராம நவமி. 

செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர்-மார்ச் 

அருகிலுள்ள விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம்: ஜபல்பூர் (4 மணி நேர சாலைவழிப் பயணம்)

***

சாரதா தேவி சக்தி பீடம்
மைஹார், சத்னா, மத்தியப் பிரதேசம்
கழுத்து ஆரம் விழுந்த இடம் 
பைரவர்: கால பைரவர்

திரிகூட மலையின் மீது இருக்கும் இந்த கோவிலுக்கு 1,063 படிகள் ஏறி அல்லது ரோப் வழியைப் பயன்படுத்தி பக்தர்கள் செல்கின்றனர். மைஹார் என்பதற்கு பொருள் தாயின் நெக்லஸ் (மை-தாய்; ஹார்-நெக்லஸ்) சாரதா தேவி,  சரஸ்வதி தேவியுடன் நெருங்கிய தொடர்புடையவர். இதனால் பெரும்பாலும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற உடையில் காட்சி தருவாள். இங்கு ஆதி சங்கரருக்கு ஒரு சன்னதி உள்ளது. புகழ்பெற்ற இசை மேதையான உஸ்தாத் அலாவுதீன் கான் இங்கு வாழ்ந்தார். கால பைரவர் என்றால் அழிப்பவர். ஆனால், இங்கே அப்பாவியாக இருக்கிறார். 

புராணக் கதை: போர்வீரர்களான சகோதரர்கள் அல்ஹா மற்றும் உடால் ஆகிய இருவரும் வனத்தில் சாரதா தேவி கோயிலைக் கண்டறிகின்றனர். பின்னர், அல்ஹா 12 வருடங்கள் தவம் செய்தார். இதனால் அவர் அழியா வரத்தைப் பெற்றார். இதனால் இன்றும்கூட அல்ஹா மற்றும் உடால் தினமும் தரிசனத்திற்காக இங்கு வருவதாக நம்பப்படுகிறது. கோவிலுக்குப் பின்னால் உள்ள நீர்நிலையை உள்ளூர்வாசிகள் அல்ஹா குளம் என்று அழைக்கின்றனர். 

விழாக்கள்: ராம நவமி, நவராத்திரி
செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர்-மார்ச்
அருகிலுள்ள விமான நிலையங்கள்: ஜபல்பூர் (150 கிமீ), கஜுராஹோ (130 கிமீ) மற்றும் அலாகாபாத் (200 கிமீ)
அருகில் உள்ள ரயில் நிலையம்: மைஹார்

***

தேவி நர்மதா சக்தி பீடம்

சந்தேஷ், அமர்கண்டக், மத்தியப் பிரதேசம்
வலது புட்டம் விழுந்த இடம்.
பைரவர்: பத்ராசேன்

இந்த கோயில் சாத்புரா மற்றும் விந்திய மலைத் தொடர்களுக்கு இடையில் அமைந்துள்ளது. 6,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இந்த வெள்ளைக் கல் கோவில் 100 படிகளைக் கொண்டது. மேலும் குளங்களால் இது சூழப்பட்டுள்ளது. கர்ப்பகிரஹத்தில், சிலை தங்க கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சிலை அமைந்துள்ள மேடையானது வெள்ளியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அமர்கண்டக் கடவுள்கள் இருக்கும் இடம் அழியா இடமாக கருதப்படுகிறது. இங்கு இறப்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் நிச்சயம் என்று நம்பப்படுகிறது. 

உஜ்ஜயினியில் கால பைரவர் கோயிலைக் கட்டியவர் பத்ரசேனன் அரசர் என்று ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது.

புராணக் கதை: சிவன் திரிபுரத்தை எரித்தபோது அமர்கண்டக்கில் விழுந்த சாம்பல் துகள்கள் கோடிக்கணக்கான சிவலிங்கங்களாக மாறின, அவற்றில் ஒரு லிங்கம் மட்டுமே ஜ்வாலேசுவரர் அருகே உள்ளது. 

விழாக்கள்: நர்மதா பரிக்ரமா, சோமவதி அமாவாசை, நவராத்திரி, ஷரத் பூர்ணிமா மற்றும் தீபாவளி.
செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர்-பிப்ரவரி
அருகிலுள்ள விமான நிலையம்: ஜபல்பூர் (231 கிமீ)
அருகிலுள்ள ரயில் நிலையம்: பெந்த்ரா, சத்தீஸ்கர் (17 கிமீ)
அருகிலுள்ள பேருந்து நிலையம்: பெந்த்ரா சாலை

***

தேவி மங்கள சண்டிகை சக்தி பீடம்

உஜ்ஜயினி, மத்தியப் பிரதேசம்
முழங்கைப் பகுதி விழுந்த இடம் 
பைரவர்: கபிலம்பரா

ஹர்சித்தி மாதா கோயிலை அதன் தனித்துவமான சிவப்புக் கூரை மற்றும் கோபுரத்தால் எளிதில் அடையாளம் காணலாம். இந்நகரத்தின் கடவுள் 12 ஜோதிலிங்கங்களில் ஒன்றான மகாகாளேஸ்வரர். இந்த இடங்களில் ஒளியின் நீண்டவரிசையாக சிவன் தோன்றுவதாக நம்பப்படுகிறது.

அனைத்து படைப்புகளையும் காக்கும் தெய்வமாக அன்னபூரணி விளங்குகிறாள். இங்குள்ள சிலை கறுப்பு மற்றும் ஆரஞ்சு-சிவப்பு கலந்த வண்ணத்திலும் இருக்கும். மேலும் மகாலட்சுமி மற்றும் மஹாசரஸ்வதியால் சூழப்பட்டுள்ளது.

கோவில் மண்டபத்தில் இருந்து கருவறைக்குள் செல்லும் வழியில் மண்டபத்தின் மேற்கூரையில் உள்ளே தெரியுமாறு 50 மந்திர உருவங்கள் உள்ளன. உள்ளே அன்னபூரணி, ஹரசித்தி மற்றும் காளி சிலைகள் ஒன்றன்மேல் ஒன்றாக செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளன. கோவிலில் ஸ்ரீ யந்திரம் உள்ளது. கபிலம்பரராக, சிவன் எப்போதும் பழுப்பு நிற ஆடைகளையே அணிந்திருப்பார்.

விழாக்கள்: நவராத்திரி மற்றும் மகா சிவராத்திரி, துர்கா பூஜை மற்றும் காளி பூஜையில் சிறப்பு யாகங்கள், பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஷிப்ரா ஆற்றங்கரையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிம்ஹஸ்த கும்பமேளா நடத்தப்படுகிறது. 

செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர்-மார்ச்
அருகிலுள்ள விமான நிலையம்: இந்தூர் (65 கிமீ)
அருகில் உள்ள ரயில் நிலையம்: உஜ்ஜயினி 

---

தேவி தண்டேஸ்வரி சக்தி பீடம்

பஸ்தர், சத்தீஸ்கர்
பற்கள் விழுந்த இடம் 
பைரவர்: கபால பைரவர்

தண்டேவாடாவின் அடர்ந்த காடுகள் நிறைந்த மாவோயிஸ்ட் பழங்குடிப் பகுதியின் நுழைவாயிலில் கருட தூணால் பாதுகாக்கப்பட்டு 600 வருடங்கள் பழமையான தண்டேஸ்வரி தேவியின் சக்தி பீடம் உள்ளது. அவள் பஸ்தர் மாவட்ட மக்களின் முதன்மைத் தெய்வம். 12 -14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே இப்பகுதியை ஆட்சிசெய்த காகதீயர்கள்தான் இந்த கோயில் அமைவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவர்கள் சக்ரக்கோட்டை வென்ற பிறகு ஆந்திரத்தின் வாராங்கலில் இருந்து தங்கள் குலதேவியைக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. 

ஷங்கினி மற்றும் டங்கினி ஆறுகளின் வண்ண நீரோட்டம் பஸ்தரில் சங்கமிக்கிறது. ஜோதி கலசங்களை ஏற்றி வைப்பது இங்கு பாரம்பரியமாக இருக்கிறது.

விழாக்கள்: பஸ்தர் தசரா திருவிழா பருவமழையில் தொடங்கி, விஜயதசமியுடன் முடிவடையும் 75 நாள் திருவிழா. இந்த நேரத்தில் சக்தியை வழிபடுவதற்கு ஆயிரக்கணக்கான பழங்குடியினர் கோவிலுக்கு வருகை தருகின்றனர். 

செல்வதற்கு உகந்த காலம்: குளிர்காலம் மற்றும் பருவமழை முடியும் காலம்- செப்டம்பர்-அக்டோபர்

அருகிலுள்ள விமான நிலையம்: ஜக்தல்பூர் சிறிய விமான நிலையம் (80 கிமீ)
அருகில் உள்ள ரயில் நிலையம்: ஜக்தல்பூர்

***

மேற்கு இந்தியா 

பிரம்மாரி தேவி சக்தி பீடம் 
திரியம்பகேசுவரர், பஞ்சவடி, நாசிக், மகாராஷ்டிரம்
தாடைப் பகுதி விழுந்த இடம்
பைரவர்: விக்ரிதக்ஷ்

10 அடி உயரம் கொண்ட சிலை முழுவதும் குங்குமம் பூசப்பட்டு 18 கைகளிலும் யுத்த ஆயுதங்களை ஏந்தியிருக்கும் இந்த அம்மனைப் பார்க்கும்போது முகத்தில் மலையைத் தாங்கியிருப்பது போலத் தோன்றும். கருமை நிறத்துடன் காட்சியளிக்கும் அம்மன், லட்சக்கணக்கான சூரியக் கதிர்களைவிடவும் பலம் வாய்ந்தாக 'தேவி பாகவதம்' புராணம் விவரிக்கிறது. பிரம்மாரி தேவி, கருப்பு தேனீக்களால் சூழப்பட்டுள்ளதாகவும் அந்த தேனீக்கள் 'ஹ்ரிங்' என்ற ஒலியை உருவாக்குவதாகவும் இது, அரக்கர்களைக் கொல்லும்போது சக்தியின் 'பீஜாக்ஷர மந்திரம்' எழுப்பும் ஒலி என்றும் குறிப்பிடப்படுகிறது. 

பிரம்மாரி, சப்தஸ்ருங்கி (ஏழு கரங்களைக் கொண்ட தெய்வம்) என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், அம்மனுடைய ஒவ்வொரு விரல்களும் வெவ்வேறு அமானுஷ்ய முத்திரைகளைக் காட்டுகின்றன.

அம்மனின் இருப்பிடம் நாசிக் அருகே உள்ள வாணி கிராமத்தில் ஏழு மலைச் சிகரங்கள் அருகே அமைந்துள்ளதால் சப்தஸ்ருங்கி நிவாசினி (ஏழு சிகரங்களின் தாய்) என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பிரம்மாரி, சிபுகா (கன்னம் கொண்டவர்) என்றும் சிவன் சர்வசித்திஷ் (அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்பவர்) என்றும் போற்றப்படுகிறது. 

புராணக் கதை: பிரம்மாவை வணங்கிய அரக்கன் அருணாசுரனைத் தன் தேனீக் கூட்டத்தால் பிரம்மாரி கொன்றதாக புராணம் கூறுகிறது. 

விழாக்கள்: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடக்கிறது. 
செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர்-மார்ச்;
அருகிலுள்ள விமான நிலையம்: நாசிக் (24 கிமீ) 
அருகிலுள்ள ரயில் நிலையம்: நாசிக்

***

சந்திரபாக சக்தி பீடம் 

பிரபாஸ், கிர்னா ஹில்ஸ், குஜராத்
வயிற்றுப் பகுதி விழுந்த இடம் 
பைரவர்: வக்ரதுண்டர்

சந்திரபாக தேவி சந்திர தெய்வமாகக் கருதப்படுகிறாள். இங்கு கோவில் எதுவும் இல்லை. மூன்று புனித நதிகளான ஹிரான், கபில மற்றும் சரஸ்வதி ஆறுகள் சந்திக்கும் இடமே சக்தி பீடமாகக் கருதப்படுகிறது. ஆனால் சோமநாதர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள கோவிலே உண்மையானது என்று சிலர் நம்புகிறார்கள். வேறு சில பக்தர்கள், இது ஜுனாகத்தின் வெராவல் நகரத்தில் கிர்னார் மலையின் மேலுள்ள சந்தனப்படி அம்பா மாதா கோவில் என்று நம்புகின்றனர். 

புராணக் கதை: தட்சனின் மகள் ரோஹிணியைத் திருமணம் செய்ய விரும்பினார் சந்திரன். ஆனால், தட்சனின் 27 மகள்களையும் சந்திரன் திருமணம் செய்துகொண்டார். இதனால் கோபமடைந்த தட்சன், சந்திரனை இருளில் மறைந்துவிடும்படி சபித்தார். சாபத்திலிருந்து விடுபட, சந்திரன், சிவபெருமானை வேண்டினார். அப்போது இதில் தேவி தலையிட்டு, வானத்திற்கு திரும்பும் வழியைக் காட்டினாள். இதனால் மகிழ்ச்சியடைந்த சந்திரன், சிவபெருமானுக்காக சோமநாதர் கோயிலைக் கட்டியதாக நம்பிக்கை. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காகப் புதிய தம்பதிகள் இந்த கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. 

விழாக்கள்: நவராத்திரி, சிவராத்திரி மற்றும் கார்த்திகை பூர்ணிமா விழா
செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர்-மார்ச்
அருகிலுள்ள ரயில் நிலையம்: வெராவல் (8 கிமீ)
அருகிலுள்ள விமான நிலையம்: கஷோத் (57 கிமீ)

***

தேவி அம்பாஜி சக்தி பீடம் 

பனஸ்கந்தா, குஜராத்
இதயத்தின் ஒரு பகுதி விழுந்த இடம் 
பைரவர்: பதுக் பைரவர்

தண்டதாலுகாவில் உள்ள கப்பர் மலைகளில் இருக்கும் அம்பாஜி மாதா, அரசூரி அம்பாஜி என்று போற்றப்படுகிறார். இந்த கோயிலில் சிலை இல்லை. கண்ணுக்குத் தெரியாத ஸ்ரீ விச யந்திரம் இங்கு உள்ளது. 

பக்தர்கள் வேண்டும்போது கண்களை மூடிக்கொள்வர். ஒரு ஜன்னலின் உள் சுவரில் தங்க முலாம் பூசப்பட்ட சக்தி விச ஸ்ரீ யந்திரம் ஒட்டப்பட்டிருக்கும். மேலும் அந்தச் சுவரில், நேபாளத்தின் உண்மையான யந்திரங்கள் மற்றும் உஜ்ஜயினி சக்தி பீடங்களுடன் தொடர்புடைய 51 பீஜாக்ஷர எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை புலி, திங்கள்கிழமை நந்தி, செவ்வாய்க்கிழமை சிங்கம், புதன்கிழமை ஐராவதம், வியாழக்கிழமை கருடன், வெள்ளிக்கிழமை அன்னம் மற்றும் சனிக்கிழமை யானை என ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனம் பயன்படுத்தப்படும் உலகின் ஒரே கோயில் இதுவாகும். சஞ்சார் சௌக் முதல் கப்பர் மலை வரை புனித விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். 

விழாக்கள்: ஜூலை மாதம் பௌர்ணமி அன்று திருவிழா நடைபெறும். நவராத்திரியின்போது சஞ்சார் சௌக் பகுதியில் கர்பா விழா கொண்டாடப்படுகிறது. சைத்ர நவராத்திரி மற்றும் அஸ்வினி நவராத்திரி நாள்களில் கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் பலரும் இங்கு பாதயாத்திரையாக வருகிறார்கள். இந்த காலகட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட சங்கங்களும் இங்கு வருகை தருகின்றன. கார்த்திகை, சைத்ர, ஆஷோ மற்றும் பத்ரபாத் (Kartik, Chaitra, Asho and Bhadrapad) ஆகிய மாதங்களின் பௌர்ணமி சிறப்பு நாள்களாகும். இங்குள்ள நவ சண்டி யாகம் பிரபலமானது.

செல்வதற்கு உகந்த காலம்: செப்டம்பர்-அக்டோபர், குளிர்காலம்
அருகிலுள்ள விமான நிலையம்: ஆமதாபாத் (180 கிமீ)
அருகிலுள்ள ரயில் நிலையம்: மவுண்ட் அபு (45 கிமீ)

***

தெற்கு இந்தியா 

கன்னியாகுமரி சக்தி பீடம்

கன்னியாகுமரி, தமிழ்நாடு 
முதுகெலும்பு விழுந்த இடம் 
பைரவர்: நிமிஷ பைரவர்

51 சக்தி பீடங்களில் இது தேவியின் 24 ஆவது சக்தி பீடம். இங்குள்ள அம்மனின் பெயர் தியாக சௌந்தரி (எ) பத்ரகாளி அம்மன். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு அருகிலே இந்த சக்தி பீடம் அமைந்துள்ளது. விவேகானந்தர் பாறையில்தான் சக்தி, சிவனை நோக்கி தவமிருந்தாள். அதன் நினைவாக, அங்கு 'ஸ்ரீ சக்தி பாதம்' உள்ளது. 

இங்கு நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த விழா 10 நாள்கள் நடைபெறும். 10 ஆவது நாள் மகாதானபுரம் என்ற இடத்தில் 'பரிவேட்டை' நிகழ்வு நடைபெறும். 

புராணக் கதை: அரக்க மன்னன் பானாசுரன் சிவபெருமானிடமிருந்து ஒரு வரத்தைப் பெற்றார். ஒரு கன்னியால் மட்டுமே அவரை அழிக்க முடியும் என்பது. அப்போது அரக்கனின் செயல்கள், பராசக்தியை ஒரு கன்னி வடிவத்தில் உருவெடுத்து அவனை அழிக்கச் செய்தது. 

சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு, கடல் சீற்றத்தால் உண்மையான மூலக் கோவில் அழிந்துவிட்டது. அதன் பின்னர் உருவாக்கப்பட்ட கோவில்தான் இப்போது உள்ளது. 

செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர்-மார்ச்
அருகிலுள்ள விமான நிலையம்: திருவனந்தபுரம் (67 கிமீ)
அருகிலுள்ள ரயில் நிலையம்: கன்னியாகுமரி

***

சாமுண்டீஸ்வரி தேவி சக்தி பீடம்

மைசூரு, கர்நாடகம்
இரண்டு காதுகள் விழுந்த இடம்
பைரவர்: காலபைரவர் 

மைசூருவின் புறநகர்ப் பகுதியில் சாமுண்டி மலை உள்ளது. இங்குதான் சாமுண்டீஸ்வரி சக்தி பீடம் உள்ளது. 9 ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால் ஒருங்கிணைக்கப்பட்ட, மகிஷாசுரனைக் கொன்ற தேவியின் மகாபீடங்களில் இதுவும் ஒன்றாகும்.

சும்பன் மற்றும் நிசும்பன் ஆகிய அசுரர்களின் தளபதிகளான சண்டன் மற்றும் முண்டன் ஆகிய அரக்கர்களைக் கொன்றதால் தேவிக்கு சாமுண்டீஸ்வரி என்ற பெயர் வந்தது. சாமுண்டி தேவி, போர்வீரர்களுக்கான ஒரு தெய்வம். மரணத்தைத் தரும் எமனுடன் வீற்றிருக்கிறார். மைசூரு அரச குடும்பம் இந்த கோயிலைக் கட்டிப் புனிதப்படுத்தியது. சாமுண்டிதேவி சப்தமாத்ரிகங்களில் ஒன்று. நல்ல ஆரோக்கியம் மற்றும் சந்ததி பிறப்புக்காக வழிபடப்படும் ஏழு சக்திகளின் தொகுப்பாக  காணப்படுகிறார். 16 ஆம் நூற்றாண்டு வரை பழங்குடியினரால் இங்கு விலங்கு பலிகள் நடைபெற்றன. 

அகந்தையுடன் இருந்த பிரம்மாவின் ஐந்தாவது தலையை வெட்டிய சிவபெருமான், கால பைரவர் எனும் பெயரைப் பெற்றார். அகந்தை அழிவை வகுக்கும் என்பதை உணர்த்தும்விதமாக கால பைரவர் அருள்பாலிக்கிறார். 

புராணக் கதை: கோவில் முற்றத்தில் உள்ள மூன்று சம்பக் மரங்கள் ஆண்டு முழுவதும் பூக்கும் என்று கூறப்படுகிறது.
விழாக்கள்: தசரா
செல்வதற்கு உகந்த நேரம்: ஆண்டு முழுவதும் செல்லலாம். குறிப்பாக அக்டோபர். 

அருகிலுள்ள விமான நிலையம்: பெங்களூரு (160 கிமீ)
அருகிலுள்ள ரயில் நிலையம்: மைசூரு (13 கிமீ)

***

இந்திராக்ஷி சக்தி பீடம்

நைனாதீவு, மணிபல்லவம், இலங்கை
கணுக்கால்கள் விழுந்த இடம்
பைரவர்: ரக்ஷேசுவரர்/நயினார்

இங்குள்ள தேவி பார்வதியாக இருக்கிறாள். நாகபூஷணி அல்லது புவனேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறாள். சக்தியின் கணுக்கால்கள் விழுந்த இடம் என்பதால் சக்தியின் பாரம்பரியம் மற்றும் தெற்கு இலக்கியத்தில் ஆபரணங்களுக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன.

புராணத்தின்படி, கோவில் இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ராமர் மற்றும் ராவணன் ஆகியோரால் வழிபடப்பட்டது. கௌதம மகரிஷியின் மனைவி அகல்யையால், இந்திரன், முனிவர் வடிவத்தை எடுத்து அவளை மயக்கினான். கோபமடைந்த முனிவர், இந்திரனின் உடல் ஆயிரம் யோனிகளால் குறிக்கப்படும் என்று சபித்தார். மேலும் அவர் நாடு கடத்தப்பட்டார். அங்கு தன்னுடைய பாவத்திற்கு பரிகாரம் செய்ய அம்மனுக்கு ஒரு கோயிலைக் கட்டி வழிபட்டார். அவரது தவத்தால் திருப்தி அடைந்த தேவி, யோனிகளை 1,000 கண்களாக மாற்றினார். அதற்காக அவளுக்கு இந்திராக்ஷி என்ற பெயர் வழங்கப்பட்டது.

புராணம்: திரிமூர்த்தியின் ஆற்றல் உறையும் நாகபூஷணி எந்த வேண்டுதலையும் நிறைவேற்றுவாள்.

விழாக்கள்: ஆண்டுதோறும் 16 நாள் மஹோத்ஸவம் (திருவிழா) தமிழ் மாதமான ஆனி (ஜூன்-ஜூலை) மாதத்தில் கொண்டாடப்படுகிறது
செல்வதற்கு உகந்த நேரம்: ஆண்டு முழுவதும்
அருகிலுள்ள விமான நிலையம்: யாழ்ப்பாணம் (30 நிமிட படகு சவாரி) 

***

காமாட்சி அம்மன் சக்தி பீடம்
காஞ்சிபுரம், தமிழ்நாடு
தொப்புள் பகுதி விழுந்த இடம் 
பைரவர்: கால பைரவர்

பல்லவ வம்சத்தினர் காஞ்சிபுரத்தில் பாலாறு அருகே இந்த ஆலயத்தைக் கட்டியுள்ளனர். சக்தியின் தொப்புள் இங்கு விழுந்ததால் நாபிஸ்தான ஒட்டியாண பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. அம்மனை யந்திர வடிவில் வழிபடுகிறார்கள். காஞ்சிபுரம் ஆதிசங்கரரால் பட்டியலிடப்பட்ட 18 மகாபீடங்களில் ஒன்றான இந்த கோயில், காத்து ரட்சிக்கும் நகரம். புராண நூல்களில், காஞ்சிபுரமும் காசியும் சிவபெருமானின் கண்களாக உள்ளன. காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் மட்டுமே சிவனை விட்டு தேவியை மட்டும் வழிபடும் தலமாக உள்ளது. 

புராணக் கதை: தசரத ராஜா, குழந்தைப் பேறுக்காக இந்த கோயிலுக்கு வந்து அம்மனிடம் வேண்டியதாக மார்க்கண்டேய புராணம் கூறுகிறது. இதனால் குழந்தை இல்லாத தம்பதியர் குழந்தைப் பேறுக்காக இப்போதும் இந்த கோயிலில் வழிபடுகின்றனர். 

விழாக்கள்: நவராத்திரி, ஐப்பசி மாதம் பூரம் நட்சத்திரம் அன்று விழா நடைபெறும். 
செல்வதற்கு உகந்த காலம்: பிப்ரவரி-மார்ச், அக்டோபர்
அருகிலுள்ள விமான நிலையம்: சென்னை (75 கிமீ)
அருகிலுள்ள ரயில் நிலையம்: காஞ்சிபுரம்

***

ராகினி தேவி சக்தி பீடம்
ராஜமுந்திரி, கிழக்கு கோதாவரி, ஆந்திரப் பிரதேசம்
கன்னங்கள் விழுந்த இடம் 
பைரவர்: தண்டபாணி

ஸ்ரீ உமாகோடிலிங்கேஸ்வரர் கோவில் கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு ராகினி, விஷ்வேசி (உலகத்தின் ஆட்சியாளர்) மற்றும் விஸ்வமாத்ரிகா (உலகத்தின் தாய்) ஆகிய வடிவங்களில் தேவியை வழிபடுகின்றனர். தெய்வத்தின் உருவமாக கோதாவரி பார்க்கப்படுகிறது. 

இங்குள்ள சிவலிங்கத்தை கௌதம ரிஷி பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. தீய செயல்களை செய்பவர்களை சிவன் தனது தடியால் (தண்ட) தண்டிப்பார் என்று நம்பப்படுகிறது. 

விழாக்கள்: சிவராத்திரி, துர்கா பூஜை மற்றும் நவராத்திரி. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோதாவரி மூலம் புஷ்கரம் மேளா நடக்கிறது. 
செல்வதற்கு உகந்த காலம்: ஆகஸ்ட்-மார்ச்
அருகிலுள்ள ரயில் நிலையம்: ராஜமுந்திரி (2 கிமீ)
அருகிலுள்ள விமான நிலையம்: ராஜமுந்திரி (12 கிமீ)

***

பிரம்மராம்பிகா தேவி சக்தி பீடம்
ஸ்ரீசைலம், கர்னூல், ஆந்திரப் பிரதேசம்
கழுத்துப் பகுதி விழுந்த இடம் 
பைரவர்: சம்பரானந்தா

சக்தி பீடங்களில் மூன்றாவது தேனீ அவதாரமான பிரம்மராம்பிகாவும் செல்வத்தின் தெய்வமான மகாலட்சுமி ஆவார். கிருஷ்ணா நதியில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்ப மல்லிகார்ஜுன சுவாமி வர்லா தேவஸ்தானம் என அழைக்கப்படும் கோவில் வளாகம் ஸ்ரீசைலம் நீர்த் தேக்கத்திற்கு அருகில் இருக்கிறது. செல்வம் பெற பக்தர்கள் இங்கு சக்தியிடம் வேண்டுகின்றனர். சம்பரானந்தா கால பைரவரின் ஒரு வடிவம்.

புராணக் கதை: அருணாசுரனை வென்றது மட்டுமின்றி, துர்கா சப்தசதி தேவி எல்லா நேரத்திலும் சக்தி மிக்கவராக, செல்வம் மற்றும் அறிவின் இருப்பிடமாகத் திகழ்கிறார். 

விழாக்கள்: நவராத்திரி மற்றும் கும்பம்
செல்வதற்கு உகந்த காலம்:  செப்டம்பர்-பிப்ரவரி
அருகிலுள்ள ரயில் நிலையம்: மார்க்கபூர் (91 கிமீ)
அருகிலுள்ள விமான நிலையம்: ஹைதராபாத்(230 கிமீ)

***

கிழக்கு இந்தியா

அட்டஹாஸ் புல்லாரா சக்தி பீடம்

லாப்பூர், வீர்பூம் மாவட்டம், மேற்கு வங்கம்
கீழ் உதடு விழுந்த இடம்
பைரவர்: விஸ்வேசுவரர்

இஷானி நதியில் அமைந்துள்ள தேவி, தனது கீழ் உதட்டைக் குறிக்கும்படியான 15 முதல் 18 அடி கல் வடிவத்தில் அருள்பாலிக்கிறாள். புல்லாரா என்றால் பூக்கும் ஒன்று. வாழ்க்கை மற்றும் மறுமலர்ச்சியைக் குறிக்கிறது. பிரதான கோயிலை ஒட்டிய கல் தாமரையில் சிவன் அமர்ந்திருக்கிறார். பர்துவான் மற்றும் வீர்பூம் ஆகிய இடங்களில் இரண்டு அட்டஹாஸ் (உரத்த சிரிப்பு) கோயில்கள் உள்ளன.

புராணக் கதை: கீர்த்திவாச ராமாயணத்தின்படி, போரில் வெற்றிபெற, தேவியின் ஆசீர்வாதத்திற்காக, கோவில் குளத்தில் வளர்ந்து வரும் 108 நீலத் தாமரைகளை வழங்குமாறு ராமனை விபீஷ்ணன் வலியுறுத்தினார். அனுமன் தாமரைகளை சேகரித்தார். ஆனால், பூஜையில் ஒரு தாமரை குறைவதை ராமன் கண்டார். அப்போது ஒரு மலருக்காக, தன் கண்ணை மலராக மாற்ற ராமன் முற்படும்போது தேவி முன்தோன்றி ராவணனைத் தோற்கடிக்க வரத்தை அருளினாள். 

விழாக்கள்: வருடத்திற்கு ஒருமுறை மகா பூர்ணிமாவின்போது புல்லாரா மேளா மற்றும் நவராத்திரியும் கொண்டாடப்படும். 

செல்வதற்கு உகந்த காலம்: ஆகஸ்ட்-மார்ச்
அருகிலுள்ள ரயில் நிலையம்: லாப்பூர் (30 கிமீ)
அருகிலுள்ள விமான நிலையம்: கொல்கத்தா(160 கிமீ)

***

பகுள சக்தி பீடம்
கேதுகிராமம், கத்வா, மேற்கு வங்கம்
இடது கை விழுந்த இடம் 
பைரவர்: பிருகு

சமஸ்கிருதத்தில் ‘பகு’ என்றால் ‘கை’ என்று பொருள். 'பகுள' என்றால் ஆடம்பரமானது. பக்தர்கள் இங்கு வழிபடுவதால் செல்வம் பெறுகிறார்கள். உண்மையாக வழிபடுபவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை என்று கூறப்படுகிறது. பகுள தேவியும் பார்வதியின் ஒரு மனித வடிவமாக இருக்கிறாள். அவளுடன் அவரது மக்களான கார்த்திகேயன் மற்றும் விநாயகர் உள்ளனர். கருவுறுதல் மற்றும் போரின் கடவுளாகக்  கார்த்திகேயன் கருதப்படுகிறார். அதேசமயம் விநாயகர் சுப விஷயங்களை உலகிற்கு அளிக்கிறார். சக்தி பகுள என்பது சக்தியின் மென்மையான வடிவமாகும். ‘பிருக்’ என்றால்  தியானத்தின் உயர்ந்த நிலையை அடைந்தவர்.

விழாக்கள்: துர்கா பூஜை மற்றும் மகா சிவராத்திரி
செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர்-மார்ச்
அருகிலுள்ள ரயில் நிலையம்: கத்வா (8 கிமீ)
அருகிலுள்ள விமான நிலையம்: கொல்கத்தா (190 கிமீ) 

***

 மகிஷாமர்த்தினி சக்தி பீடம்  

பக்ரேஷ்வர், வீர்பூம், மேற்கு வங்கம்
கண்களுக்கு இடையிலுள்ள பகுதி விழுந்த இடம்
பைரவர்: வக்ரநாதர்

கண்களுக்கு இடையில் மூன்றாவது கண் இருப்பதாக தந்திரம் நம்புகிறது. ஆனால் சிலர் இந்த கூற்றை எதிர்த்துப் போராடுகிறார்கள். சக்தியின் மூளையின் ஒரு பகுதி இங்கு விழுந்ததாக நம்புகின்றனர் சிலர். 

வீர்பூமில், சக்தி பயங்கரமான வடிவத்தை எடுத்து, எருமை அரக்கனான மகிஷாசுரனைக் கொன்றாள். இது பேராசை, அகந்தை மற்றும் சுயநலம் போன்ற மனிதனின் மிருகத்தனமான போக்குகளை அழிப்பதற்கான ஒரு உருவகமாகும். இந்த பீடம் வக்ரேஷ்வர் கோவிலுக்கு அருகில் உள்ளது. இது ஒரு புகழ்பெற்ற சிவத் தலமாகும். அங்கு இறைவன் வக்ரேஷ்வர் என்று வழிபடப்படுகிறார் (வக்ரேஷ்வர் என்றால் வளைந்த என்று பொருள்)

புராணம்: ரிஷி அஷ்டாவக்ரரின் (எட்டு வளைவுகள் கொண்ட) பக்தியால் சிவன் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் அனைத்து பக்தர்களும் முதலில் முனிவரை வணங்க வேண்டும் என்று கருதினார். பாபஹார ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கோயில் (பாவங்களை நீக்குபவர்) அருகிலுள்ள இயற்கை வெப்ப நீரூற்றுகளுக்குப் புகழ் பெற்றது.

செல்வதற்கு உகந்த காலம்: செப்டம்பர்-பிப்ரவரி

அருகிலுள்ள ரயில் நிலையம்: சியுரி (20 கிமீ)

அருகிலுள்ள விமான நிலையம்: கொல்கத்தா (சியூரியிலிருந்து 200 கிமீ)

***

மா பவானி சக்தி பீடம்
கரடோயா, பவானிபூர், வங்கதேசம்
இடது கணுக்கால் விழுந்த இடம்
பைரவர்: வாமன்

சிவபெருமானுடன் மீண்டும் சேருவதற்காக பார்வதி தவம் செய்து கொண்டிருந்தபோது, ​​இல்லாத அபர்ணா என்ற ஒற்றை இலையின் மூலமாக பார்வதி உயிர் பிழைத்தாள். துர்க்கையின் தீவிர வெளிப்பாடாக இங்கு அம்மன் வீற்றிருக்கிறாள். ஆலயத்தைச் சுற்றி கரடோயா நதி பாய்கிறது. இது உள்ளூர் கங்கை என்று போற்றப்படுகிறது. சக்தியின் இடது கணுக்கால் இங்கே விழுந்ததாக சிலர் நம்புகின்றனர். சிலர் அவளது வலது கண் அல்லது இடது விலா எலும்புகள் இவ்விடத்தில் விழுந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

காஷ்மீர் சைவ மதத்தில், பைரவரின் எழுத்துகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன - 'பா' என்பது பரணர் (பராமரிப்பு) என்றும் 'ரா' என்பது ராவணன் (திரும்பப் பெறுதல்) என்றும் 'வா' என்பது வாமனன் (பிரபஞ்சத்தை உருவாக்கியவர்) என்றும் பொருள்கொள்ளப்படுகிறது. 

புராணக் கதை: ஒரு முறை ஒரு வளையல் விற்பனையாளர் ஒருவர் கோவிலுக்கு அருகில் ஒரு வனப் பகுதியைக் கடந்து இளவரசி என்று கூறிக்கொண்ட ஒரு சிறுமிக்கு வளையல்களை விற்றார். அரண்மனையிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் கூறினாள். பின்னர் அரண்மனைக்குச் சென்று பார்த்தபோது அவள் இளவரசி இல்லை என்று தெரிய வந்தது. பின்னர், ராணி அந்த இடத்திற்கு விரைந்தார். இதனால், பீதியடைந்த வளையல்காரர், பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். தனது கைகளில் சங்கு வளையல்கள் அணிந்த நிலையில் பவானிதேவி காட்சி கொடுத்து அனைவரையும் ஆசிர்வதித்தார். இந்த குளம் 'ஷாகாபூர்' என்று அழைக்கப்படுகிறது. இங்கு குளித்துவிட்டே பக்தர்கள் கோயிலுக்குள் செல்கின்றனர். 

விழாக்கள்: மகி பூர்ணிமா, ராம நவமி
செல்வதற்கு உகந்த காலம்: ஆண்டு முழுவதும்
அருகிலுள்ள விமான நிலையம்: போக்ரா (60 கிமீ)
அருகிலுள்ள ரயில் நிலையம்: சாந்தஹார் (77 கிமீ)
அருகிலுள்ள பேருந்து நிலையம்: ஷெர்பூர் (28 கிமீ)

***

ஜசோரேஸ்வரி தேவி சக்தி பீடம்
ஜெஸூர், வங்கதேசம்
உள்ளங்கைகள் மற்றும் பாதங்கள் விழுந்த இடம்
பைரவர்: சண்ட பைரவர்

ஜெஸூர் மகாராஜா பிரதாபாதித்யாவால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதனால் இந்தக் கோயில் இப்பெயர் பெற்றது. அனாரி என்ற கட்டடக் கலைஞர் இங்கு 100 கதவுகள் போன்ற ஒரு கட்டமைப்பை வடிமைத்தார். ஆனால், 1971 போரில் அவை அழிக்கப்பட்டன. 

இங்கே, காளி உக்கிரமான வடிவத்தில் இருக்கிறாள்; அவளது நெருப்பானது அகங்காரத்தை எரித்து, பக்தர்களுக்கு அருளை வழங்குகிறது. பரமாத்மாவுடன் இணைவதற்கான சக்தியின் ஆன்மாவின் பயணம் இங்கிருந்து தொடங்குகிறது.

ஜசோரேஸ்வரி தேவி என்றால் 'அனைத்தையும் தாங்கும்' மற்றும் 'அனைத்தையும் உற்பத்தி செய்பவள்' என்று பொருள். அறிவொளியின் அடித்தளத்தை அமைக்கிறாள் என்று நம்பப்படுகிறது. 

அஷ்ட பைரவர்களில் சண்ட பைரவர் மூன்றாவது பைரவர். அவரை வழிபடுவது ஆற்றலை மேம்படுத்துவதாகவும், போட்டியாளரைத் தோற்கடிப்பதற்கும், எதிரிகளை அழிப்பதற்கும், எல்லாவற்றிலும் வெற்றியைப் பெறுவதற்கும் நம்பிக்கையை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.

புராணக் கதை: மகாராஜா வெளியே செல்லும்போது ஒரு புதரில் இருந்து ஒளி வருவதைக் கண்டார். அந்த ஒளி, கல்லில் செதுக்கப்பட்ட மனிதர்களின் உள்ளங்கையைப் போல இருந்தது. அவருடைய ஆலோசகர்கள் அந்த ஒளியை தெய்வத்தின் ஆசீர்வாதம் என்று கூறி, அங்கு ஒரு கோயிலைக் கட்டும்படி ராஜாவை வலியுறுத்தினர்.

விழாக்கள்: அக்டோபரில் நவராத்திரி மற்றும் காளி பூஜை
செல்வதற்கு உகந்த காலம்: செப்டம்பர்-பிப்ரவரி
அருகிலுள்ள விமான நிலையம்: ஜெஸூர்(126 கிமீ)

***

காளிகட் சக்தி பீடம்

கொல்கத்தா
தலைப் பகுதி விழுந்த இடம்
பைரவர்: நகுலிஷ் / நகுலேஸ்வர்

தெற்கு கொல்கத்தாவில் ஆதி கங்கை நதியில் அமைந்துள்ள இந்த கோயிலின் முதன்மைக் கடவுளாக தட்சிண காளி இருக்கிறாள். மண் குடிசையிலிருந்த இந்தக் கோவில்,  1809 முதல் தற்போதுள்ள நிலையில் அமைப்பு இருக்கிறது.  பண்டைய காளிக்ஷேத்ரத்தின் நிறுவனரான துறவி சௌரங்க கிரியால்  சுயம்புலிங்கமான நகுலேசுவரர் கண்டுபிடிக்கப்பட்டார்.

பார்வையாளர்களுக்காக உள்ளூர் கலைஞர்களால் வரையப்படும் காளிகட் ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் இந்த ஓவியத் தொகுப்புகள் உள்ளன. 

காளி தேவியின் உருவம், தாந்த்ரீக வழிபாட்டில் இயற்கையின் மூர்க்கமான சக்தியாக உள்ளது. அவளது கருப்புத் தோற்றம் பிரபஞ்சத்தின் இருளை பிரதிபலிக்கிறது. அழகான தோற்றமுடைய சிவபெருமான் சச்சிதானந்தமாக வீற்றிருக்கிறார். அவர் தூய்மையான நனவின் ஆனந்தத்தில் மகிழ்ச்சியடைகிறார்.

புராணக் கதை: சக்தியின் கால் விரல் ஹூக்ளி ஆற்றில் விழுந்ததால், அதன் பிறகு அந்தப் பகுதி முழுவதும் காளியுடன் தொடர்புடையதாகிவிட்டது. 

விழாக்கள்: துர்கா பூஜை மற்றும் சிறப்பு காளி பூஜை. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில் ​​பூசாரிகள் கண்களை மூடிக்கொண்டு சிலையை குளிப்பாட்டுகிறார்கள்.


செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர்-பிப்ரவரி
அருகிலுள்ள விமான நிலையம்: கொல்கத்தா
அருகிலுள்ள ரயில் நிலையம்: ஹௌரா

***

கங்காளிதல தேவி சக்தி பீடம்

போல்பூர், மேற்கு வங்கம்
இடுப்புப் பகுதி விழுந்த இடம்
பைரவர்: ருரு

கோபாய் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்தத் தலம் தேவகர்பா அல்லது கங்கலேஸ்வரியின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. பேச்சுவழக்கில் இந்த நகரம் ‘கங்காளி’ (வங்காள மொழியில் ‘கங்கள்’ என்றால் எலும்புக்கூடு) என்று அழைக்கப்படுகிறது. உள்ளூர் புராணத்தின்படி, சதியின் இடுப்பு எலும்பு மிகுந்த சக்தியுடன் இங்கு விழுந்தது. அது பூமியில் ஒரு மந்தநிலையை உருவாக்கியது. பின்னர் அது தண்ணீரில் மூழ்கி புனித குண்டத்தை (குளம்) உருவாக்கியதாக நம்பப்படுகிறது. இந்த குளத்தில் ஒரு பீடமும் உள்ளது. 

இருப்பினும், வழிபாட்டுக்காக, குளத்திற்கு நேர் எதிரே ஒரு கோயில் கட்டப்பட்டது. பல்வேறு தரப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள் தேவியின் ஆசீர்வாதத்திற்காக இங்கு வருகிறார்கள். இறப்பு சார்ந்த சடங்குகளும் இங்கு நடைபெறுகின்றன. 

ருரு பைரவர் தெய்வீக குரு ஆவார். எதிரிகளை வெல்லவும் மற்றவர்களைக் கட்டுப்படுத்தவும் மக்களின் நிலைப்பாட்டையும் செல்வாக்கையும் பலப்படுத்தவும் அருள்பாலிக்கிறார். 

புராணக் கதை: கோயில் குளத்தின் கீழே மனித எலும்புக்கூட்டை ஒத்த ஒரு கல் இருப்பதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். கோடையில் தண்ணீர் வறண்டு போகும்போது, ​​உள்ளூர்வாசிகள் எலும்புக்கூடு வடிவம் தெரியும் என்றும் அதன் கூர்மையான விளிம்புகள் அதைத் தொட முயற்சிப்பவரின் கைகளை வெட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர்-மார்ச்
அருகிலுள்ள விமான நிலையம்: கொல்கத்தா (135 கிமீ)
அருகிலுள்ள ரயில் நிலையம்: போல்பூர் (8 கிமீ தொலைவில்)

***

கிரிதேஸ்வரி தேவி சக்தி பீடம்
மூர்ஷிதாபாத், மேற்கு வங்கம்
மகுடம் விழுந்த இடம்
பைரவர்: சங்வர்தா

சக்தியின் உடல் பாகத்திற்கு பதிலாக அவளின் ஆபரணம் (கிரீடம்) விழுந்ததால் இந்த கோயில் உப பீடமாகும். எனவே, அவள் முகுதேஸ்வரியாக (மகுடம் சூட்டப்பட்ட தெய்வம்) வணங்கப்படுகிறாள். கிரிதேஸ்வரி, விமலா தேவி என்றும் கிரித்கனா என்றும் அழைக்கப்படுகிறாள். சக்தியின் சிலை சிவப்பு நிறத் துணியால் மூடப்பட்டிருக்கும். இது துர்கா பூஜையின்போது மட்டுமே மாற்றப்படும்.

பாகீரதி ஆற்றின் கரையோரத்தில் துர்கா தேவி தூங்குவதாக அங்குள்ள அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.  இந்த பீடம் 1,000 ஆண்டுகள் பழமையானது. 

புராணக் கதை: தொழுநோயால் பாதிக்கப்பட்ட நவாப் மீர் ஜாபர் மரணப் படுக்கையில் கிடந்தபோது, தனது பாவத்தை அழிப்பதற்காக கிரிதேஸ்வரி கோயிலில் இருந்து தண்ணீர் கேட்டதாகக் கூறப்படுகிறது. 

விழாக்கள்: விஜயதசமி, துர்கா பூஜை, நவராத்திரி. டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் விழா நடக்கிறது.
செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர்-மார்ச்
அருகிலுள்ள விமான நிலையம்: கொல்கத்தா (239 கிமீ)
அருகிலுள்ள ரயில் நிலையம்: தஹபரா (3 கிமீ)

***

ரத்னாவளி சக்தி பீடம்
ஹூக்ளி, மேற்கு வங்கம்
வலது தோள்பட்டை விழுந்த இடம்
பைரவர்: காந்தேஷ்வர்

ஹூக்ளி மாவட்டத்தின் கானாகுல் - கிருஷ்ணா நகரில் உள்ள ரத்னாகர் ஆற்றின் கரையில் சக்தியின் வலது தோள் விழுந்ததாக பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த பீடம் ஆனந்தமயி கோயில் என்று அழைக்கப்படுகிறது ஆனந்தமயி என்றால் பரவசத்தைப் பரிசளிப்பவர்.

இந்த தேவியின் அதிசயம் என்னவென்றால், குழந்தை முதல் பூப்படையும் வரை அனைத்து நிலைகளிலும் பெண்மையை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறாள். 

ரத்னாவளியில் 16 வயது குமரியாக இருக்கிறாள். பார்வதியின் இளமைப் பருவத்திற்கு முந்தைய வடிவம். ஆடு பலி இங்கே தொடர்ந்து நடைபெறுகிறது. 

புராணக் கதை: சக்திதனது வயிற்றில் இருந்து பிரபஞ்சத்தை உருவாக்கியதாகவும் அனைத்து பெண் உயிர்களையும் தன்னுடைய படைப்பாகவும் பார்க்கிறாள். நவராத்திரியின்போது ஒன்பது இளம் பருவப்  பெண்கள் தூய்மை மற்றும் கற்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக அங்கு வழிபாடு செய்து உணவு மற்றும் பரிசுகளை வழங்குகின்றனர். 

விழாக்கள்: துர்கா பூஜை மற்றும் நவராத்திரி
செல்வதற்கு உகந்த காலம்: ஆகஸ்ட்-மார்ச்
அருகிலுள்ள விமான நிலையம்: கொல்கத்தா (78 கிமீ)
அருகிலுள்ள ரயில் நிலையம்: ஹௌரா (74 கிமீ) 

***

பிரம்மாரி தேவி சக்தி பீடம்
திரிஸ்ரோடா, ஜல்பைகுரி, மேற்கு வங்கம்
இடது கால் விழுந்த இடம்
பைரவர்: ஈஸ்வர்

சக்தி பீடங்கள் இந்திய ஆன்மிகத்தின் புவியியல் தொடர்ச்சியை குறிப்பிடத் தவறவில்லை. நாசிக்கில் மட்டுமல்ல, மேற்கு வங்கத்தில் டீஸ்டா ஆற்றின் கரையில் ஒரு பிரம்மாரி தேவி கோயில் உள்ளது. சக்தியின் இதயத்தின் மையத்தில் உள்ள சக்கரம் 12 ஆரக்கால்களைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. இது மனிதர்களை நோயிலிருந்து பாதுகாக்கும்பொருட்டு நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மற்றொரு புறம், தேனீ தாக்குதலில் இருந்து பக்தர்களைப் பாதுகாக்கிறது. சைவர்களுடன் பெரும்பாலான இந்துக்களும் ஈஸ்வரரைப் சிவனாக பார்க்கின்றனர். வைணவர்கள் அவரை விஷ்ணுவாகப் பார்க்கின்றனர்.

புராணக் கதை: அருணாசுரன் என்ற அரக்கன், தேவர்களை சொர்க்கத்திலிருந்து விரட்ட முற்பட்டான், இதனால், தேவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி தேவியிடம் கெஞ்சினர். அப்போது தேவி, தேனீயின் உருவம் கொண்டு தேனீக்களின் உதவியுடன் அரக்கனைக் கொன்றாள். 

விழாக்கள்: கும்பம் மற்றும் நவராத்திரி
செல்வதற்கு உகந்த காலம்: மே-ஜூலை, செப்டம்பர்-அக்டோபர்
அருகிலுள்ள விமான நிலையம்: பாக்தோக்ரா (47 கிமீ)
அருகிலுள்ள ரயில் நிலையம்/பேருந்து நிலையம்: ஜல்பைகுரி (20 கிமீ)

***

நந்திகேஷ்வரி சக்தி பீடம்

சைனித்தியம், வீர்பூம், மேற்கு வங்கம்
தேவி கழுத்து ஆரம் விழுந்த இடம்
பைரவர்:  நந்திகேஷ்வரர்

பல திருத்தலங்களைப் போலவே, நந்திகேஷ்வரி கோயிலும், மயூர காசி நதிக்கரையில் அமைந்துள்ளது. கருவறையில் உள்ள மேடை போன்ற அமைப்பிலுள்ள கற்பாறையைப் பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். அது சிவப்பு நிறத்தில் உள்ளது. இந்தக் கற்பாறைக்கு வெள்ளியால் ஆன கிரீடம் அணிவிக்கப்பட்டுள்ளது. சிவனின் வாகனமான நந்தி இங்கு வழிபடப்படுகிறது. இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள மரத்தில், பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி கயிறு கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.

விழாக்கள்: நந்திகேஸ்வரியின் வெற்றியைக் கொண்டாடும் நவராத்திரிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

செல்வதற்கு உகந்த காலம்: ஆகஸ்ட் - மார்ச்
அருகிலுள்ள விமான நிலையம்: கொல்கத்தா (190 கி.மீ.)
அருகிலுள்ள ரயில் நிலையம்: வீர்பூம் (1.5 கி.மீ.)


***

தாராதாரிணி சக்தி பீடம்
கஞ்சம் மாவட்டம், ஒடிசா
தேவியின் மார்பகங்கள் விழுந்த இடம்
பைரவர்:  தும்கேஷ்வர்

கடற்கரை நகரமான பெர்ஹாம்பூரிலிருந்து 30 கி.மீ. வடக்கில், ருஷிகுல்யா நதிக்கரையில் தாராதாரிணி சக்தி பீடம் அமைந்துள்ளது. பூர்ணாகிரி மலையின் உச்சியில் ஆதி பீடம் அமைந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த 4 சக்தி பீடங்களில் இத்தலமும் ஒன்று. கோயில் கருவறையில் இரண்டு கற்கள், பெண்களின் முகவமைப்பைக் கொண்டு உள்ளன. அவை தங்கம் மற்றும் வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களால் வழிபடப்படுகிறது. மிகவும் சக்திவாய்ந்த தலம் என்பது நம்பிக்கை

புராணக் கதை: கோயில் பூசாரியாக இருந்த வாசு பிரஹராஜாவின் இரண்டு மகள்கள் காணாமல் போயினர். அவர்களைக் காணாமல் விரக்தியடைந்தார் பிரஹராஜா. ஒரு நாள் இரவில் பூசாரியின் கனவில் தோன்றிய அவர்கள், தாஸ் மகா வித்யாக்களாகக் கருதப்படும் ஆதி சக்திகளான, தாரா, தாரிணி என தங்களை அறிவித்துக் கொண்டனர்.

விழாக்கள்: சித்திரை மாதத்தில் 4 செவ்வாய்க்கிழமைகளிலும் திருவிழா நடைபெறும். குழந்தைகளுக்கு மொட்டையடிக்கும் வழக்கமும் இங்குள்ளது.

செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர் - பிப்ரவரி
அருகிலுள்ள விமான நிலையம்: புவனேஸ்வர் (174 கி.மீ.), விசாகப்பட்டினம் (240 கி.மீ.)
அருகிலுள்ள ரயில் நிலையம்: பிரம்மபுரி (32 கி.மீ.)
 

***

சுகந்த தேவி சக்தி பீடம்

ஷிகார்பூர், வங்கதேசம்
தேவியின் மூக்கு விழுந்த இடம்
பைரவர்: திரையம்பகேஸ்வர்

சுகந்த நதியின் கரையோரம் அமைந்துள்ளது சுனந்தா தேவி திருத்தலம். ஆகம சாஸ்திரப்படி, கோயில் கோபுர நிழல் ஆற்றில் விழக் கூடாது. இருப்பினும், இக்கோயில் கோபுரத்தின் நிழல் ஆற்றில் விழுவதே இங்கு இறையாற்றல் அதிகமாக இருப்பதை உணர்த்துவதாக நம்பப்படுகிறது. கோயில் கொண்டிருக்கும் தேவி நவக்கிரகங்களுடன் தொடர்புடையவர் என்பதால், இவரை வழிபட்டால் நவகிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

விழாக்கள்: மார்ச் மாதத்தில் வரும் சிவ சதுர்தசியில் திரயம்பகேஸ்வருக்கு திருவிழா நடைபெறும். 
செல்வதற்கு உகந்த காலம்: ஆண்டு முழுவதும்
அருகிலுள்ள விமான நிலையம்: பரிசல் (21 கி.மீ.)
அருகிலுள்ள ரயில் நிலையம்: ஜல்கடி (8 கி.மீ.)
அருகிலுள்ள பேருந்து நிலையம்: எஸ்லாடி (1.5 கி.மீ.)

***

பர்கபீமா தேவி சக்தி பீடம்


கிழக்கு மிட்னாபூர், மேற்கு வங்கம்
தேவியின் இடது கணுக்கால் விழுந்த இடம்
பைரவர்: சர்வானந்தா

ரூப்நாராயண நதிக் கரையோரம், 1,150 ஆண்டுகள் பழமையான பர்கபீமா கோயில் அமைந்துள்ளது. இத்தலம் விபாஷா சக்தி பீடம், பீமாகாளி கோயில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயிலை எழுப்பிய மயூர் - த்வஜ் மன்னரின் குல தெய்வமான காளி அல்லது கபாலினியின் பல்வேறு அம்சங்கள்தான் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளனர். மகாபாரத காலத்தில், இவ்விடம் பீமனுக்குச் சொந்தமானதாகக் கூறப்படுகிறது.
புராணக் கதை: ஒரு மீனவப் பெண்மணி, தம்ராத்வஜ் மன்னரின் அரண்மனையிலுள்ள சமையல் கூடத்துக்கு  வழங்கும் மீன்களை, அங்குள்ள குளத்தில் விட்டு எடுக்கும்போது, அவை புதிதுபோல மாறுவதைக் கண்டு, அந்த குளம் இருந்த இடத்தில் இந்த ஆலயத்தை எழுப்பினார்.

விழாக்கள்: மகர சங்கராந்தி, பீமா திருவிழா, ரத யாத்திரை.
செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர் - மார்ச்
அருகிலுள்ள விமான நிலையம்: கொல்கத்தா (88 கி.மீ.)
அருகிலுள்ள ரயில் நிலையம்: கரக்பூர் (85 கி.மீ.)
 

***

தேவி பிரஜா சக்தி பீடம்
ஜஜ்பூர், ஒடிசா
தேவியின் தொப்புள் விழுந்த இடம்
பைரவர்: வராகர்

மகிஷாசுரமர்த்தினி ஆட்சி செய்யும் பைதாரிணி நதிக்கரையோரம் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்து தேவி பிரஜா என்று அழைக்கப்படுகிறார். ஆதி சங்கரர் தேவிக்கு வழங்கிய பெயர் கிரிஜா. ஜஜ்பூர், பிரஜா சேத்திரம் அல்லது பிரஜா பீடம் எனவும் வழங்கப்படலாயிற்று. பிண்ட தானம் வழங்க ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள். ஸ்கந்த புராணத்தில், இக்கோயிலுக்குச் சென்றால், அனைத்து ரஜோ குணங்களும் ஒழியும் என்று கூறப்பட்டுள்ளது.

புராணக் கதை: இங்கு பீமணின் சூலம் வைக்கப்பட்டுள்ளது.
விழாக்கள்: 16 நாள்கள் கொண்டாடப்படும் சாரதிய துர்கா பூஜை. தேர் பவனி, நவராத்திரி பண்டிகை அபராஜிதா பூஜையாகக் கொண்டாடப்படும். ஆகம விதிகளின்படி வழிபாடு நடைபெறுகிறது.
செல்வதற்கு உகந்த காலம்: செப்டம்பர் - அக்டோபர்
அருகிலுள்ள விமான நிலையம்: புவனேஸ்வரம் (125 கி.மீ.)
அருகிலுள்ள ரயில் நிலையம்: ஜஜ்பூர் கியோஞ்ஹார் சாலை (31 கி.மீ.)

***

விமலா தேவி சக்தி பீடம்
புரி, ஒடிசா
தேவியின் கால் விழுந்த இடம்
பைரவர்:  சம்வர்தா / ஜெகந்நாதர்

புரி ஜகந்நாதர் கோயில் வளாகத்துக்குள் அமைந்திருக்கும் குளத்தின் அருகே இந்த சிறிய, சக்தி வாய்ந்த விமலா தேவி சக்தி பீடம் அமைந்துள்ளது. இக்கோயிலில், புரி ஜகந்நாதரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் முன்பே, விமலா தேவியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வருவோர், ஜகந்நாதருக்கு முன்பு, விமலா தேவியைத்தான் வணங்குகிறார்கள். நான்கு முக்கிய சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. 

விழாக்கள்: துர்கா பூஜை, விஜயதசமி, நவராத்திரி.
செல்வதற்கு உகந்த காலம்: ஜூன் - மார்ச்
அருகிலுள்ள விமான நிலையம்: புவனேஸ்வரம் (60 கி.மீ.)
அருகிலுள்ள ரயில், பேருந்து நிலையம்:  புரி

***

தேவி ஜெயதுர்கா சக்தி பீடம்

தேவ்கர், ஜார்க்கண்ட்
தேவியின் இதயம் விழுந்த இடம்
பைரவர்: வைத்தியநாதர்
இதய பீடம் என்று அழைக்கப்படும் இத்தலம், சித்த பூமி என்றும் கூறப்படுகிறது. காரணம், தேவி சதியின் இதயம் விழுந்த இடத்தில்தான், இறுதிச் சடங்குகளை சிவபெருமான் செய்தார். 72 அடி உயரம் கொண்ட தேவியின் சிலை அமைந்திருக்கும் கோயில், பாபா வைத்தியநாதர் தாம் கோயிலை எதிர்நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது.  இக்கோயில்களின் உச்சிகள் சிவப்பு பட்டு நூலால் இணைக்கப்பட்டிருக்கும். ராவணன் அடைந்த காயத்தைக் குணப்படுத்தியதால், இங்கிருக்கும் சிவபெருமான் வைத்தியநாதர் என அழைக்கப்படுகிறார்.

விழாக்கள்: ஷ்ரவானி திருவிழா, அஷ்வாயுஜா நவராத்திரி, மகா சிவராத்திரி

செல்வதற்கு உகந்த காலம்: அக்டோபர் - மார்ச்
அருகிலுள்ள விமான நிலையம்: சிம்ரா, தியோகர் (8 கி.மீ.)
அருகிலுள்ள ரயில் நிலையம்: வைத்தியநாத்தம், தியோகர் சந்திப்பு (3 கி.மீ.)

***

(சக்தி பீடங்கள் தொடர்பான இந்தத் தகவல்கள் மற்றும் புராணக் கதைகள் யாவும் பல்வேறு இடங்களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன. தகவல்களை மேலதிகமாக உறுதிசெய்ய கோயில் நிர்வாகங்களை பக்தர்கள் அணுகலாம்.)

தமிழில்: வாணிஸ்ரீ சிவக்குமார், எம். முத்துமாரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

கேஷுவல் சுந்தரி.. மீனாட்சி செளத்ரி!

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT