கட்டுரைகள்

முழுமுதற் கடவுள் விநாயகர்!

2nd Sep 2021 10:00 AM

ADVERTISEMENT

விநாயகர் ஆவணி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் சதுர்த்தி திதியில் அவதரித்தார். இந்த நாளே ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அவை வெற்றிகரமாக முடிய வேண்டும் என்பதற்காக முதலில் வணங்கப்படும் முழு முதற் கடவுள் விநாயகப் பெருமான். ஒரு கொம்பு, இரு செவிகள் கொண்டு, மூன்று திருக்கரங்கள், நான்கு திருத்தோள்கள் என முழுமையாகத் தோன்றி, ஐந்து திருக்கரங்கள், ஆறெழுத்து மந்திரம் என அமைப்பாகக் கொண்டு விளங்குபவர் விநாயகப் பெருமான்.

மிருக வடிவத்தில் முகம் கொண்டு தேவ வடிவத்தில் உடல் கொண்டு, பூதக்கணங்களின் வடிவமாகக் கால்கள் கொண்டு காட்சி தரும் இவருக்கு அகிலம் போற்றும் அனைத்துத் தெய்வங்களின் "அம்சம் " யாவும் உருவமாக அமைந்துள்ளது. யானையின் தலை, துதிக்கை, காது இம்மூன்றும் சேர்ந்து "ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தை விளக்க வேண்டி ஓங்கார முகமுடையவராக திருக்காட்சி தருபவர் விநாயகப் பெருமான். விநாயகர் வழிபாடு அறியாமையை அகற்றும், அறிவைத் தூண்டும், கல்வியைப் பெருக்கும், செல்வத்தைக் கொடுக்கும். வலிமையை வழங்கும். சிவம் நிறைந்த வாழ்க்கையை உண்டாக்கி செம்மையாக சிறப்புறச் செய்யும். தொடங்கும் பணிகள் அனைத்திலும் வெற்றியைக் கொடுக்கும். விநாயகர் சதுர்த்தி அன்று குறைந்தபட்சம் 9 பிள்ளையார்களை தரிசனம் செய்வது மிகவும் நல்லது.

தெய்வ அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. விநாயகரின் உருவ அமைப்பில் இருக்கும் தத்துவம் ஐந்து பெரும் சக்திகளைக் காட்டுவதாகும். மடித்து வைத்துள்ள ஒரு பாதம்  பூமியையும், சரிந்த தொந்தி நீரையும், அவரது மார்புப் பகுதி நெருப்பையும், இரண்டு புருவங்களின் இணைந்த அரை வட்ட வடிவம் காற்றையும், அவற்றின் நடுவே வளைந்துள்ள கோடு ஆகாயத்தைக் குறிப்பதாகவும் அமைகின்றது. விநாயகர் பஞ்சபூத சந்திரன் அம்சமானவர் ஆவார். மனிதனின் மனதை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. மனிதனிடம் இருக்கும் விலங்கு குணம், குழந்தை மனம், அருள் தன்மை, பெருந்தீனி, முரட்டுத்தனம், மென்மையான குணம் போன்றவற்றையும் வெளிப்படுத்தும் உருவமாக இருக்கின்றார் விநாயகர்.

ADVERTISEMENT

பல்வேறு வகையான விதத்திலும், பல பொருள்களினாலும் விநாயகரை பிரதிஷ்டைச் செய்வார்கள். சிலர் களிமண்ணாலும் விநாயகரை வடிப்பார்கள்.விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிவிட்டு, மூன்றாம் நாளிலோ அல்லது ஐந்தாம் நாளிலோ அல்லது அடுத்த சதுர்த்தி தினத்திலோ வழிபட்ட விநாயகரை பூஜை செய்து குளத்திலோ, நதியிலோ கரைத்து விடுகின்றனர். இதில், தெய்வீகத் தத்துவமும், மனித வாழ்க்கைத் தத்துவமும் மறைபொருளாக உணர்த்தப்பட்டு இருக்கிறது. 

அதாவது, ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட விநாயகரை சில நியமங்களோடு தெய்வீக நிலைக்கு உயர்த்தி, பொன், பொருள், அபிஷேகம், ஆராதனைகள் செய்து நைவேத்தியம் படைத்து தியானித்து பின்னர் மீண்டும் ஐம்பூதங்களில் ஒன்றான நீரிலேயே கரைக்கின்றனர். இடையிலே தோன்றி, இடையிலேயே மறைந்து விடுகிறது. அதே போல், மனிதனின் வாழ்வும் இப்புவியான மண் மீது தோன்றுகிறது. பிறகு, அவனை (மனிதனை) பலரும் போற்றுகின்றனர். பொன், பொருளாலும், சுக போகங்கள் பெறுகின்றனர். என்றாவது ஒருநாள் உடம்பு மண்ணுக்குள் போகப்போகிறது. அல்லது தீயில் எரிந்து சாம்பலாகி நீரிலே கரையப் போகிறது. 

எனவே ஞானமும், நற்கல்வியும், நற்செயல்பாடுகளாலும் உன்னை உயர்த்திக்கொள் என்பதை உணர்த்துவதாகும் விநாயகரின் வழிபாடு. களிமண் உருவ தத்துவம் மேலும் நற்பதவிகளும் கிடைக்கும். புற்று மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட்டால் லாபம் கிடைக்கும். விநாயகர் சதுர்த்திக்குப் பூஜைக்கு உகந்த இலைகள். சிவனது பூஜைக்கு செய்யப்படும் அனைத்து இலைகளும், விநாயகரின் பூஜைக்கும் உகந்ததாக இருக்கிறது.வில்வம், அருகம்புல், கரிசலாங்கண்ணி, ஊமத்தை, துளசி, நாயுருவி, வின்னி இலை, செண்பகம், இலந்தை, மாதுளை, மரிக்கொழுந்து, ஜாதி மல்லி, வெள்ளருக்கு ஆகியவைகள் விநாயக சதுர்த்தி பூஜைக்கு உகந்த இலைகள் ஆகும்.

விநாயகர் சிலையின் அதிசயத் தோற்றங்கள்

சிந்தைக்கும், அறிவிக்கும் எட்டாத தத்துவமாக விளங்கும் விநாயகப் பெருமானின் திருவுருவச் சிலைகளுக்கு ஒரு தனிச் சிறப்புகள் உண்டு.

விநாயகரை கணபதி என்றும் அழைப்பார்கள். கணபதி என்பதில்  "க" என்பது ஞான நெறியில் ஆன்மா எழுவதையும், "ண" என்பது மோட்சம் பெறுவதையும், "பதி " என்பது ஞான நெறியில் திகழ்ந்து பரம்பொருளை அடைதல் என்பதையும் குறிக்கும். ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ள கோயில்களில் கருவறையில் தொடங்கி அனைத்து சன்னதிகளையும், முடிவாகக் கொடி மரத்தையும் வரிசையாக, முறையாக வலம் வந்து வழிப்பட்டு முடித்தால், நம்மை அறியாமலேயே "ஓம்" என்ற வடிவத்தில் வலம் வந்திருப்பதை நன்றாக உணர முடியும். பல கோயில்களில் அமைந்த இத்தகைய வெளிப்பிரகாரத்தை "ஓங்காரப் பிரகாரம்" என்றும், அதில் வலம் வருவதை "ஓங்காரப் பிரதட்சிணம்" என்றும் கூறுவார்கள்.

விநாயகரும், ஆஞ்சநேயரும் இணைந்த வடிவ வழிபாடு சில ஆண்டுகளாகப் பிரசித்தி பெற்று வருகிறது. இவரை ஆத்யேந்தய பிரபு என அழைக்கப்படுகின்றார். ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டு இந்தச் சிலை வடிக்கப்படுகிறது. பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த பிரம்மச்சாரிகளை வணங்க வேண்டும். ஆஞ்சநேயர் சிவனின் அம்சமானவர். சிவனே ஹனுமனாக வடிவெடுத்து ராம பிரானுக்கு உதவியதாகவும் கூறுவார்கள். விநாயகரோ சக்தியிலிருந்து (பார்வதி) உருவானவர். எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கிய பிறகுதான் துவங்குகிறோம். அச்செயல் நிறைவு பெறும் போது ஆஞ்சநேயரை வணங்கிவிட்டு முடிக்க வேண்டும். இதன் அடிப்படையில், சென்னை தரமணி அருகிலுள்ள மத்தியக் கைலாஷ் கோயிலில், ஆத்யேந்தய பிரபு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சில தலங்களில் பெண் வடிவில் இருக்கிறார். இவரை விநாயகி என்றும், கணேசினி என்றும் சொல்லுவார்கள். தமிழகத்தில் ஆறு இடங்களில் விநாயகி சிற்பங்கள் இருக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ( சிவன் சன்னதிக்கு முன்பு கொடி மரத்தின் அருகில் புலிக்காலுடன் கூடியது). சுசீந்தரம் தாணுமாலயன் கோயில் தூணில் உள்ள சிற்பம், நாகர்கோயில் வடிவீஸ்வரம் அம்மன் கோயிலில் கையில் வீணையைத் தாங்கிய படி  புலிக்கால்களுடன், திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் கோயில் தேரில் போர்க் கோலத்தில்  கையில் வாள் மற்றும் கோடாரியுடன் ஓடும் பாவனையில் உள்ளன. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சிவாலயத்தில் உள்ள தூணிலும் சிற்பம் உள்ளது.

ஐந்து யானைத் தலைகளுடன் கூடிய விநாயகரை பஞ்சமுக கணபதி என்பர். பஞ்ச பூதங்களான நிலம், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்துக்கும் இவரே அதிபதி. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் இவரே செய்கிறார். முக்கல புராணம் என்ற நூலில் இது குறித்துச் சொல்லப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது முக்கூட்டு மலை. மூன்று மலைகள் இணையும் இந்த இடத்தின் அடிவாரத்தில் கன்னி விநாயகர் கோயில் கொண்டுள்ளார். கன்னிப் பெண்களை பாதுக்காப்பவராக இவர் அருள் புரிகிறார். பூலோகத்திற்கு சப்த கன்னிகளுடன் வந்த சிவன் இங்கு அமர்ந்து ஓய்வெடுத்துள்ளார். இந்த இடத்தின் அழகில் மயங்கிய சப்த கன்னிகள் தாங்கள் இங்கேயே தங்கிக் கொள்வதாக சிவனிடம் வேண்டினர். ஒப்புக் கொண்ட சிவன் அவர்களுக்கு பாதுகாவலராக விநாயகரை நியமித்து நந்தியையும் பாதுகாப்பாக விட்டுச் சென்றாராம். இதனால், இங்குள்ள விநாயகருக்கு மூஞ்சூறு வாகனம் இல்லாமல், நந்தி வாகனத்துடன் காட்சி தருவது சிறப்பு. விநாயகர் சன்னதிக்கு அருகிலுள்ள ஏழு கோடுகளை சப்த கன்னியராக வழிபடுகிறார்கள்.

கன்னியாக்குமரியில் இருக்கும் கேரள புரத்தில் உள்ள மரத்தடி விநாயகர் ஆவணி மாதம் முதல் தை மாதம் வரை 6 மாதம் கருமையாகவும், மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை 6 மாதம் வெண்மையாகவும் காட்சி தருகிறார். வேலூரில் உள்ள தேனாம்பாக்கத்தில் லிங்க உருவில் உள்ள விநாயகரைச் சுற்றி 10 வித விநாயகர்கள் காட்சி தருகின்றனர். திருச்செங்காட்டான்குடியில் உள்ள விநாயகர் மனித உருவில் எழுந்தருளியுள்ளார்.

ஒவ்வொரு மாதத்திலும் பெளர்ணமி முடிந்து நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி எனப்படும். இந்த நாளில் விநாயகரை வழிப்பட்டால் எல்லாச் சங்கடங்களும் நிவர்த்தியாகும். இந்த நாளில் இரவு 9 மணிக்கு மேல் சந்திரனைப் பார்த்த பிறகே விநாயகர் வழிபாடு நடைபெறும். மாசி மாதம் வருவது மகா சங்கடஹர சதுர்த்தி எனப்படும். அது செவ்வாய்க் கிழமைகளில் பொருத்தி வந்தால் மிகச் சிறப்பாகும்.

விநாயகரின் வடிவங்கள் எனப் பார்த்தால், பால கணபதிக்கு ஒரு முகம் 4 கைகள், தருண கணபதிக்கு ஒரு முகம் 6 கைகள், பக்த கணபதிக்கு ஒரு முகம் 4 கைகள், வீர கணபதிக்கு ஒரு முகம் 16 கைகள், சக்தி கணபதிக்கு ஒரு முகம் 4 கைகள், துவஜ கணபதிக்கு 4 முகங்கள் 4 கைகள், பிங்கள கணபதிக்கு 4 முகங்கள் 6 கைகள், உச்சிஷ்ட கணபதிக்கு 4 முகங்கள் 4 கைகள், ஷிப்ர கணபதிக்கு 4 முகங்கள் 4 கைகள், ஹேரம்ப கணபதிக்கு 5 முகங்கள் 10 கைகள், லெட்சுமி கணபதிக்கு 5 முகங்கள் 8 கைகள், விஜய கணபதிக்கு 5 முகங்கள் 10 கைகள், யுவன கணபதிக்கு 5 முகங்கள் 8 கைகள், நிருத்த கணபதிக்கு 5 முகங்கள் 6 கைகள், ஊர்த்துவ கணபதிக்கு 5 முகங்கள் 8 கைகள் உள்ளன.

- சோ. தெஷ்ணாமூர்த்தி

Tags : Vinayagar Chaturthi VinayagarChaturthi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT