கட்டுரைகள்

12 மாதங்களிலும் திருவிழாக் காணும் அலங்காரப்பிரியன் அரங்கன்

4th Dec 2021 01:19 PM | கு. வைத்திலிங்கம்

ADVERTISEMENT

 

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமியை பொதுவாக அலங்காரப் பிரியன் என்பார்கள்.  ஒவ்வொரு திருவிழாவுக்கும் பெருமாள் அணிந்திருக்கும் அலங்காரங்கள், ஆபரணங்கள் காணக் கண்கோடி வேண்டும்.   இத்தனை சிறப்புடைய ஸ்ரீரங்கம் கோயிலில் ஆண்டில் திருவிழா நடைபெறாத மாதங்களே இல்லை எனலாம்.

இதையும் படிக்கலாமே.. ஸ்ரீரங்கத்தில் சிறப்பு வாய்ந்த வைகுந்த ஏகாதசி திருவிழா

தமிழ் மாதத் தொடக்கமான சித்திரையில் தேரோட்டம், கஜேந்திர மோட்சம்,  வைகாசியில் நம்பெருமாள், தாயார் வசந்த உற்ஸவம், ரங்கநாச்சியார் கோடை உற்ஸவம், ஆனியில் ஆனித்திருமஞ்சனம்,  பெரியபெருமாள், ஸ்ரீரங்கநாச்சியார், சக்கரத்தாழ்வார் ஜேஷ்டாபிஷேகம்,  ஆடியில் ஆடிப்பெருக்கு, காவிரித்தாய்க்கு திருமாலை, பொட்டு அளித்தல், ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி - உறியடி உற்சவம், புரட்டாசியில் நவராத்திரி உற்ஸவம், ஐப்பசியில் ஊஞ்சல் உற்ஸவம், கார்த்திகையில் ஏகாதசி, நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்களைச் சாற்றுதல், மார்கழியில் வைகுந்த ஏகாதசி,  தையில் சங்காரந்தி, சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை அளித்தல், மாசியில் தெப்போத்ஸவம், பங்குனியில் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை, ஆதி பிரம்மோத்ஸவம் என 12 மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும் புண்ணியத்தலமாக ஸ்ரீரங்கம் கோயில் திகழ்கிறது.

ADVERTISEMENT

அலங்காரப் பிரியன்
ஸ்ரீரங்கம் அரங்கநாதரை ரங்கராஜா என்றழைப்பார்கள். இந்த ரங்கராஜனுக்கு அணிவிக்கப்படும் அலங்காரங்கள் விலைமதிப்பில்லாதவை. ஒவ்வொரு திருநாளுக்கும் நம்பெருமாள் புறப்பாடாகும் போது அணிவிக்கப்படும் ஆபரணங்களுக்கும் தனி சிறப்பு இருக்கிறது.

புகைப்படங்களைக் காண.. ஸ்ரீரங்கம்: கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!

குறிப்பாக, வைகுந்த ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து நாளன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் எழுந்தருளும் நம்பெருமாளுக்கு வைரம்,  வைடூரியம், முத்து, பவளம் என பலவிதமான ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன.  எத்தனை ஆபரணங்கள் அணிந்தாலும் அத்தனையிலும் அழகாய் காட்சியளிப்பார் நம்பெருமாள்.

வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் பரமபதவாசல் திறப்பன்று  கருவறையிலிருந்து பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கியுடன் புறப்பட்டு சிம்மக்கதியில் வரும் நம்பெருமாளைத் தரிசிக்க திரளும் பக்தர்களே இதற்கு சாட்சியாகும்.

மேலும் புகைப்படங்களைக் காண.ஸ்ரீரங்கம்: பகல் பத்து 3ம் நாள் உற்சவம்

இதுபோல, இராப்பத்து ஏழாம் திருநாளன்று நடைபெறும் திருக்கைத்தல சேவை, எட்டாம் திருநாள் நடைபெறும் வேடுபறி சேவையில் குதிரை வாகனத்தில்  நம்பெருமாள் எழுந்தருளி வையாளி கண்டருளுதல்,  சாற்றுமறையன்று  நடைபெறும்  நம்மாழ்வார் மோட்ச நிகழ்விலும் திரளான பக்தர்கள் பங்கேற்று அலங்காரப் பிரியனின் அழகைக் கண்டு தரிசித்து மகிழ்வர்.

வைகுந்த ஏகாதசி திருவிழாவில் நடைபெறும் நடைமுறைகள்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழா பகல்பத்து உற்ஸவத்துக்கென சில நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளின்படி திருவிழா நடைபெற்று வருகிறது.

பெரிய திருக்கோயில் எனப்படும் அரங்கநாதசுவாமி திருக்கோயில் நடைபெறும் எந்த திருவிழாக இருந்தாலும் திருக்கோயில் நிர்வாகத்தால் குறிப்பிடப்படும் நேரத்தில் சுவாமி புறப்பாடு தொடங்கும்.  யாருக்காகவும் பெருமாள் காத்திருக்க மாட்டார்கள் என்பார்கள்.   உடையவர் எனப்படும் ராமானுஜர் காலத்தில் வகுத்த நிர்வாக முறை இன்றளவும் இக்கோயிலில் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருவிழாக்களில் புறப்பாடு தொடங்கப்பட்டுவிடும்.

திரு அத்யயன உற்ஸவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம், பகல்பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும்.  இந்த 21 நாள்களிலும்  நம்பெருமாள் புறப்பாடுக்கான வரைமுறைகள் வகுக்கப்பட்டு அதன்படியே  உற்ஸவம் நடைபெற்று வருகிறது.

பகல்பத்து உற்ஸவ நாள்களில் காலையிலேயே நம்பெருமாள் புறப்பாடு நடைபெறும் என்பதால், திருப்பள்ளியெழுச்சி, திருவாராதனம்  முதலியவை சூரிய உதயத்துக்கு முன்பே பூர்த்தி செய்யப்படும்.  இதைத் தொடர்ந்து அரையர்களின் திருப்பல்லாண்டு தொடக்கமும், அதையொட்டி 2 பாசுரங்கள் தாளத்தோடும் தொடங்கும்.

திருப்பல்லாண்டு தொடங்கிய பின்னர், பெரிய அவசரம், திருவாராதனமும், தளிகை நிவேதனமும் ஆனப் பின்னர் பெருமாள் புறப்படத் தயாராகுவார்.

இதைத் தொடர்ந்து கருவறையிலிருந்து நம்பெருமாள் புறப்பாடு, ஆழ்வாராச்சாரியர்களுக்கு மரியாதை, அரையர் சேவை (மரியாதை), நிவேதன விநியோகங்கள்,  ஸ்தோத்ரபாட கோஷ்டி, மண்டபத்திலிருந்து புறப்பாடு,  அரக்ய பாத்யஹ்கள், தீர்த்த விநியோகம், பத்தி உலாவுதல், படியேற்றம், திருவந்திக் காப்பு,  உள்ளே எழுந்தருளுதல் ஆகியவை காரிய கிரமப்படி நடைபெறும்.  பகல்பத்து உற்ஸவக் காலத்தில் இந்த காரியக் கிரமப்படிதான் நம்பெருமாள் புறப்பாடு தொடங்கி நிறைவுபெறும்.

பகல்பத்து விழாவில்,  4,7,8,9,10 ஆம் திருநாள்களில் இரண்டு அரையர் சேவை நடைபெறும். ஒரு அரையர் சேவை இருக்கும் நாளில் சேவை ஆன பிறகு அலங்காரம் அமுது செய்தல்,  விநியோகம் நடைபெறும். ஆனால், இரண்டு அரையர் சேவை நடைபெறும் நாள்களில் முதல் சேவை முடிந்த பிறகு அலங்காரம் அமுது செய்தல் நடைபெறும். இது முடிந்த பின்னர்  உடனடியாக இரண்டாம் அரையர் சேவையைப் பூர்த்தி செய்து விநியோகம் செய்த பிறகே திருவாராதனம் முதலான காரியங்கள் நடைபெறும். இந்த நடைமுறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

நம்பெருமாள் படியேறி அழகியமணவாளன் திருமண்டபத்தை அடைந்து மேற்கு திரும்பின பிறகு கடதீபாராதனை செய்யப்படும். தமது சரீரத்திலுள்ள குண்டலிநீ சக்தியா சகஸ்ராரம் போய்ச் சேரும்படி   செய்யக்கூடியவர்கள் பரஞ்சோதியான பகவானை சோதிரூபமாய்க் கொண்டு தரிசிக்கலாம் என்பதை கடதீபாராதனை காட்டிக் கொடுக்கிறது.

இதன் பிறகு  நம்பெருமாள்  கிழக்கே திரும்பி ஜயவிஜயாள் வாசலுக்கு வந்தவுடன் ஸ்ரீ பாதம் தாங்குவோர் பெருமாளை  தோளுக்கிணியானுடன் வகையில் எழுந்தருளப் செய்துகொண்டு வந்து சன்னதிக்குள் நுழைவார்கள். இதுவரையில் பெருமாளுடன் கூட வந்த ஜீயர், பட்டர், வாதூல தேசிகர் அந்த வாசலுக்கு வெளியே நின்றுவிடுவார்கள்.

சன்னதி வாசலில் ஸ்ரீபாதம் தாங்குவோர் பெருமாளைக் கீழே தாழ்த்தி அதன் பின் மேலே உயர்த்தி, ஸர்ப்பம் வளைந்து செல்வது போல  எழுந்தருளப் பண்ணிக்கொண்டு போவார்கள். இப்படி செல்வது ஸ்ர்ப்பகதியாகும்.  பெருமாள் சன்னதிக்கு வாசலுக்கு முன் வந்தவுடன் இரண்டு  ஜுவாலைகளுடன் கத்திரிப்பந்தம்  பெருமாளுக்கெதிரில் பிடிக்கப்படும். இதன் பின்னர்  பெருமாளை கர்ப்பகிருகத்திலிருக்கும் சிம்மாசனத்தில்  எழுந்தருளப்பண்ண மங்களஹாரத்தி நடைபெறும்.
 

Tags : ஸ்ரீரங்கம் நம்பெருமாள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT