அரசியல் மாற்றம் வருமா? ராகு கேது பெயர்ச்சி கூறும் ரகசியங்கள்!

கடந்த சில நாட்களாக பார்ப்பவரெல்லாம் ராகு - கேது பெயர்ச்சி என்னுடைய ராசிக்கு நன்மையா? தீமையா? என கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
அரசியல் மாற்றம் வருமா? ராகு கேது பெயர்ச்சி கூறும் ரகசியங்கள்!


கடந்த சில நாட்களாக பார்ப்பவரெல்லாம் ராகு - கேது பெயர்ச்சி என்னுடைய ராசிக்கு நன்மையா? தீமையா? என கேட்க ஆரம்பித்துவிட்டனர். இது மக்களுக்கு ஜோதிடத்தின் மீது இருக்கும் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. பலமான எதிர்பார்ப்புகளுக்கு இடையில் ராகு-கேது பெயர்ச்சியும் வந்துவிட்டது. ஆம்!   வாக்கிய பஞ்சாங்க படி ராகு - கேது பெயர்ச்சி  கடந்த 13-2-2019  மாசி மாதம் 1ம் நாள்  அனைத்து கோயில்களில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் இன்று  (06/03/2019) மாசி மாதம் 22ம் தேதி திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் ராகு - கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் பரிகார பூஜைகளும் செய்து வருவதால் மக்கள் கூட்டம் பெருகி உள்ளது

ராகு-கேது யார்?
புராண காலத்தில் பாற்கடலைக் கடைந்து சாகாவரம் தரும் இன்னமுதை அருந்த தேவரும், அசுரரும் இணைந்து மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு கடைய முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை அருந்திய சிவபெருமான் நீலகண்டரானார். இறுதியாக அமிர்தமும் வந்தது. அமிர்தத்தைப் பெற தேவரும், அசுரருக்கும் இடையே கடும்போட்டி நிலவியது.

மோகினியான ஸ்ரீவிஷ்ணு:
தேவர்களையும் அசுரர்களையும் சமாதானப்படுத்த மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். இரு வரிசையாக நின்றவர்களிடையே அமுதத்தை பகிர்ந்து அளித்த போது தேவர்கள் வரிசையில், தேவர் போல் உருமாறிய காசிப முனிவரின் பேரனும், விப்ரசித்து, கிம்ஹிகை தம்பதியரின் மகனுமான ஸ்வர்பானு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே அமர்ந்திருந்தான். அவனுக்கு ஓர் அகப்பை அமுது அளித்த மோகினியிடம் சூரிய, சந்திரர்கள் அவனைக் காட்டிகொடுத்தனர். 
 
சுவர்பானுவின் தலையை துண்டித்தது:
கோபமுற்ற மோகினியலங்காரன் கையிலிருந்த அகப்பையால் சுவர்பானுவின் தலையைத் தாக்கி துண்டித்தார். தலை வேறு, உடல் வேறான சுவர்பானு அமிர்தத்தை உண்டதால் உயிர் பிரியவில்லை. பிரம்மனிடம் வேண்டிய சுவர்பானுவின் வெட்டப்பட்ட தலையுடன் பாம்பின் உடலையும், பாம்பின் தலையுடன் உடலை இணைத்து முறையே இராகு – கேது எனப் பெயர் கொடுத்து ஒருவருக்கொருவர் இணை பிரியாது, எதிர், எதிராக நின்று நவகிரக அந்தஸ்தையும் கொடுத்து அருள்பாலித்தார்.

சாயா கிரஹங்கள்:
நிழல் கிரஹங்களான இருவருக்கும் நிரந்தர இராசியின்றி, அவர்கள் நிற்கும் இராசியின் பலத்தையே அடைய அவர்களுக்கு வழிகாட்டினார். இராகு மகர இராசியில் அமர்ந்து அதர்வண வேதத்தைக் கற்றுணர்ந்து ஞானகாரகன் என்றும், கடகத்தில் அமர்ந்து ரிக், யஜூர், சாம வேதத்தைக் கற்றுணர்ந்து மோட்ச காரகன் என்றும் அழைக்கப்பட்டனர். பாவ புண்ணியத்துக்குத் தக்கவாறு பலன்களை அளிக்கவல்ல இவர்கள் அமாவாசை, பௌர்ணமி காலங்களில் முறையே சூரிய சந்திரர்களைப் பீடித்து கிரகணமாக்கி பழி தீர்த்துக் கொள்கிறார்கள். இதுவே இராகு - கேது உருவான கதையாகும். இராசி மண்டலத்தின் வடதுருவப் புள்ளி இராகு என்றும், தென்துருவப் புள்ளி கேது எனவும் வழங்கப்படுகின்றன. மேற்கத்திய ஜோதிடத்தில் இராகு "டிராகன்ஸ் ஹெட்" என்றும், கேது "டிராகன்ஸ் டெயில்" என்றும் குறிப்பிடப்படுகின்றன. 

 ஜோதிடத்தில் ராகு-கேது:
ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும், இராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும் பாம்பு என அழைக்கப்படும், இராகு போக காரகன் ஆவார். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன் ஆவர். இவர்கள் எந்த பாவத்தில் அமர்கிறார்களோ அந்த பாவத்தை பாதிப்பு அடையச் செய்வர். அதுபோல் இவற்றுடன் இணையும் கிரகங்களின் காரகத்துவங்களிலும் பாதிப்பு ஏற்படும்.  இப்படி போககாரகன், ஞானகாரகன்,மோக்ஷ காரகன் என பலவாராக வர்ணித்தாலும் அவர்களுக்குள் பெரிய வித்யாசமில்லை. "கொடுத்து கெடுப்பவர்" போககாரகன் எனும் ராகு. " கெடுத்து கொடுப்பவர் கேது". இதைத்தவிர இரண்டு சாயாகிரகங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஒரே மாதிரிதான் செயல்படுகின்றனர்.

ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு,கேது இடம்பெறும். இருவரும் திசைகள் மற்றும் பிற கிரக தசையின் புத்திகளில் யோக, அவ யோகங்களை அளிக்கும் வல்லமை பெற்றவர்கள் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் மாற்றம் தரும் ராகு-கேது:
அரசியல் மாற்றத்திற்கு முக்கியக் காரக கிரகங்கள் ராகு-கேதுவாகும். இரவோடு இரவாக ஒரு பிச்சை எடுப்பவன் பேரரசன் ஆவதற்கும் ஆண்டி திடீரென  அரசனாவதற்கும் மாடு மேய்ப்பவன் மந்திரியாவதற்கும் குப்பையில் கிடப்பவன் குபேரனாவதற்கும்  காரணம் ஸர்ப கிரகங்களே ஆகும்.  இந்த முறை ராகு கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும்  கேது  மகரத்திலிருந்து தனுர் ராசிக்கும் செல்கின்றனர்.  அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன், சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு   பத்தாம் வீட்டதிபதியான சனைஸ்வர பகவானும் ஆவர்.

தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் பலரும் அரசியலில் மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்றனர். தற்போது உள்ள ஆட்சியே தொடர வேண்டும் என ஒரு சாரரும்,  ஆட்சியாளர்களை சமாளிக்கமுடியாத நிலையில் ஆட்சி மாற்றம் வேண்டி ஒரு சாரரும் தேர்தலை ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  கர்ம காரகன் எனப்படும் சனைஸ்வர பகவானும் கால புருஷ ஒன்பதாமிடமான தனுர் ராசியில் வரும் ஜனவரி மாதம் வரை தனது பயணத்தை தொடர்கிறார்.  

இந்நிலையில் ராகு, கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும்  கேது, மகரத்திலிருந்து தனுர் ராசிக்கும் பெயர்வது அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். வியப்பூட்டும்படியாக இதுவரை அரசியலில் எதிர்பார்க்காத புதிய சாதனைகள் நிகழ்ந்து உலகளவில் நமது நாடு பேசப்படுவதோடு முன்னணியில் நிற்கும்.   இதுநாள்வரை தொல்லை கொடுத்து வந்த விஷயங்கள் முடிவுக்கு வரும்.  நேற்று வரை பலராலும் இகழப்பட்டவரின் புகழ் எல்லோராலும் பேசப்படும். 

ராகு பகவான் கால புருஷ லக்னத்திற்கு மூன்றாம் வீட்டிலும் சுதந்திர இந்தியாவின் ஜாதக லக்னமான ரிஷபத்திற்கு இரண்டாம் வீட்டிலும் அடுத்து வரும் 18 மாதங்கள் பயணம் செய்கிறார்.  வாயு ராசியான மிதுனம் தகவல் தொடர்பை குறிக்கும் புதனின் வீடு ஆகவும் விளங்குவதால் இந்தியா தகவல் தொடர்பு துறையில் புதிய உச்சத்தை தொடும்.  பல புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்துவதில் நமது நாடு முன்னணியில் நிற்கும். மேலும் முண்டேன் அஸ்ட்ராலஜி எனப்படும் மேதினி ஜோதிடத்தின் படி இரண்டாம் வீடு நாட்டின் வர்த்தகம், பங்கு வர்த்தகம்  பொருளாதாரம், இறக்குமதி, ஏற்றுமதி, வங்கிகள் ஆகியவற்றை குறிக்கிறது. எனவே நாட்டின் இறக்குமதி, ஏற்றுமதி ஆகியவற்றில் வியக்கத்தகு மாற்றங்களையும் அதனால் பொருளாதர வளர்ச்சியையும் காணலாம்.  அதே நேரத்தில் கொசு, காற்றினால் பரவும் வியாதிகள் அதிகரிக்கும் நிலையும் ஏற்படும்.  முக்கியமாக சுவாச சம்மந்தமான பிரச்னைகள் அதிகரிக்கும்.

கேது பகவான் கால புருஷ லக்னத்திற்கு ஒன்பதாம் வீட்டிலும் சுதந்திர இந்தியாவின் ஜாதகத்தில் எட்டாமிடத்திலும் பயணம் செய்ய இருப்பதால் அந்நிய கடன் குறைவது, நாட்டில் காப்பீட்டு துறை, சமூக பாதுகாப்பு ஆகியவற்றில் பல மாற்றங்கள் ஏற்படுவதையும் காணலாம். காலபுருஷ ஜாதகத்தில் ஒன்பதாமிடத்தில் கேதுவும் சனைச்சரனும் பயணம் செய்வதால் அந்நிய மதம் சார்ந்த கலகங்கள் தோன்றும். வரும் ஜனவரி 2020ல் சனைச்சர பகவானின் கோச்சார பயணத்திற்கு பின் தொழில் சார்ந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். நீதித்துறை புதிய மாற்றம் பெறும். தர்மம் தழைத்தோங்கும்.

கடந்த சில வருடங்களாக தலைவிரித்து ஆடிய கோயில் சார்ந்த மிகப்பெரிய பிரச்னைக்கு நல்ல தீர்வு ஏற்படும். அந்நிய மதத்தினர் பலமிழந்து நிற்பார்கள்.   மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், செயற்கை முறை கருத்தரிப்பு போன்ற விஷயங்களிலும் அதிரடி மாற்றம் ஏற்படும்.  கேது பகவான் நெருப்பு ராசியில் பயணம் செய்ய இருப்பதால் நாட்டில் தீ விபத்துகள் அதிகளவில் ஏற்படும்.  

அரசாங்க உயர்பதவியில் இருந்தோர்களுக்கெல்லாம் அதிரடியாக இலாகா மாற்றம் ஏற்படும். அதை ஏற்காதவர்களுக்கு வேலையிழப்பும் ஏற்படும். கேதுவால் உள்நாட்டில் வேலைவாய்ப்புகள் மந்தநிலையடைந்தாலும் ராகுவால் வெளிநாட்டு வேலை யோகம் ஏற்படும். பல அயல்நாட்டு நிறுவன வேலை வாய்ப்புகள் பெருகும். வெளியாட்களை கொண்டு வேலை வாங்கும் அவுட் சோசோர்சிங் புதிய உச்சத்தை எட்டும். கப்பல் துறை வணிகங்கள்  முன்னேற்றமடையும். நீண்ட நாட்களாக விசா பிரச்சனையால் தாயகம் திரும்ப தயங்குபவர்களுக்கு விசா பிரச்சனைகள் தீர்வடைந்து தாயகம் வந்து செல்லும் நிலை ஏற்படும்.

மொத்தத்தில் தீயவர்களின் பலம் அதிகரிப்பது போல் தோன்றினாலும் இறுதியில் தர்மத்தை தழைத்தோங்க செய்யும் விதமாக இந்த ராகு-கேது பெயர்ச்சி அமையும்.

உங்கள் அஸ்ட்ரோ சுந்தரராஜன்
செல்பேசி - 9498098786
வாட்ஸ்அப்- 9841595510
மின்னஞ்சல்: astrosundararajan@gmail.com
இணையதள முகவரி: www.astrosundararajan.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com