பரிகாரத் தலங்கள்

திருமணத் தடை நீக்கும் திருநாராயணபுரம் வேதநாராயணப் பெருமாள்

கு. வைத்திலிங்கம்

திருமணத் தடை நீக்குதல், குழந்தைப் பேறு அருளும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், திருநாராயணபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வேதநாயகி தாயார் உடனுறை  வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில்.

கோயில் நுழைவுப் பகுதி
<strong>கோயில் நுழைவுப் பகுதி</strong>

பிரம்மன், பிரகலாதன், சுக்ரீவன், கருடன், ஹனுமன், அரையர், சோழர் போன்ற பலர் வழிபட்ட பெருமைக்குரியது இத்திருக்கோயில். இதனால் இக்கோயில் ஆதிரங்கம் எனவும் போற்றப்படுகிறது. சதுர்வேதிமங்கலம், வேதபுரி, ஆதிரங்கம் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், தற்போது இந்த  திருநாராயணபுரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் பிரம்மனுக்கு வேத உபதேசம் செய்த திருக்கோயிலாகவும் திகழ்கிறது.

கொடிமரம்

தலவரலாறு

முன்னொரு காலத்தில் மஹாபலி சக்கரவர்த்தி வானவராயர் என்ற அரசர் ஆதிக்கத்தை விஸ்தீர்ணம் செய்வதற்காக, மைசூரு நோக்கிப் படையெடுத்துச் சென்று கொண்டிருந்தார். இரவு நேரம் ஆனதால், வழியில் மண்மேடாக இருந்த இடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது  அவரது கனவில் தோன்றிய பெருமாள், " நான் பூமிக்கடியில் (பூதமாய்) இருக்கிறேன்.

 வேதநாராயணப் பெருமாள்

என்னை மேலே எழுந்தருளச் செய்து, எனக்கு உண்டான உத்சவங்களை எல்லாம் ஏற்படுத்திவிட்டு, மைசூரை நோக்கிச் சென்றால் அங்கு  இருக்கும் அரசர் பரமபதம் அடைந்துவிடுவார். உம்மை அங்குள்ள மக்கள் மன்னனாக ஏற்றுக் கொள்வார்கள். ஆட்சிப் பரிபாலனம் செய்யலாம்'  என்றார்.

வேதநாராயணப் பெருமாள் சன்னதி

அதன்படி இங்குள்ள  மண்துகள்களை அகற்றி, 108 பிராமணர்களைக் கொண்டு வேத கோஷங்கள் முழங்க, பெருமாளை ஸ்தாபிதம் செய்து, அவருக்குண்டான தேர்த் திருவிழா போன்ற நிகழ்வுகளை நடத்தி வைத்து,  திருநாராயணபுரம் கிராமத்தையும், நிலங்களையும் தானமாக அளித்துவிட்டு மைசூரை நோக்கிப் படையெடுத்துச் சென்றார் என்பது தல வரலாற்றுத் தகவலாகும்.

வேதநாராயணப் பெருமாள் கருவறை விமானம்

சாந்த ரூபத்தில் காட்சி

அசுர வேந்தனாகிய இரணியனின் மகன் பிரகலாதன். ஸ்ரீ நாராயணனின் பக்தனாக இருந்ததால், அவனை இரணியன் வெறுத்தான். நாராயணர் கடும் கோபத்துடன் நரசிம்ம வடிவில் இரணியனைக் கொன்று சீற்றத்துடன் நின்றார். சீற்றம் தணிந்த இறைவன், பிரகலாதனிடம் உனக்கு வேண்டியதைக் கேள் என்றார். அதற்கு பிரகலாதன், பெருமாளை சாந்த ரூபத்தில் காண வேண்டும் என்றார். நீ வேண்டியதை போல், உனக்கு திருநாராயணபுரத்தில் சாந்த ரூபத்தில் காட்சியளிப்பேன் என்று கூறி, அவ்வண்ணமே செய்தருளினார்.

வேதநாயகி தாயார் சன்னதி

பிரம்மாவுக்கு வேத உபதேசம்

ஆதி காலத்தில் ஆதிமுகக்கடவுள் என்றிழைக்கப்படும் நான்முக பிரம்மாவுக்கு, நமக்குத்தான் எப்பொருளையும் படைக்கக்கூடிய தன்மை உண்டு. நம்மைத் தவிர யாராலும் படைக்க இயலாது என்ற கர்வம் ஏற்பட்டது. அந்த கர்வத்தை அகற்றுவதற்காகவும், தம்மாலும் படைக்க இயலும் என்பதை பிரம்மாவுக்கு உணர்த்துவதற்காகவும் பெருமாள் ஒரு  விகாரமான உருவத்தை உருவாக்கி, பிரம்மாவைப் பார்க்க அனுப்பி வைக்கிறார்.

உத்சவர் வேதநாயகி தாயார்

பிரம்மா  விகாரமான அந்த உருவத்தைப் பார்த்து, பயந்து யார் இந்த உருவத்தை  உருவாக்கி இருப்பார்கள் என்ற கேள்வியுடன், பெருமாளிடம் வந்து விவரத்தைக் கூறுகிறார். பெருமாளும் எதுவும் தெரியாதது போல, படைக்கும் தன்மை உன்னுடையது ஆயிற்றே என்றுக்கூற, ஆம், என்னைத் தவிர யாராலும் படைக்க முடியாது என்று பிரம்மா கர்வத்துடன் கூறுகிறார். அப்போது யார் எந்த தொழிலைச் செய்தாலும், செய்யும் தொழிலின் மேல் உண்மையான பக்தி இருக்க வேண்டுமே தவிர, கர்வம் இருக்கக்கூடாது என்பதை பிரம்மாவுக்கு உணர்த்தி, அந்த விகாரமான உருவத்தை மறைத்துவிடுகிறார்.

 வேதநாயகி தாயார் மண்டபம்

பிரம்மாவுக்கு ஞானோதயம் ஏற்பட்டு, எனக்கு நீர் மந்தி உபதேசம் (வேத உபதேசம்) செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்கிறார். பெருமாள் உடனே இயலாது என்றும், தாம் பூலோகத்தில் பின்னொரு காலத்தில் காவிரியின் வடகரையில்  வேதநாராயணர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளப் போவதாகவும், அப்போது அங்கு  வந்து நாபிக் கமலத்தில் (தொப்புள் கொடியில்)  இருந்து வேத உபதேசம் பெற்றுக்கொள் எனவும் கூறுகிறார்.

வேதநாயகி தாயார் கருவறை விமானம்

நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மாவுக்கு பெருமாள் வலது கரத்தால் வேத உபதேசம் செய்தமையால் இத்திருக்கோயில் குருஸ்தானத்திலும், வேதத்தை சிரசில் தலையணையாகக் கொண்டிருப்பதால் பெருமாள் குருவுக்கு அதிபதியாகவும் உள்ளார். அதன்படி திருநாராயணபுரத்தில் சாந்த சொரூப மூர்த்தியாக இருந்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார் அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் என்கிறது திருக்கோயில் தல புராணம்.

கோயில் அமைப்பு

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருநாராயணபுரம் திருக்கோயிலின் முகப்பிலுள்ள தீபஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சனேயர் எழுந்தருளியிருக்கிறார். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்களுக்குள் ஏதேனும் பிரச்னை உண்டானால், இவர் முன்பாக பேசித் தீர்த்துக் கொள்கின்றனர். மேலும் சத்தியத்தை நிலைநாட்ட இவ்வட்டார மக்கள் கம்பத்தடியானுக்கு முன் சத்தியமாக சொல்வாயா என உறுதி செய்யும் வழக்கம் உள்ளது.

கருடாழ்வார்

தொடர்ந்து  உள் மண்டபம் வழியாக கருடாழ்வாரைத் தரிசித்தபடி உள்ளே சென்றால், கிழக்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ள அருள்மிகு வேதநாராயணப் பெருமாளைத் தரிசிக்கலாம். ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பெருமாளைத் தரிசிப்பது போன்றே இங்கும் வேதநாராயணப் பெருமாள் சயனக் கோலத்தில் தரிசிக்கலாம். பெருமாள் சன்னதிக்கு அருகிலேயே வேதநாயகித் தாயார் சன்னதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பெருமாள் சன்னதியில் மூலவருக்கு முன்னால் ஸ்ரீதேவி-பூதேவியுடனும், தாயார் சன்னதியில் வேதநாயகித் தாயாரும் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர்.

கம்பத்தடி ஆஞ்சனேயர் சன்னதி

சிவபெருமானுக்கு உகந்த வில்வமரத்தடியில் பெருமாளின் திருவடிகள் உள்ளன. இதன் அருகிலேயே ஆண்டாள் நாச்சியார் தனிச்சன்னதி கொண்டு காட்சியளிக்கிறார். ஆண்டாள், ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பிள்ளைலோகாச்சாரியார், மணவாளமாமுனிகள் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். மூலவர் விமானம் வேத விமானம் என்றழைக்கப்படுகிறது.

அரையருக்கு அருளிய அருளாளன்

பிள்ளைத்திருநறையூர் அரையர் என்ற பக்தர், தன் மனைவி மற்றும் ஆறு குழந்தைகளுடன் சுவாமியைத் தரிசிக்க வந்தார். அப்போது சுவாமி சன்னதிக்கு மேல் பனை ஓலை வேயப்பட்டிருந்தது. அப்போது பனை ஓலையில் தீப்பற்றும்படி சுவாமியே மாயச்செயல் ஒன்றை நிகழ்த்தினார். அதிர்ந்துபோன அரையர், சுவாமி மீது தீப்பிழம்புகள் விழாமல் இருக்க மனைவி, குழந்தைகளைப் படுக்க வைத்து அவர்கள் மீது குறுக்காக விழுந்து தன்மீது தீப்பிழம்புகள் விழும்படி தடுத்தார். குடும்பத்தினர் மீது அக்கறை கொண்ட அவருக்கு காட்சி தந்த பெருமாள், அனைவருக்கும் மோட்சம் கொடுத்தருளினார். பிரகாரத்திலுள்ள ஆழ்வார் சன்னதியில் பிள்ளைத்திருநறையூர் அரையர் எழுந்தருளியிருக்கிறார்.

தலவிருட்சம் வில்வமரம்

தோஷ நிவர்த்தி 

புஜங்க சயனத்தில் ரிக், யஜுர்,  சாம, அதர்வண என நான்கு வேதங்களையும் தலையணையாக ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டு, நாபிக்கமலத்தில் இருக்கும் நான்முக பிரம்மனுக்கு வேத உபதேசம்  செய்யும் கோலத்தில் வேதநாராயணப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும், பூமாதேவியும் எழுந்தருளியிருக்கின்றனர். இரணியனை அழித்த போது உக்கிர நரசிம்மராக பிரகலாதனுக்கு குழந்தை வடிவில் காட்சி தந்தவர் சுவாமி. இதனால் சுவாமியின் பாதத்தில் மூன்று வயதுக் குழந்தையாக பிரகலாதன் காட்சியளிக்கிறார்.

ஆதிசேஷனும், அவரது மனைவியும் வேதநாராயணரைத் தாங்கிக் கொண்டிருக்கின்றனர். மேலே ஆதிசேஷன், கீழே அவரது மனைவி என இங்கு பத்து தலைகளுடன் நாகத்தைத் தரிசிக்கலாம். இந்த அமைப்பைக் காண்பது அபூர்வமானதாகும். நாகதோஷம், களத்திர தோஷம், திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு பத்துமுக ஆதிசேஷ தம்பதியருடன் காட்சியளிக்கும் பெருமாளை வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.

கோயிலின் உள் பிரகார மண்டப நுழைவுப் பகுதி

திருமணப் பாக்கியம்

இக்கோயில் திருமணப் பாக்கியம் அருளும் திருநாராயணபுரம் என்றழைக்கப்படுகிறது. பிரம்மா உபதேசம் பெற்ற திருக்கோயில் என்பதால், கல்வி வழிபாட்டுக்குரிய கோயிலாகத் திகழ்கிறது. பெருமாளுக்கு திருவோணம், ஏகாதசி மற்றும் அமாவாசை நாள்களில் சிறப்புப் பூஜை நடைபெறுகிறது. ஜாகதத்தில் குரு பலமின்றி இருந்தால் திருமணம் தள்ளிப்போகும். இந்த தோஷத்தால் திருமணத் தடை உள்ளவர்கள் வேதநாராயணப் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, சன்னதியில் 27 அகல் தீபம் ஏற்றி, ஜாகதத்தை பெருமாள் திருவடியில் வைத்து, அர்ச்சனை செய்து வழிபட்டால்  திருமணத் தடை நீங்கும்.  இந்த வழிபாட்டை வியாழன் அல்லது தோஷம் உள்ளவர்களின் ஜென்ம நட்சத்திரத்தன்று செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது.

மேலும் ஐந்து நெய் விளக்கேற்றி, வெண்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபடக் கல்வி மேம்படும், தொழில் விருத்தியாகும், வியாபாரம் செழிக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.

வெளிப் பிரகாரப் பகுதி

கல்வியும், ஞானமும் கைகூடும்

பிரம்மாவின் கர்வத்தை ஒடுக்குவதற்காக, இத்திருக்கோயிலில் வேதநாராயணராக இருந்து பிரம்மாவுக்கு வேதஞானம் செய்தருளினார். மேலும் இக்கோயிலில் வேதநாராயணப் பெருமாள் குரு ஸ்தானத்தில் இருந்தும், புதனுக்கு அதிபதியாகவும் இருந்தும் காட்சியளிக்கிறார். எனவே இத்திருக்கோயிலுக்கு வந்து பெருமாளை வணங்கி, வேண்டிக்கொண்டால் கல்வியும், ஞானமும் கைகூடும் என்பது நம்பிக்கை. கல்வி, ஞானம் வேண்டுவோர் 5  நெய் தீபமேற்றி புத்தகம், பேனாவை வேதநாராயணப் பெருமாள் திருவடியில் வைத்து அர்ச்சித்து வழிபட்டால் கல்வி மேம்படும், ஞானம் சிறக்கும். வேதநாராயணப் பெருமாளும், வேதநாயகித் தாயாரும் ஞானம் வழங்கும் அற்புத திருக்கோயிலாக திருநாராயணபுரம் திகழ்கிறது. 

வெள்ளை உடை ராமானுஜர்

ராமானுஜர் இங்கு வந்த போது, வேதநாராயணப் பெருமாள் அவரிடம் காவிரியில் நீராடி வெள்ளை ஆடை உடுத்தி வா என்றாராம். ராமானுஜரும் அவ்வாறே வந்தார். சித்திரை மாதத் திருவாதிரை நட்சத்திரத்தன்று ராமானுஜர் வெள்ளை உடை அணிந்து புறப்பாடாவார்.

 தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள  ஆண்டாள் நாச்சியார்

திருவிழாக்கள் 

சிறப்பு வாய்ந்த வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாக விளங்கும் திருநாராயணபுரம் வேதநாராயணப் பெருமாள் திருக்கோயிலில், ஆண்டுதோறும்  வைகாசி மாதத்தில் தேரோட்டம் நடைபெறும். 11 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், 9-ஆம் நாளில் தேரோட்டம் நடைபெறும். உபயநாச்சியார்களுடன் திருத்தேரில் வேதநாராயணப் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தலும், பின்னர் வடம் பிடித்தலும் நடைபெறும்.

வைகுந்த ஏகாதசி

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு வாய்ந்த வைகுந்த ஏகாதசி திருவிழாவைப்  போன்று, திருநாராயணபுரத்திலும் வைகுந்த ஏகாதசி 21 நாள்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பகல்பத்து, இராப்பத்து நாள்களில் சுவாமி புறப்பாடும், தொடர்ந்து பரமபதவாசல் திறப்பும் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வர்.

பரமபதவாசல்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறுவது போன்று, இக்கோயிலிலும் பங்குனி உத்திரத் திருநாளன்று சேர்த்தி சேவை நடைபெறும். அப்போது வேதநாயகித் தாயாருடன் வேதநாராயணப் பெருமாள் எழுந்தருளி, சேர்த்தி சேவையில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். இதைத் தவிர புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உத்சவம், ஹனுமன் ஜயந்தி விழாவும் சிறப்பாக நடைபெறும்.

கோயில் நடைதிறப்பு

இக்கோயில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12,  மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 

எப்படிச் செல்வது?

திருச்சியிலிருந்து சுமார் 57 கி.மீ. தொலைவில் திருநாராயணபுரம் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மத்திய மண்டல மாவட்டங்கள், மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம், நெ.1.டோல்கேட்,  சிறுகாம்பூர், வாய்த்தலை, குணசீலம், ஆமூர், முசிறி, மணமேடு, தொட்டியம் வழியாக திருநாராயணபுரம் கோயிலுக்கு வந்தடையலாம்.

கம்பத்தடி ஆஞ்சனேயர் மண்டபப் பகுதி

சென்னை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சமயபுரம், நெ.1.டோல்கேட், வாய்த்தலை, குணசீலம், ஆமூர், முசிறி, மணமேடு, தொட்டியம் வழியாக திருநாராயணபுரம் வந்து சேரலாம். கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, கரூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குளித்தலை வந்து, அங்கிருந்து முசிறி, தொட்டியம் வழியாக திருநாராயணபுரம் சென்று சேரலாம்.

நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொட்டியத்தில் இறங்கி, அங்கிருந்து திருநாராயணபுரம் கோயிலை வந்தடையலாம்.

தொட்டியத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் திருநாராயணபுரம் உள்ளதால், இங்கிருந்து ஆட்டோ போன்ற வாகனங்களில் கோயிலுக்குச் செல்லலாம். திருச்சி மத்திய பேருந்து நிலையம், விமான நிலையத்திலிருந்து கார், வேன் போன்ற வாகனங்கள் மூலம் திருநாராயணபுரம் வந்தடையலாம்.

தொடர்புக்கு: இக்கோயிலுக்கு வருபவர்கள் திருவேங்கடம் பட்டரை  99766 11898, 9894806131, ஸ்ரீதர் பட்டரை 9865033930  ஆகிய கைப்பேசி எண்களில்  தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி

செயல் அலுவலர்,
அருள்மிகு வேதநாயகி தாயார் உடனுறை வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில்,
திருநாராயணபுரம்,
தொட்டியம் வட்டம்,
திருச்சி மாவட்டம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT