பரிகாரத் தலங்கள்

குழந்தைப்பேறு அருளும் திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் திருக்கோயில்

2nd Sep 2022 05:00 AM | கு.வைத்திலிங்கம்

ADVERTISEMENT

 

வினையா யினதீர்த்து அருளே
புரியும்  விகிர்தன் விரிகொன்றை
நனையார் முடிமேல் மதியஞ்
சூடும் நம்பர் நலமல்கு
தனையார் கமல மலர்மேல்
 உறைவான் தலையோ(டு) அனலேந்தும்
எனையா  ளுடையான் உமையா
ளோடும் ஈங்கோய் மலையாரே

                                                மரகதாசலேசுவரர் துதி...

திருமணத்தடை நீக்குதல், குழந்தைப்பேறு அருளும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், திருஈங்கோய்மலையிலுள்ள அருள்மிகு மரகதாம்பிகை அம்மன் உடனுறை மரகதாசலேசுவரர் திருக்கோயில்.

ADVERTISEMENT

திருக்கடம்பந்துறை (குளித்தலை), திருவாட்போக்கிமலை (அய்யர்மலை), திருஈங்கோய்மலை என்னும் இந்த மூன்று சோமாஸ்கந்தத் தலங்களில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளை ஒரே நாளில் சென்று முறையே காலை, நடுப்பகல், மாலையில் தரிசித்து வழிபடுதல் மிகுந்த விசேஷ புண்ணியமாகும். இதைப்பற்றியே காலைக் கடம்பர், மத்தியான சொக்கர், அந்தித் திருஈங்கோய்மலைநாதர் என்ற பழமொழி ஒன்று வழங்குகிறது.

மரகதாம்பிகை அம்மன் உடனுறை மரகதாசலேசுவரர் சுவாமி திருக்கோயில்

காவிரியின் வடகரையில் அமைந்து, தேவாரப் பாடல் பெற்ற சிவன் கோயில்களில் 63-ஆவது திருக்கோயில் என்ற சிறப்பையும், மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்று பெருமைகளுடனும், தேவாரத் திருப்பதிகங்கள் முதலியன பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாகவும் இக்கோயில் திகழ்கிறது. மாவட்டத்தில் அமைந்துள்ள மலைக்கோயில்களில் திருஈங்கோய்மலையும் ஒன்று.

இதையும் படிக்கலாமே.. மகப்பேறு அருளும் திருச்சி உத்தமர்கோயில்

திருஈங்கோய்மலையின் சிறப்புகள்

சுமார் 2 மைல் சுற்றளவு கொண்டது திருஈங்கோய்மலை. மலையடிவாரத்திலிருந்து 900 அடி உயரத்தில் (சிறிது சாய்வானது), சுமார் 500 படிகள் முடிவுபெறும் இடத்தில் இக்கோயிலின் ராஜகோபுரம் அமைந்துள்ளது. திருஈங்கோய்மலைக்கு மரகத மலை என்ற பெயரும் உண்டு. (மரகத+அசலம்:  மரகதாசலம்), (மரகதம்: பச்சை, அசலம்} மலை). தற்போது திருஈங்கோய்மலை திருவிங்கநாதமலை, திருவீங்கிநாதமலை, திருவேங்கிநாதமலை, திருவங்கிநாதமலை எனவும் மக்களால் அழைக்கப்படுகிறது.

திருத்தலப் பெருமை

திருக்கயிலைச் சிரங்களில் ஒன்றை தன்னகத்தே கொண்டது, தென்கயிலாயம் எனப் புகழ்பெற்று விளங்குவது, பற்பலத் தீர்த்தங்களைப் பெற்று விளங்குவது, புளியமரத்தைத் தல விருட்சமாக உடையதால் திந்திரிணி வனம் எனப் பெயர் கொண்டு விளங்குவது, சுயம்பு சோதி மரகதலிங்கத்தை மூலலிங்க மூர்த்தியாகப் பெற்றுத் திகழ்வது போன்றவை இக்கோயிலின் சிறப்பாகும்.

 மலையடிவாரத்திலுள்ள கம்பத்தடி கல்கம்பம் மற்றும் மலையாளி கருப்புவேல்

உமாதேவியார், திருமால்,  பிரம்மன், இந்திரன், இமயன், நவசித்தர்கள், அகத்தியர், சுப்பிரப அரசன் முதலியோர் தங்கிப் பூசித்துப் பேறுபெற்றது, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குப் பொற்புளியங்காய் வழங்கியது, அகத்தியர் ஈ வடிவு கொண்டு பூசித்ததால் ஈங்கோய்மலை எனப் பெயர் பெற்றது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் ஒன்றும், நக்கீரதேவநாயனாரின் திருஈங்கோய்மலை எழுபது என்ற ஒரு சிறுபிரபந்தம் பெற்றது, ஆண்டுதோறும் மாசி மாத சிவராத்திரி  விடியற்காலையில் உதயமாகும் சூரியனின் ஒளி மரகதாசலநாதர் மீது விழுந்து பிரகாசிக்கும் பெருமை உடையது போன்றவை இத்திருக்கோயிலின் பெருமையாக விளங்குகின்றன.

ஒரு காலத்தில்  திருக்கயிலை மலையில் எழுந்தருளிய சிவபெருமானைத் தரிசித்ததற்கு திருமால், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள் திருவாயிலின்கண் வந்து, திருந்தி தேவரால் தடைப்பட்டு உள்ளே செல்லும் காலத்தை எதிர்நோக்கி நின்றுகொண்டிருந்த போது, ஆதிசேஷனை சில தேவர்கள் அளவுகடந்து புகழ்ந்து கொண்டிருந்தனர். அதை கண்ட வாயுதேவன் பொறாமை கொண்டு, ஆதிசேஷனைப் பலவாறு இகழ்ந்து பேசினான். ஆதிசேஷனும் வாயுதேவனை இழந்தான். பின்னர் இருவருக்கும் மனம் மாறுபட்டது. ஒவ்வொருவரும் தங்கள் பெருமையை எடுத்துப்பேசி, தங்களின் வல்லமையைச் சோதிக்க முற்பட்டனர்.

இந்தக் கோயிலுக்கும் சென்று வரலாம்: வயிற்றுநோய் போக்கும் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் 

இதன் காரணமாக ஆதிசேஷன் தன் தலைகளைத் திருக்கயிலை மலையின் சிகரங்களில் பதிய வைத்துக் கொண்டு,  உடலால் கயிலை மலையை வளைத்துச் சுற்றி இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டான். வாயுதேவன் தனது பலங்கொண்டமட்டும் காற்றை வீசத் தொடங்கினான். உலகமே நிலை கலங்கியது. வாயுதேவனின் கொடுஞ்செயலை பொறுக்க முடியாமல் தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர். பிரம்மதேவன் ஆதிசேஷனிடம் வந்து இச்செயல் தகுமா எனக் கேட்ட போது, ஆதிசேஷன் தனது ஆயிரங்தலைகளில் ஐந்துத் தலைகளை மட்டும் தூக்கிப் பிரம்மனைப் பார்த்தான்.

மகாசித்தர் போகர் கோயில்

இதுதான் சமயம் என்று வாயுதேவன் ஒரு பெருங்காற்றை வேகமாக வீசினான். அப்போது திருக்கயிலைமலையின் சிகரங்களில் ஐந்து சிகரங்கள் பிடுங்கிக் கொண்டு மேலே கிளம்பித் தென்பாகத்தில் வந்து வெவ்வேறு இடங்களில் விழுந்தன. அவற்றுள் ஒன்று காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த மரகதமலையே திருஈங்கோய்மலையாகும். மற்றைய சிகரங்கள் திருக்காளத்திமலை, திரிசிபுரமலை, அய்யர்மலையாகவும், இலங்கையில் திருக்கோணமலையாகவும் அமைந்து விளங்குகின்றன. 

சிவசக்தி மலை

திருக்கயிலைமலையில் பக்தர்களுக்கு அனுக்கிரக காரணமாக, சிவபெருமான் உமா தேவியரோடு எழுந்தருளி இருந்தார். அப்போது திருமால் முதலாகிய தேவர்கள், மகரிஷிகள் முதலியோர் திருக்கயிலையை அடைந்து, திருநந்திதேவரைப் பணிந்து அவர் அருள் பெற்று, உள்ளே சென்று சிவபெருமானையும், உமாதேவியரையும் தரிசித்து வேண்டிய வரங்களைப் பெற்றுச் செல்லுகையில், பிருங்கி முனிவர் உமாதேவியரைப் பணியாமல், சிவபெருமானை மட்டும் பணிந்து துதித்துச் சென்றார்.

ஓலைச்சுவடியுடன் காட்சியளிக்கும் மகாசித்தர் போகர்

இதைக் கண்ட இறைவி உமாதேவியார், இந்த முனிவன் நம்மைச் சிறிதும் மதித்திலன் என்று மனதில் வருத்தங்கொள்ள, இறைவன் அதனையறிந்து சமாதானம் பலக் கூறினார். இறைவி அதற்கு மனங்கொள்ளாமல், இறைவனிடம் தவம் செய்ய விடை பெற்றுக்கொண்டு இந்த மரகதாசலத்தை அடைந்தார். இந்த மலையின் அடிவாரத்தில் தன்னால் ஏற்படுத்திய தேவிசரம் என்ற தீர்த்தத்தில் நீராடி, மரகதாசலேசுவரை நோக்கிக் கடுந்தவம் செய்தார்.

இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே.. பித்ரு, மாத்ருஹத்தி தோஷம்  நீக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோவில்

அப்போது சிவபெருமான், உமாதேவியின் தவத்துக்கு இரங்கி, அவர் முன்தோன்றி, உமையே... உனது தவத்துக்கு மிக மகிழ்ந்தோம். யாதுவரம் வேண்டும் என்று வினவ, அம்மையார் இறைவனை வணங்கி, அண்ணலே உமது இடப்பாகத்தில் ஒன்றுபட்டு வீற்றிருக்க விரும்புகிறேன் என்றார்.  இதனால் இந்த மலை சிவசக்திமலை எனப் பெயர் பெற்றது. 

அகத்தியர் ஈ வடிவு கொண்டு பூஜித்த தலம்

முன்னொரு காலத்தில் அகத்தியர் முனிவர், தம் சீடர்களான பிற முனிவர்களோடு காவிரியின் தென்கரையை அடைந்து நீராடி செபம், தவம் முதலியவற்றை முடித்துக் கொண்டு, காலையில் கடம்பந்துறை கடம்பவனநாதரையும்,  நடுப்பகலில் திருவாட்போக்கிமலையில் சொக்கநாதரையும் தரிசித்து வழிபட்டு, மாலையில் அகண்ட காவிரியை அடைந்து, வடகரையில் ஏறி மரகத மலையை அடைந்தார்.

பூஜைக்கு வேண்டிய பத்திர புஷ்பங்களைக்  கைக்கொண்டு, மலைமீது ஏறித் திருக்கோயிலை அணுகினார். அப்போது சிறிது முன்னே மாலைக் காலத்துப் பூஜைகளை முடித்துக் கொண்டு, பூசகர்கள் கோயில் கதவைப் பூட்டிக் கொண்டு சென்றுவிட்டனர். அதனையறிந்த முனிவர், அந்தோ நாம் அகாலத்தில் இங்கு வந்தோம். மாலையில் சிவதரிசனம் செய்வது எவ்வாறு என்று மனக்கவலையோடு நின்றார்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு மரகதாம்பிகை அம்மன்

அப்போது வானில் ஒரு அசரீரி தோன்றி, முனிவனே... " நீ இப்போது ஈ வடிவு கொண்டு கோயிலுக்குள் நுழைந்து, மரகதாசலரைத் தரிசித்துப் பூசிப்பாயாக.. நீ இம்மலையின் மேல்பால் ஓடிக் காவிரியுடன் கலக்கும் சர்ப்ப நதியில் ஸ்நானம் செய்யின் ஈ வடிவு பெறுவாய், பிறகு இந்த ஈ வடிவம் வேண்டாம் என்ற போது அந்நதியிலேயே சென்று ஸ்நானம் செய்யின் பழைய முனிவர் வடிவு பெறுவாய்'' என்று கூறியது.

உடனே முனிவர் அசரீரி கூறியபடி, இம்மலையின் மேற்குப்பதியில் ஓடும் சர்ப்ப நதி காவிரியுடன் சங்கமமாகும் துறையை அடைந்து, அதில் இறங்கி ஸ்நானம் செய்து ஈ வடிவம் பெற்றார். பின்னர் அம்முனிவர் சிவபெருமான் தமக்குத் திருவருள் பாலித்ததை நினைந்து ஆனந்தங்கொண்டு, மலைமீது பறந்து சென்று திருக்கோயிலினுள்ளே நுழைந்து மரகதாசலநாதரையும், மரகதாம்பிகையையும் தரிசித்துப் பூசித்து வழிபட்டார்.

மரகதாசலேசுவரர் சுவாமி

அங்கு முனிவர் பலகாலமாக ஈ வடிவமாக இருந்து கொண்டு, அதிகாலையில் ஒவ்வொரு மலர்கள் தோறும் சென்று ஆங்காங்குள்ள தேனைச் சேகரித்து வந்து, ஒவ்வொரு நாளும் மரகதாசலநாதருக்குத் தேன் அபிஷேகம் செய்து வந்தார். அதன் பயனால் சகலப்பேறு பெற்று விளங்கினார். பின்னர் முனிவர் சர்ப்ப நதியில் மூழ்கி முனிவர் வடிவு பெற்றார் என்பது வரலாறு. இப்போதும் அகத்திய முனிவர் ஈ வடிவோடு இருந்து, மரகதாசலநாதரைப் பூசித்து வருகிறார் என்பது ஐதீகம்.

இக்கோயிலைப் பற்றியும் அறியலாமே.. வாஸ்து தோஷம் நீக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்

மரகதாசநாதரை ஈ பூசித்து வழிப்பட்ட காரணத்தால்,  மரகத மலை திருஈங்கோய்மலை எனப் பெயர் பெற்றது. இதுபோல நவசித்தர்கள் தவம் புரிந்து பூசித்துப் பேறு பெற்றது, சுப்பிரப அரசன் வழிபட்டுப் பேறு பெற்றது, வீதிகோத்திரன் முக்தி பெற்றது போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது இக்கோயில்.

கோயில் அமைப்பு

மலை மீது 500 படிகளைக் கடந்து சென்றால் தெற்கு நோக்கிய ராஜகோபுரம் அமைந்துள்ளது. இறைவன் மரகதாசலேசுவரர் சன்னதியும், இறைவி மரகதாம்பிகை அம்மன் சன்னதியும் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளன. சுவாமி சன்னதியின் பின்புறத்தில் விநாயகர், சுப்பிரமணிய சுவாமி சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இறைவன் சன்னதி கருவறை லிங்கம் எழுந்தருளிய கர்ப்பக் கிரகத்தையொட்டி அர்த்த மண்டபமும், அதனையடுத்து ஸ்நபன மண்டபமும், அடுத்து மகாமண்டபமும் அமைந்துள்ளன. ஸ்நபன மண்டபத்தின் வடப்புறத்தின் மேல்பகுதியில் அர்த்தநாரீசுவரரரும், நடுப்பகுதியில் பன்னிருத் திருமுறை வைத்துள்ள திருமுறைக் கோயிலும் தெற்கு நோக்கியுள்ளன.

மரகதாம்பிகை அம்மன்

மகாமண்டபத்தின் வாயிற்படியின் வலமிடங்களில் துவார பாலகர்களும், வலத் துவாரபாலகருக்கு வலப்பகுதியில் வல்லப விநாயகர் சன்னதியும், அதற்கு வலதுபுறத்தில் தேவாரத் திருப்பதிகக் கல்லும் அமைந்துள்ளது. இடதுவாரபாலகருக்கு இடதுபுறத்தில் தண்டபாணியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். மகா மண்டபத்தின் இடையில் சுவாமி சன்னதிக்கு நேர்முகமாகத் திரு நந்தியெம்பெருமானும், அதன் பின்னர் பலிபீடமும், கொடிமரமும் உள்ளன.

கொடிமரத்துக்கு சற்று வலதுபுறத்தில் நவக்கிரகங்களும், இதற்கு சற்று மேற்பகுதியில் தெற்கு நோக்கியவாறு  பைரவரும், கீழ்ப்பகுதியில் சூரியன் மேற்கு நோக்கியவாறும்  எழுந்தருளியுள்ளனர். மகாமண்டபத்தின் தென் கீழ்ப்பகுதியின் நேரே நால்வர் சன்னதி அமைந்துள்ளது.சுவாமி சன்னதியின் வெளிக் கர்ப்ப கிரகத்தின் தென்பகுதிச் சுவரில் தட்சிணாமூர்த்தியும், மேல்பகுதிச் சுவரில் நரசிம்ம மூர்த்தியும், வலதுபகுதிச் சுவரில் பிரம்மன், துர்க்கையும் எழுந்தருளியுள்ளனர்.

மரகதாசலேசுவரர் சன்னதிக்கு வடதுபாகத்தில் அம்மன் சன்னதி கர்ப்ப கிரகம், மகாமண்டபம் ஆகியவற்றுடன் அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் வலதுபுறத்தில் காசி விசுவநாதரும், விநாயகரும் எழுந்தருளப் பட்டிருக்கின்றனர். சுவாமி-அம்மன் சன்னதிகளின் இடைவெளியில் சண்டீசுவரர் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. சுவாமி மகாமண்டபத்தின் உள்வழியாக சுவாமி, அம்மன் சன்னதிகளைச் சேர்த்து வலம்வரும் பிரகாரம் ஒன்றே அமைந்துள்ளது.

இதையும் வாசிக்கலாம்: சனி தோஷத்துக்கு தீர்வு காணும் வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள்

மகாசித்தர் போகர் திருக்கோயில்

இந்த மலைமீது ஏறும் அடிவாரப்படியினை அடுத்து, மேற்குப்பகுதியில் அருள்மிகு மகாசித்தர் போகர் கோயில் அமைந்துள்ளது. மக்களின் பலவகையான நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக நவபாஷாணத்தை உருவாக்கி, தமிழ்க் கடவுளான முருகனை, தண்டம் கொண்ட சண்முகனை நவபாஷாண சிலையாக வடிவமைத்து பழனி மலையில் பிரதிஷ்டை செய்த பாலதண்டாயுதபாணி சிலைக்கு இறுதி வடிவம் கொடுத்த இடமே திருஈங்கோய்மலையாகும்.

இக்கோயிலின் எதிரில் சிறிது வடபாகம் தள்ளிய நிலையில் மிக நீண்ட உயரத்தில் கல்கம்பம் அமைந்துள்ளது. இக்கம்பத்தில் கருப்பு என்ற தேவதை உள்ளது என்றும், அதனைக் கம்பத்தடி கருப்பு என்றும், கம்பத்தடியான் என்கின்றனர் கிராம மக்கள். இந்த கம்பத்தடியில் பக்தர்கள் தாங்கள் வேண்டிக் கொண்டவாறு தங்கள் பிரார்த்தனைகளைப் பயபக்தியுடன் செலுத்தி, வழிபட்டுச் செல்கின்றனர். தொன்றுதொட்டு இந்த வழிபாடு தொடர்ந்து வருகிறது. இக்கல் கம்பம் சக்தி வாய்ந்தது என்பது பக்தர்களின் கூற்றாக உள்ளது. 

மூர்த்தியின் பெயர்கள்

மலையின் மீது திருக்கோயிலைக் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவனுக்கு மரகதாசலேசுவரர், மரகதாசலநாதர், மலைக்கொழுந்தீசர் முதலிய பல பெயர்கள் வழங்குகின்றன.

இதையும் வாசிக்கலாம்: மங்கள வாழ்வு அருளும் கூகூர் குகேசுவரர் திருக்கோயில்

மரகத மலையில் எழுந்தருளியிருப்பதால் மரகதாசலேசுவரர் என்றும், மரகதாசலநாதர் என்றும், மலையினுடையே கொழுந்தே கருவறை லிங்கமாக இருப்பதால் மலைக்கொழுந்தீசர் என்று பெயர் ஏற்பட்டுள்ளன. இம்மூர்த்தி மரகதமயமான சுயம்புலிங்கம். பிரம்மதேவன் பொருட்டு தானே தோன்றிய உமாதேவியோர் சுயம்புலிங்கம்.

 நால்வர் சன்னதி

திருமால், பிரம்மன், இந்திரன் இம்மூவரும் மரகதாசலநாதரைப் பூசித்ததால் அவர்களுக்கு முறையே அச்சுதேசுரர், பிரமேசுரர், பேறு பெற்றது என்ற திருநாமங்களும் வழங்குகின்றன.  அம்பிகையின் திருநாமம் மரகதாம்பிகை , மரகதவல்லி என வழங்கப்படுகிறது. இத்தலத்தில் பிரம்மதீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், தேவி சரம், இயமதீர்த்தம், அமிர்தபுஷ்கரணி, சர்ப்பநதி, காவிரிநதி முதலிய புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

மாதப்பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி, சூரிய, சந்திரகிரகணம், கார்த்திகை தீபம், மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம், சிவராத்திரி, ஆடிப்பெருக்கு முதலிய தரிசித்ததற்கு காவிரி நதியிலேனும் அல்லது சர்ப்ப நதியிலேனும், அங்குள்ள அதைக் நீராடி, இம்மரகத மலையை வணங்கி பிரதட்சிணம் செய்து மரகதாசலநாதரையும், மரகதாம்பிகையையும் தரிசித்து நெய் விளக்கிட்டு வழிபட்டவர் இஷ்ட சித்திகளையும், குறைவில்லாத மனை வாழ்க்கையினையும், புத்திரப்பேற்றினையும் பெற்று, இறுதியில் வீடுபேற்றையும் பெறுவர் என இத்தல மான்மியம் கூறுகிறது. வைகாசி, கார்த்திகை மாதங்களில் கொடுஞ்செயலைப் நாதருக்கு தேன் அபிஷேகம் செய்தால் பெரும் புண்ணியம் உண்டாகும். சிரார்த்த காலங்களில் இறைவனுக்கு நெய் தீபம் இட்டு வழிபட்டால், மரகத மலையே மிகுந்த திருப்தி என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

இதையும் வாசிக்கலாம்: ராகு-கேது தோஷம் நீக்கும் கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்

அகத்தியர்

சிறப்பு வழிபாடுகள் 

மரகதாசலநாதருக்கு ஐப்பசி மாத பௌர்ணமியில் அன்னாபிஷேகம், கார்த்திகை மாத திருக்கார்த்திகை நாளில் சுடலைத் தீபம், மார்கழி மாதத்தில் 30 நாள்களில் திருப்பள்ளியெழுச்சி வழிபாடு, தை மாதத்தில் மாதப் பிறப்பு, சங்கராந்தி பூஜை நடைபெற்று வருகின்றன.

திருஈங்கோய்மலையை அடுத்து கிழக்கில் சுமார் அரை மைல் தொலைவில் கருணாகடாட்சியம்மை உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும், அம்மன் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. மலைக்கோயிலில் இருந்த உற்சவ விக்கிரகங்கள் அனைத்தும்  அடிவாரத்திலுள்ள சிவன் கோயிலில்தான் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. திருவிழாக்காலங்களிலும், விசேஷ நாள்களிலும் உற்சவ விக்கிரகங்கள் இங்கிருந்துதான் புறப்பட்டு வருதல் தொன்றுதொட்ட பழக்கமாக இருந்து வருகிறது.

இதையும் வாசிக்கலாம்: எண்ணியதைத் தரும் திண்ணியம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில்

அடிவாரம் திருக்கோயிலில் நடராசப் பெருமானுக்கு சித்திரை மாதத் திருவோணம் நட்சத்திரத்திலும், ஆனி மாத உத்திர நட்சத்திரத்திலும், மாசி மாத சுக்லபட்ச சதுர்த்தி திதியிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

நக்கீர தேவநாயனார் அருளிய ஈங்கோய்மலை எழுபது (பதினொன்றாம் திருமுறை).

ஆடிப்பெருக்கு விழா

இக்கோயிலில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக நடைபெறுகிறது. ஆடிப்பெருக்கு நாளன்று அடிவாரம் சிவன் கோயிலில் அம்மையுடன் எழுந்தருளிய சந்திரசேகர மூர்த்திக்கு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து காவிரியாற்றுக்குப் புறப்பாடாகும் சுவாமி, காவிரியின் வடகரையிலுள்ள மண்டபத்தில் இறங்கிய பின்னர் அங்குத் தீபாராதனை நடைபெறும்.

மார்கழி மாதத்தில் திருவாதிரை விழா அடிவாரம் சிவன் கோயிலில் நடைபெறும். நடராசப் பெருமானுக்கும், சிவகாமி அம்மனுக்கும் விசேஷ அபிஷேக, அலங்கார ஆராதனைகள், தீபாராதனை நடைபெறும். தைப்பூசத் திருநாளன்று அடிவாரத்திலுள்ள சிவன் கோயிலிலிருந்து ரிஷப வாகனத்தில் சந்திரசேகர சுவாமி அம்மையுடன் புறப்பாடாகி,  தென்கரையில் இறங்கி தீர்த்தவாரி கண்டருளுதல் நடைபெறும்.

திருஈங்கோய்மலைக்குச் செல்லும் பக்தர்கள்
அமர்ந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள மண்டபம்

காவிரியின் வடகரையில் திருஈங்கோய்மலை சிவன் கோயில் உள்ளிட்ட 3 கோயில்கள், தென்கரையில் பேட்டைவாய்த்தலை மத்யார்ஜுனேசுவரர் சிவன் கோயில் உள்ளிட்ட 5 கோயில்கள் என 8 கோயில்களிலிருந்து சுவாமிகள் காவிரியாற்றில் எழுந்தருளி, சந்திப்புக் கொடுக்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெறும். இந்த விழாவுக்குப் பின்னர் அந்தந்த கோயில்களுக்கு சுவாமிகள் புறப்பட்டுச் செல்லும் நிகழ்வு நடைபெறும்.

பரிகாரம்

திருமணத் தடை நீங்க, குழந்தைப் பேறு உண்டாக, கல்வியில் சிறந்து விளங்க இக்கோயில் இறைவனைப் பிரார்த்திக்கலாம். சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றலாம்.

ஈ வடிவில் உருமாறிய அகத்தியர்
நீராடிய  சர்ப்பநதி மற்றும் காவிரி சங்கமமாகும் பகுதி

எப்படிச் செல்வது? 

திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முசிறியைத் தாண்டி தொட்டியம் செல்லும் சாலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு மத்திய மண்டல மாவட்டங்கள், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வர வேண்டுமெனில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், கொள்ளிடம் டோல்கேட், நொச்சியம், வாய்த்தலை, குணசீலம், அய்யம்பாளையம், முசிறி வழியாக திருஈங்கோய்மலை வந்து சேரலாம்.

இதுபோல கோவை போன்ற மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கரூர் வழியாக குளித்தலை வந்து, அங்கிருந்து நகரப் பேருந்து மூலமாக முசிறி வந்தடையலாம். பின்னர் இங்கிருந்து கொளக்குடி, அப்பணநல்லூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகளிலும், தொட்டியம் வழியாக செல்லும் புறநகர்ப் பேருந்துகளிலும் திருஈங்கோய்மலை வந்து சேரலாம். சேலம், நாமக்கல்  போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு சேலம் மார்க்கத்தில் திருச்சி நோக்கிச் செல்லும் பேருந்துகளில் ஏறி வந்தடையலாம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம், விமான நிலையத்திலிருந்தும் கார், வேன் போன்ற வாகனங்கள் வசதி திருஈங்கோய்மலைக்கு உள்ளன. முசிறியிலிருந்தும் கார், ஆட்டோ, வேன் போன்ற வசதிகளும் உள்ளன. 

இக்கோயில் காலை 9 மணிக்குத் திறக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு சாத்தப்படும். தொடர்புக்கு : திருஈங்கோய்மலை கோயிலுக்கு வருபவர்கள் அர்ச்சகர் சுந்தர குருக்களை 9865158097 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி

அருள்மிகு மரகதாம்பிகை அம்மன் உடனுறை மரகதாசலேசுவரர் திருக்கோயில்,
திருஈங்கோய்மலை,
தொட்டியம் வட்டம்,
திருச்சி மாவட்டம்.

படங்கள் - ஆ.பழனிவேல்

ADVERTISEMENT
ADVERTISEMENT