பரிகாரத் தலங்கள்

குழந்தைப்பேறு அருளும் கூத்தைப்பார் மருதீசுவரர் திருக்கோயில்

20th May 2022 05:00 AM | கு. வைத்திலிங்கம்

ADVERTISEMENT

 

குழந்தைப்பேறு அருளும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கூத்தைப்பார் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை மருதீசுவரர் திருக்கோயில்.

கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட 70 மாடக் கோயில்களில் - யானை உள்புகாத வகையில் கட்டப்பட்டவற்றில் - கூத்தைப்பார் கோயிலும் ஒன்று என்பது  குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.  

பாண்டிய நாட்டு கோயில்களில் நடைபெறுவதைப் போன்று, இக்கோயிலில் அம்மனுக்குத்தான் முதலில் பூஜைகள் நடைபெறும். அதன் பின்னர்தான் சுவாமிக்கு பூஜைகள் நடைபெறும். மேலும்  64 சக்தி தலங்களில் கூத்தைப்பார் அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை மருதீசுவரர் திருக்கோயிலும் ஒன்று.

ADVERTISEMENT

காலையில் திருவெறும்பூர் எறும்பீசுவரர் திருக்கோயில், மதியத்தில் கூத்தைப்பார் மருதீசுவரர் திருக்கோயில், அந்தியில் திருநெடுங்களநாதர் திருக்கோயில் ஆகியவற்றில் வழிபாடு செய்தால் சிறப்பு என்பர். 

கிராம மக்களால் பொதுத் தெய்வமாக வழிபாடு செய்யப்பட்டு வரும் ஆனிக்காலணி சித்தர் என்கிற முனியாண்டவர், கிரகபதி போன்றோர் வழிபட்ட கோயில் இது. அம்மனின் வேண்டுகோளுக்கிணங்க  சிவபெருமான் (நடராசர்) ஆனந்ததாண்டவமாடியது, பக்தர்கள் முக்தி பெறுவதற்காக ஞானமுக்தி தாண்டவமாடியது, உலக உயிர்கள் உய்யப் பெற்று வாழ சதா நிருத்த தாண்டவமாடியதால், இந்த ஊருக்கு கூத்து+ஐ+பார் (கூத்தைப்பார்) எனப் பெயர் ஏற்பட்டது எனக் கூறுவர்.

கூத்தைப்பாருக்கு மத்தியார்சுனபுரம், பவளவனம், கூத்தைப்பெருமானநல்லூர் போன்ற பிற பெயர்களும் உண்டு. கூத்தைச் செய்யக்கூடியவர் நடராச பெருமான். அதனால் இந்த ஊருக்கு கூத்தைப்பெருமானநல்லூர் எனப் பெயர் ஏற்பட்டது.

கோயிலின் வெளிப் பிரகாரப் பகுதி

அர்ச்சுனம் என்றால் மருதமரம் என்ற பெயர். மருதமரங்கள் நிறைந்த காட்டுக்கு நடுவில் உண்டாக்கப்பட்ட நகரம்,  கிரகபதியின் தவத்துக்கிணங்கி பவளம் போல சிறந்த மேனியுடைய சிவபெருமான்,  சிவந்த அக்னித் தம்பமாக தோன்றி லிங்கமூர்த்தியாய் திருக்கோயில் கொண்டிருக்கும் நகரம், சிவனார் நடராச மூர்த்தி பஞ்ச கிருத்திய நடனம் என்னும் முக்தி தாண்டவத்தைக் கொண்டிருக்கும் நகரம் என்றும், நடராசர் எழுந்தருளியிருக்கும் நகரம் என்றும் பொருள்.

வலம்புரி வாயில்

தஞ்சாவூர் சாலை உருவாகுவதற்கு முன்பு,  தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்துக்கும் - திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்துக்கும் இணைப்புப் பகுதியாக கூத்தைப்பார் இருந்ததாகக் கூறுவர்.

இதையும் படிக்கலாமே.. மகப்பேறு அருளும் திருச்சி உத்தமர்கோயில்

இக்கோயில் கி.பி. 9,10-ஆம் நூற்றாண்டுகளில் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்டாலும், கட்டுமானப் பணிகள் முழுமை பெறவில்லை. அதன்பின்னர் வந்த சோழ மன்னர்களால் 14-ஆம் நூற்றாண்டு வரையிலும், அதைத்தொடர்ந்து வந்த மன்னர்களால் பல்வேறு பணிகளை மேற்கொண்டாலும் கோபுரக் கட்டுமானப் பணிகள் முழுமை பெறாமல் இருந்தன.

கருவறை விமானம்

இந்நிலையில், 1945-ஆம் ஆண்டு முதல் 1950-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 5 நிலைக் கோபுரத்தை 76 அடி உயரத்தில் ஐந்துகரை முப்பது அம்பலவர் குழுவும், கிராமப் பொதுமக்களும் இணைந்து கட்டியமைத்தனர். இதற்காக கிராமத்திலுள்ள ஒவ்வொருவரிடம் ஆண்டுக்கு 1 ஏக்கருக்கு 1 மரக்கால் நெல் வசூல் செய்யப்பட்டு, அதில் கிடைத்த தொகையைக் கொண்டு இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டனவாம்.

முனியாண்டவர்

ஐந்துகரை முப்பது அம்பலவர்குழு கிராம சபை என்ற நிர்வாக நடைமுறை சோழர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை இன்றளவும் இக்கோயிலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கோயில் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை ஏற்றாலும், கோயில் பணியாளர்களுக்கான ஊதியம், இன்னும் இதரப் பணிகளுக்கான செலவினங்களை ஐந்துகரை முப்பது அம்பவலர் கிராமசபையே வழங்கி வருகிறது.

இறைவன் மருதீசுவரர் 

சிதம்பரம் நடராசர் கோயிலுக்கும் - மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கும் மத்தியிலுள்ள ஊரில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இங்குள்ள இறைவன் மத்யார்ஜுனேசுவரர் என்றழைக்கப்படுகிறார்.

மருதீசுவரர் சுவாமி

மேலும்  மருத மரங்கள் சூழ்ந்த காடு, மருத நிலங்கள் சூழ்ந்த பகுதியிலுள்ள கோயிலில் இறைவன் குடிகொண்டிருப்பதால் அவருக்கு மருதீசுவரர் எனப் பெயர் உண்டானது. கிழக்குத் திசை நோக்கிய சன்னதியில் லிங்க மூர்த்தியாய் மருதீசுவரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை அறிந்து, அதைத் தீர்த்து வைக்கும் இறைவனாக மருதீசுவரர் திகழ்கிறார்.

இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே.. பித்ரு, மாத்ருஹத்தி தோஷம்  நீக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோவில்

இறைவி ஆனந்தவல்லி அம்மன்

தெற்குத் திசை நோக்கிய சன்னதியைக் கொண்டு இக்கோயிலில்  இறைவி ஆனந்தவல்லி அம்மன் எழுந்தருளியிருக்கிறார். அம்மனுக்காக நடராசப் பெருமான் சிவத்தாண்டவம் ஆடியதால், இத்திருக்கோயில் அம்மன் சிறப்பு வாய்ந்தவராகத் திகழ்கிறார்.

ஆனந்தவல்லி அம்மன்

அனைத்து அம்சங்களையும் கொண்டு,  குறைகளைக் கூறி தன்னைத் தேடி வரும் பக்தர்களின் தேவையறிந்து, அதைத் தீர்த்து வைத்தும், வேண்டுதல்களை நிறைவேற்றித் தந்தருளும் இறைவியாக எழுந்தருளியிருக்கிறார் ஆனந்தவல்லி அம்மன். இக்கோயிலில் தெற்கு நோக்கி அம்மன் சன்னதி அமைந்திருப்பதும், எதிரில் நந்தியெம்பெருமானும் அமைந்திருப்பது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது.

வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணியர்

கோயிலின் கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அம்மையப்பர் (அர்த்தநாரீசுவரர்), பிரம்மா, துர்க்கை அம்மன் தெய்வங்கள் எழுந்தருளப்பட்டிருக்கின்றன. இறைவன் சன்னதியின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சன்னதியும், வடமேற்கு மூலையில் வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணியர் சன்னதியும்,  தீர்த்தத் தொட்டியின் கிழக்குப் பக்கத்தில் சண்டிகேசுவரர் சன்னதியும், அம்மன் சன்னதிக்கு சற்று மேற்கே நவக்கிரக நாயகர்கள் சன்னதியும் அமைந்துள்ளன.

நவக்கிரக நாயகர்கள் சன்னதி

இறைவன் சன்னதிக்கு நேர் எதிரில் நந்தியெம்பெருமானும், பலிபீடமும், அம்மன் சன்னதிக்கு நேர் எதிரே வன்னிமரத்தடியருகே  நந்தியெம்பெருமானும் அமைந்திருக்கின்றனர்.

பைரவர், சந்திரன், சூரியன்

பவள சபையின் வடகிழக்கு மூலையில் பைரவர், சூரியன், சந்திரன் மூல விக்கிரகங்கள் அமைந்துள்ளன. இஸ்லாமியர்களின் படையெடுப்புக் காலத்தின் போது இக்கோயிலில் இருந்த விநாயகர், நந்தியெம்பெருமான், சிவபெருமான் திருமேனி கொண்ட சிலைகள் சிதைக்கப்பட்டன. இவற்றில் விநாயகர், நந்தியெம்பெருமான் சிலைகள் கோயிலின் விநாயகர் சன்னதிக்கு அருகிலேயே வைக்கப்பட்டுள்ளன.

நந்தியெம்பெருமான்

திருமணத்தடை நீக்கும், குழந்தைப்பேறு அருளும் தலம் 

திருமணம் ஆகாமல் தடைபடுவர்கள், இக்கோயிலில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்று, இறைவன் மருதீசுவரை வழிபட்டுச் சென்றால், விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் ஐதீகம். இதன்படி திருமணத் தடை நீங்க பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்று, விரைவில் திருமணம் கைகூடிய பின்னர், தம்பதி சகிதமாக வந்து கோயிலில் வழிபாடு செய்து செல்லும் பக்தர்கள் ஏராளம்.

அருள்மிகு பிரம்மா

திருமணமாகி நீண்ட நாள்களாகியும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இக்கோயிலுக்கு வந்து இறைவன்-இறைவியை வழிபட்டு, தலவிருட்சமான வன்னிமரத்தில் தொட்டில் கட்டினால் அப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு கிடைத்தவுடன்,  தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக இறைவன், இறைவி சன்னதியில் வந்து, அர்ச்சனைகளை செய்து வழிபட்டுச் செல்கின்றனர் ஏராளமானோர். மேலும் கோயிலில் தங்களது பரிகார நிவர்த்தி பூஜையையும் குழந்தைப்பேறு பெற்றவர்கள் நிறைவேற்றிச் செல்கின்றனர்.

நந்தியெம்பெருமான்,  விநாயகர்

கிராமத்து பொது தெய்வமாய் ஆனிக்காலணி சித்தர்

இக்கோயில் வளாகத்தில் இறைவி ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு நேர் எதிரில் அமைந்துள்ள வன்னிமரத்தடியில் தியானம் செய்து, மருதீசுவரது அருளைப் பெற்றவர் ஆனிக்காலணி சித்தர். இவர் இந்த கிராமத்தின் பொது தெய்வமாகக் கருதப்படுகிறார். முனியாண்டவர், ஆனிக்காலணி சித்தர், மந்தைமுனியாண்டவர் என இவர் அழைக்கப்படுகிறார். மேலும் பலர் குலதெய்வ வழிபாடாக இங்கு வந்து செல்கின்றனர். இவர் சன்னதி திருக்கோயிலுக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது.

 நர்த்தன விநாயகர்

இதுபோல, தனது தந்தையின் அஸ்தியைக் கரைக்க காசிக்கு செல்லும் வழியில், தென் மாவட்டத்திலிருந்து கூத்தைப்பாருக்கு வந்த கிரகபதி இக்கோயிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாராம். அப்போது அவரது தந்தையின் அஸ்தியின் கட்டு அவிழ்ந்த நிலையில் அதில் வெள்ளை பூ ஒன்றும், சிவப்பு பூ  ஒன்று இருந்ததாகவும், அதன்பின்னர் கிரகபதி காசிக்கு சென்ற போது பழைய நிலைக்கே அந்த அஸ்தியின் கட்டு மாறியதாம்.  இதனால் கூத்தைப்பார் திருக்கோயில் பிதுர்கடன் செய்ய சிறந்த தலமாகக் கருதப்படுகிறது.

தட்சிணாமூர்த்தி

கோயிலின் தல விருட்சமான வன்னிமரப் பகுதியில் அமைந்துள்ள நந்தியெம்பெருமான் - அக்னித் தீர்த்தத்துக்கும் இடையேயான பகுதியில் கிரகபதி தவமிருந்து முக்தி பெற்றிருக்கிறார்.

துர்க்கை அம்மன்

சிறப்பு வாய்ந்த நடராஜர் வழிபாடு

நடராஜரின் சிவத்தாண்டவத்துக்குப் பிறகு அம்மன் ஊடல் கொள்வதும், அதன் பின்னர் சுவாமி  ஊடலை சரி செய்யும் ஐதீக நிகழ்வுக்கும், இக்கோயிலுக்கும் தொடர்பு இருக்கிறது. இக்கோயிலில் ஆண்டுக்கு 6 முறை நடராஜர் வழிபாடு நடைபெற்று வருகிறது. சித்திரை மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்திலும், ஆனி மாதத்தில் உத்திரம் நட்சத்திரத்திலும், ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் சதுர்தசி திதியிலும், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் நடராஜர் வழிபாடு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

மேலும்  சிதம்பரம் நடராசப் பெருமான் கோவிலுக்கு அருகில் தில்லைக் காளி கோயில் உள்ளது போன்று,  கூத்தைப்பார் மருதீசுவரர் கோயிலிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மதுர காளியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. 

கோமுகம்

வலம்புரி வாசல் 

பொதுவாக கோயில்களில் இறைவன், இறைவி சன்னதிகளுக்குச் செல்ல, சன்னதிக்கு நேர் எதிரில்தான் படிக்கட்டுகள் அல்லது வாசல்கள் அமைந்திருக்கும். ஆனால், கூத்தைப்பார் கோயிலில் இறைவன் மருதீசுவரர், இறைவி ஆனந்தவல்லி அம்மனைத் தரிசிக்க, நாம் வலம்புரி வாசல் வழியாகத்தான் செல்ல முடியும். அந்த வகையில் இவ்விரு சன்னதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வாசலுக்கு செல்லும்வகையில் அமைந்துள்ள படிக்கட்டுப் பகுதியில் யாளி முகமும், சிங்க உடலும் கொண்ட மிக அழகிய சிற்பம் அமைந்துள்ளது.

பவள சபை

சிறப்பு வாய்ந்த பவளசபை 

கூத்தைப்பாருக்கு பவளவனம் என்ற பெயரும் உண்டு. இதை உணர்த்தும் வகையில், வலம்புரி வாசல் வழியாக இறைவன் சன்னதிக்கு செல்வதற்காக படிக்கட்டுகள் வழியாகச் சென்றால் பவளசபையை அடையலாம். இந்த பவளசபையில் 18 தூண்கள் உள்ளன. இந்த தூண்களில் ஞானிகளும், சித்தர்களும் சூட்சமமாக இருந்து, பார்ப்பதாக ஐதீகம். இந்த சபை நாற்சதுர வடிவத்தில் அமைந்துள்ளது.

இக்கோயிலைப் பற்றியும் அறியலாமே.. வாஸ்து தோஷம் நீக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்

கோயிலின் தலவிருட்சமான வன்னிமரம்

தலவிருட்சம்

இக்கோயிலின் தல விருட்சமாக வன்னிமரம் அமைந்துள்ளது. மற்ற கோயில்களில் இல்லாத வகையில், இறைவி ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு நேர் எதிரிலேயே தல விருட்சம் அமைந்திருப்பதும், அந்த மரத்தில் குழந்தைப்பேறு வேண்டி தொட்டில் கட்டும் நிகழ்வு பரிகாரத்துக்காக மேற்கொள்ளப்படுவதாகவும் சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது.

 அக்னித் தீர்த்தம்

அக்னித் தீர்த்தம் 

கோயிலின் அக்னி மூலையில் அக்னித் தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த மூலையில் சிவகனங்கள் இறைவனின் திருவருள் பெற்று விளங்குவதாகவும் ஐதீகம்.

 உரல்

மஞ்சள் இடிக்க உரல் 

ஆனந்தவல்லி அம்மன் சன்னதி மண்டபத்தில் நாகர்கள் அமைந்துள்ளனர். நாகதோஷம் உடையவர்கள், தங்களின் பரிகாரத்துக்காக வரும்போது அவர்களாகவே மஞ்சள் இடித்து நாகருக்கு பூசி வழிபடச் செய்யும் வகையில் இப்பகுதியில் உரல் அமைந்துள்ளது. இந்த உரலில் மஞ்சளை இடித்து, நாகருக்கு பூசி வழிபாடு செய்து செல்கின்றனர் பரிகாரத்துக்காக வரும் பக்தர்கள்.

யாளி முகமும் சிங்க உடலும் கொண்டு காணப்படும் அழகிய சிற்பம்

ஒரே கல்லால் குடையப்பட்ட தீர்த்தத் தொட்டி

இக்கோயிலின் இறைவன் கருவறை சன்னதியில் நடைபெறும் அபிஷேகத்தின் வெளியேறும் தீர்த்த நீர் சென்றடையும் வகையில், தீர்த்தத் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டி ஒரே கல்லால் குடையப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. இவை கோமுகம் போன்றுள்ளது. யாளி முகம் போன்று பூதகணங்கள் தீர்த்தத் தொட்டியைத் தாங்கியிருப்பது கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வடிவமைப்பு குறிப்பிட்ட சில கோயில்களில்தான் காணப்படும்.

இந்தக் கோயிலுக்கும் சென்று வரலாம்: வயிற்றுநோய் போக்கும் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் 

கல்வெட்டுகள் குறித்து விளக்கும் அருள்நெறி திருக்கூட்டத்தின் அமைப்பாளர் மு.பாலசுப்பிரமணியன்

குடமுழுக்குகள் 

இக்கோயிலில் 1937, 1950, 1981, 1989,2004, 2019 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்குகளில் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் 1981-ஆம் ஆண்டில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் சாத்தப்பட்டும், 2004 -இல் மராமத்துப் பணிகள் செய்யப்பட்டும் எளிமையான முறையில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. மற்ற ஆண்டுகளில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மிக விமரிசையாக  குடமுழுக்கு ஐந்துகரை முப்பது அம்பலவர் குழு கிராமசபை மற்றும் கிராமப் பொதுமக்களால் நடத்தப்பட்டிருக்கின்றன. 1950-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட குடமுழுக்கு, அதற்கு நிதியளித்தவர்கள்,  குடமுழுக்கை நடத்தியவர்கள் குறித்த கல்வெட்டு கோயில் ராஜகோபுர நுழைவுவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுகள்

கோயில் விழாக்கள் 

மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை, தேய்பிறை அஷ்டமி பூஜை, பிரதோஷம், பௌர்ணமி வழிபாடுகள், நால்வர் குருபூஜை போன்றவை நடைபெறுகின்றன. சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமி, வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம்,  ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சனம், ஆடி மாதத்தில் ஆடிக் கிருத்திகை, துர்க்கையம்மனுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சிறப்பு வழிபாடு, கடைசி வெள்ளிக்கிழமையில் திருவிளக்கு பூஜை நடைபெறும்.

 கூத்தைப்பார் கோயிலின் சிறப்பை விளக்கும் பாடல்

ஆவணி மாதத்தில் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் வழிபாடு, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உற்ஸவம்,  ஐப்பசியில் சஷ்டி விரதம், கார்த்திகையில் தீப வழிபாடு, மார்கழியில் திருப்பள்ளியெழுச்சி, வீதிதோறும் பஜனை வழிபாடு, தை மாதத்தில் சங்கராந்தி, பொங்கல் வழிபாடு, நால்வர் திருவீதியுலா, மாசி மாதத்தில் மகா சிவராத்திரி உற்ஸவம், பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரத் திருவிழா போன்ற விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

நால்வர் சன்னதி

இவைத் தவிர ஆண்டுதோறும் ஆனி மாதம், சுவாதி நட்சத்திரத்தன்று திருக்கல்யாண வைபவம் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த வைபவம் கடந்த 1982-ஆம் ஆண்டு முதல் நடைபெறுகிறது.

அருள்நெறி திருக்கூட்டத்தைச் சேர்ந்தோர்

எப்படிச் செல்வது?

திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி போன்ற  மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்து கூத்தைப்பார் வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகள் அல்லது தஞ்சாவூர் மார்க்கத்தில் செல்லும் புறநகர்ப் பேருந்துகளில் திருவெறும்பூர் சென்று, அங்கிருந்து ஆட்டோ போன்ற வாகனங்கள் மூலம் கூத்தைப்பார் கோயிலுக்குச் செல்லலாம்.

குடமுழுக்கின் விவரம் குறித்த கல்வெட்டு

சென்னை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களிலிருந்தும், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களிலிலிருந்து வருபவர்கள் திருச்சி- சென்னை புறவழிச்சாலையில் பழைய பால்பண்ணை பகுதியில் இறங்கி, அங்கிருந்து திருவெறும்பூர் செல்லும் நகரப் பேருந்துகள், தஞ்சாவூர் மார்க்கத்தில் செல்லும் புறநகர்ப் பேருந்துகளில் ஏறிச் செல்லலாம்.  

சத்திரம் பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து திருவெறும்பூர் மார்க்கத்தில் செல்லும் நகரப் பேருந்துகளிலிருந்தும் செல்லலாம். 

கோயிலின் வெளிப் பிரகாரச் சுவரில் காணப்படும் கல்வெட்டுகள்

டெல்டா மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் திருவெறும்பூரில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ போன்ற வாகனங்கள் மூலம் கோயிலுக்குச் செல்லலாம். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம், விமான நிலையத்திலிருந்து கோயிலுக்குச் செல்ல கார், வேன், ஆட்டோ போன்ற வாகன வசதிகள் உள்ளன.

தொடர்புக்கு: இக்கோயிலுக்கு வருபவர்கள் கோயில் குருக்கள் கணபதியை 852498063, அருள்நெறி திருக்கூட்டத்தின் அமைப்பாளரான மு. பால சுப்பிரமணியனை 96296 49198, பொருளாளர் அ.சதாசிவத்தை  9443838491 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி

அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை மருதீசுவரர் திருக்கோயில்,
கூத்தைப்பார்,
திருவெறும்பூர் வட்டம்,
திருச்சி மாவட்டம்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT