பரிகாரத் தலங்கள்

நீர், கண் நோய்கள் தீர்க்கும் காருகுடி கைலாசநாதர் திருக்கோயில்

21st Jan 2022 05:00 AM | கு.வைத்திலிங்கம்

ADVERTISEMENT

 

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்கார்பேட்டை அருகிலுள்ள காருகுடி அருள்மிகு கருணாகரவள்ளி அம்மன் உடனுறை கைலாசநாதர் சுவாமி திருக்கோயில்.

திருச்சியிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பழைமையான இத்திருக்கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. நவக்கிரக நாயகர்களில் ஒருவரான சந்திரபகவான், 27 நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திர தேவியான ரேவதி ஆகியோர் வழிபட்ட தலமாகும் இது. சக்திவாய்ந்த பஞ்சமுக பைரவர், விநாயகர் போன்ற சன்னதிகளைக் கொண்டது காருகுடி கோயில்.

ராஜ கோபுரம்

கோயில் வரலாற்றுச் சிறப்பு

ADVERTISEMENT

சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி என்ற மன்னன் இக்கோயிலைப் புதுப்பித்துக் கட்டினார். 1266-ஆம் ஆண்டில் கர்நாடக மன்னன் போசள வீரராமநாதன் இக்கோயிலில் பூஜைகள் தடையின்றி நடைபெற நிறைய நிலங்களைத் தானமாக அளித்ததாகவும், இராமசக்ரவர்த்தி என்னும் மன்னன் நில தானம் செய்துள்ளதாகவும் இக்கோயில் குறித்த வரலாற்றுத் தகவல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இதையும் படிக்கலாமே.. மகப்பேறு அருளும் திருச்சி உத்தமர்கோயில்

காரிகுடி என்றழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், பின்னர் மருவி காருகுடியானது. சந்திர பகவான் கடைசி நட்சத்திர தேவியான ரேவதிக்கு திருமாங்கல்யம் சூட்டி, கைலாசநாத பெருமானைத் தரிசிக்க விழைந்தபோது, அம்பிகையே கருணை பூண்டு கருணாகரவள்ளியாய் அழைத்து வந்து தம்பதிக்கு காட்சியளித்தது இத்திருக்கோயிலில்தான். அதாவது, சந்திரனோடு 27 நட்சத்திர பத்தினிகளையும் ஒருசேர, மூன்றாம் பிறைச் சந்திரனைச் சூடிய கைலாசநாதப் பெருமானை சூரிய ஹோரை நேரத்தில் வணங்குவதற்குக் கருணை புரிந்த திருக்கோயில் என்ற சிறப்புக்குரியது காருகுடி.

அருள்மிகு கைலாசநாத சுவாமி சன்னதி கோபுரம்

எனவே, ரேவதி என்ற பெயரைக் கொண்ட பெண்கள், ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது காருகுடி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து இறைவன், இறைவியை வழிபட்டால், அவர்களின் சுமங்கலித்துவம் பெருகும் என்பது ஐதீகம். மேலும், கார் எனப்படும் ஏழுவகை மேகங்களும் ரேவதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்கின்றன என்பதும் ஐதீகமாக உள்ளது. 

இறைவன் கைலாசநாதர் சுவாமி

கருவறையில் சிவலிங்க வடிவில் கைலாசநாதர் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். அழகான பெரிய லிங்க மூர்த்தத்தை இந்த இறைவன் கொண்டிருக்கிறார்.

கைலாசநாதர் சுவாமி

சந்திர பகவானுக்கும், ரேவதி நட்சத்திர தேவிக்கும்  இக்கோயில் இறைவன், இறைவி கருணைக் கொண்டு காட்சியளித்த சிறப்புக்குரியதால், இறைவனுக்கு கைலாசநாதர் எனப் பெயர் ஏற்பட்டது. தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் கருணைமிக்க இறைவனாக கைலாசநாதர் எழுந்தருளியுள்ளார்.

இக்கோயிலைப் பற்றியும் அறியலாமே.. வாஸ்துதோஷம் நீக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்

அருள்மிகு கருணாகரவள்ளி அம்மன் சன்னதி

இறைவி கருணாகரவள்ளி அம்மன்

மிகுந்த வரப்பிரசாதியான கருணாகரவள்ளி அம்மன் பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர். சூரியன்-ரேவதி நட்சத்திர தம்பதி மீது கருணை கொண்டு, காருகுடிக்கு அழைத்து வந்து சுவாமியுடன் காட்சியளித்த சிறப்புக்குரிய கருணாகரவள்ளி அம்மன், தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கும் இறைவியாகத் திகழ்கிறார்.

கருணாகரவள்ளி அம்மன்

ரேவதி நட்சத்திரப் பலன்

சந்திரனுக்கும், 27 நட்சத்திர தேவியருக்கும் இக்கோயில் இறைவன், இறைவி காட்சியளித்தனர். இறைவனின் கருணையை எண்ணி ரேவதி நட்சத்திர தேவி மட்டும் அரூப வடிவத்தில் (உருவமில்லாதது) தினமும் இங்கு வந்து பூஜை செய்வதாகக் கூறப்படுகிறது. இதனால் ரேவதி என்ற பெயருடையவர்கள், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து 27 என்ற எண்ணிக்கையில் வரும் வகையிலான பொருள்களைக் கொடுத்து சுவாமி, அம்மனிடம் சமர்ப்பித்து, கோயிலுக்கு வருபவர்களுக்குக் கொடுத்தால் காரியங்களில் நேரிட்ட தடைகள் அனைத்தும் நீங்கும்.

கோயில் உள் பிரகாரத்திலுள்ள மண்டபம்

ரேவதி நட்சத்திரம் முடிந்து அசுவினி நட்சத்திரம் தொடங்கும் முன்பாகவுள்ள 12 நிமிஷங்களின்போது, காருகுடி கைலாசநாத சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே.. பித்ரு, மாத்ருஹத்தி தோஷம்  நீக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோவில்

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்றும், ரேவதி நட்சத்திரத்தன்றும் இங்கு வருண பகவானுக்கு ஹோமம் செய்தால், மழை பெய்யும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்திருக்கோயில் இறைவனை வழிபடுகின்றனர். நீர், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், நாள்பட்ட நோய்கள் குணமாக இக்கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது. எந்த நட்சத்திரக்காரர்கள் வேண்டுமானாலும் இத்திருக்கோயிலில் வழிபடலாம். இங்குள்ள இறைவனை வணங்கி, கோயிலை பிரதட்சிணம் செய்தால் பாவங்கள் விலகும், சிவனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது  பக்தர்களின் நம்பிக்கை.

பஞ்சமுக காலபைரவர்

பஞ்சமுக பைரவர்

பைரவர் சன்னதி இல்லாத சிவாலயங்கள் இல்லை. ஒவ்வொரு திருக்கோயிலிலும் பைரவர் ஒவ்வொரு சிறப்பைக் கொண்டு எழுந்தருளியிருப்பார். ஆனால், காருகுடி கோயிலில்  எழுந்தருளிய பைரவர் பஞ்சமுக பைரவர் என அழைக்கப்படுகிறார். பஞ்ச வக்தர பைரவர் எனவும் போற்றப்படுகிறார். சூலம், சக்கரம், மழு, கதை, கத்தி, கபாலம், டமருகம், சங்கு, பாசம், கேடயம் ஆகிய பத்துத் திருக்கரங்களுடனும், ஐந்து திருமுகங்களுடனும் கபாலமாலை அணிந்து, கம்பீரமாகக் காட்சி தருகிறார் பைரவர். இந்த சன்னதியில் பைரவருக்கு பின்னால் யாளி வாகனம் அமைந்திருப்பதும் சிறப்புக்குரியது.

துவார பாலகர்கள்

கோமுக துர்க்கை

சிவாலயங்களின் கோஷ்டத்திலோ, பிரகாரத்திலோ துர்க்கை அம்மன் எழுந்தருளப்பட்டிருப்பார். ஆனால், இக்கோயில்களில் கோமுக துர்க்கை என்னும் சிறப்பு வாய்ந்த துர்க்கை அம்மனாக எழுந்தருளியிருக்கிறார். அதாவது பசுவின் முகத்தின் மேல் (கோமுகம்) துர்க்கை எழுந்தருளி, காட்சியளிப்பது தனிச் சிறப்புக்குரியது. இந்த அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கோமுக துர்க்கை அம்மன்

இந்தக் கோயிலுக்கும் செல்லலாம்.. சட்ட சிக்கல்களைத் தீர்க்கும் சீர்காழி சட்டைநாதர் கோயில்

பெரிய விநாயகர் 

பெரிய விநாயகர்

இக்கோயில் கோபுரத்தையொட்டி விநாயகர் எழுந்தருளியுள்ள நிலையில், தனி சன்னதி கொண்டு பெரிய விநாயகர் காட்சியளித்து வருகிறார்.

விநாயகர்

சங்கடஹரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற விசேஷ காலங்களில் இங்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

வள்ளி-தேவசேனா சமேத முருகப்பெருமான்

வள்ளி-தேவசேனா சமேதராய் மயில் வாகனம் கொண்டு இக்கோயிலில் முருகப்பெருமான் எழுந்தருளி, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார். தைப்பூச நாளில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடைபெறுகின்றன. 

வள்ளி - தெய்வசேனா சமேத முருகப்பெருமான்

நால்வர் திருமேனிகள்

இக்கோயிலில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய 4 சமயக் குரவர்களும் எழுந்தருளியுள்ளனர்.

சமயக் குரவர்கள் நால்வர்

இவர்களின் திருநட்சத்திரத்தன்று சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தனி சன்னதியில் அகோர வீரபத்திரர் 

காருகுடி கைலாசநாதர் திருக்கோயில் உள் பிரகாரத்தில் அகோர வீரபத்திரர் தனி சன்னதி கொண்டு காட்சியளித்து வருகிறார்.

அகோர வீரபத்திரர்

இதைத் தவிர கோயில் பிரகாரவலத்தில் காசி விசுவநாதர், குங்குமவல்லி, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், கபால பைரவர், ராகு-கேது ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.

ராகு - கேது பகவான்கள்

மேலும் கோயில் வளாகத்தில் போடி நாயக்கர் திருமேனியும் அமைந்துள்ளது. இதுபோன்று, துவார பாலகர்களும் சுவாமி சன்னதியின் முன்பு இருபுறங்களில் எழுந்தருளியிருக்கின்றனர். மேலும் நந்தியெம்பெருமானும்  எழுந்தருளியுள்ளார்.

நந்தியெம் பெருமான்

இந்தக் கோயிலுக்கும் சென்று வரலாம்: வயிற்றுநோய் போக்கும் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் 

தல விருட்சம் வில்வம்

காருகுடி கைலாசநாதசுவாமி திருக்கோயிலின் தல விருட்சமாக வில்வம் மரம் அமைந்துள்ளது. இறைவன் வழிபாட்டில் வில்வம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

தல விருட்சம் - வில்வமரம்

எப்படிச் செல்வது?

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவு கொண்ட இக்கோயிலுக்கு சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற வட மாவட்டங்களிலிருந்தும், அரியலூர் மாவட்டத்திலிருந்து வருபவர்கள் பெரம்பலூர் வந்து, அங்கிருந்து துறையூர் வழியாக தாத்தையங்கார்பேட்டை வர வேண்டும். தொடர்ந்து இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள காருகுடி கோயிலைச் சென்றடையலாம்.

 போடி நாயக்கர் திருமேனி

டெல்டா மாவட்டங்கள், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மத்திய பேருந்து நிலையம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வந்து துறையூருக்கு பேருந்தில் வந்து, அங்கிருந்து தா.பேட்டைக்கு வரலாம். பின்னர் காருகுடி கோயிலுக்கு ஆட்டோ மூலமாகச் செல்லலாம்.

கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் குளித்தலை, முசிறி வழியாக தா.பேட்டை வந்து, பின்னர் காருகுடி கோயிலைச் சென்றடையலாம்.

ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற இடங்களிலிருந்து கார் மூலமாக வருபவர்கள் திருவானைக்கா, நெ.1 டோல்கேட், மண்ணச்சநல்லூர், திருவெள்ளறை, புலிவலம், கரட்டாம்பட்டி வழியாகச் சென்று துறையூர் நகருக்குள் நுழையாமலேயே, பிரிவுச் சாலை வழியாக தா.பேட்டை வந்து காருகுடிக்கு வந்து சேரலாம்.

  நவக்கிரக நாயகர்கள் சன்னதி

தொடர்புக்கு

இக்கோயிலுக்கு வருபவர்கள் கோயிலின் அர்ச்சகரான மணிகண்டன் குருக்களை  80568 84282 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி
அருள்மிகு கருணாகரவள்ளி அம்மன் உடனுறை கைலாசநாத சுவாமி திருக்கோயில், காருகுடி,
தாத்தையங்கார்பேட்டை வழி,
முசிறி வட்டம்,
திருச்சி மாவட்டம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT