பரிகாரத் தலங்கள்

திருமணத் தடை நீக்கும் திருநெடுங்களநாதர் திருக்கோயில்

கு. வைத்திலிங்கம்

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்

பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப் பேசினல்லால்

குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த

நிறையுடையார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

எனத் தொடங்கும் "இடர் களையும் திருப்பதிகம்'' என்ற பெயரில் திருநெடுங்களம் கோயில் குறித்து திருஞானசம்பந்தர் அருளியிருக்கிறார். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "இடர் களையாய்  நெடுங்களமேயவனே' என்று இத்திருக்கோயில் இறைவனைப்  போற்றுகின்றார்.

அந்த வகையில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு, திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகிலுள்ள திருநெடுங்களம் அருள்மிகு ஒப்பிலாநாயகி அம்மன் உடனுறை திருநெடுங்களநாதர் திருக்கோயில்.

சக்திக்காகக் கருவறையில் தனது  இடது பாகத்தை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, சற்றுத் தள்ளி வீற்றிருக்கும் இறைவன், அகத்தியர் வழிபட்டுப் பேறு பெற்றது, காசியில் உள்ளது போல கருவறையின் மேல் இரண்டு விமானங்கள், தேவாரப் பாடல் பெற்று, காவிரியின் தென்கரையில் அமைந்த திருக்கோயில்களில் 8 -ஆவது திருக்கோயிலாக அமைந்திருப்பது போன்ற பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது திருநெடுங்களம் கோயில்.

திருக்கோயிலின்  உள்கோபுரம்

திருநெடுங்களம் என்ற இந்த ஊர் 'தியாகவல்லிச் சதுர்வேதி மங்கலம்' எனவும், கோயிலுக்கு நெல் அளக்கப் பயன்பட்ட மரக்கால் நித்தமணவாளன் மரக்கால் எனவும் பெயரிட்டு அழைக்கப்பட்டிருக்கின்றன.

வரலாற்றுச் சிறப்பு

இக்கோயிலுக்கு பல மன்னர்கள் திருத்தொண்டு செய்து போற்றியுள்ளனர் என்பதை இக்கோயிலில் காணப்படும் முப்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. ஆதித்த சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜன், சுந்தர பாண்டியன், போசள மன்னன் வீரராமநாதன், விஜய நகர மன்னர்களான விருப்பண்ண உடையார், வீர நாராயண உடையார், வீர பிரதாபர், புஜபலராயர், தேவராயர்,  கம்பரச தேவ மகாராயர் போன்றோர் இக்கோயிலுக்குப் பெருந்தொண்டு  செய்துள்ளனர்.

  திருக்கோயிலின் உள்பிரகாரப் பகுதி

இக்கோயிலில் எழுந்தருளிக் காட்சியளிக்கும் இறைவன் திருநெடுங்களத்து மகாதேவர், நெடுங்களத்து ஆழ்வார்,  திருநெடுங்களம் உடையார் எனக் கல்வெட்டுகளில் அழைக்கப்படுகிறார். திருநெடுங்களமுடைய தம்பிரான் என்று விஜயநகர மன்னர்கள் காலக் கல்வெட்டுகளில் இறைவன் குறிப்பிடப்படுகிறார். இக்கோயில் தட்சிண கைலாசம் எனவும், நிழலார் சோலைவனம் உடையார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் இத் திருக்கோயிலில் இருக்கும் பகுதி  சோழர் காலக் கல்வெட்டுகளில் "பாண்டி குலாசனி வளநாட்டு வடகவிநாட்டு தேவதானம் திருநெடுங்களம்'' எனக் குறிக்கப்படுகிறது. மேலும் சில கல்வெட்டுகளில் கவிர நாடு, வடகவிர நாடு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் பாண்டிய குலபதி வளநாடு எனப் பெயர் மாற்றம் அடைகிறது. பாண்டியர்  கல்வெட்டில் ஜயசிங்க குல கால கல்வெட்டு மீசங்களி நாட்டு வடகவி நாட்டு உடையார் திருநெடுங்களமுடையார் எனக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. கோயில் வழிபாட்டுக்கும், பூஜைக்கும், திருப்பணிக்கும் தானமாக நிலங்கள் அளிக்கப் பெற்ற செய்திகள் பெரும்பான்மையான கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

புராண வரலாறு

அன்னை பார்வதிதேவி இங்கே தவமிருந்து, இறைவனின் கைத்தலம் பற்றியதாக புராண வரலாறு கூறுகிறது. அகத்தியர் பெருமான் திருநெடுங்களத்தில் தவமிருந்து, இறைவன் அருள் பெற்றதாகவும், வங்கிய சோழன் என்ற மன்னனுக்கு இறைவன் அருள் வழங்கியதாகவும் புராண வரலாறுகள் எடுத்துரைக்கின்றன. அன்னை பார்வதி  சிவனை நோக்கி இத்திருக்கோயிலில் தவமிருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன், அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியைக் கைப்பிடித்தார் என்பது புராண வரலாறாகும்.

திருநெடுங்களநாதர்

இறைவன் திருநெடுங்களநாதர்

இத்திருக்கோயில் இறைவன் திருநெடுங்களநாதர்  (நித்திய சுந்தரேசுவரர்) என்றழைக்கப்படுகிறார். இந்த சன்னதி கருவறை, அர்த்த மண்டபம், முன்மண்டபம் போன்ற அமைப்புகளுடன் விளங்குகிறது.

மற்ற கோயில்களில் கருவறையில் நடுநாயகமாக காட்சியளிக்கும் சிவபெருமான், திருநெடுங்களத்தில்  கருவறையில் சக்திக்காக தன் இடபாகத்தை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, சற்றுத் தள்ளி வீற்றிருந்து காட்சியளிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக  ஐதீகம்.

திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாகவும் திருநெடுங்களநாதர் திருக்கோயில் திகழ்கிறது. இத்திருக்கோயில் இறைவனை வணங்கினால் திருமணத் தடை நீங்கும், குழந்தைப் பாக்கியம் உண்டாகும், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பதும்  பலன் அடைந்தவர்களின் கூற்றாகும். மேலும், இடர் களையாய் நெடுங்களமேயவனே என முடியும்  திருநெடுங்கள திருப்பதிகத்தைத் தொடர்ந்து படித்து வந்தால், துன்பங்கள், துயரங்கள் நீங்கும் என்பர்.

ஆருத்ரா தரிசனம் - மாணிக்கவாசகருடன், நடராஜப் பெருமான்-சிவகாமசுந்தரி அம்மன்

இறைவன் திருநெடுங்களநாதருக்கு மாதுளை முத்துகளால் அபிஷேகம் செய்தால், நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். பரிகாரம் நிறைவேறியவுடன் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக் கடனைச் செலுத்துவர். அதன்படி தங்களது பரிகாரங்கள், வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னர், ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தி வருகின்றனர். வந்திய சோழ மன்னனுக்கு ஈசன் பேரழகுடன் காட்சியளித்த காரணத்தால் இத்திருக்கோயில் இறைவன் நித்திய சுந்தரேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த இறைவனுக்கு 6 வெள்ளிக்கிழமைகளில் நெய்  தீபமேற்றி வழிபட்டு வந்தால் முகப்பொலிவு கூடும் என்பதுடன், சகல ஜனவசியமும் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. கருவறையில் இறைவன் சுயம்பு வடிவமாக சிறிய சிவலிங்க வடிவத்தில் காட்சியளிக்கிறார். கருவறையின் உட்புற அமைப்பு  எண்கோண அமைப்பில் அமைந்துள்ளது. 

சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு திருநெடுங்களநாதர்  - அருள்மிகு ஒப்பில்லா நாயகி அம்மன்

இறைவி ஒப்பிலாநாயகி அம்மன்

கோயிலின் நந்தி மண்டபத்தின் வலது பக்கத்தில் தெற்கு நோக்கிய சன்னதியில் காட்சியளித்து வருகிறார் அருள்மிகு ஒப்பிலாநாயகி அம்மன். இந்த இறைவிக்கு மங்களாம்பிகை என்ற பெயரும் உண்டு.  தனது மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரை காட்டியும் பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். 

ஒப்பிலாநாயகி அம்மன்

சிறப்பு வாய்ந்த இரட்டை விமானங்கள்

இக்கோயிலில் இரட்டை விமானங்கள்  அமைந்திருப்பது விசேஷமானது. காரணம், சிவபெருமான்  உமையவளுக்கு தனது திருமேனியின் இடபாகத்தில் இடம் கொடுத்ததால். இத்திருக்கோயிலின் கருவறையில் ஈசன் சிவலிங்க வடிவமாக இருந்தாலும், அரூப வடிவில் பார்வதியும் உடனிருப்பதாக ஐதீகம். இதனால் கருவறையின் மீது விமானமும், அர்த்த மண்டபத்துக்கு மேலேயும் விமானமும் உள்ளன.

சிறப்பு வாய்ந்த இரட்டை விமானங்கள்

இக்கோயிலின்  கருவறை இரட்டை விமான அமைப்பு, அப்படியே காசி விசுவநாதர் திருக்கோயில் இரட்டை விமான அமைப்பை ஒத்துள்ளது. எனவே இத்திருக்கோயிலை தட்சிண கைலாசம் எனக் குறிப்பிட்டுப்  போற்றுகின்றனர்.

சிறப்பு வாய்ந்த தட்சிணாமூர்த்தி 

திருநெடுங்களநாதர் திருக்கோயிலிலுள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு அற்புதம் நிறைந்தது.  கருவறையின் தெற்குப் பக்கத்திலுள்ள தேவ கோட்டத்தில் யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். யோக தட்சிணாமூர்த்தி சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும், திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடது கரத்தில் தீச்சுடரைத் தாங்கியவாறும், இடக்காலைச் சுற்றியவாறு யோகப் பட்டம் விளங்கவும் காட்சி  தருகிறார்.

முருகப்பெருமான் 

திருக்கோயிலின் மேற்குப் பிரகாரத்தில் அருணகிரி நாதர் பெருமான் போற்றிய முருகன் சன்னதி அமைந்துள்ளது. வள்ளி-தேவசேனா சமேதராய் அழகிய முகப்பொலிவுடன் காட்சி தருகிறார் முருகப்பெருமான்.

திருநெடுங்களம் திருப்புகழ் தலம். இதனால்  நான்குத் திருக்கரங்களுடனும், ஒரு திருக்கரத்துடனும் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கியவாறு முருகப்பெருமான் காட்சியளித்து வருகிறார். இத்திருக்கோயில் முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் அருளிய திருநெடுங்களப் பதிகம்

வரதராஜப் பெருமாள்

முருகப்பெருமான் சன்னதியின் வடமேற்கு மூலையில் ஸ்ரீதேவி-பூதேவி அம்பிகா சமேத வரதராஜப் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். இதற்கு அருகிலேயே மாந்தன்- குளிகை- ஜேஷ்டாதேவி எழுந்தருளியுள்ளனர். திருவானைக்கா கோயிலுக்கு அடுத்து இக்கோயிலில்தான் பெருமாளுக்கு அருகிலேயே ஜேஷ்டாதேவி இவ்வாறு காட்சியளித்து வருகிறார்.

திருக்கோயில் அமைப்பு  

கோயிலுக்கு முன்பு சுந்தரத் தீர்த்தம் எனப்படும் திருக்குளம் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவுவாயில் இடப்புறத்தில் விநாயகரும், வலதுபுறத்தில் கருப்பண்ண சுவாமியும் சன்னதி கொண்டுள்ளனர். உடல்நலம் குன்றியவர்கள் இவருக்கு வழிபாடு செய்து, பானகம் நைவேத்தியம் செய்து, உடல் நலமடைகின்றனர். அனைத்து மக்களின் வழிபாட்டுக்கு உகந்த தெய்வமாக கருப்பண்ண சுவாமி போற்றப்படுகிறார்.

கோபுரம் 

திருவாயிலில் ஐந்து நிலை கோபுரம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கோபுரத்தின் அடித்தளம் - கல்காரப் பகுதி மட்டுமே இருந்தது. திருநெடுங்களநாதர் உழவாரப் பணிக் குழுவினர் முயற்சி செய்து, மேற்கொண்ட திருப்பணியால் ஐந்து நிலைக் கோபுரமானது. கோபுரத்தின் சுதை வடிவங்களில் திருக்கோயிலுக்கு ஞானசம்பந்தர் வந்து வழிபட்டுச் சென்றது, திருப்பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள், தலபுராண செய்திகள், பிரதோஷ கால வழிபாட்டின் சிறப்புகள், இத்திருக்கோயிலை வழிபட்டுப் பேறு பெற்றவர்கள் போன்றவையும் அமைக்கப்பட்டிருப்பது சிறப்புக்குரியதாகும்.

 நால்வர்

கோபுரத்தை அடுத்து கொடிக் கம்பம், மலர்ந்த தாமரை போன்ற பலிபீடம், நந்தி மண்டபம், இந்த மண்டபத்தின் வலது பக்கத்தில் தெற்கு நோக்கிய அம்மன் சன்னதி அமைந்துள்ளது. கோபுரம் வழியாக நுழைந்தவுடன் மகா மண்டபத்தில் விநாயகர், முருகப்பெருமான், முதல் திருச்சுற்றின் தொடக்கத்தின் தெற்குப் பகுதியில் சமயக் குரவர்கள் நால்வர் திருமேனியும் அமைந்துள்ளது.

 சோழர் காலத்தைச் சேர்ந்த கல் உரல்

இம்மண்டபத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த கல் உரல் ஒன்றுள்ளது. உரலின் வெளிப்பகுதி அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் காட்சி தருகிறது. தொடர்ந்து திருச்சுற்று மாளிகையில் அப்புலிங்கம், வாயுலிங்கம், கோப்புலிங்கம், சப்தகன்னியர்கள், ஜேஷ்டாதேவி ஆகிய சன்னதிகள் உள்ளன. சப்த கன்னியர்களின் சிற்ப வடிவங்கள் முற்காலச் சோழர்களின் அரிய கலைப் படைப்பாய் திகழ்கிறது. இதில் நடுநாயகமாக உள்ள வராகி அம்மனுக்கு வாரத்தில் வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் ராகுகாலத்தின்போது சிற்ப உரலில் விரலி மஞ்சளை இடித்து அபிஷேகம் செய்தால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும். ஆண் - பெண் என இருபாலரும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

தென்மேற்கு மூலையில் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. வலம்புரி விநாயகர் இங்கு எழுந்தருளியுள்ளார்.  விநாயகருக்கு முன்னதாக நாகர்- நாக கன்னிகை வடிவங்கள் வழிபடப் பெறுவது சிறப்பாகும்.

தல விருட்சம் 

கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் அகத்தீசுவரர் சன்னதி, அகத்தியர் தீர்த்தம் ஆகியவற்றுடன், தல விருட்சமான கஸ்தூரி அரளி, வில்வமரம் ஆகியவை உள்ளன. அருகிலேயே சண்டிகேசுவரர் சன்னதி அமைந்துள்ளது.

சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர்

தேவியருடன் சூரியபகவான் 

சண்டிகேசுவரர் சன்னதியை அடுத்து நடராஜர் சபையும், அதன் எதிரில் நவக்கிரக சன்னதியும் அமைந்துள்ளன. சூரியன் தனது இரு தேவியர்களுடன் கிழக்குத் திசை நோக்கி, மற்ற அனைத்து கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறு காட்சியளிக்கின்றன. வடகிழக்கு மூலையில் காலபைரவர் எழுந்தருளியுள்ளார். தொடர்ந்து கருவறை, அதைச் சுற்றிச் சுற்று மண்டபம், கருவறையின் மேற்குப் பக்கம் அர்த்தநாரீசுவரர் வடிவம் காணப்படுகிறது. வடக்குப்புறத்தில் தேவ கோட்டம் இல்லை. 

ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு நடைபெற்ற  கலச பூஜை

திருவிழாக்கள் 

பிரதோஷ வழிபாடு இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடராஜருக்கு ஆறு கால பூஜையும், நால்வருக்கு அவர்களுக்குரிய நட்சத்திரத்தில் சிறப்புப் பூஜை வழிபாடும், ஆடி வெள்ளியில் சிறப்பு வழிபாடு பூஜையும் நடைபெறுகிறது. இதைத் தவிர, ஆடி மாதத்தில் 7 முதல் 12-ஆம் தேதி வரை (தமிழ் மாத நாள்கள்) தொடர்ந்து 5 நாள்கள் சூரிய ஒளி இறைவன் மீது விழும் நிகழ்வு சூரிய பூஜையாக நடைபெற்று வருகிறது.

சித்திரை மாதம் முதல் தேதியில் தமிழ்ப் புத்தாண்டு அன்றும், வைகாசி விசாக நட்சத்திரத்தன்றும் சுவாமி, அம்மன் புறப்பாடு வெகு சிறப்பாக நடைபெறும்.

ஆடி சுவாதி நட்சத்திரத்தில் யானை வாகனத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள்

மேலும் ஆனித்திருமஞ்சனத்தன்று நடராஜர் புறப்பாடு, ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் யானை வாகனத்தில் எழுந்தருளுதலும் நடைபெறும்.

வைகாசி விசாகம் - சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் 

ஆடிப்பூரத்தன்று ஒப்பில்லா நாயகி அம்மனுக்கு வளையல், பூ அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

சித்திரை மாதப் பிறப்பன்று ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள்

ஆருத்ரா தரிசனம் இக்கோயிலில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் வளர்பிறை பஞ்சமி திதியில் வாராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடுகள் நடைபெறும். 

சிறப்பு அலங்காரத்தில்   வராகி அம்மன்

எப்படிச் செல்வது 

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் துவாக்குடி அமைந்துள்ளது. திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடியின் வடக்கில் சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருநெடுங்களம்.

மதுரை போன்ற மத்திய மாவட்டங்களிலிருந்தும், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கோவை, ஈரோடு, நீலகிரி போன்ற மாவட்டங்களிலிருந்தும் வருபவர்கள் மத்திய பேருந்து நிலையம், பால்பண்ணை, அரியங்கலம், காட்டூர், திருவெறும்பூர், துவாக்குடி வழியாக திருநெடுங்களத்தை வந்தடையலாம்.

நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களிலிருந்தும், சென்னை போன்ற வட மாவட்டங்களிலிருந்தும், அரியலூர், பெரம்பலூர்போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் நெ.1 டோல்கேட், புதிய கொள்ளிடம் பாலம், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, பழைய பால்பண்ணை, அரியமங்கலம், காட்டூர், திருவெறும்பூர், துவாக்குடி வந்தடையலாம்.

ஆனித்  திருமஞ்சன வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர்

நடை திறப்பு நேரம் 

கோயில் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தொடர்புக்கு:
இக்கோயிலுக்கு வருபவர்கள் 0431-2520126 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணிலோ, டி. ஏ.சோமசுந்தரம் சிவாச்சாரியார்,  டி.ஏ.எஸ். பரணிதர சிவம் என்கிற ரமேஷ் குருக்கள் மற்றும் சகோதரர்களை 63809 83566 என்ற கைப்பேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி 
செயல் அலுவலர்,
அருள்மிகு ஒப்பிலா நாயகி அம்மன் உடனுறை திருநெடுங்களநாதர் திருக்கோயில்,
திருநெடுங்களம்,
துவாக்குடி,
திருச்சி மாவட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT