பரிகாரத் தலங்கள்

நாகதோஷம் போக்கும் துவாக்குடி சோழீசுவரர் திருக்கோயில்

கு. வைத்திலிங்கம்

நாக தோஷம், காலசர்ப்ப தோஷம், புத்திர தோஷம் போக்கும் பரிகாரத் தலமாகவும், குழந்தைப்பேறு அருளும் தலமாகவும் திகழ்கிறது திருச்சி மாவட்டம், துவாக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு கோமளவள்ளி அம்மன் உடனுறை சோழீசுவரர் திருக்கோயில்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில், திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள இக்கோயில் பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

கோயிலின் நுழைவுவாயில்

சுமார் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில் நவக்கிரக நாயகர்கள் தத்தம் தேவியர்களுடன் இணைந்து காட்சியளிப்பது, சிறப்பு வாய்ந்த காலபைரவர் சன்னதி, கல்லால் ஆன திருமேனியில் காட்சியளிக்கும் நடராஜர் - சிவகாமசுந்தரி அம்மன், ஆண்டில் 6 நாள்களில் மூலவர் திருமேனியின் மீது சூரிய ஒளிக்கதிர்கள்படும் அரிய நிகழ்வு போன்றவை கோயிலின் சிறப்புகளாகக் கருதப்படுகின்றன. துவாக்குடி சோழீசுவரர் திருக்கோயிலுக்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டாலே, நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும். 

கோயிலின் வரலாற்றுச் சிறப்பு

தனது தங்கை கோமளவள்ளிக்கு திருமணம் செய்து வைக்க எண்ணிய இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னன், தங்கையின் ஜாதகத்தை அரச ஜோதிடரிடம் காட்டி, கணிக்கக் கூறினார். கோமளவள்ளி ஜாதகத்தில் நாகதோஷம் இருப்பதாகவும், அதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என்றும் ஜோதிடம் கூறினார். இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னன், தாம் வணங்கும் இறைவன் சிவபெருமானிடம் சென்று முறையிட்டான்.

நர்த்தன விநாயகர்

அப்போது "ஓர் ஆலயம் கட்டு, உன் தங்கையின் தோஷம் விலகும்' என்ற அசரீரி ஒலித்தது. அந்த அசரீரியை தெய்வத்தின் குரலாய் உணர்ந்த மன்னன், ஓர் ஆலயத்தை (திருக்கோயிலை) கட்டி முடித்தான். அந்த மன்னன் கட்டிய திருக்கோயில்தான் திருச்சி மாவட்டம், துவாக்குடியிலுள்ள சோழீசுவரர் திருக்கோயில். இங்கு காட்சியளிக்கும் இறைவன் சோழீசுவரர் என்றும், இறைவி கோமளவள்ளி அம்மன் என்றும் அழைக்கப்படுகின்றனர்.  மேலும் இந்த திருக்கோயில் இறைவிக்குத் தனது தங்கையின் பெயரையே மன்னன் சூட்டினான் என்பது கோயில் வரலாறாகும்.

 இறைவன் சன்னதி கோபுரம்

இறைவன் சோழீசுவரர்

கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயிலில் இறைவன் சோழீசுவரரின் சிவலிங்கத் திருமேனியும் கீழ்த்திசை நோக்கி அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இறைவன், இறைவியை நாகதேவன் வேண்டியதால், நாகதோஷம் நீங்கப்பட்டதால், நாகதோஷ பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

வெளிப்பிரகாரம்

தன்னை நாடி வரும் பக்தர்களின் நாகதோஷங்களை நீக்கும் ஈசுவரராக சோழீசுவரர், நாகாபரணத்துடன் காட்சியளித்து வருகிறார். நாகராஜாக்கள் சர்வ சாதாரணமாக கருவறைக்குச் செல்வதும், இறைவனின் திருமேனியில் ஊர்ந்து விளையாடுவதும் பக்தர்கள் இதை அங்கு அடிக்கடி காணும் காட்சியாகும். இங்குள்ள இறைவன் மாசானவாசி என அழைக்கப்படுகிறார். காசியில் உள்ளவாறு, இறைவன் சோழீசுவரர் மயானத்தைப் பார்த்தவாறு காட்சியளிக்கிறார். 

நட்சத்திர பரிகாரப் பூஜை 

தங்களது பிறந்த நட்சத்திரத்தன்று (ஆண்டில் எந்த மாதத்திலும்) இறைவன், இறைவிக்கு கலசங்களை வைத்து, இறைவன் சன்னதி எதிரில் பரிகாரப் பூஜை நடத்தப்படுகிறது. இப்பூஜையில் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கும். குழந்தைப் பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.

இறைவி கோமளவள்ளி அம்மன்

கோயிலின் மகா மண்டபத்தின் வலதுபுறத்தில் இறைவி கோமளவள்ளி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இங்கு கோமளவள்ளி அம்மன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

கோமளவள்ளி அம்மன் சன்னதி கோபுரம்

நான்கு கரங்களுடன் காட்சித்தரும் அம்மனின் மேல் இரு கரங்கள் தாமரை மலரை சுமந்து நிற்க, கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரையுடன் காணப்படுகிறது. இங்கு இறைவி கோமளவள்ளி அம்மன் நாகாபரணத்தை தலையில் கிரீடமாகக் கொண்டு  காட்சியளித்து வருகிறார்.

கோமளவள்ளி அம்மன்

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு 5 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இறைவிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டாலேயே நாகதோஷம் விலகும், புத்திரப் பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். மேலும் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டாலேயே திருமணத் தடையும் நீங்கும் என்பது பலனடைந்த பக்தர்களின் கூற்றாகும்.

அம்மன் சன்னதி நேரில் எழுந்தருளிய நந்தியெம்பெருமான்

நாகதோஷ பரிகாரத்துக்கு 

ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்கள் இத்திருக்கோயில் இறைவன், இறைவிக்கு பாலாபிஷேகமும், மாதுளம்பழ அபிஷேகம் செய்வதுடன், இங்குள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் ஏழு மாதங்கள் வடை மாலை சாத்தி, செவ்வரளி மாலையிட்டு பிரார்த்தனை செய்தால் நாகதோஷம் தானே விலகும் என்கின்றனர் பக்தர்கள். தோஷம் நிவர்த்தியானவுடன் இறைவன், இறைவிக்கு வேட்டி, சேலை சாத்தி, பொங்கல், தயிர்ச்சாதம் படைத்து அதை பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர் பக்தர்கள். 

குழந்தை வரம் வேண்டி இத்திருக்கோயில் இறைவன், இறைவியிடம் பிரார்த்தனை செய்யும் தம்பதியருக்கு விரைவில் அந்த பேறு கிட்டுகிறது. அந்த குழந்தைக்கு ஓராண்டு நிறைவு பெறும் போது, கோயிலுக்கு அழைத்து வந்து ஆயுள்ஹோமம் செய்தலும், பின்னர் அன்னப்ரசனம் எனப்படும் குழந்தைக்கு முதன் முதலாக உணவு ஊட்டும் வைபவமும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. 

கோயில் அமைப்பு

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயிலின் முகப்பைத் தாண்டியதும், விசாலமான நடைப்பாதையின் நடுவில் நந்தியெம்பெருமான் எழுந்தருளி காட்சியளித்து வருகிறார்.  இதைத் தொடர்ந்து அமைந்துள்ள இறைவியின் மகா மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டப நுழைவுவாயிலின் இடதுபுறத்தில் விநாயகரும், வலதுபுறத்தில் முருகப்பெருமானும் துவார பாலகராக காட்சியளிக்கின்றனர். மண்டபத்தின் கிழக்குத் திசையில் சூரியன், சந்திரனும் எழுந்தருளியுள்ளனர்.

வள்ளி- தெய்வசேனா சமேத சுப்பிரமணியர்

மகாமண்டபத்தின் வலதுபுறப் பகுதியில் இறைவி சன்னதி அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இறைவன் சோழீசுவரர் மகாமண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தின் வலதுபுறத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன் திருமேனிகளும், மண்டபத்தின் அர்த்த மண்டபத்தில் தெற்கு நோக்கி விநாயகரும், வள்ளி-தெய்வசேனா சமேதராய் முருகப்பெருமானும் காட்சியளிக்கிறார்.

நால்வர் சன்னதி

இறைவன் சன்னதியின் திருச்சுற்றின் தெற்கில் தெய்வ சேக்கிழாருடன் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசர் ஆகிய நால்வர், நந்தியெம்பெருமான், மேற்கில் மகாகணபதி, வள்ளி-தெய்வசேனா சமேத சுப்பிரமணியர்,  கஜலட்சுமி, கிழக்கில் காலபைரவர், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள், தேவக்கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்திதி, துர்க்கை அம்மன், வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசுவரர் ஆகியோர் எழுந்தருளி, காட்சியளித்து வருகின்றனர். இறைவன் சன்னதி பின்பகுதியில் அர்த்தநாரீசுவரர் எழுந்தருளியுள்ளார்.

 அர்த்தநாரீசுவரர்

சிறப்பு வாய்ந்த நடராஜர் சிவகாமசுந்தரி அம்மன் 

பொதுவாக சிவாலயங்களின் மகா மண்டபத்தில் நடராஜர்-சிவகாமசுந்தரி அம்மன் திருமேனிகள் செம்பு உலோகத்திலோ அல்லது பஞ்சலோக உலோகத்திலோ ஆனதாக இருக்கும். ஆனால், துவாக்குடி சோழீசுவரர் திருக்கோயில் இதில் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகிறது.

நடராஜர்-சிவகாமசுந்தரி அம்மன் (கல்லால் ஆன திருமேனி)

இத்திருக்கோயிலின் இறைவன் மகாமண்டபத்தின் வலதுபுறத்தில் நடராஜர்-சிவகாமசுந்தரி அம்மன் திருமேனிகள் கல்லால் ஆனவையாகும். ஆண்டில் 6 நாள்கள் மட்டுமே நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தின் போது 16 வகையான பொருள்களைக் கொண்டு நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

 சண்டிகேசுவரர் சன்னதி

தத்தம் தேவியருடன் நவக்கிரக நாயகர்கள்

நவக்கிரகங்கள் சன்னதிகள் இல்லாத சிவன் கோயில்கள் இல்லை. ஆனால் சில கோயில்களில் இதிலிருந்து சற்று வேறுபட்டுக் காணப்படும். குறிப்பாக, திருப்பைஞ்ஞீலி அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை ஞீலிவனேசுவரர் திருக்கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. இக்கோயில் இறைவன் சன்னதியின் நேர் எதிரில் அமைந்துள்ள கொடிமரத்தின் அருகிலுள்ள 9 குழிகளும் நவக்கிரகங்களாகக் கருதப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

நவக்கிரக நாயகர்கள்

மாந்துறை ஆம்ரவனேசுவரர் திருக்கோயிலில் அமைந்துள்ள நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தவாறு காட்சியளிக்கின்றன. அந்த வகையில், துவாக்குடியிலுள்ள சோழீசுவரர் திருக்கோயிலில் அனைத்து நவக்கிரக நாயகர்களும் தத்தம் தேவியருடனும், வாகனத்துடனும் காட்சியளிப்பது அபூர்வ அமைப்பாகும். நாகதோஷம் உள்ளவர்கள் விளக்கேற்றி 9 முறை நவக்கிரகங்களை வலம் வர வேண்டும்.

பிரம்மா

சிறப்பு வாய்ந்த கால பைரவர்

இத்திருக்கோயில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. 16 வகையான பொருள்களைக் கொண்டு காலபைரவருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, நைவேத்தியம் செய்யப்பட்டு வருகிறது. சிவனின் அம்சமாகக் கருதப்படும் கால பைரவர் நாய் வாகனத்தில் காட்சியளித்து வருகிறார்.

காலபைரவர்

மற்ற கோயில்களில்  காலபைரவர் சன்னதியில் எழுந்தருளியிருக்கும் நாயின் வால் நீண்டிருக்கும். ஆனால், சோழீசுவர் திருக்கோயிலில் நாயின் வால் சுருண்டு காணப்படுவதும் விசேஷமானது. நவக்கிரகங்கள் அனைத்தும் காலபைரவருக்கு கட்டுப்பட்டது என்பார்கள். அந்த வகையில், நவக்கிரக தோஷபாதிப்பு ஏற்படாத வகையில், அனைத்தையும் காலபைரவர் சுருட்டிவைத்திருப்பதாகவும், அதையொட்டியே நாயின் வால் சுருண்டு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தட்சிணாமூர்த்தி சன்னதி

வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பாக நடைபெறும். குருப்பெயர்ச்சியன்று சிறப்புப் பூஜைகள் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்கின்றனர். 

 தட்சிணாமூர்த்தி

கஜலட்சுமி 

இத்திருக்கோயிலில் அமைந்துள்ள கஜலட்சுமி சன்னதி சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இரு பகுதியிலும் கஜமுகன்கள் துதிப்பது போல கொண்டு கஜலட்சுமி காட்சியளிக்கிறார். ஆடி மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் கஜலட்சுமிக்கு  வளையல் அலங்காரம் செய்து, அதைப் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.

கஜலட்சுமி

பாஸ்கர பூஜை

தமிழ் மாதங்களில் ஆவணி, பங்குனியில் 21,22,23-ஆம் நாள்களில் பாஸ்கர பூஜை எனப்படும் சூரிய பூஜை நடைபெறுகிறது. அப்போது மூலவரின் திருமேனி மீது  சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு நடைபெறும். இப்பூஜையின் போது இறைவனுக்கு மாதுளம்பழம் முத்துகளால் அபிஷேகம் செய்யப்படும். இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவர்.

சூரிய பகவான் 
சந்திர பகவான்

சிறப்பு வாய்ந்த பிரதோஷ வழிபாடு 

இக்கோயிலில் பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் சுமார் 200 பேருக்கு இலையிட்டு அன்னதான விருந்து படைப்பது வழக்கமாக உள்ளது. புளி, எலுமிச்சை, தேங்காய், தயிர்ச் சாதங்கள் அன்னதானத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. 

ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்மன் உற்சவர்கள்

தலவிருட்சம் 

கோயிலின் தல விருட்சமாக வில்வம் மரம் அமைந்துள்ளது. கிழக்குப் பிரகாரத்தில் இந்த மரம் தழைத்தோங்கி காணப்படுகிறது.

தலவிருட்சம் 

மாவுலிங்கமரம்

இத்திருக்கோயிலில் புலிப்பாணி சித்தர் இறைவன் நோக்கி தியானம் இருந்த மாவுலிங்கமரம் அமைந்துள்ளது. இந்த மரம் அமைந்துள்ள பகுதியில் தியானம் இருந்தால், நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும், பலன் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.

புலிப்பாணி சித்தர் தியானம் செய்த மாவுலிங்கமரம்

கோயில் விழாக்கள்

தை மாத வெள்ளி, ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகின்றன. மேலும் ஆடிப்பூரத்தின் போது அம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் நடைபெறும். இதைத் தவிர நவராத்திரித்  திருவிழா, மகா சிவராத்திரி போன்றவையும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாதந்தோறும் பிரதோஷ, பௌர்ணமி வழிபாடு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

துர்க்கை

கோயில் நடைதிறப்பு 

காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது

திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலுக்கு வரும் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நெ.1. டோல்கேட், புறவழிச் சாலை, பழைய பால்பண்ணை, அரியமங்கலம், காட்டூர், திருவெறும்பூர் வழியாக துவாக்குடி வந்து கோயிலைச் சென்றடையலாம்.

தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம், புறவழிச்சாலை பாலம், செந்தண்ணீர்புரம், பழைய பால்பண்ணை, அரியமங்கலம், காட்டூர், திருவெறும்பூர் வழியாக துவாக்குடி சென்றடையலாம்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் போன்ற மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரி மாநிலத்திலிருந்தும் வருபவர்கள் தஞ்சாவூர் வழித்தடத்தில் வந்து துவாக்குடியில் இறங்கி கோயிலுக்குச் சென்றடையலாம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருவெறும்பூர் வழியாக செல்லும் அனைத்து புறநகர்ப் பேருந்துகள் துவாக்குடியில் நின்று செல்லும். இதைத்தவிர சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து துவாக்குடிக்கும், இந்த வழியாக பல்வேறு கிராமங்களுக்கும் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புக்கு 

துவாக்குடி சோழீசுவரர் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், என்.வி.ரமேஷ் குருக்களை 6369343264 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி

அருள்மிகு கோமளவள்ளி அம்மன் உடனுறை சோழீசுவரர் திருக்கோயில்
துவாக்குடி
திருவெறும்பூர் வட்டம்
திருச்சி மாவட்டம்.

                   படங்கள்: எஸ்.அருண்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT