பரிகாரத் தலங்கள்

திருமணத் தடை நீக்கும் முசிறி லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில்

12th Aug 2022 05:00 AM | கு.வைத்திலிங்கம்

ADVERTISEMENT

 

திருமணத் தடை நீக்குதல், குழந்தைப் பேறுக்கான பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், முசிறியிலுள்ள அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில்.

திருக்கோயில் முகப்பு

திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முசிறி நகரின் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில், பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

இதையும் படிக்கலாமே.. மகப்பேறு அருளும் திருச்சி உத்தமர்கோயில்

ADVERTISEMENT

கோயிலின் கருவறை சன்னதி விமானக் கோபுரம்

புராணங்களில் முசுகுந்தபுரி என்றழைக்கப்பட்டு, தற்போது முசிறி என்றழைக்கப்படும் நகரில், முசுகுந்த சோழன் ஆட்சிக்காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாகச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

திருக்கோயில் உள் பிரகாரப் பகுதி

இந்தக் கோயிலுக்கும் சென்று வரலாம்: வயிற்றுநோய் போக்கும் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் 

லட்சுமி நாராயணப் பெருமாள்

கிழக்கு நோக்கிய சன்னதியைக் கொண்டும், சிறிய பிரகாரத்தைக் கொண்டும் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள லட்சுமி நாராயணப் பெருமாளும் கிழக்கு நோக்கியவாறு  லட்சுமி தேவியை இடது தொடையில் அமர்த்திக்கொண்டு இடது கையால் அணைத்தபடி, வலது கையால் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் அபயஹஸ்தம் கொண்டு காட்சியளிக்கிறார். மூலவர் லட்சுமி நாராயணப் பெருமாள் சன்னதியிலேயே உற்சவர் நவநீத கிருஷ்ணனும் எழுந்தருளியுள்ளார். இவர் திருவிழாக் காலங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

  சந்தனக் காப்பு அலங்காரத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள்

இத்திருக்கோயில் சுக்கிரத் தலமாக விளங்குகிறது. திருமணத் தடை நீக்கவும், குழந்தைப் பேறுக்காகவும் பக்தர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்த பலர் பலன் பெற்று வருகின்றனர்.  மேலும் வியாபாரத் தடை, கடன் தொல்லை, தொழில் தடை, எதிரிகளால் ஏற்படும் பயம், வேலையின்மை போன்றவற்றை இந்த பெருமாள் நீக்கி, வாழ்வில் வளம் சேர்ப்பார் என்கின்றனர் பக்தர்கள்.

சிறப்பு அலங்காரத்தில் - லட்சுமி நாராயணப் பெருமாள்

நினைத்த காரியங்கள் நிறைவேறும்

இக்கோயிலில் பாதம் பதித்த பல ஆன்றோர்கள், ஆச்சாரியர்கள் லட்சுமி தேவியுடன் இருக்கும் பெருமாளை 7 வாரங்கள் 12 முறை சுற்றி வந்தால், நினைத்த காரியம் உடனே நிறைவேறும் என்று அருளியிருக்கிறார்கள். எனவே பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற, இந்த வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.  

இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே.. பித்ரு, மாத்ருஹத்தி தோஷம்  நீக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோவில்

அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள்

பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறிய பின்னர், தங்களது வேண்டுதல்களை லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு நிறைவேற்றிச் செல்கின்றனர். மேலும், மற்ற பெருமாள் கோயில்களில் இல்லாத வகையில், இந்த திருக்கோயிலில் கருடன் மற்றும் ஆஞ்சனேயர் எதிரெதிர் நின்று சேவை சாதிப்பது சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது.

சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் நவநதீதகிருஷ்ணன்

மேலும் ஸ்ரீமத் ஆண்டவன் பௌண்டரீகபுரம் ஆண்டவன் சுவாமிகளால் இத்திருக்கோயிலில் சக்கரத்தாழ்வார்,  யோக நரசிம்மர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முசிறி லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் எந்தெந்த மாதங்களில் எந்தெந்த திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை எழுதி, பாமாலையாக வழிவகுத்துச் சென்றவர் பௌண்டரீகபுரம் ஆண்டவன் சுவாமிகளின் தந்தை பரவாக்கோட்டை சுவாமிகள். அந்த வழிமுறைகளின்படி, இக்கோயில் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இக்கோயிலைப் பற்றியும் அறியலாமே.. வாஸ்து தோஷம் நீக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்

லட்டுத் திருப்பாவாடைத் திருநாள் வழிபாடு

திருவிழாக்கள் 

இக்கோயிலில் திருப்பாவாடைத் திருநாள் ஆண்டுக்கு 3 முறை நடைபெறுவது வழக்கம். மார்கழி மாதம் 16-ஆம் திருநாள் லட்டு திருப்பாவாடைத் திருநாளும், ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று பெரியத் திருப்பாவாடைத் திருநாளும், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை புளியோதரைத் திருப்பாவாடை திருநாளும் நடைபெறும். அப்போது ஏராளமான பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்று, லட்சுமி நாராயணப் பெருமாளின் அருளைப் பெற்றுச் செல்வர்.

கருட வாகனப் புறப்பாட்டில் உற்ஸவர் நவநீதகிருஷ்ணன்

மேலும்,  கிருஷ்ண ஜயந்தி உற்சவம், புரட்டாசி மாதத்தில் 10 நாள்கள் நடைபெறும் நவராத்திரி உற்சவம், பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம் போன்றவை வெகு விமரிசையாக ஆண்டுத் திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளில் லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், மார்கழி மாதத்தில் லட்சார்ச்சனையும், வைகுந்த ஏகாதசி திருவிழாவில் கருட வாகனப் புறப்பாடும் நடைபெறும்.

இதையும் வாசிக்கலாம்: சனி தோஷத்துக்கு தீர்வு காணும் வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள்

வெள்ளிக்கவச அலங்காரத்தில் கருடன்

மார்கழி மாதத்தின் அனைத்து நாள்களிலும் அதிகாலையிலேயே பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் இப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பிப்பர்.

சிறப்பு அலங்காரத்தில் உற்ஸவர் நவநீதகிருஷ்ணன்

சக்கரத்தாழ்வாருக்கு சித்திரை நட்சத்திரத்தன்றும், சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷ காலங்களில் யோக நரசிம்ம சுவாமிக்கு திருமஞ்சனமும் நடைபெறும். மேலும் பிரதி மாதத்தில் அமாவாசையன்று மூலவர் திருமஞ்சனமும், திருவோணம் நட்சத்திரத்தில் தடைகளை உடைக்கும் சுதர்சன ஹோமமும் நடத்தப்பட்டு வருகிறது. இவைத் தவிர, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்களின் உதவியுடன் நாள் முழுவதும் பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது.

பிரம்மோத்சவம் - சிறப்பு அலங்காரத்தில் உற்ஸவர் நவநீதகிருஷ்ணன்

இதையும் வாசிக்கலாம்: மங்கள வாழ்வு அருளும் கூகூர் குகேசுவரர் திருக்கோயில்

எப்படிச் செல்வது?

திருச்சியிலிருந்து சுமார் 39 கி.மீ. தொலைவில் முசிறி நகரம் அமைந்துள்ளது. மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து சேலம், நாமக்கல் வழித்தடங்களிலும் செல்லும் புறநகர்ப் பேருந்துகளில் முசிறி சென்றடையலாம்.

சிறப்பு அலங்காரத்தில் உற்ஸவர் நவநீதகிருஷ்ணன்

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் முசிறியில் இறங்கி, கோயிலுக்குச் செல்லலாம். கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் போன்ற மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்  குளித்தலையில் இறங்கி, அங்கிருந்து முசிறிக்கு நகரப் பேருந்துகளில் வந்து சேரலாம்.

தீப அலங்காரத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள்

சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர் போன்ற வடமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நெ.1.டோல்கேட் வந்து, அங்கிருந்து சேலம், நாமக்கல் வழித்தடத்தில் செல்லும் புறநகர்ப் பேருந்துகள், நகரப் பேருந்துகளில் முசிறி வந்தடையலாம். 

புளியோதரைத் திருப்பாவாடைத் திருநாள் வழிபாடு

திருச்சி விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற பகுதிகளிலிருந்து முசிறிக்கு கார், வேன் போன்ற வாகனங்களின் வசதி உண்டு. முசிறி பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு ஆட்டோ வசதி உண்டு. 

இதையும் வாசிக்கலாம்: ராகு-கேது தோஷம் நீக்கும் கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
குதிரை வாகனத்தில் உற்சவர் நவநீதகிருஷ்ணன்

கோயில் நடைதிறந்திருக்கும் நேரம்

இக்கோயில் வார நாள்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். சனிக்கிழைகளில் காலை 7 முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 சுதர்சன ஹோமம்

தொடர்புக்கு: முசிறி லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலுக்கு வருபவர்கள், பாலாஜி பட்டரை 89035 54426 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் வாசிக்கலாம்: எண்ணியதைத் தரும் திண்ணியம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
ஆஞ்சனேயர் சுவாமி

தொடர்பு முகவரி

அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில்,
அக்ரஹாரம், முசிறி, 
முசிறி வட்டம்,
திருச்சி மாவட்டம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT