பரிகாரத் தலங்கள்

பித்ருதோஷம் போக்கும் ஆவூர் பசுபதீஸ்வரர் கோயில்!

சி.ராஜசேகரன்

புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார்திங்கள்
கண்ணிய ரென்றென்று காதலாளர் கைதொழு தேத்த இருந்தவூராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாடல றதஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே

என திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் ஆவூர் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில். 

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 21 ஆவது சிவத்தலமாகும். வசிஷ்டரின் சாபம் பெற்ற காமதேனு, பிரம்மனின் அறிவுரைப்படி வழிபட்டு சாபம் நீங்கிய தலமாகும். தசரத மன்னரின் பித்ரு தோஷம் போக்கிய தலம்.

கோச்செங்கட்சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். 

ஆவூர் பசுபதீஸ்வரர் கோயிலின் முழுத் தோற்றம்  

சிறப்புமிக்க இரண்டு அம்மன்கள்

இக்கோயிலில், மூலவராக பசுபதீஸ்வரர் சுயம்பு லிங்க வடிவில் அமைந்துள்ளார். இவர் அஸ்வந்தநாதர், ஆவூருடையார் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இதேபோல், மங்களாம்பிகை, பங்கஜவள்ளி ஆகிய அம்மன்கள் அருள்பாலிக்கின்றனர். தசரத மன்னர், சுயம்பு மூர்த்தியாகிய பசுபதீஸ்வரரை பூஜை செய்து, பரிவார மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து பேரு பெற்ற தலமாகும். இதன் தல விருட்சம் அரச மரம் ஆகும். 

 மங்களாம்பிகை |  பங்கஜவள்ளி 

பூஜை காலத்தில் சிவபெருமானுடன் இருக்க அம்பாள் தேவை என எண்ணி, ஸ்ரீ பங்கஜவள்ளி அம்பாளை பிரதிஷ்டை செய்தார் தசரதர். மேலும், சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால், அவருக்கு அபிஷேகம் செய்யும் வகையில் குளம் வெட்டப்பட்டது. அப்போது, குளத்திலிருந்து ஸ்ரீ மங்களாம்பிகை எனும் அம்மன் கிடைத்தார். இந்த அம்மனுக்கு நெற்றிக்கண் இருப்பது சிறப்புடையது. இந்த அம்மனும் இதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். இந்த ஆலயத்தில், மங்களாம்பிகை அம்மனே சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார். 

கொடி மரம்

கோயிலின் அமைப்பு 

நஞ்சை நிலங்களுக்கு நடுவில் இந்த திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருக்கோயில் முன்பு ராஜகோபுரம் சுமார் 70 அடி உயரத்தில், 5 கண்களை உடையதாக, உச்சியில் நீல மின் விளக்குடன் விளங்குகிறது. முன்கோபுரத்தை அடுத்து உள்ளே வாகன மண்டபம் உள்ளது. உள்பிரகாரத்தில் தெற்கில் தெட்சிணாமூர்த்தியும், மேற்கில் நிருதி கணபதியும், வில்லுடன் கூடிய சுப்பிரமணியர், கெஜலெட்சுமி மற்றும் வடக்கில் வில்வமரமும் அதன் பாதத்தில் நாகமும் உள்ளன. 

வில்லுடன் சுப்பிரமணியர்

மேலும், வடக்கில் துர்கை, விஷ்ணு துர்கை என இரு துர்கையம்மன்கள் சிறப்புடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கிழக்கில் யாகசாலை மற்றும் நவகிரக சந்நதி ஆகியவை அமைந்துள்ளன. நடுமண்டபம் உயர்ந்த மேடையாக கட்டுமலையாக சுமார் 30 அடி உயரத்தில் உள்ளது. இந்த மண்டபத்துக்குச் செல்ல, தெற்கேயுள்ள 24 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். அதன் முன்னே நடராஜர், விநாயகர் சன்னதி ஆகியவை உள்ளன. 

விநாயகர்

உள்மண்டபத்தில் மூலவர் பசுபதீஸ்வரர், இறைவி ஸ்ரீ மங்களாம்பிகை, ஸ்ரீ பங்கஜவள்ளி என இரண்டு அம்மன்கள் தனித்தனி சன்னதியிலும் காட்சி தருகின்றனர். இதேபோல், சிறப்பு மிக்க பஞ்ச பைரவர்களும் இங்கு காட்சியளிக்கின்றனர். 

தெஷ்ணாமூர்த்தி

சாபம் நீங்கப் பெற்ற காமதேனு

வசிஷ்ட மாமுனிவர் மிகப்பெரிய யாகம் செய்ய ஏற்பாடு செய்தார். அந்த யாகத்துக்கு பசும்பால் தேவைப்பட்டதால், அவர் காமதேனுவை அழைத்தார். ஆனால், காமதேனு வர மறுக்க, கோபமடைந்த வசிஷ்டர், காமதேனுவுக்கு சாபமளித்தார். அந்த சாபம் நீங்க வேண்டுமானால், இங்கு வந்து இறைவனை மனமுருகி வழிபாடு செய்தால் நீங்கும் என அசரீரி கேட்கிறது. 

துர்கை

அதன்படி காமதேனு, பசு வடிவம் கொண்டு அருகில் உள்ள ஏரி என்ற ஊரில் நூல் ஏணி வழியாக பூலோகத்துக்கும், கைலாயத்துக்கும் ஏறி இறங்கி, அதன்பிறகு கழிநீர்குடி (கல்விகுடி) என்ற ஊரில் கழிநீர் குடித்து, மூச்சுக்காடு (ஊத்துக்காடு) என்ற ஊரில் மூச்சுவிட்டு, சிரமபரிஹாரம் செய்து, அதன் வழியாக ஆவூர் வந்து இறைவனை வழிபட்டு, பூஜை செய்ததால் காமதேனுவின் சாபம் நீங்கியது. 

ராஜகோபுரம் 

பசு என்பது மாட்டையும், பதி என்பது சிவபெருமானையும் குறிப்பதால் இத்தல இறைவன் பசுபதீஸ்வரர் எனும் சிறப்பைப் பெற்றுள்ளார். மேலும், ஆ என்பது பசுவைக் குறிப்பதாலும், காமதேனு வழிபட்டதாலும், இவ்வூர் பசுபதீச்சரம் என்றும் ஆவூர் என்றும் அழைக்கப்படுகிறது.

இறைவனை வழிபட்டவர்கள்

ஒருமுறை பராசக்தி தவம் செய்வதற்காக இங்கு வந்தார். அப்போது இந்த இடம் வனமாக காட்சியளித்தது. அங்கு வந்த தேவர்கள் மரம், செடி, கொடிகளாக மாறி பராசக்தியை வழிபட்டு வந்தனர். பராசக்தியின் தவத்துக்கு மகிழ்ந்த சிவபெருமான் ஜடாமுடியுடன் காட்சி தந்ததால், இத்தல இறைவனுக்கு கவர்தீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

மண்டபத்துக்குச் செல்லும் படிக்கட்டு

இந்த வனத்தின் பெருமையை காமதேனுவின் கன்றான பட்டி என்ற பசு அறிந்தது. உடனே, அங்கு ஒரு லிங்கம் அமைத்து தனது பாலால் அபிஷேகம் செய்தது. அந்த பசுவுக்கு காட்சியளித்த சிவபெருமானிடம், அந்த தலத்திலேயே நிரந்தரமாகத் தங்குமாறு அந்த பசு கேட்டுக் கொண்டது. பசு வழிபட்ட தலமாதலால் இறைவன் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

பல ரிஷிகளும் தவமிருந்த தலம் இது. பிரம்மன், சப்தரிஷிகள், கணங்கள், தேவர், கந்தருவர், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், திருமால், தசரதர் முதலியோர் வழிபட்டு அருள்பெற்ற தலம். தர்மத்துவஜன் என்னும் அரசன் பிரமதீர்த்தத்தில் மூழ்கிக் குட்டநோய் நீங்கப் பெற்ற தலம். 

பஞ்ச பைரவர் சிறப்பு

பசுபதீஸ்வரர் கோயிலில் மங்களாம்பிகை அம்மனை பிரதிஷ்டை செய்யும்போது, ஹோமத்திலிருந்து பஞ்ச பைரவர் வெளிப்பட்டுள்ளார். அவர்களையும் பிரதிஷ்டை செய்து ஆராதனைகள் செய்தால் பித்ருசாபம் நீங்கப் பெறும் என அசரீரீ ஒலித்துள்ளது.

பஞ்ச பைரவர்

அதன்படி, 8 திருநாமங்கள் 5 உருவங்களாக வெளிவந்த பஞ்ச பைரவரும் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டனர். பஞ்ச பைரவரை வழிபட்டதன் மூலம் தசரத மன்னரின் பித்ருசாபம் நீங்கியது. எனவே, இத்தலம் பித்ருசாபம் நிவர்த்தி தலமாக விளங்குகிறது.

பஞ்ச பைரவர் மந்திரம்

சூழமும் கத்தியும் சவுக்கு கயிறும் தண்டமும் கைகளில் கொண்டவரும், ஆதிமூலமானவரும், சாம்பல் பூசிய கரிய திருமேனி கொண்டவரும், தேவர்களும் முதன்மையானவரும் அழிவில்லாதவரும், நோய் போன்ற துன்பங்களுக்கு சிறந்த தாண்டவங்களை விரும்பி ஆடுபவராகிய எமை ஆளும் பஞ்ச பைரவரை போற்றுகிறேன். 

லிங்கோத்பவர் 

பஞ்ச பைரவர் தேய்பிறை அஷ்டமி வழிபாடு, பலன்கள்

மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி நாளில் பஞ்ச பைரவரை வழிபாடு செய்தால், சத்ருக்கள் பகை நீங்கப் பெறுவர். குழந்தைப்பேறு வேண்டுவோருக்கு மக்கள் பேறு கிடைக்கும். யம பயம், கடன் தொல்லை ஆகியவை நீங்கி நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். திருமணத் தடை அகலும். நினைத்த காரியம் கை கூடும். பில்லி சூனிய ஏவல்கள் நீங்கும். தீராத நோய்கள் குணமாகும். 

கோயில் பிரகாரம்

பஞ்ச பைரவர் ஹோம கட்டண விவரம்

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் காலை 10 மணி முதல் பஞ்ச பைரவருக்கு சிறப்பு ஹோம அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு தோஷப் பரிகாரம் செய்து வருகின்றனர்.
மேலும், ஒவ்வொரு அமாவாசை, பெüர்ணமி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
பஞ்ச பைரவருக்கு அபிஷேகம் மற்றும் ஹோம கட்டண சீட்டுகள் கோயில் அலுவலகத்தில் உள்ளன. ஹோம சீட்டு ரூ.150, அபிஷேக சீட்டு ரூ. 250 ஆகும்.

கோயில் பிரகாரம்


எப்படிச் செல்வது?

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானிலிருந்து கோவிந்தகுடி வழியாக ஆவூர் செல்லலாம். கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்துகள் இவ்வழியாகச் செல்கின்றன.

கோயில் முகவரி

செயல் அலுவலர், அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர், திருவாரூர் மாவட்டம். தொலைபேசி எண் 04374 267175, 9159009614. இ-மெயில்: eopasupatheeswararavoor@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT