பரிகாரத் தலங்கள்

கால சர்ப்ப தோஷம் நீக்கும் கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் கோயில்

தினமணி

நவக்கிரகங்களில் ஒருவரான கேது பகவான் அனுக்ரஹ மூர்த்தியாக காட்சியளித்து, கேது தோஷ நிவர்த்தி அளிக்கும் தலமாக விளங்குகிறது மயிலாடுதுறை மாவட்டம், கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள அருள்மிகு நாகநாதர் கோயில்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலப் பழமையும், சாலப் பெருமைகளும் கொண்டதாக உள்ள ஆன்மிகத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது, கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு நாகநாதர் கோயில். இங்கு இறைவன் ஸ்ரீ நாகநாதசுவாமி என்ற திருப்பெயருடன் சிவலிங்கத் திருமேனியாக காட்சியளிக்கிறார். அன்னை ஸ்ரீ சௌந்தரநாயகி என்ற திருப்பெயருடன் அருளுகிறார்.

நவக்கிரகங்களில் ஒருவரான ஸ்ரீ கேது பகவான் இத்தலத்தில், தனி சன்னதிக் கொண்டு அருள்மிகு நாகநாத சுவாமியை வணங்கிய நிலையில், அனுக்கிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார். இத்தலம் நவக்கிரகத் தலங்களில் கேது தலமாக விளங்குகிறது.

கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்.

கேது பகவான் பிறப்பால் அசுர வம்சத்தைச் சேர்ந்தவராவார். இவரது இளமைப் பெயர் ஸ்வர்பானு. காசிப முனிவரின் மகன் விப்ரசித்து கேது பகவானின் தந்தை. தாய் சிம்கிகை. இதனால், சம்கிகேயன் என்றொரு பெயரும் கேது பகவானுக்குக்  குறிப்பிடப்படுகிறது.

கேது பகவான்
 
தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தபோது, மோகினி உருவில் அங்கு தோன்றிய திருமால், அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காதவாறு தேவர்களுக்கு மட்டும் பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த ஸ்வர்பானு தேவ வடிவமெடுத்து, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே சென்று அமர்ந்து, அமிர்தம் பெற்று உண்டார்.

இதைக் கவனித்த சூரியனும் சந்திரனும் அசுரனான ஸ்வர்பானுவுக்கு அமிர்தம் கிடைத்திருப்பதை திருமாலிடம் தெரிவித்தனர். திருமால் உடனடியாக ஸ்வர்பானுவின் தலையில் தாக்கினார். இதில், ஸ்வர்பானுவின் உடல் வேறாகவும், தலை வேறாகவும் இரண்டு துண்டுகளானது.

இதையடுத்து, தலை பாகமான வைப்ரசித்தி பிரம்மனை துதித்து பாம்பு உருவத்துடன் ராகுவாக நிலை பெற்று, நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்கும் அருள் பெற்றது. உடல் பகுதி, பரமனை வழிபட்டு பல உருக்கள் பெரும் பாக்கியத்தையும், கேது என்ற பெயருடன் நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்கும் அருளையும் பெற்றது.  கதிர்ப்பகை, சிகி, செம்பாம்பு போன்ற பெயர்களும் கேதுவுக்குக் குறிப்பிடப்படுகின்றன.

ஞானக்காரகன்

கேது பகவான் ஞானகாரகனாக அறிவு, முக்தி போன்றவற்றுக்கு பிரதான கிரகமாகக் கருதப்படுகிறார்.  மனிதர்களின் அனிச்சை செயல் ஒவ்வொன்றுக்கும் இவரே காரகனாக விளங்குகிறார்.

ஶ்ரீ கேது பகவான்.

இவைத் தவிர, தாய்வழி பாட்டனார், பாட்டியார், பெருந்தவம், புனித நீராடல், கட்டடத் தொழில், அயல்நாட்டு வேலைவாய்ப்பு, கடின உழைப்பு, மருத்துவம், கூடா நட்பு, கல், காயம், வாயு, மெளன விரதம், பாம்பாட்டி, மான், ஆடு, நாய், ஒட்டகம், கழுதை, கோழி, கோட்டான், பருந்து, பாம்பு, புழு, கொசு, மூட்டைப்பூச்சி, கால், இந்திரிய நாட்டம், மயக்கம், வயிற்று வலி, குட்டம், வலி,  சுரம், தோல், வியாதி, விஷக்கடி, நரம்பு மண்டலம், மாந்திரீக வித்தை ஆகியவற்றுக்கும், விநாயகர், சிவபெருமான், காளி, சண்டி, வழிபாட்டுக்கும் காரகனாகக் குறிப்பிடப்படுகிறார்.

நிழல் கிரகமாக விளங்கும் கேது பகவான் நவக்கிரக வரிசையில், வடமேற்கு திசை நோக்கிக் காட்சியளிக்கிறார். கிரக பெயர்ச்சியில் வலமிருந்து இடமாக பெயர்ச்சி ஆகக் கூடியவராக உள்ளார்.  ஜோதிட சாஸ்திரப்படி இவருக்கு சொந்த வீடு இல்லாததால், எந்த கிரகத்தின் வீட்டில் தங்குகிறாரோ அந்தக் கிரக அதிபதியின் பலனை அளிக்கக் கூடியவர் ஆவார்.

செந்நிற ஆடைகளும், பல வண்ண மலர்களும் இவருக்கு உகந்தது. இவருக்கான தானியம் கொள்ளு. சுவை - புளிப்பு. ஆசனம் - கொடி வடிவிலானது. நவரத்தினங்களில் இவருக்கானது வைடூரியம். கேதுவை போல கெடுக்கக் கூடியவர் இல்லை என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டாலும், கேது பகவான் இரக்கக் குணம் கொண்டவர் ஆவார். இவரை வழிபடுவோருக்கு சொர்ண லாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வாசுகியின் தவம்

மந்திர மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைந்தபோது, வலி பொறுக்காத வாசுகி பாம்பு நஞ்சை கக்கியது. அந்தக் கொடிய ஆலகால விஷத்தைக் கண்டு தேவர்களும், அசுரர்களும் அஞ்சி நடுங்கி சிவபெருமானை வேண்டினர். இதையடுத்து, சிவபெருமான் வாசுகி பாம்பு கக்கிய நஞ்சை எடுத்து உண்டார். அப்போது, உமையன்னை பார்வதி தேவி நஞ்சு உள்ளே போகாதவாறு தடுக்க, அந்த நஞ்சு சிவபெருமானின் கண்டத்தில் தங்கியது. இதனாலேயே சிவபெருமானுக்கு நீலகண்டர் என்ற திருப்பெயர் குறிப்பிடப்படுகிறது.

அருள்மிகு நாகநாதசுவாமி.

மிகுந்த சிரமத்துடன் பாற்கடலை கடைந்தும் தங்களுக்கு அமிர்தம் கிடைக்காததால் விரக்தி அடைந்த அசுரர்கள்,  வாசுகி பாம்பை பந்து போல சுருட்டி வீசி எறிந்தனர். இதனால், வாசுகி பாம்பு கடற்கரை அருகே உள்ள ஒரு மூங்கில் காட்டில், உடல் நைந்த நிலையில் விழுந்தது. பின்னர், அது உயிர்ப் பெற்றது. இருப்பினும், தன் நஞ்சை சிவபெருமான் உண்ணும் நிலை ஏற்பட்டதற்காக மனம் வருந்திய வாசுகி பாம்பு, அந்த மூங்கில் காட்டிலேயே தவம் இயற்றியது.

இந்த தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், வாசுகிக்குக் காட்சியளித்தார். அப்போது, தன் பாவத்தைப் பொருத்தருள வேண்டிய வாசுகி, தான் தவமியற்றிய மூங்கில் காட்டில் சிவபெருமான் கோயில் கொண்டு, கேது கிரக தொல்லைகளை நிவர்த்தி செய்தருள வேண்டுமென வேண்டியது. வாசுகியின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் மூங்கில் காட்டில் கோயில் கொண்ட இடமே கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு நாகநாதர் கோயில் ஆகும்.

திருக்கோயில் அமைப்பு

அருள்மிகு சௌந்தரநாயகி அம்பாள்.

வாசுகிக்கு அளித்த வரத்தின்படி, கேது தோஷ நிவர்த்தி அளிக்கும் மூர்த்தியாக ஶ்ரீ நாகநாதர் கிழக்குத் திசை நோக்கி காட்சியளிக்கிறார். அம்பாள் அருள்மிகு சௌந்தரநாயகி தென்திசை நோக்கி தனி சன்னதியில் காட்சியளிக்கிறார்.  ஶ்ரீகேது பகவான் சிவபெருமானை நோக்கி கரம் கூப்பிய நிலையில், மேற்கு திசை நோக்கி, அனுக்கிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

கோயிலின் மேற்கு பிராகாரத்தில் ஶ்ரீ விநாயகர், வள்ளி, தெய்வசேனா சமேதராக ஶ்ரீ சுப்பிரமணியர், துர்கை, ஶ்ரீ லெட்சுமி, ஶ்ரீ நாராயணர், மகேஸ்வரி, கஜலெட்சுமி ஆகியோர் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கின்றனர். கோயிலின் கிழக்கு பிராகாரத்தில் ஶ்ரீசனீஸ்வரர், பைரவர், சம்பந்தர், நாகர், சூரியன் ஆகியோர் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்கின்றனர்.

வாசுகி தவமியற்றிய மூங்கில் காட்டில் அமைந்த தலம் என்பதால் மூங்கில்,  இத்தலத்தின் தலவிருட்சமாக உள்ளது. கோயிலின் கிழக்குப் புறத்தில் வாசுகி தவமியற்றிய மூங்கில் தோப்பு உள்ளது. இடைப்பட்ட பகுதியில் கோயிலின் தீர்த்தமான நாகதீர்த்தக் குளம் அமைந்துள்ளது. நாகதீர்த்தத்தின் மேற்குக் கரையில் நாகர் பிரதிஷ்டையுடன் அரசும் வேம்பும் உள்ளன.

கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்.

பரிகாரப் பூஜை

இத்தலம், கேது தோஷ நிவர்த்தி தலமாகவும், கால சர்ப்ப தோஷம் நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. இங்கு, அருள்மிகு நாகநாத சுவாமி மற்றும் ஶ்ரீசௌந்தரநாயகி தாயாரை வழிபட்டு 7 முறை வலம் வந்து,  ஶ்ரீகேது பகவானுக்கு பரிகார பூஜை மேற்கொண்டால் கேது தோஷ, நாக தோஷ நிவர்த்தி கிட்டுகிறது. நரம்பு மண்டல நோய் உள்பட பல்வேறு நோய்களும் விலகுகின்றன. தினமும் எமகண்டம் மற்றும் ராகு காலத்தில் கேது பகவானுக்கு அபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன.  நாக தோஷம் உள்ளவர்கள், கோயிலின் எதிரே உள்ள அரசும், வேம்பும் உள்ள மேடையில் நாக பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர்.

கேது தோஷ பரிகாரத்தில் பங்கேற்பவர்களுக்குக் கோயில் பிரசாதமாக விபூதி, குங்குமத்துடன் உலர் பொடி ஒன்றும் வழங்கப்படுகிறது. பரிகாரம் செய்து கொள்வோர் தொடர்ந்து 7 நாள்கள் அசைவம் தவிர்த்து, போகம் தவிர்த்து, கோயில் விபூதி, குங்குமத்தை பக்தி சிரத்தையுடன் தரித்துக் கொண்டு, பிரசாதத்துடன் அளிக்கப்பட்ட உலர் பொடியை உண்ண வேண்டும். 7-ஆம் நாளின் நிறைவில், அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, தேங்காய் (சிதறு காய்) உடைத்து வழிபாட்டை நிறைவு செய்தால், கேது தோஷ பரிகாரம் நிவர்த்தியாவது உறுதி என்பது இத்தல ஐதீகம்.

கோயிலின் எதிரே நாகர் பிரதிஷ்டை செய்யப்படும் இடம்

இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 

கோயில்நடை திறந்திருக்கும் நேரம்

தினமும் காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. பிறகு பிற்பகல் 3.30 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

வழித்தடம்

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே உள்ள தர்மகுளத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை, சீர்காழியிலிருந்து வாணகிரி செல்லும் பேருந்துகளில் பயணித்தால் கீழப்பெரும்பள்ளம் பகுதியை அடையலாம் அல்லது பூம்புகார் செல்லும் பேருந்துகளில் பயணித்து, தர்மகுளத்தில் இறங்கி அங்கிருந்து வாணகிரி பேருந்து மூலம் கீழப்பெரும்பள்ளம் சென்றடையலாம்.

விமான மார்க்கமாக வருபவர்கள், திருச்சி விமான நிலையம் வந்தடைந்து அங்கிருந்து பேருந்து அல்லது ரயில் மார்க்கமாக மயிலாடுதுறை வந்து, பூம்புகார் அல்லது வாணகிரி பேருந்துகள் மூலம் இவ்வூரை அடையலாம்.

முகவரி

அருள்மிகு நாகநாதசுவாமி கோயில்,
கீழப்பெரும்பள்ளம்,
தரங்கம்பாடி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம்.
தொடர்பு எண் : 04364 260424.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்!

தூத்துக்குடி: பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

SCROLL FOR NEXT