பரிகாரத் தலங்கள்

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில்

கு. வைத்திலிங்கம்

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், திருத்தியமலையில் அமைந்துள்ள அருள்மிகு தாயின்நல்லாள் உடனுறை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில், பிரம்மஹத்தி, சத்ருதோஷம் போக்கும் பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. 

ஒருகாலகட்டத்தில் பரந்துவிரிந்து விஸ்தாரமான நிலப்பரப்புடன் மலைக் குன்றுகளால் சூழப்பட்டிருந்த ஊர் திருத்தியமலை. இத்திருக்கோயிலுக்கு திருதேசமலை, திருத்தேஜோமலை என்று வேறு பெயர்களும் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. 

திருச்சியிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலுள்ள திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது.

தேவ அர்க்கவல்லி புஷ்பத்தை சிவபெருமான் சூடிக் கொண்டது, பிருகு, அகத்தியர் உள்ளிட்ட எண்ணிலடங்கா மகாமுனிவர்கள் வழிபட்டது, சூரியன் தனித்து வழிபட்டது, முருகப்பெருமான் சத்ரு சம்ஹார மூர்த்தியாகக் காட்சியளிப்பது, தட்சிணாமூர்த்தியின் பாத தரிசனம், பிரிந்த தம்பதிகளை மனம் ஒத்துவைத்தல், நட்சத்திர தோஷ நிவர்த்தி போன்ற பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. 

திருத்தியமலை  தாயின் நல்லாள் உடனுறை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில் நுழைவுவாயில்

தல வரலாற்றுச் சிறப்புகள்

ஒரு மகாசிவராத்திரி நாளில் நாரதர் தேவலோகத்திலுள்ள ரிஷிகளிடம் பூலோகத்தில் ஒரே ஒருமுறை பூக்கும் 'தேவ அர்க்கவல்லி' என்ற மலரினால் சிவபெருமானை பூஜித்தால், உலகிலுள்ள அனைத்து மலர்களையும் கொண்டு பூஜித்த பலன் கிடைக்கும் என்று கூறினார்.

இதனால் அனைத்து முனிவர்களும் சிவ பூஜையில் சிறந்தவரான பிருகு மகரிஷியைத் தேர்வு செய்து, அம்மலரைக் காண வேண்டி கேட்டுக் கொண்டனர். அவ்வாறே பிருகு மகரிஷியும் தேவ அர்க்கவல்லி மலரைக் காண பூவுலகில் பல இடங்களில் தவம்  செய்தார். 

   மலைக்கோயில் செல்வதற்கான படிக்கட்டுகள் 

இவ்வாறாக சிங்கம்புணரியை அடுத்த திருக்களம்பூரில் தவம் செய்தபோது, அங்கு ஒரு வாழை மட்டையானது பிரான்மலை, குளக்குடி, நெடுங்குடி வழியாக அந்த முனிவருக்கு வழிகாட்டி, இறுதியாக திருத்தியமலை வந்தவுடன் அந்த வாழைமட்டை மறைந்தது.

அந்த நேரத்தில் திருத்தியமலையில் மாமுனிவர் அகத்தியரும், அவரது துணைவியார் லோபமாதாவும் மலையைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர். பிருகு மகரிஷி, அகத்திய முனிவரிடம் தேவ அர்க்கவல்லி மலரின் ரகசியத்தைக் கேட்டறிந்தார். மீண்டும் பிருகு மகிரிஷி சிவலோகத்துக்குச் சென்று, தாம் அம்மலரைக் காண வேண்டி தவமிருக்க ஆரம்பித்தார்.

 திருக்கோயில் வெளிப் பிரகாரத்தில் அமைந்துள்ள சுனை தீர்த்தம் 

சிறிது காலத்துக்குப் பிறகு பிருகு முனிவர், மீண்டும் திருத்தியமலை வந்தடைந்தார். அப்போது அங்கிருந்த அகத்திய முனிவரிடம் மேலும் சில ரகசியங்களையும் அவர் கேட்டறிந்தார். 

அப்போது மலையின் மீது மிகப்பெரிய மரமும், அதில் ஆயிரக்கணக்கான பறவைகளும் காணப்பட்டன. அகத்தியர் தாம் கிரிவலம் வந்தபோது இதுபோன்ற மரமும் பறவைகளும் இல்லையென்றும், எனவே ஒரு மகா அதிசயம் நடக்க இருப்பதாக லோபமாதாவிடமும் பிருகு முனிவரிடமும் கூறினார்.

அவ்வாறே, மகா சிவராத்திரியான அந்த நாளில் அந்த மரத்திலிருந்த பறவைகள் எல்லாம் ஓம் நமச்சிவாய என்று கூறியவாறு பறந்து சென்றதை அவர்கள் கண்டனர்.  

முருகப்பெருமான் சன்னதி கோபுரம்

அகத்திய மாமுனிவர் பறவைகளின் பாஷையை அறிந்தவர். ஆதலால், தேவ அர்க்கவல்லிப் பூவை அப்பறவைகள் கண்டுகொண்டதால், அவை சிவலோகம் செல்வதாகக் கூறினார். பறவைகள் மட்டும் அம்மலரைக் கண்டுகொண்டதால், பிருகு முனிவர் சிறிது வருத்தப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அகத்திய முனிவர் முதல் முறையாக பிருகு முனிவரையும், லோபமாதாவையும் திருத்தியமலைக் குன்றின் மீது அழைத்துச் சென்றார். அங்குள்ள சுனைநீரில் தேவ அர்க்கவல்லி பூவின் பிம்பத்தை அவர்கள் மூவரும் கண்டனர்.

 அருள்மிகு ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில் கருவறைக் கோபுரம் 

இதை கண்டு மூவரும் மகிழ்ச்சியுற்றபோது சிவபெருமான், தேவ அர்க்கவல்லி என்ற பூவை சூடிக் கொண்டு சுயம்புவாக அகத்தியருக்கும், லோபமாதாவுக்கும், பிருகு முனிவருக்கும் காட்சியளித்ததாகத் தல வரலாற்றுத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

பழமைவாய்ந்த திருக்கோயில்

திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததெனக் கூறப்படுகிறது. ஆதித்ய சோழர், விக்ரமசோழர் மற்றும் இரண்டாம்  ராஜேந்திர சோழர்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டு, இறுதியாக 1883-ஆம் காலகட்டத்தில் சென்னையை ஆண்டு வந்த சென்னப்ப நாயகர் மற்றும் நக்கன நாயக்கரால் புதுப்பிக்கப்பட்டது. இக்கோயிலிலிலுள்ள கல்வெட்டுகள், சோழர் காலத்தின் அளவை முறைகள் மற்றும் கோயிலின் சிறப்பு முதலியவை குறித்து எடுத்துரைக்கின்றன.

  கோயிலின் வெளிப் பிரகாரப் பகுதி    

இறைவன் ஏகபுஷ்ப பிரியநாதர்

திருத்தியமலையில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஏகபுஷ்ப பிரியநாதர் என்றழைக்கப்படுகிறார். ஏகம் என்றால் ஒன்று பொருள். அதாவது தேவ அர்க்கவல்லி என்ற ஒற்றை புஷ்பத்தைச் சூடிக்கொண்ட இறைவன். மலைக் குன்றின் மீது அமைந்துள்ள இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் ஏகபுஷ்ப பிரியநாதர் சுயம்பு மூர்த்தியாவர். இந்த இறைவன் சற்று சாய்ந்தவாறு காட்சியளிப்பதற்கும் வரலாற்றுக் கதை இருக்கிறது. அதாவது பக்தர்கள் அணிவிக்கும் மலரை விரும்பி ஏற்றுக்கொள்கிறார். 

திருத்தியமலை அருள்மிகு ஏகபுஷ்ப பிரியநாதர் சுவாமி 

அதனாலேயே சற்றுச் சாய்ந்த நிலையில் அவர் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலிலுள்ள லிங்கத்துக்கு திங்கள்கிழமைதோறும் வில்வ இலைகளைக் கொண்டும், ஆவுடையாருக்குத் துளசியாலும் அர்ச்சனை செய்து வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நலன் பெறலாம் என்பதும் ஐதீகம்.

தொடர்ந்து 11 வாரங்கள் இவ்வாறு செய்தால் பக்தர்கள் உரிய பலனைப் பெறுவர். தீர்வு காணப்படாத பிரச்சனைகளுக்கு இவ்வாறு செய்வதன் மூலம் தீர்வு கிடைக்கும். எண்ணிய செயல்கள் அனைத்தும் நிறைவேறும். 

 கருவறைக்கு எதிரில் அமைந்துள்ள நந்தியெம்பெருமான் 

இத்திருக்கோயில் இறைவனைக் காண நாம் படியேறி மலை மேல் சென்றுதான் வழிபட வேண்டும்.

இறைவி தாயின் நல்லாள்

இக்கோயிலில் தனிசன்னதி கொண்டு எழுந்தருளியுள்ள இறைவிக்குத் தாயின் நல்லாள் எனப் பெயர். இந்த அம்பிகை ஒரு தாயைவிட அதிகம் கருணை காட்டுவதால், தாயின் நல்லாள் என்ற பெயர் சூடிக் கொண்டு இங்கு காட்சியளிக்கிறார். இந்த அம்மனுக்கு மாத்ரு அதீத கருணாம்பிகா, சுருள் குழல் நாயகி என்ற பெயர்களும் உண்டு. 

இறைவி  அருள்மிகு தாயின் நல்லாள்

பெண்களால் ஏற்படும் சாபங்கள் நீங்க இத்திருக்கோயில் இறைவி தாயின் நல்லாளை வழிபட வேண்டும். அவ்வாறு வழிபடும்போது, பெண்களால் விடப்படும் சாபங்கள் அனைத்தும் நீங்கி, விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

இக்கோயிலில் தங்களது தோஷங்கள் நீங்க, பரிகாரமாக கோயில் வளாகத்தில் அரிசி மாவால் கோலமிட்டு, சுவாமி மற்றும் அம்மனை வழிபட வேண்டும்.

பாத தரிசன தட்சிணாமூர்த்தி

பொதுவாக தட்சிணாமூர்த்தி அந்தந்த கோயில்களின் கோஷ்டத்தில் எழுந்தருளுவார். அதன்படியே இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருந்தாலும், பல்வேறு சிறப்புகளைக் கொண்டவராக உள்ளார்.

 சிறப்பு வாய்ந்த பாத தரிசன தட்சிணாமூர்த்தி   

பாத தரிசன தட்சிணாமூர்த்தியாக திருத்தியமலை கோயிலில் அவர் எழுந்தருளியுள்ளார். இவர் கல்விக்கு அதிபதியாக திகழ்கிறார். எந்தவிதமான தேர்வாக இருந்தாலும் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் அவர்கள் சிறப்பு பெறுவர். அத்தகைய சிறப்புடைய தட்சிணாமூர்த்தியை வழிபட ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

உமாமகேசுவரர்

கோயிலின் உள்பிரகாரத்தில் உமாமகேசுவரர் தம்பதி சகிதமாக எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். இவ்வாறு ஒரே சிற்பத்தில் தம்பதி சகிதமாக காட்சியளிப்பது சிறப்புக்குரியது. உமாமகேசுவரரை வந்து வணங்கினால் திருமணத் தடை நீங்கும். அனைத்து தோஷங்களும் நிவர்த்தி பெறும். 

தம்பதி சமேதராய் உமாமகேசுவரர்

இக்கோயில் உள் பிரகார கோஷ்டத்தில் வலம்புரி விநாயகர், விநாயகர்,  செல்வ விநாயகர் எழுந்தருளியுள்ளனர்.  செல்வ விநாயகரை வழிபடுவதன் மூலம் நிரந்தர செல்வம் கிடைக்கும், செல்வம் பெருகும் என்பதும் சிறப்புக்குரியது.

 நாகருடன் எழுந்தருளிய  வலம்புரி விநாயகர், விநாயகர்,  செல்வ விநாயகர் 

மேலும் மகா விஷ்ணு, ஸ்ரீ  பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவர சுவாமிகள் இறைவன் ஏக புஷ்ப பிரியநாதரின் கருவறையைச் சுற்றி கோஷ்ட பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். 

துர்க்கை

மேலும் வள்ளி- தெய்வசேனா சமேதராய் அருள்மிகு சுப்பிரமணியரும் எழுந்தருளியிருக்கின்றனர். 

சிறப்பு வாய்ந்த மகாலட்சுமி - காலபைரவர்

பொதுவாக சிவாலயங்களில் மகாலட்சுமி அல்லது கஜலட்சுமி என ஏதாவது ஒரு லட்சுமி தெய்வம் எழுந்தருளப்பட்டிருக்கும். அந்த வகையில் இக்கோயிலில் ஸ்ரீமகாலட்சுமி கோயிலின் உள் பிரகாரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த லட்சுமிக்கு புஷ்பங்களைச் சாத்தி வழிபட்டால் 16 வகையான செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். 

மேற்கு நோக்கியவாறு காட்சியளிக்கும் கால பைரவர்

மேலும், மகாலட்சுமிக்கு நேர் எதிரில் மேற்கு நோக்கியவாறு காலபைரவர் எழுந்தருளியுள்ளார். இவ்வாறு சிவாலயங்களில் எழுந்தருளுவது அரிதான ஒன்று. அதுவும் இக்கோயிலில் மேற்கு நோக்கியவாறு காலபைரவர் தனி ஆகரஸ பைவரவாகக் காட்சியளிப்பதும் சிறப்புக்குரியது. 

ஸ்ரீமகாலக்ஷ்மி | ஸ்ரீ மகாவிஷ்ணு

விசாலாட்சி சமேதராய் காசி விசுவநாதர்

அகத்திய முனிவர், பிருகு மகரிஷி தியானம் செய்த இத்திருக்கோயில் பகுதியில் அருள்மிகு விசாலாட்சி அம்மன் சமேத காசி விசுவநாதர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இவற்றுக்கு அருகிலேயே நவக்கிரகங்களின் சன்னதியும் அமைந்துள்ளது. 

விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர்

மேற்கு நோக்கியவாறு எழுந்தருளியுள்ள சூரியன்: நவக்கிரகங்களில் ஒன்றான சூரியன், இக்கோயிலில் மேற்கு நோக்கியவாறு தனித் திருமேனியாக எழுந்தருளியுள்ளார். சூரியன் தனித்து வழிபட்ட தலம் என்ற பெருமைக்குரியது இக்கோயில். 

சத்ரு சம்ஹார மூர்த்தியாய் முருகப்பெருமான் சூரனை வதம் செய்து விட்டு, தேவசேனாவை மணந்தது இத்திருக்கோயிலில்தான் என்பது ஐதீகத் தகவலாகும். மேலும் கையில் வேலுடன் சத்ரு சம்ஹார மூர்த்தியாக கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அவர் காட்சியளிக்கிறார். 

முருகப் பெருமான்

இந்த மூர்த்தியை வணங்குவதன் மூலம் தொழில் ரீதியாக நிகழும் பிரச்னைகளுக்குத் தீர்வு, மனக்குழப்பம் நீங்குதல், பயந்த கோளாறு போன்ற பல்வேறு வகையான சத்ரு தோஷங்களைப் போக்கும் வல்லவராக அருள்மிகு முருகப்பெருமான் இங்கு எழுந்தருளியிருக்கிறார். 


கோயில் உள் பிரகாரத்தில் அருள்மிகு வள்ளி - தெய்வசேனா சமேதராய்  காட்சியளிக்கும் சுப்பிரமணியர்

பிரதோஷ நந்திகேசுவரர்

நந்தியெம்பெருமான் இல்லாத சிவாலயங்கள் இல்லை. ஒவ்வொரு கோயிலிலும் நந்தி வெவ்வேறு வகையான இடங்களில் எழுந்தருளியிருப்பார். திருத்தியமலை கோயிலில் பிரதோஷ நந்திகேசுவரராக பெரும் உருவம் கொண்டு இங்கு காட்சியளிக்கிறார். மாதத்தில் இருமுறை பிரதோஷ காலத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. 

 தாயின் நல்லாள் சன்னதிக்கு அருகிலுள்ள பிரதோஷ நந்திகேசுவரர் 

பௌர்ணமி கிரிவலத்தின் சிறப்பு

தாயின் நல்லாள் என்றழைக்கப்படும் அதீத கருணாம்பிகை உடனுறை ஏகபுஷ்ப பிரியநாதரை பௌர்ணமி நாளன்று கிரிவலம் வந்தால் 100 அரசமரம், 1000 வில்வமரம்,  10000 வன்னி மரம்,  1 லட்சம் வேப்பமரம் சுற்றியதன் பலன் கிடைக்கும்.

இத்திருக்கோயிலில் அகத்திய மாமுனிவர், பிருகு மகரிஷி  ஒருகோடி முறை கிரிவலம் வந்து சிவபெருமானை அருளைப் பெற்றதால், இக்கோயிலில் பௌர்ணமி நாளன்று கிரிவலம் சிறப்புக்குரியதாகத் திகழ்கிறது. 

ஸ்ரீ சூரியன் | ஸ்ரீ பிரம்மா

சுனை தீர்த்தம்

சிவாலயங்களில் தல விருட்சம், தல தீர்த்தம் சிறப்புக்குரியதாக இருக்கும். அந்த வகையில் இக்கோயிலில் தல தீர்த்தமாக சுனை தீர்த்தம் உள்ளது. கோயிலின் வெளிப்பிரகாரப் பகுதியில் வற்றாத தீர்த்தமாக இந்த சுனை தீர்த்தம் அமைந்துள்ளது. வெய்யில் காலம், மழைக் காலம் என எக்காலத்திலும் இங்கு தீர்த்தம் வற்றாது காணப்படுவதுதான் தனிச்சிறப்புக்குரியது. இத்திருக்கோயிலின் தல விருட்சமாக வில்வ மரம் திகழ்கிறது. 

கோயிலின் தல விருட்சமான வில்வமரம்

திருவிழாக்கள்

ஆனி மாதத்தில் உத்திர தரிசனம், ஆவணியில் மகா சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் 9 நாள்கள் நடைபெறும் நவராத்திரி வழிபாடு, ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி வழிபாடு, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபம் போன்றவை வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 


கருவறை நுழைவுவாயில் பகுதியில் எழுந்தருளியுள்ள துவாரபாலகரான  ஸ்ரீமுண்டி

இத்திருக்கோயிலில் குடமுழுக்கு விழா பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கோயில் நடைதிறப்பு

இக்கோயில் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். இம்மலைக்கோயிலின் அடிவாரத்தில் ஒருபுறம் ஆலமரத்தடி அய்யனாரும், மற்றொருபுறத்தில் மாரியம்மன் சன்னதியும் அமைந்துள்ளது. சற்றுத் தொலைவில் அக்ரஹார விநாயகரும் எழுந்தருளியுள்ளார். 

எப்படி செல்வது?

திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில் திருச்சியிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் முசிறி வட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வருபவர்கள் கார், வேன் போன்ற வாகனங்களில் வருதல் நலம். பேருந்துகள் இருந்தாலும் அவை குறிப்பிட்ட நேரத்தில்தான் இயக்கப்படும் என்பதால் வேன், கார் போன்ற வாகனங்களில் பக்தர்கள் வரலாம்.

தென் மாவட்டங்கள், மத்திய, வடக்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் திருச்சி மத்திய, சத்திரம் பேருந்து நிலையம், நெ.1. டோல்கேட், நொச்சியம், மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்ஞீலி, மூவானூர், வேங்கைமண்டலம் வழியாக திருத்தியமலைக்குச் செல்லலாம். இதே வழித்தடத்தில் மண்ணச்சநல்லூர் வரை வந்து திருவெள்ளறை, காளவாய்ப்பட்டி, காட்டுக்குளம்,  மூவானூர், வேங்கைமண்டலம் வழியாகவும்,  இதே வழித்தடத்தில் நெ.1 டோல்கேட், நொச்சியம், சிறுகாம்பூர், சித்தாம்பூர், மூவானூர் வழியாகவும் கோயிலை வந்தடையலாம்.

மேலும் சேலம், நாமக்கல், கரூர், கோயம்புத்தூர், திருச்சி, தருமபுரி போன்ற மேற்கு மாவட்டங்ளிலிருந்து வருபவர்கள் முசிறி, தண்டலைப்புத்தூர் வழியாக திருத்தியமலைக்கு வரலாம். ரயில், விமானம் மூலம் வருபவர்களுக்கு ரயில், விமான நிலையத்திலிருந்து கார் மூலம் இந்த வழித்தடங்களில் கோயிலுக்கு வரலாம்.

தொடர்புக்கு

இத்திருக்கோயிலுக்குத் தரிசனம் செய்ய வருபவர்கள், கோயில் குருக்கள் ஆர். ஹரிசுப்ரமணியனை 98655 27538 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி

அருள்மிகு தாயின் நல்லாள் உடனுறை ஏகபுஷ்ப பிரியநாதர் திருக்கோயில்,
திருத்தியமலை,
முசிறி வட்டம்,
திருச்சி மாவட்டம்-621006. 

படங்கள்:  எஸ். அருண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT