பரிகாரத் தலங்கள்

எதிரிகளை வீழ்த்தி அருளும் சிக்கல் சிங்காரவேலவர்

28th May 2021 05:00 AM | எம். சங்கர்

ADVERTISEMENT

 

வானுலா வும்மதி வந்துலா வும்மதில் மாளிகை

தேனுலா வும்மலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்

வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி

ADVERTISEMENT

ஞானமா கந்நினை வார்வினை யாயின நையுமே.

என ஞானசம்பந்தப் பெருமான் பதிகம் பாடி போற்றி அருளிய தலம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் திருத்தலம்.

சூரபத்மனை அழிக்க முருகப்பெருமான் அன்னையிடமிருந்து வேல் வாங்கிய தலம், காமதேனுவுக்கு சாப நிவர்த்தி அருளிய தலம், சிவபெருமான், பெருமாள், முருகப் பெருமான், ஆஞ்சனேயர் ஆகிய நால்வரும் ஒன்றாகக் கோயில் கொண்டு அருளும் தலம், 64 சக்தி பீடங்களில் ஒன்றான தலம், வசிஷ்டர், அகத்தியர், விசுவாமித்திரர், நாரத மாமுனிவர், முசுகுந்த சக்ரவர்த்தி, காத்தியாயனர் உள்ளிட்டோர் வழிபட்ட தலம் என அளப்பரிய ஆன்மிகச் சிறப்புகள் பலவற்றைக் கொண்டது இத்தலம்.

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் கோபுரம்

இங்கு, மூலவர் அருள்மிகு வெண்ணெய்ப் பெருமான் (நவநீதேசுவரர்) என்ற திருப்பெயருடனும், அம்பாள் வேல்நெடுங்கண்ணி (சக்தியாதாட்சி) என்ற திருப்பெயருடனும் காட்சியளிக்கின்றனர். இங்கேதான், தனி சன்னதி கொண்டு வள்ளி, தேவசேனா சமேதராகக் காட்சியளிக்கிறார் அருள்மிகு சிங்காரவேலவர்.

இந்த கோயிலுக்கும் சென்று வரலாம்: ஜென்ம பாவங்கள் நீக்கும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்

முன்னொரு காலத்தில், சிறு தவறு இழைத்த குற்றத்துக்காகச் சாபம் பெற்று, புலி முகம் ஏற்ற காமதேனு, சாப நிவர்த்திக்காக சிவபெருமானை வேண்டித் துதித்தது.  அப்போது, பூலோகத்தில் மல்லிகாரண்ய தலத்தில் (சிக்கல் தலத்தின் புராணப் பெயர்) புனித நீராடி, வழிபாடு மேற்கொண்டால் சாபம் விலகும் என சிவபெருமான்  அருளினார்.

சிக்கல் சிங்காரவேலவர்  கோயில் பிரகாரம்

இதன்படி, மல்லிகாரண்ய தலத்துக்கு வந்த காமதேனு, குளம் அமைத்து புனித நீராடி, மல்லிகை மலர்களைக் கொண்டு சிவபூஜையில் ஈடுபட்டு வந்தது. இந்த பூஜையால் மனமகிழ்ந்த சிவபெருமான் காமதேனுவுக்கு சாப நிவர்த்தி அளித்தார். சாப நிவர்த்தி பெற்ற  காமதேனு குளத்தில் நீராடியபோது பால் பெருகி, அந்தக்  குளம் பால் குளமானது.

இந்தக் கோயிலுக்கும் சென்றுவரலாம்: குழந்தைப் பேறு அருளும் வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்

அப்போது, சிவனின் ஆணைப்படி அங்கு வந்த வசிஷ்ட மாமுனிவர், பால் குளத்தில் திரண்டிருந்த வெண்ணெய்யைத் திரட்டி, சிவலிங்கம் வடித்து வழிபாடு  மேற்கொண்டுள்ளார். வழிபாட்டின் நிறைவில், அந்த சிவலிங்கத்தை வேறு இடத்துக்கு எடுத்துச்செல்ல வசிஷ்டர் முற்பட, அந்த சிவலிங்கம் அங்கிருந்து எழாமல்,  விரல்களில் சிக்கிச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இத்தலத்துக்கு சிக்கல் என்ற பெயரும், மூலவர் பெருமானுக்கு அருள்மிகு வெண்ணெய்நாதர் என்ற  திருப்பெயரும் ஏற்பட்டது என்பது ஐதீகம்.

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் -  கோபுரம்

சாப நிவர்த்தி தலம்

காமதேனுவுக்கு சாப நிவர்த்தி அருளியதாலும், தவ வலிமையை இழந்த விசுவாமித்திரருக்கு மீண்டும் தவப் பயனை வழங்கிய தலம் என்பதாலும் இத்தலம், சாப  நிவர்த்தி அருளும் தலமாகவும், பாவம் போக்கும் தலமாகவும் விளங்குகிறது. பௌர்ணமி நாளில் அருள்மிகு நவநீதேசுவரருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால்  பூர்வஜன்ம பாவ நிவர்த்தியும், சாப நிவர்த்தியும் கிட்டும். ஜாதகத்தில் குறிப்பிடப்படும் பித்ரு சாபங்கள் அனைத்தும் இத்தலத்து மூலவரை வழிபட்டால்  விலகும் என்பது ஐதீகம்.

சிக்கல் சிங்காரவேலவர் சன்னதிக்கு செல்லும் வழி

பெருமாள் வழிபாடு

மூன்றடி இடம் கேட்டு, மகாபலி சக்ரவர்த்தியை பாதாள லோகம் அடையச் செய்யும் முன்பாக, பெருமாள் இத்தலத்து மூலவர் அருள்மிகு நவநீதேசுவரரை வழிபட்டு மகாபலியை வீழ்த்தும் பேராற்றலைப் பெற்றார் என்பது இத்தலத்து ஐதீகம். இதன்படி, இங்கு பெருமாள் அருள்மிகு கோலவாமனப் பெருமாளாக கோயிலின் வடப்புற பிரகாரத்தில் தனி சன்னதி கொண்டு காட்சியளிக்கிறார். இந்த சன்னதிக்குப் பின்புறம், அருள்மிகு கோமளவல்லித் தாயாரும், கோயிலின்  வடமேற்கில் அருள்மிகு வரத ஆஞ்சனேயரும் தனி சன்னதி கொண்டு காட்சி அளிக்கின்றனர்.

இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: ராகு - கேது தோஷம் நீக்கும் காளஹஸ்தி திருக்காளத்தீசுவரர் திருக்கோயில்

வியர்வை ததும்பும் அதிசயம்

கோச்செங்கோட்சோழனால் கட்டப்பட்ட இக்கோயில், கட்டுமலை கோயில்களில் ஒன்றாகும். இங்கு, அருள்மிகு நவநீதேசுவரசுவாமி சன்னதிக்கும், அன்னை வேல்  நெடுங்கண்ணி அம்மன் சன்னதிக்கும் இடையே, தனி சன்னதிக் கொண்டு அருளும் சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் அளப்பரிய ஆன்மிகச் சிறப்புகளுடன்  அருளுகிறார்.

வியர்வை ததும்பும் சிங்காரவேலவரின் வீரத் திருமுகம்

சூரபத்மனை அழிக்கும் வல்லமை வேண்டி முருகப்பெருமான், திருச்செந்தூரில் பஞ்சலிங்க பிரதிஷ்டை செய்து தவமியற்றியுள்ளார். அவரது தவத்தை மெச்சிக் காட்சியளித்த சிவபெருமான், சூரனை அழிக்கும் வல்லமையை முருகப் பெருமானுக்கு வரமாக அளித்ததுடன், உனது வெற்றிக்காக மல்லிகாரண்ய தலத்தில் கடும்  தவம் இயற்றி வரும் உன் அன்னையைச் சந்தித்து ஆசி பெற்று வெல்வாயாக எனவும் முருகப்பெருமானுக்கு அருளியுள்ளார்.

சிக்கல் அருள்மிகு நவநீதேசுவர சுவாமி

இதன்படி, மல்லிகாரண்ய தலமான சிக்கலுக்கு வந்த முருகப்பெருமான் தனது தாயை வணங்கி ஆசி வேண்டினார். அப்போது, தன் தவ வலிமையை சக்திவேலாக  அன்னை அருளியுள்ளார். அன்னை அருளிய சக்திவேலைக் கொண்டே முருகப் பெருமான் சூரபத்மனை அழித்தொழித்து வென்றார் என்கிறது கந்த புராணம்.  இதன்படி, இக்கோயிலில் ஆண்டுதோறும் சூரசம்ஹாரத்துக்கு முதல் நாள் நடைபெறும் வேல் வாங்கும் விழா ஆன்மிகச் சிறப்புப் பெற்று விளங்குகிறது.

இதையும் படிக்கலாம்: நாக தோஷம் போக்கும் நாகராஜா திருக்கோயில்

வேல் வாங்கும் நாளில், காலையில் தேரோட்டம் கண்டு, மாலையில் கோயிலுக்குத் திரும்பும் அருள்மிகு சிக்கல் சிங்காரவேலவர் தங்கப்படிச் சட்டத்தில் கார்த்திகை மண்டபத்துக்கு எழுந்தருளி அன்னை வேல்நெடுங்கண்ணியிடமிருந்து சக்திவேல் வாங்குவார். அடுத்த சில விநாடிகளிலேயே மெய்சிலிர்க்கச் செய்யும்  ஆன்மிக நிகழ்வுகள் அங்கே நிகழ்ந்தேறும். அருள்மிகு சிங்காரவேலவரின் சாந்த முகம், கோபம் கொப்பளிக்கும் வீர திருமுகமாக மாறும். அடுத்த சில  நிமிடங்களில் அந்த வீர திருமுகத்திலிருந்து இருந்து வியர்வை ததும்பும். இது, பன்னெடுங்காலமாக இத்தலத்தில் நிகழும் ஆன்மிக அதிசயமாக நிகழ்ந்து  வருகிறது.

அருள்மிகு வேல்நெடுங்கண்ணி அம்மன்

சிங்காரவேலவர் வேல் வாங்கும் நாளன்று மட்டும் அன்னை வேல்நெடுங்கண்ணி வெள்ளை சாற்றி காட்சி அளிக்கிறார். அம்பாளின் சன்னதியில் அன்று ஒரு நாள்  மட்டும் குங்குமத்துக்கு பதிலாக விபூதியே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சத்ரு சம்ஹார திரிசதி பூஜை

சூரமபத்மனை அழிக்க சிங்காரவேலவர் சக்திவேல் பெற்ற தலம் என்ற அடிப்படையில் இத்தலம், எதிரிகள் தொல்லையை அழித்தொழிக்கும் ஆன்மிகச் சிறப்புப்  பெற்ற தலமாக விளங்குகிறது. எதிரிகள் தொல்லை நீங்கவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டவும் அருள்மிகு சிக்கல் சிங்காரவேலவருக்கு சத்ரு சம்ஹார  திரிசதி பூஜை நடத்தி வழிபட்டால், காரிய சித்தி உறுதியாகிறது.  

சிக்கல் சிங்காரவேலவர் உற்சவ மூர்த்தி

வேண்டுதல் நிறைவேறியதும் அவரவர் தங்கள் சக்திக்கேற்ப நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். பொருளாதார வசதி இல்லாதவர்கள் அருள்மிகு  சிங்கார வேலவருக்கு பன்னீர் ரோஜா மாலை சாற்றியும், பொருளாதார வசதி கொண்டவர்கள் அருள்மிகு சிங்காரவேலவருக்கு வேல் சாற்றியும் வழிபடுகின்றனர்.

இந்த கோயிலுக்கும் செல்லலாம்: நோய்கள் தீர்க்கும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்

புத்திர பாக்கியம்

அருள்மிகு நவநீதேசுவர சுவாமி சன்னதிக்கும், அருள்மிகு வேல்நெடுங்கண்ணி அம்மன் சன்னதிக்கும் இடையே அருள்மிகு சிங்காரவேலவர் தனி சன்னதியில் காட்சியளிப்பது, ஏறத்தாழ சோமாஸ்கந்த மூர்த்த நிலைக்கு நிகராகக் கருதப்படுகிறது. புத்திர பாக்கியம் வேண்டுவோர் அருள்மிகு சிங்காரவேலவருக்கு  செவ்வாய்க்கிழமையில் செவ்வரளி பூ சாற்றி, கோயிலை 6 முறை வலம் வந்து, 9 வாரம் வழிபாடு நிறைவேற்றி, 3 கிருத்திகை நட்சத்திர நாளில்  சிங்காரவேலவரின் அபிஷேக பாலை அருந்தினால் குழந்தைப் பேறு கிட்டும் என்பது ஐதீகம். இந்த வழிபாட்டை நிறைவேற்றி, குழந்தைப் பேறு பெற்ற பலர்  இக்கோயிலுக்கு மணி வாங்கி சாற்றியிருப்பதே இதற்குச் சான்றாக உள்ளது.  

வள்ளி -தேவசேனாவுடன்  சிக்கல் சிங்காரவேலவர்

சைவமும் வைணவமும் இணைந்த பழமையான 28 தலங்களில் ஒன்றான தலம், மாலும் மருகனும், முருகனும் அனுமனும் இணைந்து அருளும் பழமையான  தலங்களில் ஒன்றான தலம், தியாகராஜப் பெருமான் தனி சன்னதி கொண்டு அருளும் தலம் என அளப்பரிய ஆன்மிகச் சிறப்புகளைப் பெற்ற இக்கோயில்,  கிழக்கே 80அடி உயர ராஜ கோபுரத்துடனும், மேற்கே பால் குளம் எனப்படும் தீர்த்த குளத்துடனும் காட்சியளிக்கிறது.

இந்த கோயிலையும் பார்க்கலாம்: ராகு - கேது சர்ப்ப தோஷங்கள் நீக்கும் திருப்பாம்புரம் பாம்புரநாதர் திருக்கோயில்

கோச்செங்கோட்சோழன் மற்றும் அயோத்தி மன்னன் உள்ளிட்டோரால் திருப்பணி செய்விக்கப்பட்ட இக்கோயில், தற்போது இந்து சமய அறநிலையத் துறை  கட்டுப்பாட்டில் உள்ளது.

நாகை-திருவாரூர் வழித்தடத்தில் நாகையிலிருந்து 6 கி.மீட்டர் தொலைவில் உள்ளது இக்கோயில். தொடர்புக்கு : 04365- 245350.

முகவரி

அருள்மிகு நவநீதேசுவர சுவாமி திருக்கோயில்
சிக்கல் அஞ்சல், நாகை வட்டம்,
நாகை மாவட்டம் - 611108

ADVERTISEMENT
ADVERTISEMENT