பரிகாரத் தலங்கள்

ஆயுள் பலத்தை அதிகரிக்கும் திருச்சிற்றம்பலம் எமதர்மராஜா ஆலயம்

ஆர்.வி.பழனிவேல்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில், ஆறடி உயர எருமை வாகனத்தின் மீது முறுக்கிய மீசையுடன், பாசக்கயிறு,   ஓலைச்சுவடி மற்றும் கதையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் எமதர்ம ராஜா. இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதி மக்களுக்கு இவர்தான்  இஷ்ட தெய்வம்.

எமதர்மராஜா ஆலய முகப்பு
எமதர்மராஜா ஆலய முகப்பு

சாதாரண மண் கோயிலாக இருந்த இந்தக் கோயில், பலதரப்பட்ட மக்களின் உதவியோடு மூன்று கோடி ரூபாய் செலவில், தற்போதுள்ள வகையில் மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது. சில கோயில்களில் எமதர்மருக்கென்று தனிச் சன்னதிகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், எமனுக்காக மட்டுமே எனத் தனிக் கோயிலே  இருப்பது இங்கு மட்டுமே.

தல வரலாறு

எமதர்ம ராஜாவிடம், பிரகதாம்பாளை சிறு குழந்தையாகக் கையளித்து பூலோகத்துக்குக் கூட்டிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார் சிவபெருமான், அந்தப் பெண்  குழந்தை பெரியவளான பின்னர் சிவபெருமானுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. திருச்சிற்றம்பலத்தில் உள்ள  கண்ணாங்குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் போது, திருமணத்துக்கு உரிய பருவத்தை அடைகிறார் பிரகாதாம்பாள். முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரும்  ஒன்றுகூடி, பிரகதாம்பாளை சிவபெருமானுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்கின்றனர். அந்நேரம், சிவபெருமான் நிஷ்டையில் இருக்கவே, மன்மதனை  வைத்து சிவபெருமானின் நிஷ்டையைக் கலைக்க முடிவு செய்கின்றனர். 

எமதர்மராஜா கோவில்

அதன்படி திருச்சிற்றம்பலத்திலிருந்து மிக அருகில் உள்ள மன்மதனின் ஊரான மதமட்டூரிலிருந்து சிவபெருமானின் மீது பூங்கணை தொடுக்கிறார் மன்மதன். கடும் கோபத்துடன் கண் விழித்த சிவபெருமான் தன் நெற்றிக்கண் பார்வையால் மன்மதனை அழித்தார். பின்னர், மன்மதனை உயிர்ப்பிக்கும்படி சிவபெருமானிடம்  வேண்டினார் ரதிதேவி. ஆனால், மாண்டவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்றும், வேண்டுமானால் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மன்மதனுக்குத்  திருவிழா நடைபெறும்போது மட்டும் ரதியின் கண்ணுக்குத் தெரியும்படி செய்வதாகவும் கூறி அருளினார் சிவபெருமான். 

மன்மதனின் உயிரைப் பறிக்க, மேலோகத்திலிருந்து பூலோகத்தில் எமதர்மராஜா வந்திறங்கிய இடம்தான் திருச்சிற்றம்பலம். அதன் காரணமாகவே இங்கே  கோயில் அமைத்து வழிபடப்படுகிறது என்கிறது தல வரலாறு. வாயு மூலையில் சிவனும், அக்னி மூலையில் எமனும் காட்சியளிக்கிறார்கள். கோவில் அருகே  எமதீர்த்த குளம் உள்ளது. இங்குள்ள குளத்தில் பெண்கள் யாரும் நீராடுவது கிடையாது. துக்க நிகழ்ச்சி போன்ற வற்றில் கலந்துகொண்ட  ஆண்களும் இந்தக் குளத்தில் நீராடுவது கிடையாது.

கதை, வாளுடன் கம்பீரமாகக் காட்சிதரும்  முனி

வழிபாட்டு முறைகள்

ஒவ்வொரு நாளும் எமகண்ட நேரத்தில் எமதர்மனுக்கு பூஜைகள் நடக்கும். நேருக்கு நேராக நின்றுதான் வணங்க வேண்டும். அந்த நேரத்தில் எமனை ஒரு நீதிபதியைப் போல்தான் பாவிக்க வேண்டும். திருமணம், வளைகாப்பு போன்ற மங்கல நிகழ்வுகளின் பத்திரிகைகளை ஐயாவின் காலடியில் வைத்து வழிபடுவது வழக்கம். பணத்தை வாங்கிக்கொண்டு யாரேனும் ஏமாற்றியிருந்தால் அவர்களின் பெயரை ஒரு தாளில் எழுதி அதைப் பூஜித்து சூலத்தில் கட்டி விடும் வழக்கமும் இங்கே உண்டு. இதற்குப் ‘படி கட்டுதல்’ என்று பெயர். படி கட்டிய சில நாள்களிலேயே கொடுத்த பணம் பலருக்குத் திரும்பக் கிடைத்துள்ளது. 

எமதீர்த்த குளம்

எமபயத்தைப் போக்கிக்கொள்ளவும், ஆயுளை நீட்டித்துக் கொள்ளவும், திருமணத் தடை நீங்கவும் இங்கே பலர் வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் நவக்கிரக  தோஷம், பெண்பாவ தோஷம், நட்சத்திர தோஷம், ராசி அதிபதி தோஷம் இவற்றிற்கு பரிகார தெய்வமாகவும் இந்த கோவில் விளங்கி வருகிறது.

நாளுக்கு நாள்  கோயிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. வருடம்தோறும் ஆடி மாதத்தில் திருவிழாவும், மாசி மாதத்தில் மன்மதனுக்குத்  திருவிழாவும் நடக்கும். எமதர்ம மகாராஜாவை சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களைத் தரும் என்கிறார் கோவில்  பூசாரி ராஜேந்திரன். 

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை.

கோயிலுக்குச் செல்லும் வழி

பட்டுக்கோட்டை - அறந்தாங்கி செல்லும் சாலையிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சிற்றம்பலம். இங்குதான் எமதர்மராஜா  கோயில் உள்ளது. மேலும் பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி, மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை (ஆவணம் வழியாக) செல்லும் பேருந்துகளில் சென்றால் திருச்சிற்றம்பலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோவிலுக்கு நடந்து செல்லலாம். 

ரயில் வழிப் பயணம் என்றால் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து திருச்சிற்றம்பலம் செல்ல வேண்டும். அல்லது பேராவூரணி ரயில் நிலையத்திலிருந்தும் திருச்சிற்றம்பலம் செல்லலாம். 

தொடர்புக்கு: கோவில் பூசாரி ராஜேந்திரன்: 9894324430

முகவரி

அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில்,

திருச்சிற்றம்பலம், பட்டுக்கோட்டை வட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் - 614 628

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர் ஜூனில்

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT