பரிகாரத் தலங்கள்

ஜென்ம பாவங்கள் நீக்கும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்

தினமணி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து கஞ்சனூர், கதிராமங்கலம் சாலையில் திருவிடைமருதூருக்கு வடகிழக்கில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருத்தலம். நவக்கிரகத் தலங்களில் சுக்கிரன் தலமான கஞ்சனூருக்குக் கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவிலிருக்கிறது இந்தத் திருக்கோயில்.

திருக்கோடீஸ்வரர் ராஜகோபுரம்
திருக்கோடீஸ்வரர் ராஜகோபுரம்

திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடப் பெற்ற சிவத்தலம் இது. இவ்வூர் வேத்ரவனம் எனப் புராணத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற மற்றும் சோழநாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 37ஆவது தலம் இது.

இத்தலத்தின் தலவிருட்சமாகப் பிரம்பும் தீர்த்தமாக சிருங்கோத்பவ தீர்த்தமும் மற்றும் காவிரி நதியும் உள்ளன. இத்தலத்தின் இறைவன் - கோடீஸ்வரர், கோடிகாநாதர். இறைவி - திரிபுரசுந்தரி, வடிவாம்பிகை.

கோயில் அமைப்பு

கொடிமரம்

கோயிலின் உள்ளே நுழையும்போதே அழகான சிற்பங்கள் இரு புறமும் காணப்படுகின்றன. இடதுபுறம் அகஸ்தீசுவரர் சன்னதி உள்ளது. கொடிமர கணபதி, பலிபீடம், நந்தியைக் கடந்து உள்ளே சென்றால் பஞ்சமூர்த்தி அலங்கார மண்டபம், திரிபுரசுந்தரி அம்மன் சன்னதிகள் உள்ளன. எதிரே நர்த்தன விநாயகர் உள்ளார். அம்மன் சன்னதியின் வலப்புறம் ஆடிப்பூர அம்மன் அமைந்துள்ளார். இடப்புறம் பள்ளியறை உள்ளது. அடுத்து நடராஜர் சன்னதி அமைந்துள்ளது.

உள் மண்டபத்தில் வலப்புறம் சித்திரகுப்தரும், இடப்புறம் எமதர்மனும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் இருக்கின்றன. இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். வெளித்திருச்சுற்றில் சம்பந்தர், அப்பர், சுந்தரர், பரவை நாச்சியார், சங்கிலியார், கணபதி, நாகர், விசுவநாதர் விசாலாட்சி, ஏகாம்பரேசுவரர் காமாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சண்முகேசர் சன்னதிகள், கரையேற்று விநாயகர் சன்னதிகள் ஆகியவை உள்ளன.

திருக்கோடீஸ்வரர் கோயில்

அடுத்து ரிக்வேத லிங்கம், யஜுர் வேத லிங்கம், சாமவேத லிங்கம், அதர்வண வேத லிங்கம் ஆகியவை உள்ளன. தொடர்ந்து கஜலட்சுமி, க்ஷேத்ரபாலகர்கள், வடுக பைரவர், சூரியன், சந்திரன், நாகேசுவரர், சண்டபீடேசுவரர், கஹானேசுவரர் உள்ளனர். பால சனீஸ்வரர் சன்னதி தனியாக உள்ளது. கருவறை கோஷ்டத்தில் நடராஜர், சிவகாமி, கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, பிட்சாடனர், அஷ்டபுஜ துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், சூரிய மண்டல பிரம்மா ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது.

ஸ்ரீ அஷ்டபுஜ துர்க்கை

பிற சிறப்புகள்

இத்தலம் மூன்று கோடி முனிவர்களால் வழிபடப்பட்டது. இக்கோயில் கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன் மாதேவியால் கற்றளியாக்கப்பட்டது. பஞ்ச(கா) தலங்களில் ஒன்றான, திருக்கோடிக்கா தலத்தில் எழுந்தருளியுள்ள சுயம்பு மூர்த்தியான அருள்மிகு கரையேற்று விநாயகர் மிகச் சிறப்புடையவர். இத்தலத்து விநாயகப் பெருமானை முதலில் வழிபடுவது மரபு.

உள் மண்டபம்

ஈசனால் சம்ஹாரம் செய்யப்பட்ட எமனை உயிர்பெறச் செய்வதில் இத்தலத்து விநாயகர் பேருதவி செய்ததால் ஸ்ரீ கரையேற்று விநாயகர் எனப் பெயர் பெற்றிருக்கிறார். திருக்கடையூரில், கால சம்ஹாரம் நடந்த பிறகு, யமதர்மன் தன்னுடைய அனைத்து சக்திகளையும் இழந்து, அனைத்தும் சிவத்திற்குள் அடக்கம் என்ற நிலையுணர்ந்து, பிரம்புக் காட்டினுள் உறைந்துள்ள திருகோடிக்காவல் ஈசனுக்குள் ஐக்கியமாகி அசைவற்றுக் கிடந்தார். காலன் இயக்கமற்றுவிட்டதால், பூலோகத்தில் மரணம் நின்றுவிட்டது.

இதனால் பூமி தன் பாரம் தாங்காமல், பூமாதேவி செயல்பட முடியாமல் சகல பூலோக காரியங்களும் முரண்பட்டு, நிலை தடுமாறியது. விபரீதத்தை உணர்ந்த இந்திராதி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட எண்ணி, திருக்கோடிக்காவல் நோக்கி ஓடி வந்தனர்.

உள்பிரகாரம்

அப்போது கங்கைக்குச் சமமான, உத்தரவாஹினியாகிய காவிரி நதியைக் கடக்க எண்ணுகையில், திடீரென காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்துச் சுழலில் சிக்கி மீள முடியாது தவித்தனர். ஈசனைச் சந்திக்கும் அவசர கதியில் முதற்கடவுளாம் விநாயகரைப் பூஜிக்காது, வந்ததனால் ஏற்பட்ட சோதனை இது என்பதை உணர்ந்தனர்.

ஸ்ரீ கரையேற்று விநாயகர்

உடனே ஆற்று மணலிலேயே விநாயகப் பெருமானது உருவத்தைச் சிருஷ்டி செய்து, அவரிடத்தே பிழை பொறுத்துக் காக்க வேண்டினர். இதனால் மனமிரங்கிய விநாயகரும் ஆற்று வெள்ளத்தைத் தணித்துத் தேவர்களைக் கரையேற்றினார். அப்போது முதல், இத்தலத்து விநாயகர் 'கரையேற்று விநாயகர்' என்ற நாமம் தாங்கி அருளி வருகிறார் என்கிறது தல வரலாறு.

ஆற்று மணலினால் ஆன திருமேனி என்பதால், விஸ்தாரமான அபிஷேகாதிகள் இவருக்குச் செய்யப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர, திருக்கோடிக்காவல் தலமானது யம வாதனை இல்லா பூமி. ஜன்ம வினைகள் நசிந்து, உயிர்கள் கடைத்தேற அருளுபவர் என்பதாலும், இவர் 'கரையேற்று விநாயகர் என்று போற்றப்படுகிறார். வாழ்வில் பிரச்னைகளால் தத்தளிப்போர் இத்தலத்து விநாயகரை வணங்கி வழிபட்டால் நலம் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

சாபம் நீக்கிய தலம்

திரிகோடி என்றால் மூன்று கோடி என்று அர்த்தம். மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபம் இந்தத் தலத்தில் நீங்கியதால் திருகோடிகா என்று பெயர் உண்டாயிற்று. முக்தி வேண்டி மூன்று கோடி மந்திர தேவதைகள் இங்கே தவம் இருந்தனர். அப்போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, அனைவரும் விநாயகரைத் துதித்து வேண்டினர். அவரும் அவர்களைக் கரையேற்றி அருள் பாலித்தார். அகத்தியர் மந்திர தேவதைகளுக்கு உபதேசித்து மணலால் விநாயகரைப் பிடித்துவைத்து பிரதிஷ்டை செய்தார்.

திருக்கோடீஸ்வரர் - திரிபுரசுந்தரி (உற்சவ மூர்த்தி)

முக்கோடி மந்திர தேவதைகள் இந்த விநாயகரை சஹஸ்ர நாமத்தால் (ஆயிரம் திருப்பெயர்களால்) அர்ச்சனை செய்து பூஜித்தனர். கரையேற்று விநாயகர் இத்திருக்கோயிலில் தென்மேற்குத் திசையில் அருள்பாலிக்கிறார். இவருக்கு ஆயிரம் மலர்களால் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட, எல்லாவிதமான சாபங்களும் தோஷங்களும் நீங்கும். இங்கே மூன்று கோடி தேவதைகள் நந்தியின் கொம்பால் உண்டான சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டனர். அப்போது அங்கிருந்து கிளம்பிய திவ்ய ஒளிப்பிழம்பில் அனைவரும் ஐக்கியமாகிவிட்டதாகத் தல புராணம் விவரிக்கிறது.

எமபயம் இல்லை

சிவபுராணத்தில் பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படும் மற்றொரு நிகழ்ச்சி, இத்தலத்தின் மகிமைக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது. தன் கணவனைக் கொன்றுவிட்டு, நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்த லோககாந்தா என்ற பெண்மணி, வாழ்க்கையின் இறுதிக் காலத்தில், திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும், எமன், அவளைத் தண்டிக்க, நரகலோகம் அழைத்துச் செல்கிறான். சிவ தூதர்கள், இதை வன்மையாகக் கண்டிக்கின்றனர். எமதர்மராஜன், சிவபெருமானிடம் வந்து முறையிடுகிறார்.

திரிபுரசுந்தரி அம்மன்

தமது தலமான திருக்கோடிக்காவோடு, சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க எமனுக்கு அதிகாரம் இல்லை என்றும், காலதேச வர்த்தமானங்களால், இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற ஒலியைக் காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை எமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிடுகிறார்.

திரிபுரசுந்தரி அம்மன் (உற்சவ மூர்த்தி)

பாவக சேத்திரமான திருக்கோடிக்காவில் ஸ்நான, ஜப, தப, தியானங்கள் செய்கிறவர்களை நான் எதுவுமே செய்ய முடியாது என்று யமதர்மராஜன், எமலோகத்தில் முழக்கமிடுகிறான். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டுவிட்டதால், எமனிடமிருந்து விடுபட்டு, பின் முக்தி அடைகிறாள். எனவே, காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் எமபயம் கிடையாது.

ஜென்மம் ஜென்மமாய் செய்த பாவங்கள் அனைத்தையும் தீர்க்கும் ஒரே தலம் கோடீஸ்வரர் திருக்கோயில். 1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனி பகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதேபோல் சித்திரகுப்தனும் துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர். இங்குள்ள சனி பகவான் பாலசனி என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்துக்குப் பதில் கருட வாகனம் உள்ளது.

ஸ்ரீ பால சனீஸ்வரர்

மங்கு, பொங்கு, மரணச் சனி மூன்றுக்கும் வழிபடக் கூடிய சனி பகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவிரி நதி, "உத்தரவாஹினியாக" அதாவது தெற்கிலிருந்து வடக்காகப் பாய்கிறது. இங்குள்ள உத்தரவாஹினியில் கார்த்திகை ஞாயிறன்று அதிகாலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது பூர்வ நம்பிக்கை. 

இத்தலத்தில் நவக்கிரகம் கிடையாது. விதியின் பயனை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் மதியால் குறைக்க முடியும். விதியினால் கஷ்டப்படுபவர்கள் இத்தலம் வந்து தரிசித்தால் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும்.

வடுக பைரவர்

ஒரு சமயம் கைலாசத்தையும், திருக்கோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய்விட்டது. இறைவனின் திருமேனிக்குச் சமமான பெருமை கொண்ட பூமி இது. இங்கே கணபதியின் மகிமையும் கூடியுள்ளது. இந்த இடத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம் எல்லாம் மும்மடங்காகப் பலிக்கிறது.

இக்கோயிலில் ஆழ்வார்களுக்கு அம்பாள் பெருமாளாகக் காட்சி கொடுத்த வரலாறு உண்டு. அத்துடன் எடைக்கு எடை பக்தர்கள் காணிக்கை வழங்கும் துலாபாரம் இக்கோயிலில் இருப்பது விசேஷமானது. மேலும் இக்கோயில் திரிபுரசுந்தரி அம்பாள் சன்னதியில்தான் மகான் பாஸ்கராச்சாரியார் லலிதா சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதினார்.

நால்வர்

திருக்கோயிலுக்கு எப்படி போகலாம்?

மயிலாடுதுறையிலிருந்து குத்தாலம், கதிராமங்கலம் வழியாகவும், கும்பகோணத்திலிருந்து ஆடுதுறை வந்தும் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாவடுதுறையிலிருந்தும் இத்தலத்தை அடையலாம்.

ரயிலில் வருபவர்கள் மயிலாடுதுறையிலோ அல்லது கும்பகோணத்திலோ இறங்கி சாலை வழியாகச் செல்லலாம். விமானத்தில் வருபவர்கள் திருச்சியில் இறங்கித் தஞ்சாவூர், கும்பகோணம் வழியாகச் சென்றடையலாம்.

கோயிலில் உள்ள சிற்பம்

முகவரி

அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், 

திருக்கோடிக்காவல், நரசிங்கன்பேட்டை, 

திருவிடைமருதூர் வட்டம், 

தஞ்சாவூர் - 609 802.

தொடர்புக்கு: 91595 14727, 0435 - 2902011

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

SCROLL FOR NEXT