பரிகாரத் தலங்கள்

திருமணத் தடை நீக்கும் திருமணஞ்சேரி சுகந்த பரிமளேசுவரர் கோயில்

சா. ஜெயப்பிரகாஷ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது திருமணத் தடை நீக்கும் ஆலயமான திருமணஞ்சேரி திருமணநாதர் திருக்கோவில்.

ஆலங்குடி வட்டத்தில், பட்டுக்கோட்டை சாலையில் கறம்பக்குடியிலிருந்து தென்மேற்குத் திசையில் 3 கிமீ தொலைவில் உள்ளது திருமணஞ்சேரி கிராமம். சுமார் 265 ஏக்கர் மருத நிலப்பரப்பான இந்த ஊரில் அமைந்துள்ள சிவத் தலம்தான் அருள்மிகு திருமணநாதர் ஆலயம்.

திருமணத் தடை நீக்கும் வல்லமையும், குறைகளுடன் பிறக்கும் குழந்தைகளைத் தத்துக்கொடுத்து நிவர்த்தி செய்யும் தலமாகவும் விளங்குகிறது இந்தத் திருமணஞ்சேரி. 

கோயில் நுழைவுவாசல்

தல வரலாறு

மறைந்த தனது தாய்மாமனின் விருப்பப்படியே அவரது மகளை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்வதற்காக மதுரையிலிருந்து காவிரிப்பூம்பட்டினம் வந்த வணிகன், தாய்மாமனின் செல்வங்களுடன், அவரது செல்வ மகளையும் அழைத்துச் செல்லும் வழியில் தற்போதுள்ள திருமணஞ்சேரியில் (அப்போது கோயில் காடு) தங்கியுள்ளார். அப்போது அங்கு சுயம்பு லிங்கமும், உறை கிணறும், வன்னிமரமும் இருந்துள்ளன.

மகா மண்டபம்

இரவு உறங்கிக்கொண்டிருந்தபோது கொடிய நாகம் ஒன்று வணிகனைத் தீண்டிவிட, அழுது புலம்பினாள் மாமன் மகள். பெண்ணின் அழுகுரல் கேட்ட இறைவன், முதியவர் வடிவில் வந்து கோயிலுக்கு அமுது சமைத்த விறகு சாம்பலை எடுத்துச் சென்று திருக்குளத்து நீரில் கரைத்து இறந்த வணிகன் மீது தெளித்து உயிர்ப்பித்தார்.

தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் அதே இடத்திலேயே திருமணம் செய்தும் வைத்தார் முதியவர் வடிவில் வந்த இறைவன். 'வன்னி மரமும் உறை கிணறும் தான் உங்கள் திருமணத்துக்குச் சாட்சி' என உறுதியளித்தார் முதியவர். இதற்கான குறிப்புகள் அனைத்தும் திருவிளையாடல் புராணத்தில் உள்ளன.

சுயம்பு லிங்கம்

திருமணத்துக்குப் பிறகு அவர்கள் மதுரை சென்றனர். அங்கே மூத்தாளுக்கு (வணிகனின் முதல் மனைவி) இரு மகன்கள், இளையாளுக்கு ஒரு மகனும் பிறந்தனர். இருவருக்கும் இடையே பகை மூண்டது. அப்போது 'உங்களுக்கு இடையே முறைப்படிதான் திருமணம் நடந்ததா?' என இளையவளைக் கேட்டார், மூத்தவள்.

'எங்களுக்கு முறையாகத் திருமணம் நடந்ததற்கு அந்தக் கோயிலிலிருந்த வன்னி மரமும், உறை கிணறும்தான் சாட்சி' எனக் கூறினார். பஞ்சாயத்து கூடியது. அங்கேயும் தனது திருமணத்துக்கு வன்னி மரமும் உறை கிணறும்தான் சாட்சி என்றாள் இளையவள். கூடியிருந்த எல்லோருமே சிரித்தனர். கடவுளை நினைத்து அழுதாள்.

கொடிமரம்

இரவு கனவில் வந்த இறைவன், உங்கள் திருமணத்துக்கான சாட்சிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வலப்புறத் திருச்சுற்றுச் சுவரில் இருக்கும் எனக் கூறிச் சென்றார். மறுநாள் மீண்டும் கூடிய ஊர்ப் பஞ்சாயத்தில் இதைத் தெரிவித்தாள். அனைவரும் சென்று பார்த்தனர். சுவரில் திருமணஞ்சேரியின் உறை கிணறும், வன்னி மரமும் இருந்தன. இறைவனின் அருளை எண்ணி வாழ்த்திச் சென்றனர் ஊர்ப் பஞ்சாயத்துக்காரர்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டதால் இப்போது திருமணஞ்சேரியில் உறை கிணறும், வன்னி மரமும் இல்லை. அதேபோல, ராஜகோபுரமும் கிடையாது. கோயிலுக்கு முன்பு திருக்குளமும், பின்னால் கண்மாயும் உள்ளன. பெரியநாயகி உடனுறை திருமணநாதர் திருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், ஆலோடி மண்டபம், விழா மண்டபம் ஆகியன உள்ளன. திருக்கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. மகா மண்டபத்தில் வடக்குப் பகுதியில் தெற்கு நோக்கிய நிலையில் பெரியநாயகி அம்மன் சன்னதி உள்ளது.

இறைவன் சுகந்த பரிமளேசுவரர் என்னும் திருமண நாதர் என்று அழைக்கப்பட்டாலும் குழந்தைகளுக்குப் பெயரிடும்போது திருமேனிநாதன் என்று சூட்டுவார்கள். தினமும் சூரிய உதயத்தின்போது அதன் ஒளி, சுயம்புவான திருமணநாதர் மேல் விழுகிறது. இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர்.

படித்துறை விநாயகர்

அர்த்த மண்டபத்தின் வலப்புறத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்த விநாயகர் உள்ளார். மகா மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எனப்படும் ஐம்பொன் விக்கிரகங்களும் அஸ்திர தேவரும், பிடாரி அம்மனும் வைக்கப்பட்டுள்ளனர்.

நர்த்தன விநாயகர்

பெரியநாயகி அம்மனின் நேர் வலப்புறம் காசி விசுவநாதரும், அவருக்கு நேர் வடக்கே விசாலாட்சி அம்மனும் அமர்ந்துள்ளனர். கோயிலின் ஆலோடி மண்டபத்தில் (தேவகோட்டங்கள்) நர்த்தன கணபதி, தட்சிணாமூரத்தி, சுயம்பு விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி சுப்பிரமணியன் தெய்வானை, பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர், பைரவர், மகாலட்சுமி, சூரியன் ஆகியோருக்கான சன்னதிகளும் உள்ளன.

ஸ்ரீசுப்பிரமணியர் சமேத வள்ளி, தெய்வானை

கருவறைக்கு வெளியே நந்திதேவரும், அவரையடுத்து கிழக்கில் பலிபீடமும், கொடி மரமும் அமைந்துள்ளன. கொடிமரத்தின் நான்கு பகுதியிலும் செப்புத் திருமேனியாக பிள்ளையார், சோமாஸ்கந்தர், அம்பாள், சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. திருவிழாக் காலங்களில் உத்சவ தெய்வங்கள் உலா வருவதற்காக அன்னவாகனம், காளை வாகனம், மயில் வாகனம், பெருச்சாளி வாகனம் ஆகியனவும் உள்ளன.

திருமண ஸித்தி

திருமணமாகாதவர்கள் செவ்வாய்க்கிழமைகள்தோறும் அருள்மிகு துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சைப்பழத் தோட்டில் தீபமேற்றி 48 நாள்களுக்கு வழிபட்டால் திருமண தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. தீராத நோயுடையோர் இங்கு வந்து வாரக்கணக்கில் தங்கி வணங்கி வந்தால் தீராத நோயும் தீரும் என்பது நம்பிக்கை.

தத்துக்கொடுத்தல்

உடல் குறையுடன் பிறந்த குழந்தையை இங்கு கொண்டு வந்து இறைவனுக்குத் தத்துக் கொடுத்து பிறகு அழைத்துச் சென்றால், படிப்படியாக குறைகள் தீர்ந்து நன்றாக வளரும் என்பது நம்பிக்கை. பிறகு அந்தக் குழந்தைக்குத் திருமணம் செய்யும் முன்பு இங்கு வந்து இறைவனுக்கு தென்னம்பிள்ளையைக் கொடுத்துவிட்டு எங்கள் பிள்ளையை அழைத்துச் செல்கிறோம் எனச் சொல்லி, வழிபட்டுச் சென்று பிறகு திருமணம் செய்கிறார்கள்.

பிரம்மன்

பழைமையான வரலாற்றையும் தொன்மையையும் திருமணநாதர் ஆலயம் கொண்டிருந்தாலும், சுமார் 30 ஆண்டுகளில் வெகுவாக பிரபலமாகி இருக்கிறது என்கிறார் தற்போதைய குருக்கள் செ.கணேசன். அதாவது பெருவணிகர் ஒருவரின் தோஷ நிவர்த்திக்கான வழியாக முன்புறம் திருக்குளமும், பின்னால் கண்மாயும் உள்ள சிவத்தலத்தில் வழிபட அறிவுறுத்தியுள்ளனர். பல ஊர்களுக்கும் சென்று தேடித்தேடி அலுத்துப்போன அந்தப் பெருவணிகர், திருமணஞ்சேரி வந்து அதுபோன்ற அமைப்பு இருப்பதைக் கண்டு வழிபட்டு நிவர்த்தி பெற்றுள்ளார்.

அப்போது தனது தந்தையார் ஆர்.செல்லையா குருக்கள் பூஜைப் பணிகளில் இருந்ததாகவும், அதன் பிறகுதான் கோயில் பல மாவட்டங்களுக்கும் பிரபலமாக்கியதாகவும் கணேச குருக்கள் தெரிவிக்கிறார்.

கோயில் குளம்

திருவிழாக்கள்

சித்திரைத் திருநாளில் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அதேபோல, சிவராத்திரி விழாவும், குருப்பெயர்ச்சி விழாவும், சனிப்பெயர்ச்சி விழாவும் இங்கு பிரசித்தம். வைகாசி விசாகப் பெருவிழாவில் பெரிய தேரோட்டம் இக்கோயிலின் பிரதான விழா.

பூஜைகள்

தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை காலசந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெறுகின்றன. பகலில் கோயில் நடை சாத்தி, மாலை 5 மணிக்குத் திறந்து சாயரட்சை பூஜை நடத்தப்படும். பிறகு இரவு 7 மணி முதல் 8 மணி வரை அர்த்தசாம பூஜை நடத்தி பெரிய மணி அடித்து நடை மூடப்படும்.

போக்குவரத்து

புதுக்கோட்டையிலிருந்து கறம்பக்குடிக்கு பேருந்து வசதிகள் உண்டு. அங்கிருந்து மினி பேருந்து மட்டுமே கோயிலுக்கு இயக்கப்படுகின்றன. கார் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் உண்டு.

தொடர்புக்கு- செ.கணேச குருக்கள்- 99436 06119, 99422 32532

முகவரி

அருள்மிகு சுகந்த பரிமளேசுவரர் திருக்கோயில்

திருமணஞ்சேரி,

புதுக்கோட்டை - 622302

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT