பரிகாரத் தலங்கள்

பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் குச்சனூர் சனீஸ்வரர் திருக்கோயில்

மு.சந்திரசேகரன்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் இருக்கிறது  தமிழகத்திலுள்ள புகழ்பெற்ற அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில்.

இந்தக் கோவிலில் சனீஸ்வரர் சுயம்புவாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.  புண்ணிய நதியான சுரபி நதிக்கரையில் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும்  பூமியில் தனிப்பெரும் கோயிலாக,  பிற கிரகங்கள் எதுவுமின்றிக் காட்சியளிப்பது இந்தக் கோயிலின்  தனிச்சிறப்பு. 

மேலும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற கடும் தோஷம் நீங்கும் தலமாக  விளங்குவதாலும் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில்  ஒன்றாக இருப்பதாலும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் அதிகளவிலான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

குச்சனூர் அருள்மிகு சனீஸ்வரர் ஆலய நுழைவுவாயில்

தல வரலாறு

தினகரன் என்ற மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்துவந்தார்.  குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வந்தார் அவர். அப்போது, அசரீரியாக, மன்னரின் வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும், அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று வளர்த்து வர வேண்டும். அதன் பின் அரசிக்கு குழந்தை பிறக்கும் எனக் கேட்டதாம்.

அசரீரியில் கூறியதைப் போல வீட்டுக்கு வந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என பெயரிட்டு வளர்த்து வந்தபோது அரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு  சதாகன் எனப் பெயரிட்டு அழைத்தனர். இருவரில் வளர்ப்பு மகன் சந்திரவதனனே அனைத்துக் கலைகளிலும் சிறந்து விளங்கவே அவனுக்கு முடிசூட்டப்பட்டது.

இந்த நிலையில், மன்னன் தினகரன் சனி தோஷம் பற்றியதில் பல துன்பங்கள் மற்றும் சோதனைக்கு ஆளாகி மிகவும் வருந்தினார். இதனைக் கண்ட சந்திரவதனன், வளர்ப்பு தந்தையின் துயரை நீக்க முடிவு செய்தார். அதன்படி குச்சனூர் சுரபி நதிக்கரையில் இரும்பால் சனி பகவானின் உருவத்தை படைத்து வழிபடத் தொடங்கினான். மனமிரங்கிய சனீஸ்வர பகவான் மன்னனின் வளர்ப்பு மகன் முன் தோன்றி, சனி தோஷம் குறித்து விளக்கினார்.

முற்பிறவியில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்தப் பிறவியில் சனி தோஷம்  பிடிக்கிறது. இவ்வாறு ஏழரை நாழிகை, ஏழரை நாள்கள், ஏழரை மாதம், ஏழரை ஆண்டு என தோஷ காலத்தில் அவர்களுக்கு பல துன்பங்கள் வரும். இந்தக் காலத்தில் அவர்கள் செய்யும் நன்மைகளுக்கு ஏற்ப இறுதியில் பலன்  கிடைக்கும். அந்த வகையில் உன் தந்தை முற்பிறவியில் செய்த பாவங்களுக்கு ஏற்ப துன்பங்கள் வரும் எனத் தெரிவித்தார்.  

கோயில் பிரகாரம்

இதனைக் கேட்ட வளர்ப்பு மகன் அந்த துன்பங்களைத் தனக்கே அளிக்கும்படி வேண்டினார். மன்னனுக்கு இருந்த ஏழரை நாழிகை சனி தோஷத்தில் பல  துன்பங்களுக்கு ஆளாக வேண்டும் என சனீஸ்வரர் எச்சரித்தும் அதனை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டான் சந்திரவதனன். 

அதனைத் தொடர்ந்து ஏழரை நாழிகை காலத்தில் பல துன்பங்களை அனுபவித்த  சந்திரவதனன் முன்பாக மீண்டும் தோன்றிய சனீஸ்வரர், இந்த ஏழரை நாழிகையில், சனி தோஷம்கூட உன் முற்பிறவில் செய்த வினைக்கேற்ப வந்ததாகவும், இதனைத் தொடந்து இவ்விடத்திற்கு வந்து என்னை வணங்குபவர்களுக்கு சனி தோஷத்தால் ஏற்படும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மை அளிப்பேன் என்றும் கூறி மறைந்ததாக தல வரலாறு கூறுகிறது.

அவ்வாறே ,  சனி பகவான் தோன்றிய இடத்தில் வளர்ப்பு மகன் சந்திரவதனன் சிறிய கோயில்கட்டி சனி தோஷத்தால் துன்பப்படும் பிறருக்கு வழிகாட்டும் வகையில் அமைத்ததே இந்த அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் என்கிறது கோயில் வரலாறு.

கோயிலுக்கு அருகே ஓடும் சுரபி நதி


தோஷம் நீங்க

பிரம்மஹத்தி தோஷம் போன்ற பல்வேறு தோஷம் நீங்க இக்கோயிலுக்கு வரும்  பக்தர்கள், கோயில் முன்பாக செல்லும் சுரபி நதியில் நீராடி பழைய  ஆடைகளை நீரில் விட்டு, புதிய ஆடையை அணிந்துகொள்வார்கள்.

சனீஸ்வரர்  வழிபாடு

பிரம்மஹத்தி, செவ்வாய் தோஷம், குழந்தையின்மை,  திருமணத் தடை உள்ளிட்ட தோஷம் இருப்பவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம்  செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

நதிக்கரையிலுள்ள விநாயகர்

இவ்வாறு கோயிலுக்கு வந்து நீராடிய பக்தர்கள் நதிக்கரையிலுள்ள விநாயகரை வழிபாடு செய்து கோயில் முன் மண்டபத்திற்குள் நுழைய வேண்டும். பின்  பொரி, உப்பு உடைத்து  பொரியைக் கொடிமரத்திலும் உப்பை அருகேயுள்ள தொட்டியிலும் இட வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, மண் காகத்தை ஒரு முறை தலையைச் சுற்றி காகம்  பீடத்தில் வைக்க வேண்டும். எள் தீபத்தைத் தலையைச் சுற்றாமல் எள் தீப வட்டத்தில் வைக்க வேண்டும். அதேபோல எள் சாதம், தயிர் சாதத்தை  அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

அதனைத் தொடர்ந்து, அர்ச்சனை அல்லது அபிஷேகத்துக்கு  டிக்கெட் வாங்கிக்கொண்டு மூலவரை தரிசிக்க வேண்டும். அர்ச்சனை வாங்கியவர்கள் முன்னதாகவே தேங்காய் உடைத்துவிட்டு மூலவரான சனீஸ்வர சுவாமியைத் தரிசனம் செய்ய வேண்டும். சுவாமி தரிசனத்தின்போது தீபாராதனை முடிந்ததும் விபூதி பிரசாதம் வாங்கிக் கொண்டு பிரகாரத்தை ஒருமுறை சுற்றி வர வேண்டும். அர்ச்சனை செய்யப்பட்ட தேங்காய், பழங்களை சாப்பிட்டு  வீட்டிற்கு திரும்ப வேண்டும்.

மூன்று ஜோடி கண்கள்

இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் மூலவரான சனீஸ்வர பகவான், பிரம்மா,  விஷ்ணு, சிவன் மூவரும் தன்னுள் ஐக்கியம் என்னும் வகையில் 3 ஜோடி கண்களுடன், சக்தி ஆயுதம், வில் ஆயுதம், அபய ஹஸ்தம், சிம்ம கர்ணம் என நான்கு கரங்களுடனும் 2 பாதங்களுடனும் காட்சியளிக்கிறார்.

திருக்கோயிலின் உள் வளாகம்


விடத்தலை மரம்

குழந்தை வரம் வேண்டுவோர், கோயிலின் பின்புறத்திலுள்ள விடத்தலை மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி வழிபாடு செய்து வந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

அருள்மிகு சனீஸ்வர பகவான் சுயம்புவாகக் கருவறையில் எழுந்தருளி இருக்கும்  ஒரே தலம் குச்சனூர்.  மூலவருக்கு அருகே நின்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் உற்சவ மூர்த்தி, ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் 5 வாரத் திருவிழாவானது கலிப்பணம் கழித்து சுத்த  நீர் தெளித்துக் கொடியேற்றத்துடன் தொடங்கும். அதன் பின், சனீஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம்,  சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக்காப்பு சாத்துபடி செய்தல், லாடசித்தர் பூஜை, முளைப்பாரி, மஞ்சள் நீராட்டு என வெகு சிறப்பாகத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

மதுபானம் படைத்து பூஜை

நான்காம் வாரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகக் கருப்பண சாமிக்குப் பொங்கல் வைத்து சிறப்பு பூஜையில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கிய மதுபாட்டில்களை வைத்து பூஜை செய்வார்கள்.

குதிரையில் அரிவாளுடன் காட்சியளிக்கும் கருப்பணசாமி, முன்னால் மது பாட்டில்கள்.

நள்ளிரவு 11 மணியளவில் குதிரையில் அரிவாளுடன் காட்சியளிக்கும் கருப்பணசாமி சன்னதியில்,  குதிரைக்கு கீழே இருக்கும் துளை வழியாக அனைத்து மதுபானங்களும் உடைத்து ஊற்றி பூஜை நடைபெறும்.  

நள்ளிரவு கறி விருந்து

கருப்பணசாமி கோயில் முன் நேர்த்திக்கடனாகப் பக்தர்கள் வழங்கிய ஆடு, கோழிகளைப் பலியிட்டு அன்றிரவே பக்தர்களுக்குக் கறி விருந்து நடைபெறும். இந்தக் கறி விருந்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

கோயில் நடை திறக்கும் நேரம்

ஞாயிறு முதல் வெள்ளி வரை

காலை 7 முதல் பகல் 1 மணி.
மாலை 4.30 முதல் இரவு 8 வரை.

சனிக்கிழமைதோறும்

காலை 6 முதல் பகல் 3 வரை
மாலை 4.30 முதல் இரவு 9 வரை.

சனீஸ்வரரைத் தரிசனம் செய்ய உகந்த நாள் சனிக்கிழமை.

ஸ்தல விருட்சம் விடத்தலை மரம்

போக்குவரத்து வசதி

பேருந்து வசதி: தேனி மற்றும் சின்னமனூரிலிருந்து குச்சனூருக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவிழாவின்போது சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விமான நிலையம்: விமானத்தில் வருபவர்கள் மதுரை விமான நிலையம் வர வேண்டும். அதன்பின் சாலை வழி கார் அல்லது அரசுப் பேருந்துகள் மூலமாக உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர் வழியாக குச்சனூர் கோயிலை அடையலாம். 

ரயில் நிலையம்: ரயிலில் வருபவர்கள் திண்டுக்கல் சந்திப்பு அல்லது மதுரை  சந்திப்பு வர வேண்டும். அதன் பின் சாலை வழி குச்சனூர் கோயிலுக்குச் செல்லலாம்.

கோயில் முகவரி

செயல் அலுவலர்,
அருள்மிகு சுயம்பு சனீஸ்வரர் திருக்கோயில்,
குச்சனூர் பேரூராட்சி அலுவலகம் அருகே,
உத்தமபாளையம் வட்டம்.
தேனி மாவட்டம்.

தொடர்புக்கு:
ரமேஷ், செயல் அலுவலர், செல்லிடப்பேசி : 98420-39080

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT