பரிகாரத் தலங்கள்

வேண்டும் வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன்

கு. வைத்திலிங்கம்

வானமே கூரையாய்க் கொண்டு அமர்ந்து,  தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு வேண்டும் வரம்  அருளி, திருச்சி உறையூரில் காட்சியளித்துக்  கொண்டிருக்கிறாள் அருள்மிகு வெக்காளியம்மன்.

திருச்சி நகரில் மேற்குப் பகுதியில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள உறையூர் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது  உறையூர். உறந்தை, வாரணம், கோழீ, முக்கீசுவரம், வாசபுரி என பல்வேறு பெயர்களைக் கொண்ட உறையூரின் காவல் தெய்வமாகக் காட்சியளிக்கிறாள் வெக்காளியம்மன்.

கோயிலின் வடக்கு வாயில்.

ஊர்களை அமைக்கும்போது ஊர்க்காவல் தெய்வங்களை ஊர் எல்லையில் எழுந்தருளச் செய்வதும், வீரத்தையும் வெற்றியையும் அளிக்கும் தெய்வங்களை வடக்கு நோக்கியும் அமைப்பது வழக்கம். அந்த வகையில், உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோயிலும் வடக்கு நோக்கிதான் அமைந்திருக்கிறது.

பொதுவாகக் கோயில்களில் கருவறையிலுள்ள சுவாமிக்கோ,  அம்மனுக்கோ, கருவறைக்கு மேலே விமானங்கள் அமைக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால்,  உறையூர் வெக்காளியம்மன் திருக்கோயில் இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு அமைந்திருக்கிறது. வானமே கூரையாய்க் கொண்டு, வெட்ட வெளியில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள் வெக்காளியம்மன். இவ்வாறு வெக்காளியம்மன் அமர்ந்திருப்பதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது.

தங்கத் தேரில் உற்சவர்.

உறையூரை வன்பராந்தகன் என்ற மன்னர் ஆட்சி செய்த காலத்தில் சாரமாமுனிவர் நந்தவனம் அமைத்து, பல்வேறு மலர்ச் செடிகளைப் பயிரிட்டு அதில் மலரும் பூக்களைக் கட்டி, நாள்தோறும் திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமிக்கு  அணிவித்து வந்தார். இந்த நிலையில் பிராந்தகன் என்ற பூ வணிகன்,  மன்னரிடம் நல்ல பெயரைப் பெற வேண்டும் என்று எண்ணி,  நந்தவனத்திலிருந்து மலர்களைப் பறித்து மன்னருக்கு அளிக்கத் தொடங்கினான். உயர்வான மலர்களைக் கண்டு உளம் கனிந்த மன்னர் வன்பராந்தகன், நாள்தோறும் மலர்களைப் பறித்து வருவதற்கு உத்தரவிட்டார்.

கோயிலின் உள்மண்டபம்

நந்தவனத்தில் மலர்களின் எண்ணிக்கை குறைவதைக் கண்ட சாரமாமுனிவர், ஒருநாள் நந்தவனத்தில் மறைந்து கண்காணித்தபோது,  தாயுமானவருக்குரிய மலர்கள் மன்னருக்குச் செல்வதைக் கண்டு  வன்பராந்தகனிடம் முறையிட்டார். ஆனால் முனிவரை மன்னர் அலட்சியப்படுத்த, சாரமாமுனிவர் தாயுமானவரிடம் முறையிட்டார்.

இந்த கோயிலுக்கும் சென்று வரலாம்: ஜென்ம பாவங்கள் நீக்கும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்

தனக்குச் செய்யும் குறைகளைக்கூட தாங்கிக் கொள்ளும் இறைவன், அடியார்க்குச் செய்கின்ற இடர்களைத் தாங்குவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், மேற்கு முகமாக உறையூர் பக்கம் தன் பார்வையைத்  தாயுமானவர் திருப்ப, மண்மாரி பொழியத் தொடங்கியது. மண் மூடியதால் தங்களைக்  காக்க எல்லைத் தெய்வமாக அமைந்த வெக்காளியம்மனிடம்  மக்கள் சரணடைந்தனர்.

அன்னை இறைவனை வேண்டினாள். மண்மாரி நின்றது. ஆனாலும் மக்கள் வீடிழந்தனர். வெட்டவெளியே தங்குமிடமானது. மக்கள் துயர்கண்ட வெக்காளியம்மன், உங்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை நானும் உங்களைப் போல வெட்டவெளியிலேயே இருக்கிறேன் என்று அருளியதாக வரலாறு கூறுகிறது.

உற்சவ அம்மன்

இன்றைக்கும் பலர் வெட்ட வெளியே வீடாகக் கொண்டிருப்பதாலோ என்னவோ, வெக்காளியம்மனின் உறுதிமொழி நிறைவேறாத நிலையில்,  இன்றைக்கும்  வானமே கூரையாய்க் கொண்டு அமர்ந்து, பக்தர்களுக்குக்  காட்சியளித்துக் கொண்டிருக்கிறாள்.

கோயில் அமைப்பு

சுற்றிலும் எழில்மிகு மண்டபம் அமைந்தாலும், நடுவில் வெட்டவெளியில் வெக்காளியம்மன் கருவறை உள்ளது. தெற்கு, வடக்கிலும் வாயில்கள் இருந்தாலும், பெரும்பாலான பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் தரிசனம் செய்ய உள்ளே செல்கின்றனர்.

தெற்கு வாயில் வழியாக கோயிலுக்குள் நுழைந்தால் இடதுபகுதியில் வல்லப கணபதி சன்னதி அமைந்துள்ளது. அவரை வணங்கிச் சென்றால், விசாலாட்சியம்மன் உடனுறை அருள்மிகு விசுவநாதர் சன்னதி உள்ளது.
இதைத் தொடர்ந்து அருள்மிகு காத்தவராயன், புலி வாகனத்துடன் பெரியண்ணன், மதுரைவீரன் சுவாமி சன்னதிகள் அமைந்துள்ளன. தொடர்ந்து நாகப்பிரதிஷ்டையுடன் விநாயகர் சன்னதி அமையப் பெற்றுள்ளது.

கருவறையின் பின்புறம்

அடுத்து உற்சவ அம்மன் சன்னதி உள்ளது. கோயில் திருவிழாக் காலங்களில் புறப்பாடாகிச் செல்லும் உற்சவ அம்மன் திருமேனி இங்குதான் அமர்த்தப்பட்டுள்ளது. இந்த சன்னதியின் வடக்குச் சுவரில் துர்க்கை அம்மன் சன்னதியும் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும்.

பொங்கு சனீசுவரர் சன்னதி

பெரும்பாலும் கோயில்களில் நவக்கிரகங்கள்தான் அமைந்திருக்கும். அதிலுள்ள சனீசுவரரைத்தான் பக்தர்கள் தரிசனம் செய்வர். ஆனால்,  இக்கோயிலில் பொங்கு சனீசுவரருக்கு என்று தனி சன்னதி அமைந்திருப்பதும் சிறப்பானதாகும்.  இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் பொங்கு சனீசுவரரையும் தரிசனம் செய்துவிட்டுச் செல்வர். கோயிலின் ஈசானிய மூலையில் நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது.

கோயில் கருவறை

இக்கோயிலில் கருவறை வெளியில் வடக்கு நோக்கி அமைந்திருக்கும் அருள்மிகு வெக்காளியம்மன் மேற்கரங்களில் வலதுபுறம் உடுக்கையுடனும், இடதுபுறம் பாசம், கீழ்ப்புறம் வலதுகரத்தில் சூலம், இடதுகரத்தில் கபாலத்துடனும், வலது காலை மடித்துவைத்து இடதுகாலைத் தொங்கவிட்டு, அரக்கனை அக்காலால் மிதித்துக் கொண்டிருக்கும்படி காட்சியளித்து வருகிறாள்.

பொதுவாக அம்மன் வலதுகாலைத் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்திருப்பதுதான் வழக்கம். ஆனால், இத்திருக்கோயிலில் வெக்காளியம்மன் இடதுகாலைத் தொங்கவிட்டு, வலதுகாலை மடித்து வைத்துக் காட்சியளிப்பதுதான் விசேஷம்.

பிரார்த்தனைச் சீட்டு  மூலம் பரிகாரம்

தொழில் நஷ்டம்,  கடன் பிரச்னை, குடும்பப் பிரச்னை போன்ற பல்வேறு பிரச்னைகள் நீங்கவும், நோய், நொடியின்றி நலமாக வாழவும், கல்வி, பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடையவும் , தங்களின் தீராத பிரச்னைகளை நிறைவேற்றிட வேண்டியும் கருவறை அம்மனுக்கு நேர் எதிரிலுள்ள சூலத்தில் பக்தர்கள் தங்களது பிரார்த்தனைச் சீட்டுகளை எழுதி, கட்டுவதுதான் இன்றைக்கும் வழக்கமாக இருக்கிறது.

பிரார்த்தனைச் சீட்டு எழுதி, சூலத்தில் கட்டும் பக்தர்கள்.

தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதும், பக்தர்கள் கோயிலுக்குத் தாங்கள் வேண்டியதைக் காணிக்கையாகச் செலுத்துவதும் இன்றும் நிகழ்ந்து வருகிறது. ரூ. 10 கட்டணம் செலுத்தினால், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பிரார்த்தனைச் சீட்டு வழங்கப்படுகிறது. தங்கள் பிரார்த்தனையை எழுதுவதற்குக் கோயில் வளாகத்தில் தனியே இடமும் வழங்கப்பட்டிருக்கிறது.

தல விருட்சமும் தலத் தீர்த்தமும் இல்லாத கோயில்:  பொதுவாக சைவ,  வைணவத் திருக்கோயில்களில் தல விருட்சமும், தீர்த்தமும் முக்கியமானதாகும். ஒவ்வொரு கோயிலின் அமைவிடத்தைக் கொண்டு தல விருட்சம் இருக்கும். தீர்த்தமும் கோயிலுக்குள்ளேயே அல்லது கோயில் வளாகப் பகுதியிலேயே அமைந்திருக்கும்.

ஆனால், திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயிலுக்கு என்று தல விருட்சமோ, தலத் தீர்த்தமோ இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 திருக்கோயில் தெற்குவாயில்

திருவிழாக்கள்

இக்கோயிலில் 12 மாதமும் திருவிழாக்கள்தான். சித்திரை மாதத்தில் சித்திரைப் பெருந்திருவிழா, வைகாசி கடைசி வெள்ளியில் மாம்பழ அபிஷேகம்,  ஆனி மூன்றாவது வெள்ளியில் காய்கனி அலங்காரம், ஆடி அனைத்து  வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு, ஆவணியில் சதசண்டி பெருவேள்வி மற்றும் பெருந்தீப வழிபாடு, புரட்டாசியில் நவராத்திரிப் பெருவிழா, அம்பு போடுதல், கார்த்திகையில் தீபத் திருவிழா,  சொக்கப்பனை கொளுத்துதல், மார்கழியில் திருப்பள்ளியெழுச்சி வழிபாடு, தை வெள்ளிக்கிழமைகளில், தைப்பூசத் திருநாளில் அம்மன் புறப்பாடு, மாசி கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஏகதின லட்சார்ச்சனை, பங்குனி முதல் வெள்ளிக்கிழமை மலர் முழுக்கு வழிபாடு மற்றும் சித்திரைப் பெருந்திருவிழா தொடக்கம் ஆகியவை நடைபெறுகின்றன.

நவராத்திரி திருவிழாவில் மற்ற கோயில்களைக் காட்டிலும் இத்திருக்கோயிலில் கருவறை அம்மனுக்கு செய்யப்படும் அலங்காரம், உற்சவ அம்பாளுக்குச் செய்யப்படுவதும் விசேஷமாகும்.

கருவறையின் பின்பகுதி

பௌர்ணமியில் சிறப்பு அபிஷேகம்

இத்திருக்கோயிலில் காட்சியளிக்கும் அருள்மிகு வெக்காளியம்மனுக்கு ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் அபிஷேக வழிபாடு நடைபெறும்.  ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு பொருள்கள் என்பது இங்கு சிறப்பு.

சித்திரையில் மருக்கொழுந்து, மருவு, வைகாசியில் சந்தனம், குங்குமம், பச்சைக் கற்பூரம், பன்னீர், ஆனியில் முக்கனி, ஆடியில் பால், ஆவணியில் எள்ளுடன் நாட்டுச் சர்க்கரை, புரட்டாசியில் அப்பம்,  ஐப்பசியில் அன்னம், கார்த்திகையில் தீபம், மார்கழியில் பசுநெய், தையில் தேன், மாசியில் க்தரம்பளம் (போர்வை), பங்குனியில் பசுந்தயிர் என பல்வேறு வகையான அபிஷேகங்கள் இந்த அம்மனுக்கு நடைபெறுகின்றன.

பூஜைகள்

இக்கோயில் தினந்தோறும் காலை 5.15 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு சாத்தப்படும்.  காலை 5.30 மணிக்கும், பிற்பகல் 12 மணிக்கும் கட்டண அபிஷேக வழிபாடு நடைபெறும். உபயதாரர்கள் பணம் செலுத்தும் நாள்களில் மட்டும் மாலை 6 மணிக்கு சந்தனக் காப்புடன் கூடிய வழிபாடு நடைபெறும். இரவு அர்த்தசாம வழிபாட்டுடன் சன்னதி திருக்காப்பிடப்படும்.

விசுவரூப வழிபாடு  -  காலை 5.30 மணி
காலை வழிபாடு        -  காலை 6.15 மணி
உச்சிக்கால அபிஷேகம் -  பிற்பகல் 12 மணி
வழிபாடு                       -  பிற்பகல் 1 மணி
மாலை வழிபாடு     -  மாலை 6.15 மணி
இரவு வழிபாடு         -  இரவு 9 மணி

 திருக்கோயில் தெற்குவாயில்

இக்கோயிலுக்கு வருவோர் திருச்சியிலும் சுற்றியும் அமைந்துள்ள அருள்மிகு பஞ்சவர்ணேசுவர சுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமான சுவாமி திருக்கோயில், திருவானைக்கா அருள்மிகு ஜம்புகேசுவரர் உடனுறை அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோயில், வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவெறும்பூர் எறும்பீசுவரர், திருநெடுங்களம் திருநெடுங்களநாதர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை ஞீலிவனேசுவரர் திருக்கோயில், திருவாசி அருள்மிகு பாலாம்பிகை உடனுறை மாற்றுரைவரதீசுவரர் திருக்கோயில் போன்ற பாடல் பெற்ற சிவாலயங்களையும் தரிசிக்கலாம்.

போக்குவரத்து வசதி

திருச்சி மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்களிலிருந்து உறையூர் வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து நகரப் பேருந்துகளிலும் செல்லலாம்.

திருச்சி ரயில் நிலையம் மற்றும் திருச்சி விமான  நிலையத்திலிருந்து இக்கோயிலுக்குச் செல்ல கார், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகன வசதிகள் உள்ளன.

பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வெக்காளியம்மன் - உற்சவர்

திருமணத் தடை நீக்குதல்,  எமபயம் போக்குதல்,  குழந்தைப்பேறு,  தொழில்விருத்தி என ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு பரிகாரத் தலமாக விளங்கிக் கொண்டிருக்கும் நிலையில், எத்தகைய குறை என்றாலும் பிரார்த்தனைச் சீட்டு மூலம் பக்தர்களின் குறையை நீக்கி, அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றித் தருகிறாள் உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன்.


கோயில் முகவரி 

செயல் அலுவலர் / உதவி ஆணையர்,

அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில்,

உறையூர்- 620003.

தொடர்பு எண் : 0431-2761869.

படங்கள்: எஸ். அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT