பரிகாரத் தலங்கள்

சர்வதோஷ நிவர்த்திக்கு நாகை காயாரோகணேசுவரர் திருக்கோயில்

22nd Jan 2021 04:00 AM | எம். சங்கர்

ADVERTISEMENT

 

"புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய

நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி

வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்

ADVERTISEMENT

கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே" 

- என திருஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்றது நாகை காரோணம் எனப்படும் திருநாகை.

பல ஊழிக் காலங்களைக் கடந்த மூர்த்தி அருளும் தலம், சப்தவிடங்கர் தலம், தசரத சக்ரவர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாகக் காட்சியளிக்கும் தலம், நாகராஜன் பிரதிஷ்டை செய்த நாகாபரண விநாயகர் அருளும் தலம், சக்தியின் 5 ஆட்சி பீடங்களில் ஒன்றான தலம் என அளப்பரிய ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்டது நாகப்பட்டினத்திலுள்ள ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் உடனுறை அருள்மிகு காயாரோகண சுவாமி திருக்கோயில்.

அருள்மிகு காயாரோகண சுவாமி திருக்கோயிலின் நுழைவு வாயில் 

முக்தி வேண்டி இத்தலத்தில் கடும் தவம் புரிந்த புண்டரீக முனிவருக்குக் காட்சியளித்த இறைவன் சிவபெருமான், அவரை ஆரோகணம் செய்து உடலுடன் (காயம்) ஏற்றதால், இத்தலத்தின் இறைவனுக்கு அருள்மிகு காயாரோகணேசுவரர் என்ற திருப்பெயருடன் விளங்குகிறது. பல ஊழிக் காலங்களைக் கடந்த மூர்த்தி என்ற அடிப்படையில் ஆதிபுராணர் என்ற திருப்பெயரும் விளங்கிவருகிறது.  

இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: ராகு - கேது தோஷம் நீக்கும் காளஹஸ்தி திருக்காளத்தீசுவரர் திருக்கோயில்

தேவலோக அதிபதி இந்திரனிடமிருந்து, சோமாஸ்கந்த மூர்த்தமாக 7 தியாகேசப் பெருமான் மூர்த்தங்களைப் பெற்று வந்த முசுகுந்த சக்ரவர்த்தி, சுந்தர விடங்க தியாகேசப் பெருமானை பிரதிஷ்டை செய்துள்ளதால், சப்த விடங்கர் தலங்களில் சுந்தர விடங்கர் தலமாக விளங்குகிறது இந்தத் தலம்.  

அருள்மிகு காயாரோகண சுவாமி திருக்கோயில்

இங்கு, அம்பாள் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் என்ற திருப்பெயருடன் தனி சன்னதி கொண்டு தெற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். தமிழில் அம்பாளுக்கு கருந்தடங்கண்ணியம்மை என்ற திருப்பெயர் விளங்குகிறது. சக்தியின் 5 ஆட்சி ப் பீடங்களில் ஒன்றாகவும், 64 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்கும் இத்தலம், அம்பாளின் ருது ஸ்தானமாகக் குறிப்பிடப்படுகிறது.

திருமணத்துக்கு முந்தைய பருவமான, யௌவனப் பருவத்தில் காட்சியளிக்கும் அன்னை ஸ்ரீ நீலாயதாட்சியம்மனின் காவல் பணிக்காக அனுப்பப்பட்ட நந்தியம்பெருமான், இறைவனைப் பிரிய மனமில்லாமல், அம்பாளின் சன்னதி முன்பு தென்மேற்குத் திசை நோக்கித் தன் தலையைத் திருப்பிய நிலையில், ஒரு கண்ணால் இறைவனையும், மறுகண்ணால் அன்னை நீலாயதாட்சியம்மனையும் கண்ணுற்றிருக்கும் வகையில் காட்சியளிப்பது, வேறு எந்தத் தலத்திலும் காண முடியாத ஆன்மிகச் சிறப்பு.

அருள்மிகு காயாரோகண சுவாமி திருக்கோயிலின் கிழக்கு வாயில்

வைகாசி விசாகத் திருவிழாவின்போதும், மார்கழித் திருவாதிரையன்றும் இங்கு ஸ்ரீ சுந்தரவிடங்க தியாகராஜப் பெருமானின் வலது பாத தரிசனம் நடைபெறுகிறது. இந்த 2 நாள்கள் மட்டுமே தியாகேசப் பெருமானின் பாதத்தைப் பக்தர்கள் காண முடியும். இந்தக் கோயிலில், திருவிழாவுக்கு எழுந்தருளும் தியாகராஜப் பெருமான், கடல் அலையைப் போன்ற நடனத்தில் புறப்பாடாகிறார். இந்த நடனம், பாராவார தரங்க நடனம் எனப்படுகிறது.

இந்தக் கோயிலையும் வலம் வரலாம்: சனி தோஷம் நீக்கும் நள்ளாற்று நாயகன் - திருநள்ளாறு திருக்கோவில்

பிரதோஷ காலத்தில் இக்கோயிலில் இறைவன் சிவபெருமானுடன், மோகினி வடிவில் பெருமாளும் புறப்பாடாகிறார். பிரதோஷ வேளைக்கு முன்பாக பெருமாளின் மோகினி அவதாரம் நிகழ்ந்ததையொட்டி, இந்த ஐதீகம் இங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

சனிதோஷ நிவர்த்தி

30 ஆண்டுகளுக்கு ஒரு முறை சனீஸ்வர பகவான் ரிஷப ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். அப்போது, ரோகிணி நட்சத்திரத்தில் சனீஸ்வர பகவான் சஞ்சரிக்கும்போது, அவரது தேர் உடையும் அளவுக்கு அவருடைய பாதை கரடுமுரடானதாக இருக்கும் எனவும், அதனால் உலகில் மிகப் பெரும் பஞ்சம், அரசு ரீதியான பிரச்னைகள் ஏற்படும் என்பதும் சாஸ்திரக்  கணிப்பு. இந்த நிகழ்வு, ரோகிணி சகடபேதம் எனப்படுகிறது. இந்தக் காலத்தில் ஏற்படும் பஞ்சம் சுமார் 12 ஆண்டு காலம் நாட்டைப் பெரும் பிரச்னைக்குள்ளாக்குமாம்.

தசரத சக்ரவர்த்தி பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றிய ஸ்ரீ சனீஸ்வர பகவான்

இதனை, மகரிஷி வசிஷ்டர் மூலம் அறிந்த தசரத சக்ரவர்த்தி, ரோகிணி சகடபேத பஞ்சத்திலிருந்து தனது நாட்டு மக்களைப் பாதுகாக்க, சனீஸ்வர பகவானைச் சந்தித்து  ரோகிணி சகடபேத பஞ்சம் ஏற்படாமலிருக்க உதவி கோரியுள்ளார். ஆனால், சனீஸ்வர பகவான் அதற்கு உடன்பட மறுத்துள்ளார்.

இதனால், வேதனையடைந்த தசரத சக்ரவர்த்தி, தன் நாட்டு மக்களுக்காக சனீஸ்வர பகவானுடன் போரிட்டு, அவரை சிறைப் பிடிக்கத் துணிந்து, போருக்கு அறைகூவல் விடுத்துள்ளார். போருக்குப் புறப்படும் முன்பாக தன் குலக் கடவுளான சூரிய பகவானை அவர் வழிபட்டுள்ளார்.

இந்தக் கோயிலுக்கும் சென்றுவரலாம்: குழந்தைப்பேறு அருளும் வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்

அப்போது, தசரத சக்ரவர்த்திக்குக் காட்சியளித்த சூரிய பகவான், சனீஸ்வர பகவான் மீது போர் தொடுக்கும் முயற்சியைக் கைவிட்டு, நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே திசையில் மகாலட்சுமியை நோக்கி காட்சியளிக்கும் தலத்தில், மூலவர் சிவபெருமானை நோக்கிய நிலையில் சனீஸ்வர பகவான் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டால், சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருளுவார், பிரச்னைகள் தீரும் என உபாயம் அருளியுள்ளார்.

இதன்படி, நவக்கிரகங்கள் அனைத்தும் மேற்கு திசை நோக்கி அன்னை ஶ்ரீ மகாலட்சுமி நோக்கியிருக்கும் ஒரே தலமான நாகை காரோணத்தில், நவக்கிரகங்களின் சுற்று அருகே மூலவர் அருள்மிகு காயாரோகண சுவாமியை நோக்கிக் காட்சியளிக்கும் வகையில் சனீஸ்வர பகவான் சிலையைப் பிரதிஷ்டை செய்து, தசரத சக்ரவர்த்தி வழிபாடாற்றியுள்ளார்.

அருள்மிகு காயாரோகணேசுவரர் சுவாமி கோயில் பிரகாரம்

தன்னலம் கருதாமல், தன் மக்கள் நலனுக்காகப் பிரார்த்திக்கும் தசரத சக்ரவர்த்திக்கு, சிவபெருமானின் திருவுளப்படி, சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாக இங்கு காட்சியளித்தார் என்பது ஐதீகம். அப்போது, தசரத சக்ரவர்த்தியின் தன்னலமற்ற வேண்டுகோளை ஏற்று, மக்களைப் பஞ்சத்திலிருந்து காக்க சனீஸ்வர பகவான் அருளியுள்ளார்.

அப்போது, தனக்கு அருளியதைப் போன்றே தன் நாட்டு மக்களுக்கும் அனுக்கிரக மூர்த்தியாக இருந்து அருள வேண்டும் என தசரதன், சனீஸ்வர பகவானைத் துதித்துள்ளார். இந்த வேண்டுதலை ஏற்ற சனீஸ்வர பகவான், இத்தலத்தில் தம்மை வழிபடுவோருக்கு அனுக்கிரக மூர்த்தியாக இருந்து அருள்வோம் எனத் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதன்படி, சனீஸ்வர பகவான், தான் அனுக்கிரக மூர்த்தியாக அருள தாமே வாக்குக் கொடுத்த தலம் இத்தலம் எனப்படுகிறது.  

நந்தியம் பெருமான்

இதனை, மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நாகைக் காரோண புராணத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.  இதன்படி, இங்கு அனுக்கிரக மூர்த்தியாக அருளும் சனீஸ்வர பகவானுக்கு எள் சாதமும், எள் பாயசமும் நிவேதனம் படைத்து, பக்தி சிரத்தையுடன் வழிபடுவோருக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கும் என்பது  ஐதீகம். இதனால், இத்தலம் சனிதோஷ நிவர்த்தி அளிக்கும் முக்கிய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

ராகு தோஷ நிவர்த்தி

தன்னுடைய மகளுக்கு இருந்த மிகை தனம் மறையவும், தனக்கு ஆண் வாரிசு கிடைக்கவும் வேண்டி நாகராஜன் வழிபட்ட தலமாக இத்தலம் குறிப்பிடப்படுகிறது. இங்கு, நாகராஜன் பிரதிஷ்டை செய்த விநாயகர், அருள்மிகு நாகாபரண விநாயகர் என்ற திருப்பெயருடன் கோயிலின் நுழைவு வாயிலில் தனி சன்னதிகொண்டு காட்சியளிக்கிறார்.

இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: திருமணத்தடை நீக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர் திருக்கோயில்

நாகராஜனின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், தனக்கான கணவரை உன் மகள் காணும்போது அவளின் மிகை தனம் மறையும் என்றருளினார். இதன்படி, முசுகுந்த சக்ரவர்த்தியைக் கண்ட நாகராஜனின் மகளுக்கு மிகை தனம் மறைந்ததாகவும் இத்தலத்தில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.

 அருள்மிகு நாகாபரண விநாயகர்

நாகராஜன் பிரதிஷ்டை செய்த விநாயகர், நாகத்தை ஆபரணமாகவும், குடையாகவும் கொண்டு காட்சியளிப்பது சிறப்பு. ராகு கால நேரத்தில் நாகாபரண விநாயகருக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்து வழிபட்டால் ராகு தோஷ நிவர்த்தி ஏற்படும் என்பது ஐதீகம்.

குழந்தைப் பேறு

சிவபெருமானால் தகனம் செய்யப்பட்ட மன்மதன் மீண்டுவர மகாவிஷ்ணு வழிபட்ட தலமாகவும், நாகராஜனுக்கு புத்திர பாக்கியம் அருளிய தலமாகவும் விளங்கும் இந்தத் தலம், குழந்தைப்பேறு அருளும் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்குள்ள விடங்கர் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்விக்கப்படும் தேனை, பக்தி சிரத்தையுடன் பருகுவோருக்கு குழந்தைப் பேறு சந்தானம் கிட்டும் எனப்படுகிறது.

மேலும், இத்தலம் சக்தியின் ருது ஸ்தானமாக இருப்பதால், இங்கு ஆடிப்பூர உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்குச் சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, முளை கட்டிய பயிர் சூர்ணோத்ஸவம் செய்யப்பட்டு, அம்பாளுக்கு மடியில் கட்டப்படுகிறது. இதனை மடிகட்டுதல் என்கின்றனர். பூரம் கழித்த பின்பு அம்பாளின் மடியிலிருந்த முளை கட்டிய பயிர் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அருள்மிகு காயாரோகண சுவாமி கோயில் பிரகாரம்

இந்த பிரசாதத்தை, பக்தி சிரத்தையுடன் உண்ணும் பூப்பெய்யா பெண் குழந்தைகள் நல்ல நேரத்தில் பூப்பெய்துவர் என்பதும், திருமணம் ஆன பெண்கள் இந்த பிரசாதத்தை உண்டால் குழந்தைப் பேறு கிட்டும் என்பதும் இத்தலத்து ஐதீகம்.

கர்ம வினைகள் தீரும்

முக்தி மண்டபம் அமையப் பெற்ற தொன்மையான தலங்களில் ஒன்றாக உள்ள இத்தலம், கர்ம வினைகளைத் தீர்த்து முக்தி அளிக்கும் தலமாகவும் குறிப்பிடப்படுகிறது.

"மனைவிதாய் தந்தை மக்கள்

  மற்றுள சுற்ற மென்னும்

வினையுளே விழுந்த ழுந்தி

  வேதனைக் கிடமா காதே

கனையுமா கடல்சூழ் நாகை

  மன்னுகா ரோணத் தானை

நினையுமா வல்லீ ராகில்

  உய்யலாம் நெஞ்சி னீரே"

என அப்பர் பெருமான் பதிகம் பாடியிருப்பதன் மூலம், இத்தலம் கர்ம வினைகள் தீர்க்கும் தலம் எனப்படுகிறது.

அதிபத்த நாயனார் அவதரித்த தலம்

நாகை நம்பியார் நகரில் மீனவர் குலத்தில் அவதரித்து, தனது சீரிய சிவபக்தியால் 63 நாயன்மார்களில் ஒருவராக இடம்பெற்ற அதிபத்த நாயனார் அவதரித்த மற்றும் ஐக்கியமான தலம் இது. இதன் காரணமாக, நாகை காயோரகண சுவாமி கோயிலில் அதிபத்த நாயனாருக்குத் தனி சன்னதி உள்ளது.

ஸ்ரீ அதிபத்த நாயனார் சன்னதி

மீனவரான அதிபத்தர், தான் கொண்டிருந்த சிவபக்தியின் காரணமாக, தனது வலையில் கிடைக்கும் மிகச் சிறந்த மீனை, சிவார்ப்பணம் எனக் கூறி கடலில் விடுவதை வழக்கமாகக் கொண்டவர். இவரது இறை பக்தியை உலகிற்கு உணர்த்தத் திருவுளம் கொண்ட சிவபெருமான், அதிபத்தருக்குக் கடும் வறுமையை அளித்துள்ளார். அதனால், அவரது வலையில் மீன்கள் கிடைப்பதே அரிதாகியது.

அதிபத்த நாயனார் ஐதீக திருவிழாவில் தங்க மீனுடன் சுவாமி - அம்பாள்

வறுமைக் காலத்தில், ஒரு நாள் வழக்கம் போல வலை வீசிய அதிபத்தரின் வலையில், விலை மதிக்க முடியாத தங்க மீன் ஒன்று கிடைத்தது. அந்த மீனுக்கு உலகையே விலையாகப் பேசலாம் என்பதை அவர் அறிந்திருந்தாலும், தான் கொண்டிருந்த கொள்கையில் சிறிதும் வழுவாமல், அந்த ஈடு இணையற்ற மீனை சிவார்ப்பணம் எனக் கூறி கடலில் விட்டுள்ளார்.

இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: கோள்களின் குற்றம் நீக்கிய திருக்குவளை கோளிலிநாதர் - நவ கிரகங்களின் தோஷம் அகலும்

வறுமையிலும், சிவபக்தியிலிருந்து வழுவாத அதிபத்தரின் பக்தியை மெச்சிய இறைவன் சிவபெருமான், ரிஷப வாகனத்தில் அன்னை உமாதேவியுடன் காட்சியளித்து, அதிபத்தருக்கு முக்தி அளித்தார் என்பது இத்தலத்து ஐதீகம். இந்த ஐதீக விழா ஆண்டுதோறும் ஆவணி மாத ஆயில்ய நட்சத்திர தினத்தில் நடைபெறுகிறது.

இந்த விழாவுக்காக அருள்மிகு காயாரோகண சுவாமி கோயிலிலிருந்து, சுவாமி - அம்பாள் புறப்பாடாகி நாகை கடற்கரையில் எழுந்தருளுவதும், அங்கு தங்க மீனைக் கடலில் விடும் உற்சவம் நடைபெற்ற பின்னர், தங்க மீனையும், அதிபத்தரையும் தன்னருகே கொண்டு சுவாமி - அம்பாள் நகர்வலம் வருவதும் இங்கு வழக்கம்.

இறந்தவர் உடலுக்கு சிவன் மாலை

ஆலய வளாகங்களில் உள்ள குடியிருப்புகளில் ஏதேனும் துக்க நிகழ்வு ஏற்பட்டால், கோயிலின் நடை சாற்றப்படுவது வழக்கம். ஆனால், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிகழ்வாக, சிவபெருமானுக்கு அணிவிக்கப்பட்ட மாலையை இறந்தவர்களின் சடலத்துக்கு அணிவிக்கும் வழக்கம்கொண்ட ஒரே கோயில் இக்கோயில் மட்டுமே ஆகும்.

அருள்மிகு காயாரோகண சுவாமி கோயிலின் கிழக்குக் கோபுரம்

அதிபத்த நாயனார் அவதரித்த நம்பியார் நகரைச் சேர்ந்த மீனவர்கள் யாரேனும் இறந்தால், இறந்தவரின் சடலம்  அருள்மிகு காயாரோகண சுவாமி கோயில் வாசலுக்குக் கொண்டு வரப்பட்டால், அருள்மிகு காயாரோகண சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலை கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்டு, இறந்தவரின் சடலத்துக்கு அணிவிக்கப்படுகிறது.

ஏதேனும் ஒரு காலத்தில் அதிபத்த நாயனார் மீண்டும் அதே கிராமத்தில் அவதரித்திருந்தால், அவருக்கு அப்போதும் உரிய மரியாதை கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அழுகுணி சித்தர் ஐக்கிய தலம்

இறையருளுக்காக அழுது அடம்பிடிக்கும் வழக்கம் கொண்டவராகக் குறிப்பிடப்படும் அழுகுணிச் சித்தர், இத்தலத்தில் அன்னை நீலாயதாட்சியம்மனின் அருளை அழுது பெற்றார் எனப்படுகிறது. இதன்படி, அழுகுணிச் சித்தர் பீடம் இக்கோயிலின் கிழக்குப் பிரகாரத்தில் உள்ளது.

ஸ்ரீ புண்டரீக முனிவர்

சிம்ம வாகன பைரவர்

காசியில் சிம்ம வாகனத்துடன் பைரவர் காட்சியளிப்பதைப் போன்று இத்தலத்திலும் சிம்ம வாகனத்துடன் பைரவர் காட்சியளிக்கிறார். கோயிலின் திருக்குளமான புண்டரீக தீர்த்தத்தில் கங்கை பிரவாகம் எடுத்த போது, காசியில் கங்கைக் கரையில் காட்சியளிக்கும் சிம்ம வாகன பைரவர் இங்கு எழுந்தருளினார் என்பது ஐதீகம். இதன்படி, புண்டரீக குளத்தின் கிழக்குக் கரையில் சிம்ம வாகனத்துடன் காட்சியளிக்கிறார் சிம்ம வாகன கால சம்ஹார பைரவர்.

இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: எண்ணிய முடிக்கும் கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சனேயர் கோயில்

விழாக்கள்

வைகாசி பிரமோத்ஸவம், ஆனி ஆயில்யத்தில் புண்டரீக மகரிஷி ஐக்கிய விழா, ஆனி கிருஷ்ணபட்ச அஷ்டமியில் பஞ்ச குரோச உற்சவம், ஆவணி ஆயில்யத்தில் அதிபத்த நாயனார் ஐக்கிய விழா, ஆடி, தை மாதங்களின் அமாவாசை நாள்கள் மற்றும் மாசி மக நட்சத்திர நாளில் சமுத்திர தீர்த்தவாரி, ஆடிப்பூரம் எனப் பல விழாக்கள் இங்குப் பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகின்றன.

தேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்ற தலம், அகத்தியர் மற்றும் முசுகுந்தனுக்கு திருமணக் காட்சி அருளிய தலம், பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்கு சூட்சும பஞ்சாட்சர நடனம் அருளிய தலம், சனி தோஷ நிவர்த்தி தலம், குழந்தைப் பேறு அருளும் தலம் என பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளையும், காலப் பழமையும், சாலப் பெருமைகளையும் கொண்ட இக்கோயில்,  இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

திருக்கோயிலுக்குச் செல்ல..

நாகைக்கு அருகில் உள்ள விமான நிலையம் திருச்சி. அயல்நாடுகளிலிருந்து வருவோர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து தஞ்சை, திருவாரூர் வழி சுமார் 140 கி.மீ. தொலைவு பயணித்து நாகையை அடையலாம்.

கோயிலுக்கு நேரில் வர இயலாதவர்களுக்கு, அவர்களின் விருப்பத்தின் பேரில் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு, கூரியர் மூலம் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. தொடர்புக்கு 04365 - 242844.

முகவரி

அருள்மிகு நீலாயதாட்சி உடனுறை காயாரோகண சுவாமி திருக்கோயில்

நாகப்பட்டினம் - 611 001

 

Tags : பரிகாரத் தலங்கள் parikara thalangal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT