பரிகாரத் தலங்கள்

ராகு, கேது, செவ்வாய் தோஷ நிவர்த்தி பெற கொடுமுடி மகுடேசுவரர் கோயில்

கே.விஜயபாஸ்கா்

ராகு, கேது, செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான பரிகாரத் தலமாக விளங்குகிறது தென் கைலாயம் எனப் போற்றப்படும் கொடுமுடி மகுடேசுவரர் - வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் காவிரிக் கரையில் அமைந்துள்ளது பழைமை வாய்ந்த மகுடேசுவரர் - வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில்.

கொங்கு நாட்டின் பாடல் பெற்ற ஏழு திருத்தலங்களில் ஒன்றாக இடம்பெற்ற திருப்பாண்டிக் கொடுமுடிக்குப் பிரம்மபுரி, அரிகரபுரம், அமுதபுரி, கன்மாடபுரம், கறையூர், கறைசை, திருப்பாண்டிக் கொடுமுடி, அங்கவருத்தனபுரம், பாண்டு நகரம், பரத்துவாச க்ஷேத்திரம் என பல பெயர்கள் உண்டு.

இந்திரனது சபையில் வாயுதேவனுக்கும் ஆதி சேஷனுக்கும் தங்களுடைய வலிமை குறித்த வாதம் நிகழ்ந்தது. முடிவில் ஆதிசேஷன் மேரு மலையின் சிகரங்களை அசையாது சுற்றிக்கொண்டான். வாயுதேவன் மிகவும் வலிமையுடன் மேருவின் சிகரங்களை மோதித் தகர்த்தான். இவ்வாறு மேரு மலை தகர்ந்தபோது, ஐந்து துண்டுகள் மணிகளாகச் சிதறி விழுந்தன.

இவற்றில் சிவப்பு மணி விழுந்த இடம் திருவண்ணாமலையாகவும், மரகதம் விழுந்த இடம் திருஈங்கோய் மலையாகவும், மாணிக்கம் விழுந்த இடம் ரத்தினகிரி (சிவாயமலை) மலையாகவும், நீலமணி விழுந்த இடம் திருப்பொதிகை மலையாகவும் அமைந்தன.

ஐந்தாவதாக வைரம் விழுந்த இடம் கொடுமுடியாக அமைந்தது. கொடுமுடி என்பது பெரிய சிகரம் எனப் பொருள்படும். மலைச்சிகரமே மகுடலிங்கராக அமைந்துள்ளதால், கொடுமுடி தென் கைலாயம் என்ற பெயர் பெற்றுள்ளது.

படைத்தல், காத்தல், அழித்தல் என உலகையே தன் இயக்கத்தில் வைத்துக் காக்கும் பிரம்மா, சிவன், பெருமாள் அருள்பாலிக்கும் மும்மூர்த்தி தலமாக மகுடேசுவரர் - வீரநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கொடுமுடிநாதர், மலைக்கொழுந்தர், மகுடலிங்கர் எனப் பல பெயர்களில் போற்றப்படும் மூலவர் மகுடேசுவரர், சௌந்திராம்பிகை, பண்மொழியம்மை என்று போற்றப்படும் வடிவுடைநாயகி அம்பாள், அகத்தியருக்கு மணக்கோலத்தில் காட்சியளித்ததால், மகுடேசுவரருக்கு வலதுபுறத்தில் அம்பாள் மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் சுவாமி மீது அகத்தியரின் கைப்பட்ட வடு உள்ளது.

பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கும் மூலவர் வீரநாராயணப் பெருமாள்

ஆதி நாராயணர் எனப் போற்றப்படும் வீரநாராயணப் பெருமாள், தாயார் மகாலட்சுமியுடன் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றார். இவர்களுடன் தலவிருட்சமாக விளங்கும் வன்னி மரத்தின் அடியில் மூன்று முகம் கொண்டவராக ஸ்ரீ பிரம்மா அருள்பாலிக்கிறார்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளையுடைய, இத்திருக்கோயிலில் காவிரியுடன் சேர்த்து நான்கு தீர்த்தங்கள் உள்ளன. கோயில் வளாகத்திலேயே வன்னி மரத்தின் அருகில் தேவ தீர்த்தம், மடப்பள்ளி அருகில் பிரம்ம தீர்த்தம், நவக்கிரகம் அருகில் பரத்துவாச தீர்த்தம் இடம் பெற்றுள்ளன.

காவிரி நதியின் மேல்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தத் திருத்தலத்தில், மகுடேசுவரர், அம்மன், வீரநாராயணப் பெருமாள் ஆகியோருக்கு மூன்று கோபுரங்கள் உள்ளன.

அன்ன அலங்காரத்தில் சுயம்பு லிங்கமாக மகுடேசுவரர் சுவாமி.

கோயில் வளாகத்தில் வடக்கில் மகுடேசுவரர், தெற்கில் வடிவுடைநாயகி அம்மன், நடுவில் பள்ளிகொண்ட நிலையில் வீரநாராயணப் பெருமாள் சன்னதிகளும் உள்ளன. தென்மேற்கு மூலையில் ஆஞ்சனேயர், பெருமாள் கோயிலுக்குத் தெற்கில் திருமங்கை நாச்சியார் சன்னதியும் அதன் முன்பே வன்னி மரமும், பிரம்மன் சன்னதியும் உள்ளன.

கோயில் கோபுரத்துக்கு உள்பாகத்தில் சூரியன், சந்திரனும் இருபக்கத்திலும் உள்ளனர். நவக்கிரகங்கள், பைரவர், சனீஸ்வரர் சன்னதிகளும் உள்ளன. கோயிலுக்கு நடுவில் மூலவரும், உள்சுற்றுப் பிரகாரத்தில் தெற்கில் அறுபத்து மூவரும், மேற்கில் காவிரி கண்ட விநாயகரும், உமா மகேசுவரர், அகத்தீசுவரர், கஜலட்சுமி, ஆறுமுகப் பெருமானும், வடக்கில் நடராஜர், நால்வர் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

பெருமாள் கோயிலுக்கு உள்ளே இருபுறமும் பன்னிரு ஆழ்வார்களும், பரமபதநாதர், உடையவர், வெங்கடாசலபதி, கருடனும் எழுந்தருளியுள்ளனர். மூலவர் வீரநாராயணப் பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார். கோயிலுக்கு எதிரில் காவிரிக்கரையில் சக்திவிநாயகர் காட்சியளிக்கிறார்.

பாண்டிய, பல்லவ மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட இக்கோயிலில் பிற்காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களாலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கோவிலுக்குரிய கல்வெட்டுகள் பெருமாள் கோயிலிலும் வெளியிடங்களிலும் செப்பேட்டிலும் உள்ளன. சுந்தரபாண்டியன் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டு ஒன்று வீரநாராயணப்பெருமாள் கோயிலில் உள்ளது.

வன்னிமரம்

மகுடேசுவரர் கோயிலின் தல விருட்சமான வன்னி மரம் கோயில் வளாகத்தில் உள்ளது. 2000 ஆண்டு பழமையான இம்மரத்தின் ஒருபுறக் கிளைகள் முற்களுடனும், மறுபுறம் முட்கள் இல்லாமலும், பூக்காமல், காய்க்காமல், தெய்வீகத் தன்மையுடன் திகழ்கிறது. வன்னிமர இலைகளைக் காவிரி தீர்த்தக் கலசத்தில் இட்டுப் பழனியாண்டவர் மற்றும் இதர தெய்வங்களைப் பூஜிக்கப் பக்தர்கள் கொண்டு செல்கின்றனர்.

தல விருட்சமாக விளங்கும் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வன்னி மரம். 

பிரம்மா வீற்றிருக்கும் வன்னி மரத்தை 12 (கால் மண்டலம்), 24 (அரை மண்டலம்), 48 (ஒரு மண்டலம்), வயதின் எண்ணிக்கை, 108 முறை வலம் வந்து அருள் பெறுகின்றனர். இம்மரத்தினை பிரதட்சிணம் செய்வதால், சனி, குரு, ராகு, கேது போன்ற கிரக தோஷங்களில் நிவாரணம் பெறுகின்றனர்.

சனி பகவானுக்கு உரிய மரமாகவும் அவிட்ட நட்சத்திரக்காரர்களின் விருட்சமாகவும் வன்னி மரம் போற்றப்படுகிறது. பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்திருந்தபோது, தனது ஆயுதங்களை வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

நான்கு கரங்களுடன் அட்சமாலை கமண்டலத்துடன் மூன்று முகம் கொண்ட பிரம்மா வன்னி மரத்தடியில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பிரம்மாவை வழிபடுவதால், பூர்வ புண்ணிய தோஷ நிவர்த்தி, பசு, பட்சி, பிராமண சாபம் மற்றும் பல்வேறு கிரக தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெற முடியும்.

வன்னிமரத்தடியில் வீற்றிருக்கும் பிரம்மாவிற்கு ஒவ்வொரு வாரமும் திங்களன்று அபிஷேக ஆராதனை செய்வதற்கும், பிரம்மாவின் முன் அமர்ந்து தியானம் செய்வதற்கும், புனர்ஜன்ம பூஜை வழிபாட்டிற்காகவும் கர்நாடக மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.
 
தினப் பூஜைகள்

கொடுமுடி மகுடேசுவரர் கோயிலில் நாள்தோறும் காலை 6 மணிக்கு உஷைக்கால பூஜை (பால் பூஜை), காலை 6.30 மணிக்கு காலசாந்தி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜையும், இரவு 8.30 மணிக்கு பள்ளியறை பூஜை என ஐந்து கால பூஜைகள் நாள்தோறும் நடக்கின்றன. பூஜை நேரங்களில் பெரிய மணி அடிக்கப்படும். இங்கு, பிரதோஷ கால பூஜையும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

விழாக் காலங்கள்

கொடுமுடி மகுடேசுவரர் - வீரநாராயணப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விழா விமர்சையாக நடந்தேறி வருகிறது. இந்த நாள்களில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருளி அருள்பாலிப்பர். சித்திரைத் திருவிழாவின் 10ம் நாள் மகுடேசுவரர், வீரநாராயணப் பெருமாள், விநாயகர்  தனித்தனித் தேர்களில் திருவீதி உலா வருவர்.

ஆடி 18 திருவிழாவின்போது, மூர்த்திகள் காவிரிக்கு எழுந்தருளி அருள்பாலிப்பர். அன்றைய இரவில், பச்சை மண்ணில் தாலி செய்து அதில் மாவிளக்கு, பொட்டு, விளக்கு காரை, காதோலை, கருகமணி, சிற்றாடை, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து காவிரி ஆற்றில் விட்டு வருவர். ஆடி மாதத்தில் அம்மனுக்கும், லட்சுமிக்கும் சந்தனக்காப்பு ஆராதனை நிகழும். சிவராத்திரிகளில் இரவில் நான்கு காலங்களிலும் அபிஷேக ஆராதனை நடைபெறும்.

மார்கழி மாதம் திருவாதிரை நாளிலும், வைகுண்ட ஏகாதசி நாளிலும் சிவன், பெருமாள் புறப்பாடு விமரிசையாக நடந்தேறும். மார்கழி  திருவாதிரை நாளில் வீரநாராயணப் பெருமாள், திருமங்கல நாண் நோன்புக்காக, தங்கை வடிவுடைநாயகிக்கு ஊஞ்சலிட்டுத் தேங்காய், சந்தனம், பூ, பட்டாடை, மஞ்சள், குங்குமம் எனச் சீர்வரிசைகளை மேள வாத்தியங்களுடன் கொண்டு சேர்க்கும் வைபவம் நடைபெறும். அதேபோல், தை முதல் நாளில் மகுடேசுவரரிடம் இருந்து மைத்துனர் வீரநாராயணப் பெருமாளுக்கு பொங்கல் சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டு வழங்கப்படும்.

இவை தவிர தமிழ், தெலுங்கு புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடி, தை  அமாவாசை, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ணஜெயந்தி, கந்தர் சஷ்டி சூரசம்ஹார விழா, சோமவார சங்காபிஷேக பூஜை, பங்குனி உத்திரம் என முக்கிய விசேஷ நாள்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறும். 

கோயில் அருகில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள்.

காவடி பூஜை

கொங்கு மண்டலத்தில் உள்ள பெரும்பாலான கோயில் திருவிழாக்களின் போது, கொடுமுடி மகுடேசுவரர் - வீரநாராயணப் பெருமாளை வழிபட்டு, காவிரித் தீர்த்தம் கொண்டு செல்வது ஐதீகமாக உள்ளது.

பங்குனி மாதத்தில் பழனி முருகனுக்கு காவடி எடுத்துச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களால் கொடுமுடி நிரம்பி வழியும். பங்குனி உத்திரக் காவடி எடுக்கும் பக்தர்கள், காவிரியில் நீராடி, தீர்த்தம் எடுத்துக்கொண்டு கொடுமுடியின் அடையாளமாய் வன்னி இலையைக் கலசத்தில் வைத்துக்கொண்டு பாதயாத்திரையாகப் பழனிக்குப் புறப்படுவர். அப்போது தப்பட்டம், பதலைப்பறை, சிறுபறை, உடுக்கை, பம்பை, உறுமி, பேரிகை, ஊதுகொம்பு, தாரை, திருச்சின்னம், துத்தாரி என வாத்தியங்களின் முழக்கத்தால் கொடுமுடி நகரம் திருவிழாக் கோலம் பூண்டு காணப்படும்.

பரிகாரத் தலம்

கொடுமுடி மகுடேசுவரர் கோயிலில் ராகு, கேது, செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான பரிகார பூஜைகள், ஆயுள் ஹோமம், நவக்கிரக தோஷ பரிகார ஹோமம், உடல் ஆரோக்கியத்திற்காகத் தன்வந்திரி பகவானுக்கான ஹோமம், தொழில் வளர்ச்சி, குழந்தைகள் கல்வி எனப் பல்வேறு ஹோமங்கள் அர்ச்சகர்களால் நடத்தி வைக்கப்படுகின்றன.

திருமணமாகாத ஆண், பெண்கள் காவிரியில் நீராடி, பரிகார பூஜைகளை மேற்கொண்டால் உடனடி பலன் பெற முடியும். இவ்வாறு பரிகார பூஜையால் பலன் பெற்றோர், கொடுமுடி கோயிலிலேயே திருமணம் செய்துகொள்ள வருவதால், முகூர்த்த நாள்களில் திருவிழாக் கூட்டம் கோயிலில் இருக்கும்.

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தத் தலத்தில் உள்ள சனீஸ்வரருக்கு சனிக்கிழமை எண்ணெய்க் காப்பு சாற்றி, எள் சாதம், நைவேத்தியத்துடன் பூஜைகள் செய்வது விசேஷமாகக் கருதப்படுகிறது.

பரிகார பூஜை மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள் கோயில் அலுவலகத்தை நேரில் அணுகி, ரூ. 200 கட்டணம் செலுத்தினால் அர்ச்சகர்கள் அமர்த்தித் தரப்படுவர்.

பூஜைகளை மேற்கொள்ளும் வேதியருக்குத் தேவையான பூஜைப்பொருள்கள், அவருக்கான கட்டணம் போன்றவற்றைப் பக்தர்கள் செலுத்த வேண்டும். பரிகார பூஜைகள் பற்றிய தகவல்களைத் திருக்கோயில் அலுவலகத்தை (04204 -222375) தொடர்புகொண்டு கேட்டுப் பெறலாம்.

பரிகாரம் செய்வது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.

இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் அன்னதானமும், கட்டணம் செலுத்தித் தங்கும் விடுதி வசதியும் உள்ளது.

கல்வெட்டுகளில் அதிராஜராஜ மண்டலத்து காவிரி நாட்டுக் கறையூர்த் திருப்பாண்டிக் கொடுமுடி என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் கொடுமுடிக்கு இன்னொரு வரலாறும் உண்டு. கங்கை நீரைக் கமண்டலத்தில் வைத்துக்கொண்டு அகத்தியர் தவம் புரிந்தபோது, காக்கை வடிவம் கொண்டு அகத்தியன் கமண்டல நீரைக் கவிழ்த்தார். கமண்டல நீரே கொடுமுடியில் காவிரி நீராக ஓடத் தொடங்கியது. கொடுமுடியில் காவிரி தெற்கிலிருந்து கிழக்கு நோக்கித் திரும்பி சோழநாட்டை நோக்கிப் பயணிக்கிறது. இவ்விடத்தில் காவிரியின் நடுவில் அகத்தியர் பாறை அமைந்துள்ளது. பரிசல் மூலமாகக் காவிரியைக் கடந்து சென்றால், அகத்தியர் பாறையில் இந்த உருவங்கள் குறித்த ஓவியங்களைக் காண முடியும்.

கர்நாடகத்தில் தோன்றித் தமிழகத்தைத் தொட்டுப் பயணிக்கும் காவிரித்தாய் கொடுமுடியில் கிழக்கு நோக்கித் திரும்புவதால், இக்கோயிலுக்கு வந்து சென்றால் வாழ்வில் திருப்புமுனை ஏற்படும் என்ற நம்பிக்கையும் தொடர்கிறது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது, கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான மக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். 

கோயில் திறப்பு

காலை 6 மணி முதல் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

முகவரி

அருள்மிகு மகுடேஸ்வரர் கோயில், கொடுமுடி, ஈரோடு மாவட்டம். 638151.

போக்குவரத்து வசதி

ஈரோட்டில் கரூர் செல்லும் சாலையில் 40 கிலோ மீட்டர் தொலைவில் கொடுமுடி உள்ளது. கரூர்-ஈரோடு சாலையில் 27 கிலோ மீட்டர் தொலைவிலும் கொடுமுடி உள்ளது. ஏராளமான பேருந்துகள், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை, கேரள மாநிலம் மங்களூர், கர்நாடக மாநிலம் மைசூர் போன்ற இடங்களிலிருந்து ரயில் வசதி உள்ளது.

விமான பயணம் மேற்கொள்வோர் திருச்சி, கோவை, சேலம் ஆகிய விமான நிலையங்களிலிருந்து சாலை அல்லது ரயில் வழியாக கொடுமுடி திருத்தலத்தை அடையலாம். கொடுமுடியில் கோயில் அருகிலேயே  தனியார் தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT