பரிகாரத் தலங்கள்

சுகப் பிரசவம் அருளும் திருச்சி தாயுமான சுவாமி திருக்கோயில்

தினமணி

பெண்களுக்கு சுகப் பிரசவம் அருளும் சிறப்புவாய்ந்த கோயிலாகத் திகழ்கிறது திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில். சுவாமியே பெண்ணாக வந்து தனது பக்தைக்குப் பிரசவம் பார்த்த வரலாற்றுச் சிறப்பு மிக்கது இந்தத் திருத்தலம்.

நவீன கருவிகள் இல்லா அன்றைய காலத்திலேயே இப்பெருங் கோட்டைக் கோயில் 417 படிகளுடன், 273 அடி உயரத்தில் உலகக் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், வரலாற்று முக்கிய தத்துவம் பெற்றதாகவும், புராதன சின்னமாகவும் விளங்குகிறது இந்த மலைக்கோயில்.

புவியியல் ஆய்வுப்படி 3,500 பில்லியன் ஆண்டுகள் பழமையானது இந்த மலை எனக் கூறப்படுகிறது. சோழர், பல்லவர், பாண்டியர், பிற்காலச் சோழர், நாயக்கர், மராட்டியர் கால கட்டடக் கலைப்பாணிகளைக் கொண்டு விளங்குகிறது கோயில். மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் பாதுகாப்பிலிருந்த இத்திருக்கோயில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் துறவியர் பராமரிப்பிலும் இருந்துள்ளது. புராணச் சிறப்புடையது.

கோயில் நுழைவுவாயில் கோபுரம்

திருச்சி கொடும்பாளூர் என்ற இடத்திலிருந்து கற்களும் பிற பொருள்களும் கொண்டு கட்டப்பட்டன. மலையின் மேல் உள்ள சிவலிங்கம் தானாக வளர்ந்தது என்பது ஐதீகம். ராமாயண காலத்திலேயே இந்த மலை இருந்ததாக கூறப்படுகிறது. திரிசிரன் என்ற அசுரன் இத்திருத்தலத்தில் உள்ள சிவலிங்கத்தைப் பூஜித்து வந்தான் என்பது புராண வரலாறு. மேலும், தாயுமானவர் திருக்கோயில் கருவறை திருப்பணி திரிசிரன் செய்ததாகும். பிற்காலத்தில் இம்மலையைச் சூழ்ந்து அமைந்த நகரத்திற்கு திரிசிரபுரம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. 

சோழர் ஆட்சியியில் உறையூர் தலைநகராக இருந்தபொழுது சாரமாமுனிவர் என்பவர் சிவலிங்கத்தை செவ்வந்தி மலர்க்கொண்டு பூஜித்து வந்தார். அதனால் இறைவன் செவ்வந்திநாதர் என்று அழைக்கப்பட்டார். இறைனை பூஜை செய்வதற்கு அமைக்கப்பட்ட நந்தவனத்தில் உள்ள செவ்வந்தி மலர்களை களவாடிய கள்வனைப் பற்றி உறையூரை ஆட்சிசெய்த பராந்தக சோழனிடம் முறையிட, அவன் கள்வனை அழைத்துத் தண்டிக்காத காரணத்தால், முனிவர் இறைவனிடமே முறையிட கிழக்கு முகமாக இருந்த சிவன் மேற்கு முகமாக திரும்பி உறையூரை மண்மாரி பொழிந்து உறையூர் அழிந்தது. அன்றிருந்த கிழக்கு வாசல் பகுதி தெரியும் வண்ணம் நிலை மட்டும் உள்ளது. இக்கிழக்கு வாசலைக் கடந்து, மேற்கு முகமாக உள்ள மூலவர் இறைவனைத் தரிசிக்கலாம்.

தலப் பெருமை

இறப்பவருக்கு முக்திதரும் காசியைவிடவும், பிறப்பவருக்கு முக்திநல்கும் திருவாரூரை விடவும் பெருமை மிகுந்த சிராமலைபோல அருமை வாய்ந்த திருத்தலம் அவனியில் வேறு எங்கும் இல்லை என்னும் சிறப்பினைக் கொண்டது இத்திருத்தலம். இதனை பூலோக கைலாயம் என்றும் சைவ சமயம் போற்றுகின்றது. திருக்கயிலை மலையில் சிவபெருமானும் உமையம்மையும் வீற்றிருப்பதைப் போல அருள்மிகு தாயுமான சுவாமியும் மட்டுவார்குழலம்மையும் இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பதுடன், முழு முதலாகிய விநாயகப்பெருமான் மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகராகவும், மலை உச்சியில் உச்சி விநாயகராகவும் அருள்பாலித்து வருகின்றனர்.

பழமையான சிவாலயமான இத்திருத்தலம், 274 சைவத்தலங்களுள் ஈடு இணையற்ற தலம். தென் கயிலாயம் என்றும், தட்சிண கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திரவர்மனால் மலையின் மேலும், கீழும் குடையப் பெற்ற இரு குகைக் கோயில்களும் மேல்குகையில் உள்ள கங்காதரரின் சிற்பமும் மற்றும் தமிழிலும், கிரந்தத்திலும் உள்ள பல கல்வெட்டுகளும் சான்றாக உள்ளது.

கோயிலின் சித்திர மண்டபம் திருக்குற்றாலத்தில் உள்ள சித்திரசபை போல கூரைச் சுவர்கள் உள்பட எங்கு பார்த்தாலும், அரிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சிவபெருமானது 25 வடிவங்கள், தாயுமானவர் உறையூரை அழித்த வரலாறு அழகிய ஓவியமாகவும், தாயாக வந்த காட்சி ஒரு தூணில் அழகிய சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேற்கூரையிலிருந்து தொங்கக்கூடிய ஒரே கல்லாலான கற்சங்கிலி, சிங்கத்தின் வாய்க்குள் கீழே விழாமல் உருளக்கூடிய பந்து, தொங்கும் தாமரைப்பூவில் தேன் உண்ணும் கிளிகள் முதலியவை சிறந்த கருங்கல் வேலைப்பாடாகும்.

திருமுறைகளால் சிறப்பிக்கப் பெற்ற பல அற்புதங்களும் அதிசயங்களும் நிகழ்ந்த ஆன்மிக சிறப்புமிக்க தலமாகவும், பாடல்பெற்ற ஒப்பற்ற பிரார்த்தனைத் தலமாகவும் விளங்கும் அருள்மிகு தாயுமான சுவாமி திருத்தல வரலாறு என்னும் இந்நூல் இத்தலத்தின் பல பெருமைகளையும், சிறப்புகளையும் உள்ளடக்கிய ஒரு ஆன்மிக கருவூலமாக உள்ளது. திருக்கோயிலில் இறைவனே தாயாக வந்து சுகப்பிரசவம் பார்த்ததால் தாயுமான சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இங்கு பிரார்த்தனை செய்யும் பெண்களுக்கு சுகப் பிரசவம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

தல சிறப்புகள்

திரிசிர மலையில் தனகுப்தன் தனது மனைவி இரத்தினாவதியுடன் வாழ்ந்து வந்தான். தனகுப்தனுடன் இனிய இல்லறம் நடத்திவந்த இரத்தினாவதி ஒவ்வொரு நாளும் திரிசிர மலையில் உறையும் செவ்வந்திநாதரை வழிபட்டுத் தாயாகும் பேறு அடைந்தாள். பேறுகாலம் முதிரவே பிரசவம் பார்க்க வரும்படி தன் தாய்க்குத் தெரிவித்தாள். தாயும் மகளுக்குப் பிரசவத்திற்கு வேண்டிய மருந்து மற்றும் எண்ணெய் போன்ற பொருள்களுடன் பூம்புகாரிலிருந்து புறப்பட்டு திரிசிராமலை வரும் வழியில் காவிரியில் நீர்ப்பெருக்கு காரணமாக, தாய் வரவு வடகரையிலேயே தடைப்பட்டது. 

பிரசவிக்கும் நேரம் நெருங்கியும் தாய் வரவில்லை என்பதால் தாம் வழிபட்ட செவ்வந்திநாதரிடம் வேண்டினாள். அப்போது செவ்வந்திநாதரே தாய் வேடம் தரித்து நிறைபேற்றுடன் தவித்துக்கொண்டிருந்த இரத்தினாவதிக்கு தக்க மருத்துவம் பார்த்து தாயையும், பிறந்த ஆண் மகவையும் ஏழு தினங்கள் கவனித்துக்கொண்டார். காவிரி நீர்ப்பெருக்கு வடிந்து உண்மையான தாய் வந்தாள். இரு தாய்களில் உண்மையான தாய் யார் எனத் திகைத்தாள். அப்போது, தாயாக வந்த இறைவர், மறைந்து வானில் மட்டுவார் குழலம்மையுடன் இடபவாகனராக தோன்றினார்.

அன்று முதல் திரிசிராமலை செவ்வந்திநாதருக்குத் தாயுமானவர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இது சித்திரைப் பெருந்திருவிழாவில் இன்றும் செட்டிப்பெண் மருத்துவம் எனக் கொண்டாடப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் தாயுமான சுவாமியை நினைத்து பக்தியுடன் சுகப்பிரசவ சுலோகம் தினமும் மூன்று முறை சொல்லி வணங்கிவந்தால் சுகப்பிரசவம் உண்டாகும். சுகப் பிரசவம் ஆனோர், பெற்றெடுத்த குழந்தையோடு, நேர்த்திக் கடனாக, பால், வாழைத் தார் ஆகியவற்றுடன் வந்து வழிபட்டு அர்ப்பணம் செய்வதை நாள்தோறும் இத்தலத்தில் காணலாம்.

அன்னதானம்

திருக்கோயிலுக்கு வரும் சேவார்த்திகளுக்குத் தினந்தோறும் பகல் 12.00 மணி அளவில் 200 நபர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. பிரதி வாரம் வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழா நாள்களில் வடை, பாயசம், அப்பளத்துடன் கூடிய சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. 

கோயில் நடை திறக்கும் நேரம்: காலை 6.00 - 12.30  மாலை 4.00 - 8.30

முகவரி

அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில்,
மலைக்கோட்டை, என்.எஸ்.பி. சாலை,  
திருச்சிராப்பள்ளி - 620002.

தொலைபேசி எண்: 0431-2704621
மின்னஞ்சல் : thayumanaswamy@thnrce.com

படங்கள்: எஸ். அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT