பரிகாரத் தலங்கள்

குழந்தைப்பேறு அருளும் பேரையூர் நாகநாத சுவாமி திருக்கோயில்

சா. ஜெயப்பிரகாஷ்


புதுக்கோட்டை நகரிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில், சுமார் 13 கிமீ தொலைவில் உள்ளது பேரையூர் அருள்மிகு நாதநாத சுவாமித் திருக்கோயில்.

சிவபெருமான் நாகநாத சுவாமியாக எழுந்தருளியுள்ள இந்தக் கோயிலின் அம்மன் பிரகதாம்பாள். நடுவே வள்ளி, தெய்வானையுடன் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி காட்சி தருகிறார்.

கோயில் பிரதான கோபுரம்

புதுக்கோட்டைத் திருக்கோயில்கள் நிர்வாகத்துக்கு உள்பட்ட இந்தக் கோயில், கிபி 12-13ஆம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். பாண்டிய மன்னர் சுவேதகேது இக்கோயிலை நிர்மாணித்தாகக் கூறப்படுகிறது. 

நாகநாத சுவாமி பெயர்க் காரணம்

சாலேந்திரன் என்னும் மன்னன் தீவிர சிவபக்தன். தினமும் சிவனை வழிபட்டு வந்தவன். ஒரு நாள் சிவபூஜையின்போது நாககன்னி மீது ஆசை கொண்டுள்ளான். இதையடுத்து அவனை நாகலோகத்தில் பிறந்து, நாககன்னியை மணந்து, தன்னை வழிபட அருளினார் சிவபெருமான்.

கோயிலின் வெளிப்பிரகாரம்

இதனைத் தொடர்ந்து சாலேந்திரன், நாகலோகத்தில் குமுதன் என்ற பெயரில் பிறந்து, நாககன்னியை மணந்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். இந்த வழிபாட்டுக்காக நாகலோகத்தில் இருந்து 7 நாக கன்னிகள் பூலோகம் வந்து மலர்களைப் பறித்துவர வேண்டும். பேரையூரிலுள்ள சுனை வழியாக நாககன்னிகள் இங்கு வந்து (பேரையூருக்கு செண்பக வனம் என்ற பெயரும் உண்டு) செண்பகப் பூக்களைப் பறித்துச் சென்றுள்ளனர். ஒரு நாள் நாககன்னிகள் வந்து பூக்களைப் பறித்துச் செல்வதைக் கண்ட பேரையூர் பெருமான், அவர்களிடம் உங்களின் நாகராஜனை அழைத்து வாருங்கள் எனக் கேட்டுள்ளார்.

கோயில் வளாகத்திலுள்ள புண்ணிய புஷ்கரணி 

அவரை அழைத்து வர வேண்டுமானால் எங்களுடன் ஒருவரை அனுப்பிவைக்க வேண்டும் என அவர்கள் கேட்டதைத் தொடர்ந்து, நந்திதேவரை உடன் அனுப்பியுள்ளார். இதன்படி, பேரையூர் வந்த நாகராஜன் குமுதன், பேரையூர் பெருமானை தரிசித்துள்ளார். அப்போது வேண்டும் வரம் கேள் என நாகராஜனை பெருமான் கேட்க, தேவர்கள் துந்துபி இசைக்க நீங்கள் நர்த்தனம் புரிய வேண்டும் எனக் கேட்டுள்ளார். நாகராஜனின் ஆசையை நிறைவேற்ற சிவபெருமான் நர்த்தனம் ஆடியுள்ளார். தொடர்ந்து, நாகநாத சுவாமி என்ற பெயரிலேயே நான் இங்கு இனி அழைக்கப்படுவேன் என்றும் சிவபெருமான் அருளினார். இதனால், பேரையூர் பெருமான் நாகநாத சுவாமி என்றே அழைக்கப்படுகிறார் என்கிறது கர்ண பரம்பரைக் கதை.

ஸ்ரீநாகநாதர் (ராகு - கேது)

கோயில் விமானம் பிற்காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. கருவறையின் முன்புள்ள அர்த்த மண்டபத்தில் சுரங்கப்பாதை உள்ளதாகவும், போர்க் காலங்களில் சிலைகளையும் சொத்துகளையும் மறைத்துவைப்பதற்காக இது அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

புண்ணிய புஷ்கரணி

இங்குள்ள மேலக்கோபுரம், கிபி 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. ராஜேந்திர சோழன் காலத்தைய கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது. எனவே, அதே காலத்தில்கூட இந்தக் கோபுரம் கட்டப்பட்டிருக்கலாம்.

பல்லவராயர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தப் பகுதி 'பேரையூர் நாடு' என்றழைக்கப்பட்டிருக்கிறது. பேரையம்பதி, பேரைமாநகர், பேரீச்சரம் போன்ற பெயர்களிலும் இந்த ஊர் அழைக்கப்படுகிறது. சிவந்தெழுந்த பல்லவராயர் இக்கோயில் இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டவராக இருந்துள்ளார். 

ஸ்ரீ ரிஷபாரூடர்

இந்தக் கோயிலில் 1878 ஆம் ஆண்டு குரோதன ஆண்டு ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ராமச்சந்திர தொண்டைமானின் ஏற்பாட்டில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கிறது.

99 ஆண்டுகளுக்குப் பிறகு 1977-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி ராஜகோபுரம், சுவாமி அம்பாள் விமானங்கள் பழுதுபார்க்கப்பட்டு, கஜலட்சுமி, தண்டாயுதபாணி விமானங்கள் மற்றும் பின்கோபுரம் ஆகியன புதிதாக அமைக்கப்பட்டு திருக்குடமுழுக்கு பெருஞ்சாந்தி விழா நடத்தப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து 1989-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் நாள் அய்யாக்கண்ணு என்னும் செல்வந்தர் இக்கோயிலுக்கு குடமுழுக்குத் திருவிழா நடத்தியுள்ளார். 

பரிகார பூஜைக்காக பக்தர்களால் கொண்டு வரப்படும் நாகர் சிலைகள்

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து ஐந்து தலை கொண்ட நாகர் சிலை வாங்கிவந்து வைத்து வழிபட்டால் குழந்தைப் பேறு நிச்சயம் என்பது நம்பிக்கை. கோயில் வளாகத்திலுள்ள ஆயிரக்கணக்கான சிலைகள் இதற்கு சாட்சி. 

வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி

புண்ணிய புஷ்கரணி

கோயிலுக்குள் தென்புறத்தில் இயற்கையாக அமைந்த சுனையொன்று உள்ளது. 'புண்ணிய புஷ்கரணி' என்றழைக்கப்படும் இந்தச் சுனையில், பங்குனி மாத இறுதியில் அல்லது சித்திரை தொடக்கத்தில் 'நாகலோக நடனஒலி' (மிருதங்க இசை) கேட்கும் என்கிறார்கள்.

கோயில் வளாகத்திலுள்ள புண்ணிய புஷ்கரணி

பிரம்மாவும் விஷ்ணுவும் இச்சுனையில் நீராடியதாகவும் கூறப்படுகிறது. கௌதமரின் சாபத்தால் அகலிகை கல்லாகி, இந்திரன் உடல் முழுவதும் கண்களானபோது, இந்திரன் தனது வஜ்ராயுதத்தை இழந்ததாகவும், பேரையூர் வந்து இச்சுனையில் நீராடி பெருமானை வேண்டியதால் வஜ்ராயுதம் திரும்பக் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. 

கோயில் வளாகத்தில் பரிகார பூஜைக்காக பக்தர்களால் கொண்டு வரப்பட்ட 5 முக நாகர் சிலைகள்

ராகு காலத்தில் பூஜை

நாகதோஷம் உள்ளோர் இந்தக் கோயிலுக்கு ஐந்து தலைகள் கொண்ட நாகர் சிலையுடன் வந்து ராகுகாலத்தில் பூஜை செய்ய வேண்டும். தொடர்ந்து தினமும் 'ஓம் நமசிவாய நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அப்போது தோஷத்தின் உக்கிரம் குறையும் என்பது நம்பிக்கை. மேலும், இத்தலம், காலசர்ப்ப தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷத்திற்கும் நிவர்த்தி தலமாக விளங்குகின்றது. 

தனிச்சிறப்பு கொண்ட நவக்கிரகம்

வழக்கமாகக் கோயில்களில் உள்ள நவக்கிரகங்கள், வெவ்வேறு திசை பார்த்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இங்கு, 8 கிரகங்களும் சூரியனைப் பார்த்தே அமைக்கப்பட்டிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. 

கோயிலில் அமைக்கப்பட்டுள்ள நவக்கிரகம்

கோயில் நடைதிறப்பு நேரம்

தினமும் காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 9 மணிக்கு காலை பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடத்தப்பட்டு கோயில் மூடப்படும். பிறகு மாலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு சாயங்கால பூஜையும், இரவு 7.30 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடத்தப்படுகிறது.

திருக்கோயில் குளம்

கோயில் வழித்தடம்

புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்தில் ஏறினால் 13 கி.மீ. தொலைவில் பேரையூர் விலக்கு என்ற ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து வடதிசையில், கோயிலுக்கான சாலை வளைவு காணப்படும். உள்ளே 2 கி.மீ. தொலைவு. நடந்தும் செல்லலாம். ஆட்டோவும் உள்ளது. உள்ளூர் பேருந்தும் இயக்கப்படுகிறது.

விமானம் மூலம் வருவோர் திருச்சி விமான நிலையம் வந்து அங்கிருந்து சாலை அல்லது ரயில் மூலம் இக்கோயிலை அடையலாம். ரயில் மூலம் வருவோர் புதுக்கோட்டை அடுத்த திருமயம் ரயில் நிலையத்தில் இறங்கி சாலை வழியாகக் கோயிலை அடையலாம்.

கைலாயத்தில் ஸ்ரீ நாகராஜர் பார்வதி பரமேஸ்வரனுக்கு பூஜை செய்யும் காட்சி

கோயில் முகவரி 

ஸ்ரீ அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில், பேரையூர்

திருமயம் தாலுகா, பேரையூர் கிராமம்

புதுக்கோட்டை - 622 422

தொலைபேசி -  9894730410

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

சன் ரைசர்ஸின் பேட்டிங் ரகசியத்தைப் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT