பரிகாரத் தலங்கள்

பிதுர் தோஷம் போக்கும் பரிதியப்பர்கோயில் பாஸ்கரேசுவர சுவாமி

வெ. பழனிவேல்

மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய்த் தொடங்கி ஒரு வார்த்தை சொல்ல சத்குருவும் வாய்க்கும் பராபரமே என்பார் தாயுமானவர்.

மூர்த்திச் சிறப்பு, தல சிறப்பு, தீர்த்த சிறப்பு முதலான மூவகை சிறப்புகளோடு சூரிய கிரக தோஷ நிவர்த்தி தலமாகவும் சிறந்து விளங்கும் திருத்தலம் பரிதியப்பர்கோயில் என வழங்கப்பெறும் திருப்பரிதிநியமம் (தற்போது பரிதியப்பர்கோயில் என்று அழைக்கப்படுகிறது).

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், மேலஉளூர் அருகே உள்ள பரிதியப்பர் ஆலயம், பிதுர் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

மூலவர் பரிதியப்பரும்  முன்னால்  நின்ற நிலையில் சூரியனும்

சோழ வளநாட்டுத் தேவாரப் பாடல் பெற்ற 190 தலங்களை வரலாற்று ஆசிரியர்கள் காவிரி வடகரைத் தலங்கள் எனவும், காவிரி தென்கரைத் தலங்கள் எனவும் பிரித்துக் கூறி வழங்குவர். அவ்வகையில் சிதம்பரம் எனப் பெறும் தில்லை முதலாக ஈங்கோய்மலை ஈறாக உள்ள 63 திருத்தலங்களை காவிரி வடகரைத் தலங்கள் எனவும், திருவாட்போக்கி முதலாக திருக்கோடிக்குழகர் ஈறாக உள்ள 127 திருத்தலங்களை காவிரி தென்கரைத் தலங்கள் எனவும் சுட்டி வழங்குவர். அவ்வகையில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள தேவாரத் தலங்களுள் 101-வது திருத்தலமாக அமையப்பெற்ற தலமே திருஞானசம்பந்தரின் மூன்றாம் திருமுறை பதிகம் பெற்ற சிறப்பினையுடைய திருப்பரிதி நியமம் என்று அழைக்கப்படும் பரிதியப்பர் கோவில். 

பரிதியப்பரை வணங்கும் சூரியன்


சமயக்குரவர் நால்வர் குறிப்பு

தேவார திருவாசகப் பாடல்களை அருளிச்செய்த சைவ சமயக் குரவர் நால்வராலும் இத்தலம் குறிப்பிட்டுப் பாடப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

நாலும் இன்னிசையால் நற்றமிழ் பரப்பி வாழ்ந்த ஞானசம்பந்தர், பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதிந்நியமமே எனவும்

நற்றமிழ் வல்ல நாவினுக்கரையார், பரிதிநியமத்தானைப் பாசூரானை எனவும்

செந்தமிழ்த் திறம் வல்ல சுந்தரமூர்த்தி, பருந்திநியம் துறைவாய் வெயிலாய் எனவும்,

தேனினும் இனிய திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகர், பரிதிவாழ் ஒளியாய் எனவும் சிறப்பித்துப் போற்றியுள்ள இத்திருத்தலம் பற்றிய குறிப்புகளை உமாபதி சிவம், சேக்கிழார், வடலூர் ராமலிங்க அடிகளார் முதலானோரும் தந்துள்ளனர்.

நடன தலங்கள் பன்னிரண்டில் ஒன்று

சிவபெருமானுடைய மகேஸ்வர வடிவங்கள் 25-இல் ஒன்று நடராஜ மூர்த்தமாகும். அவ்வாறு சிவபெருமான் விரும்பி நடனமாடிய திருத்தலங்கள் 12 எனவும் அப்பன்னிரண்டில் இத்தலமும் ஒன்றியமைந்து சிவன் நடன தலமாகவும் விளங்குகின்றது. 

சூரியத் தலங்கள் ஏழினுள் ஒன்று

சிவபெருமானை சூரியன் பூஜித்துப் பேறு பெற்ற தேவாரத் தலங்கள் 7 எனவும், அவ்வேழு தலங்களுள் இக்கோவிலும் ஒன்று என்று ஒரு தனிப்பாடல் குறிப்பு கூறியுள்ளது.

பிதுர் தோஷ பரிகாரம் மற்றும் பிரார்த்தனை முறை

சூரிய பகவான் தட்ச யாகத்தில் சிவபெருமானுடைய அனுமதி இல்லாமல் கலந்துகொண்டதற்காக ஸ்ரீஅகோர வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு அந்த தோஷ நிவர்த்திக்காக 16 சிவத் தலங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தோஷம் நிவர்த்தி அடைந்துள்ளார். அந்த வகையில், இத்திருக்கோவிலில் சூரிய பகவான் சிவலிங்கம் அமைத்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

சூரிய பகவானுக்கு சிவன் நிந்தனைகள் ஏற்பட்டு அதற்கு பிராயச்சித்தம் ஏற்பட்டதால் இத்திருக்கோவிலில் ஜாதக ரீதியாக பிதுர்காரகன் சூரியன், சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய பாவ கிரகங்களுடன் இணைந்தோ அல்லது மேற்படி கிரகங்களால் பார்வை பட்டோ இருந்தால் அந்த ஜாதகருக்கோ அல்லது அந்த பரம்பரையினருக்கோ ஏற்படும் பிதுர்தோஷத்துக்கு இங்கு பிரார்த்தனை செய்வதால் நிவர்த்தியாகிறது. மேலும், பிதுர்காரனாகிய சூரியன் கெட்டிருந்தாலும் மேற்படி பரம்பரையில் ஏற்படும் பிதுர் தர்ப்பண தோஷத்திற்கு இங்கு பிரார்த்தனை செய்தால் நிவர்த்தி ஏற்படுகிறது.

மேலும் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சூரிய திசை நடப்பில் உள்ளவர்களுக்கும், சிம்ம லக்னத்தில் மற்றும் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கும், ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களும், சூரியன் உச்சம் பெற்றவர்களும் (சித்திரை மாதம் பிறந்தவர்கள்), சூரியன் ஆட்சி பெற்றவர்களும் (ஆவணி மாதம் பிறந்தவர்கள்) சூரியன் நீச்சம் பெற்றவர்கள் (ஐப்பசி மாதம் பிறந்தவர்கள்) மேலும் பிரதி தமிழ் மாதம் முதல் தேதியில் பிறந்தவர்களும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள விசேஷ மூர்த்திகள் ஆகிய சூரிய பகவானையும் சிவபெருமானையும் பிரதி தமிழ் மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் வருகின்ற முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபடலாம்.

ஒன்பது கிரக தோஷங்களைப் போக்க...

இன்றளவும் அடியார் பலர் தமக்கும், தம் உறவினர்களுக்கும் ஏற்பட்ட உடற்பிணி, நோய் அகலவும்,  சித்த பேதம் உடையோர் அப்பிணி நீங்கப் பெறவும் இத்தலத்திற்கு வந்து, தீர்த்த குளங்களில்  நீராடி அருள்மிகு பரிதியப்பரை வணங்கி இத்தலத்தில் சில நாள்கள் தங்கியிருந்து நலம் பெற்றுச் செல்கின்றனர்.

மேலும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு கேது முதலான ஒன்பது கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைப் போக்கிக்கொள்ள விரும்புவோர் அதிலும் குறிப்பாக ஒன்பது கிரகங்களின் தலைமை கிரகமாகவும், தந்தைக்குரிய கிரகமாகவும் அமையப்பெற்றுள்ள சூரிய கிரக தோஷத்தை நீக்கிக்கொள்ள விரும்புவோர் இத்தலத்திற்கு வந்து சிறப்பு வழிபாட்டினை செய்து கிரக தோஷ நிவர்த்தி பெற்றுச் செல்கின்றனர். 

பரிதியப்பர் கோயில் கோபுரம்

சிபி சக்ரவர்த்தி பழங்காலம் ஆட்சி செய்த பின் தெய்வ நலம் பெற்று முக்தி அடைய, வழியாதென தன் குலகுருவைக் கேட்டான். இதற்கு அவர் சிவபிரான் உறையும் மூர்த்தி தலம், தீர்த்தம், இடம் மூன்றும் சிறப்புடைய சிவதல யாத்திரை மேற்கொள்ளச் சொன்னார். சிபி மன்னனும் தன் குருவின் அறிவுரைப்படி தன் ஆட்சிப் பொறுப்பை மைந்தனிடம் ஒப்படைத்து விட்டு தல யாத்திரை மேற்கொண்டார். இத்தல யாத்திரையின் வழி கிடைக்காது அன்றிருந்த இப்பரிதி நியமத்தில் கோடை வெப்பத்தால் களைப்புற்று சிபி சற்று இளைப்பாறினார். 

அச்சமயம் இம்மன்னனது குதிரை சேவகன், குதிரைக்குப் புல் வேண்டி மண்ணைத் தோண்டி எடுக்க முற்பட்டான். அப்போது சூரியன் உருவாக்கி பூமிக்குள் இருந்த மூல லிங்கத்தில் புல் தோண்டிய கருவி பட்டு இரத்தம் பீறிட்டது. இதனை அரசர் கண்டு அவ்விடத்தைத் தோண்டி சூரிய லிங்கத்தைக் கண்டு மகிழ்ந்தார். உடன் அந்த லிங்கத்திற்கு அபிஷேகம் முதலியன செய்வித்து வழிபட்டு நின்றான். அப்போது குருவின் மொழியாக (அசரீரியாக) இத்தல சிறப்பினை உணர்ந்தான்.

பின் இப்பெருமானுக்கு அழகிய கோவில் ஒன்றைக் கட்டி, நித்திய பூஜை, விழாக்கள் நடத்தி ஆவன செய்து பெரும்பேறு பெற்றான். இவ்வாறு முன்பு சூரியனால் உருவாக்கிப் பூஜிக்கப்பெற்று பூமிக்குள் மறைந்திருந்த சிவ லிங்கத்தை இச்சூரிய குலத்து மன்னன் வெளிப்படுத்தினான் என்பது வரலாறு.

ஆயுள் விருத்தி தலம்

மார்க்கண்டேயன் இங்கு அருவ வடிவில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம். நோயினால் நீண்ட நாள் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள். 60, 70, 80 வயதானவர்கள் இத்தலத்தில் "சஷ்டியப்தபூர்த்தி' திருமணம் செய்வதால் அவர்களது ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். பிரமசர்மா என்பவனும் அவரது மனைவி சுசீலையும் தாங்கள் செய்த பாவத்தினால் பருந்தும் கிளியுமாக மாற சாபம் பெறுகின்றனர். இவர்கள் தாங்கள் செய்த பாவத்திலிருந்து மன்னிப்புப் பெற இத்தலம் வந்து பிரார்த்தனை செய்து சாபவிமோசனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தல தீர்த்தங்கள்

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்புப் பெற்ற இத்தலத்தில் அமைந்துள்ள தீர்த்தங்கள், நீராடியோரது உடற்பிணியும், பிறவிப் பிணியும் போக்கும் உடன்பிறவா மருந்தாய் விளங்குகின்றன. இத்திருத்தலத்தில் அமைந்துள்ள மூன்று தீர்த்தங்கள் சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, தேவ புஷ்கரணி என்னும் பெயரால் சூட்டப்பட்டு இன்றளவும் பக்தர்களின் பயன்பாட்டிலிருந்து வருகிறது.

சூரிய புஷ்கரணி

இத்தலத்தில் பூசனையியற்றித் தன் சூலை நோய் நீங்கப்பெற்ற சூரியனால் உண்டாக்கப்பெற்ற இத்தீர்த்தம் கோவிலின் நேர் கிழக்கில் அமையப் பெற்றுள்ளது.

சூரிய புஷ்கரணி


கங்கா தேவியால் வழிபடப் பெற்ற பெருமையினை உடைய இத்தீர்த்தத்தில் சித்திரை மாதம் பௌர்ணமி நாளிலும் மாசி மாதம் அனைத்து நாள்களிலும் நீராடி பாஸ்கரேசுவரரை வணங்குவோர் தங்கள் பாவம் அனைத்தும் நீங்கப் பெற்று புண்ணியப் பேறுகையும், புத்திர பேற்றையும் ஒருங்கே பெற்று மகிழ்வர் என்று தல புராணம் குறிப்பிட்டுள்ளது.

சந்திர புஷ்கரணி

கோவிலுக்கு மேற்கில் அமையப்பெற்றுள்ள சந்திர தீர்த்தம் எனப் பெறும் இத்திருக்குளத்தில் நீராடி சிவபெருமானை வழிபடுவோர் பாஸ்கரேசுவரர் திருவருளால் பல்வகை நலன்களை ஒருங்கே பெற்று பேரின்பப் பெருவாழ்வு பெறுவர். கண்நோய் அகன்று சித்த பேதமும் நீங்கப்பெறுவர். 

சந்திர புஷ்கரணி


தேவ புஷ்கரணி

சந்திர தீர்த்தத்தின் தென் மேற்கில் அமையப் பெற்றுள்ள தேவ தீர்த்தம் தேவர்கள் கரத்தால் உருவாக்கப் பெற்ற சிறப்பினை உடையதாகும். இது கர தீர்த்தம் எனவும் அழைக்கப்படும்.

தேவ புஷ்கரணி


ஆடி அமாவாசை, பங்குனி அமாவாசை, பௌர்ணமி நாள்கள், மாசி மாத நாள்கள் ஆகிய புண்ணிய நாள்களில் இத்திருக்குளத்தில் நீராடி பரிதியப்பரை வணங்குவோர் அட்டமா சித்திகளைப் பெற்றுய்வர் என்று கூறப்படுகிறது.

சூரிய பூஜை

பரிதி எனப் பெறும் சூரியன் தன்கொடிய குன்ம நோயானது நீக்கம் பெற வேண்டி இத்தலத்திற்கு வந்து தன் பெயரால் சூரிய தீர்த்தத்தினை உண்டாக்கி அக்குளத்தில் நீராடி இச்சிவலிங்கத்தை ஸ்தாபித்து பூசனையியற்றி வழிபட்டு தன் நோய் நீங்கி நலம் பெற்றான் என்பது தல வரலாறு.

இவ்வரலாற்றை மெய்ப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் பங்குனித் திங்கள் 17, 18, 19 ஆகிய நாள்களில் சூரிய ஒளி இச்சிவலிங்கத்தின் மீது படியுமாறு ஆலய அமைப்பு அமைக்கப்பெற்றுள்ளது. இன்றளவும் சூரிய பூஜை நாள்களாகக் கருதப்பெறும் அந்நாள்களில் பக்தர்கள் பெருமளவில் இக்கோவிலுக்கு வந்து இருந்து சிறப்புப் பூஜை வழிபாடுகள் மேற்கொள்கின்றனர்.

கோவிலின் அமைப்பு

கிழக்கு மேற்காக 270 அடியும், தெற்கு வடக்காக 150 அடியும் சுற்றளவாக அமைந்துள்ள இத்திருக்கோவிலின் ராஜ கோபுரம் ஐந்து நிலைகளை உடையதாய் காணப் பெறுகின்றது. அதனை அடுத்து உட்புறம், விநாயகர் சன்னதியும், கொடிமரமும், அதிகார நந்தி சன்னதியும் அமைந்துள்ளன.  

மூலவர் பரிதியப்பர் சன்னதி கருவறைக்கு முன் சூரியன் பெரிய வடிவுடன் நின்ற நிலையில் சிவதரிசனம் செய்வதை இங்கு காணலாம். இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண இயலாதது.

கோயில் வெளிப்பிரகார சுற்றில் வடகிழக்கு மூலையில் யாக சாலை அமைந்துள்ளது. கோயிலை வலமாக வரும்போது காட்சிதரும் கோயில் வெளிப்பிரகாரத்தில் வசந்த மண்டபத்தை அடுத்து தெற்கு நோக்கிய மூன்று நிலை இராஜ கோபுரத்துடன் அம்பாள் சன்னதி அமைந்துள்ளது.

கோயில் கல்வெட்டு

கோயில் கல்வெட்டு

இத்திருக்கோயிலில் விக்கிரம பாண்டியனின் எட்டாவது ஆட்சியாண்டு காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று காணக் கிடைக்கிறது.

திருக்கோயில் நிலங்கள் தானமளிக்கப்பட்டது குறித்த விவரங்கள் இந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டில் "அரசூர் என்ற ஊரிலிருந்து பிறந்த ஊர்களின் நான்கு எல்லைக்குள் கோயில் தேவதான நிலம், திருவிளையாட்டிற்கான நிலங்களை நீக்கி, வெள்ளார்கள் நிலம் பாடிகாப்பவர் (ஊரைக் காப்பவர்) நிலம் செல்லத் திருவாரூர் கீழைமடத்துக்குக்கான கரதானம் மடத்திற்கு உள்ள நிலங்களை இவ்வூர்களில் நிலம் பெற்றவர்களுக்கே தானமாக கொடுத்ததை திரிசூல கல்லாக வெட்டிக் கொடுக்கப்பட்டது. இதனை கொடுத்தவர் அரசூர் உடையார் தென்னவன் அரையர் பிள்ளை காடன் எழுத்து" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவக்கிரக தலங்களில் ஒன்று

நவக்கிரக தலங்களில் சூரியனுக்குரிய தலமாக சூரியனார்கோவில் கூறப்பட்ட போதிலும் உள்ளபடியே இந்தப் பரிதியப்பர்கோவில்தான் சூரியனுக்குரிய கோவில் எனக் குறிப்பிடுவோரும் நம்புவோரும் இருக்கின்றனர்.

இதற்கொப்ப சூரியனார்கோயிலுடன் ஒப்பிட, பிற நவக்கிரக கோயில்களைப் போல,  இந்தப் பரிதியப்பர்கோயில்தான்  காலத்தால் மிகவும் பழமையானதும்கூட, கோவில் அமைப்பும் அவ்வாறே குறிப்பிடும்படியாக  அமைந்திருக்கிறது.

திருக்கோயிலுக்குச் செல்ல

தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறி மேலஉளூர் என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் கிழக்கில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் நெடுங் கோபுரத்துடன் உள்ள இத்திருக்கோவிலைச் சென்றடையலாம். தஞ்சாவூரிலிருந்து மாரியம்மன் கோவில் வழியாகவும், மன்னார்குடி சாலை சடையார்கோவில், பொன்னப்பூர் வழியாகவும் சில நகரப் பேருந்துகள் மூலம் பரிதியப்பர் கோயிலுக்குச் செல்லலாம். 

அயல்நாடுகளிலிருந்து வருவோர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து தஞ்சை வரலாம். ரயிலில் வருவோர் தஞ்சாவூர் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து சாலை வழி கோயிலை அடையலாம்.

முகவரி 

அருள்மிகு பாஸ்கரேசுவரர் சுவாமி திருக்கோயில்
பரிதியப்பர் கோயில்,
ஒரத்தநாடு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் - 614 904.

ஆலய தொடர்புக்கு: நரேஷ் - 8608496362, ரமேஷ் (அர்ச்சகர்) - 9943145172
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT