பரிகாரத் தலங்கள்

பித்ருதோஷம் போக்கும் குணசீலம் தார்மீகநாதர் சுவாமி திருக்கோயில்

கு. வைத்திலிங்கம்

பித்ருதோஷம் போக்கும் பரிகாரத் தலமாகவும்,  தோல் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணமாக்கும் தலமாகவும் திகழ்கிறது திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், குணசீலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹேமவர்னேசுவரி அம்மன் உடனுறை தார்மீகநாதர் சுவாமி திருக்கோயில்.

திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இத்திருக்கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. மற்ற கோயில்களில் இல்லாத வகையில், இங்கு முருகப்பெருமானின் திருவாசி கல்லில் வடிவமைக்கப்பட்டு, இறைவனுடன் இணைந்தே காணப்படுகிறது.

கிழக்கு நோக்கி கோயில் அமைந்திருந்தாலும், தென்புறத்தில் சாலையையொட்டி அழகிய முகப்புடன் நுழைவுவாசல் அமைந்துள்ளது. அகன்ற பிரகாரத்தையும், நடுவில் நந்தியெம்பெருமானைக் கொண்டது இக்கோயில். 

தார்மீகநாதர் சுவாமி

கோயிலின் வரலாற்றுச் சிறப்பு: பிரளயக் காலத்தில் காவிரியின் வடகரையில் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்தது. அவ்வாறாகப் பிளந்த லிங்கத்தின் ஒரு பகுதி வடகரையிலும் (குணசீீீீலத்திலும்) மற்றொன்று தென் கரையிலும் பிரதிஷ்டை ஆனது. அவ்வாறாக உருவானதுதான் குணசீலம் தார்மீக நாதர் மற்றும் திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் திருக்கோயில்கள்.

குணசீலன் கோயிலில் உள்ள லிங்கம் சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தார்மீகநாதர் சுவாமி திருக்கோயில் பித்ருதோஷம் நிவர்த்திக்கான தலமாக விளங்குகிறது. ஜாதகத்தில் பித்ருதோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக வருபவர்கள். இறைவன் தார்மீகநாதர் சுவாமி சன்னதியிலும், இறைவி ஹேமவர்னேசுவரி அம்மன் சன்னதியிலும் பூமாலை மற்றும் பொருள்களுடன் அர்ச்சனை செய்ய வேண்டும். இதன்பின்னர்,  கோயிலின் அர்ச்சகர் அம்மன் கரத்திலிருக்கும் ஒரு ரட்சையை (முடிகயிறு) கொண்டு வந்து, தோஷ பாதிப்பு உள்ளவர் கரத்தில் கட்டுவார். 

ஹேமவர்னேசுவரி அம்மன்.

பின்னர் அந்த நபர் இறைவன், இறைவி சன்னதியை 12 முறை வலம் வர வேண்டும். தொடர்ந்து சன்னதி முன்பாக அமர்ந்து, குறைந்தது 15 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டு, வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பித்ருதோஷ நிவர்த்தி பரிகாரம் இக்கோயிலில் செய்யப்படுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பரிகார நிவர்த்தி வழிபாட்டில் பங்கேற்கின்றனர்.

இறைவன் தார்மீகநாதர் சுவாமி: இக்கோயில் இறைவன் தார்மீகநாதர் சுவாமி கிழக்கு நோக்கிய சன்னதியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இறைவனின் பிளவுபட்ட  பகுதி பின்புறம் உள்ளதால், சுவாமி தரிசனம் செய்யும்போது நமக்கு எவ்வித வேறுபாடும் தெரியாது.

பக்தர்களின் பித்ருதோஷத்தை நிவர்த்தி செய்யும் பரிகார நாயகராக தார்மீகநாதர் எழுந்தருளி, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார். பத்மபீடத்தில் காட்சியளிக்கும் இறைவன் தார்மீகநாத சுவாமிக்கு ஐப்பசி மாத பௌர்ணமியில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

வள்ளி-தெய்வ சேனா சமேத சண்முக சுப்ரமணியர்

இறைவி ஹேமவர்னேசுவரி அம்மன்: திருக்கோயிலின் மகா மண்டபத்தின் வலதுபுறத்தில் அருள்மிகு ஹேமவர்னேசுவரி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு நின்ற திருக்கோலத்தில் தெற்குத் திசை நோக்கி புன்னகைத் தவழ அம்மன் காட்சியளித்து வருகிறார்.

இரண்டு கரங்களுடன் அபயஹஸ்த முத்திரைகளுடன், அழகுற பக்தர்களுக்கு காட்சியளித்து, தன்னைத் தேடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும் அம்மனாகக் காட்சியளிக்கிறார் ஹேமவர்னேசுவரி. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவி ஹேமவர்னேசுவரிக்கு குங்கும அர்ச்சனை செய்தால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் கூற்றாகும்.

ஹேமவனேசுவரி என்றால் தங்கநிறத்தை உடையவள் என்று பொருள் .இந்த அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து, வழிபாடு நடத்தி, அப்போது தரப்படும் குங்குமத்தை பூசிவந்தால் தோல் நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. 

கற்பக விநாயகர்.

சிறப்பு வாய்ந்த நந்தியெம்பெருமான் : பிற திருக்கோயில்களில் நந்தியெம்பெருமான்  ஒரு காலை சற்றே மடக்கியும், மற்றொரு காலை மடித்தபடியும் காட்சித் தருவார். ஆனால், இத்திருக்கோயிலில் தனது இரண்டு கால்களையும் மடித்தபடி காட்சியளிக்கிறார்.

பொதுவாக சித்தர்கள் நடமாடிய திருக்கோயிலிலோ, அவர்கள் கோயில் அமைப்புக்கு உதவியிருந்தாலோ நந்தியெம்பெருமானின் அமைப்பு மாற்றத்துடன் காணப்படுமாம். அந்த வகையில் நந்தியெம்பெருமான் தனது இரண்டு கால்களையும் மடித்தபடி காட்சியளிப்பதால், இக்கோயிலில் சித்தர்கள் நடமாட்டமும் இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

சிறப்புவாய்ந்த நந்தியெம்பெருமான்

அபூர்வ அமைப்புடன் முருகப்பெருமான்: வள்ளி-தெய்வசேனா சமேதராய் சண்முக சுப்ரமணியர் என்ற திருநாமத்துடன் முருகப்பெருமான் இக்கோயிலில் காட்சியளிக்கிறார். பொதுவாக முருகப்பெருமானின் வாகனமான மயிலின் தலைப்பகுதி வலதுபுறத்தில் இருப்பதுதான் வழக்கம். ஆனால், இங்கு முருகப்பெருமானின்  வாகனமான மயிலின் தலைப்பகுதி முருகனின் இடதுபுறம் அமைந்திருப்பது அபூர்வ அமைப்பாக கூறப்படுகிறது.

திருக்கோயில் தென்புற நுழைவு வாசல்

மேலும் முருகப்பெருமானின் பின்புறமுள்ள திருவாசி கல்லில் வடிவமைக்கப்பட்டு, இறைவனுடன் இணைந்தே காணப்படுவதும் சிறப்பு அம்சமாகும். கார்த்திகை மாத சோமவாரத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மேலும் மாத கார்த்திகை மற்றும் சஷ்டி நாள்களில் அபிஷேக-ஆராதனைகள் முருகப்பெருமானுக்கு நடைபெறுகின்றன.

மகா மண்டபத்தில் கருவறை நுழைவுவாயிலின் வலதுபுறத்தில் வள்ளி-தெய்வசேனா சமேதராய் சண்முகர் காட்சியளிக்க இடதுபுறத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.

திருக்கோயில் தலவிருட்சம் வில்வமரம்

தேவக்கோட்டத்தில் : இறைவனின் தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தியும், சிவதுர்க்கை அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். திருச்சுற்றின் வடக்கில் சண்டிகேசுவரரும், வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்களும், கிழக்கில் காலபைரவரும் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

துர்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரத்திலும், தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளிலும், கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

தலவிருட்சம்: இக்கோயிலின் தல விருட்சமாக வில்வரம் மரம் அமைந்துள்ளது. கிழக்குப் பிரகாரத்தில் தல விருட்சம் காணப்படும் நிலையில், கோயிலில் சுவாமி, அம்மனுக்கு நடைபெறும் அர்ச்சனையின் போதும், பித்ருதோஷ பரிகார நிவர்த்தியின் போதும் வில்வம் வைத்து பூஜிக்கப்படுகிறது.

நவக்கிரகங்கள்

கோயில் திருவிழாக்கள்: நவராத்திரித் திருவிழா நடைபெறும் 9 நாள்களும் இறைவி ஹேமவர்னேசுவரி ஒவ்வொருவிதமான அலங்காரத்தில் எழுந்தருளுதலும், 10-ஆம் நாளில் இறைவன்-இறைவி அம்பு போடும் வைபவமும் நடைபெறும். அப்போது இறைவன் தார்மீகநாதர், இறைவி ஹேமவர்னேசுவரி ரிஷப வாகனத்தில் வீதியுலா வருதல் நடைபெறும். ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகையில் சொக்கப்பனை தீபமேற்றும் வைபவம் போன்ற திருவிழாக்கள் நடைபெறும். 

கோயில் நடைதிறந்திருக்கும் நேரம்: இக்கோயில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

எப்படி செல்வது: திருச்சியிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் குணசீலம் அமைந்துள்ளது. சாலையோரத்திலேயே இக்கோயில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் திருச்சி மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்கள், நெ.1 டோல்கேட், நொச்சியம், திருவாசி, துடையூர், கிளியநல்லூர், சிறுகாம்பூர், வாய்த்தலை வழியாக குணசீலம் வந்தடையலாம்.

சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் நெ.1 டோல்கேட் வந்து, அங்கிருந்து நொச்சியம், திருவாசி, துடையூர், கிளியநல்லூர், சிறுகாம்பூர், வாய்த்தலை வழியாக குணசீலத்திலுள்ள கோயிலை வந்தடையலாம்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் முசிறி, அய்யம்பாளையம், ஆமூர் வழியாக குணசீலத்திலுள்ள கோயிலுக்கு வந்து சேரலாம்.

கரூர், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் போன்ற மேற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் குளித்தலை பெரியார் பாலம் வழியாக முசிறிக்குள் வந்து, கோயிலை வந்தடையலாம்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து குணசீலத்துக்கும், குணசீலம் வழியாக ஆமூர், ஏவூர், மணப்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர திருச்சியிலிருந்து சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற மாவட்டங்களுக்கும், கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு போன்ற பகுதிகளுக்கும் செல்லும் புறநகரப் பேருந்துகளும் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. நாமக்கல், சேலம் மார்க்கத்தில் செல்லும் தனியார் பேருந்துகளும், அரசுப் பேருந்துகளும் குணசீலத்தில் நின்று செல்லும்.

ரயில், விமான மூலம் வருபவர்களுக்கு கார், வேன் போன்ற வசதிகளும் உள்ளன.

தொடர்பு முகவரி:

பரம்பரை அறங்காவலர்,
அருள்மிகு ஹேமவர்னேசுவரி அம்மன் உடனுறை தார்மீகநாதர் சுவாமி திருக்கோயில்,
குணசீலம்,
முசிறி வட்டம்,
திருச்சி மாவட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT