பரிகாரத் தலங்கள்

சட்ட சிக்கல்களைத் தீர்க்கும் சீர்காழி சட்டைநாதர் கோயில்

எம். ஞானவேல்

சீர்காழியில் அமைந்திருக்கிறது தருமபுரம் ஆதினத்திற்கு உள்பட்ட சட்டைநாதர் கோயில்.  7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில்  திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கியருளிய ஸ்தலம். சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு நடைபெறும் சுக்கிரவார பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம்.

தேவார தலங்கள் 274-ல் இந்தச் சீர்காழி சட்டைநாதர் கோயில் 14-வது தலமாக  விளங்குகிறது. உலகமே கடல் நீரால் சூழ்ந்தபொழுது சீர்காழி மட்டும் அழியாமல் நின்றதைக் கண்ட சிவபெருமான், தோணியில் வந்து இங்கு கரை சேர்ந்ததால் தோணிபுரம் என்றழைக்கப்படுகிறது. இவ்வாறு சீர்காழி தலமானது 12 காரணப் பெயர்களை கொண்டுள்ளது. தன் வலிமை அழிந்த கண்ணபிரானால் ஏவப்பட்ட காளிங்கன் என்னும் பாம்பு பூஜித்தமையால் ஸ்ரீகாளிபுரம் என்றும் நாளடைவில் மருவி காழி, சீர்காழியானது என்பர்.

தல புராணம்

புராணகாலச் சிறப்புமிக்க இத்திருக்கோயிலில் திருமுருகன், மாகாளி, திருமால், பிரமன், பிரகஸ்பதி, இந்திரன், சூரியன், அக்னி, ஆதிசேடன், இராகு, கேது, வேதவியாசர் முதலானோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றவர்களாவர்.


திருஞானசம்பந்தர் வரலாறு


இக்கோயிலில் சிவபெருமான் சட்டைநாதராகக் காட்சித் தருகிறார். பைரவர் கோலத்திலும் நின்று ஆகாச பைரவர் அவதாரமாக அருள்பாலிக்கிறார்.  சீர்காழி இரட்டைத்தெருவில் வசித்து வந்த சிவபாதகிருதயர், புனிதவதி ஆகியோரது மனம் உருகிய வழிபாட்டின் மீது இரக்கம் கொண்ட இறைவன்  அவர்களின் வேண்டுகோளின்படி முருகப்பெருமானே மகவாகப் பிறக்கும்படி அருள்புரிந்தார். 

அதேபோன்று 7-ம் நூற்றாண்டில் ஒரு திருவாதிரை திருநாளன்று  சம்பந்தர் பிறந்தார். சம்பந்தர் மூன்று வயதாக இருந்தபொழுது ஒருநாள் தனது தந்தையுடன் சட்டைநாதர் கோயிலிலுக்குச் சென்றார். சம்பந்தரைக் கோயிலில் உள்ள பிரம்மதீர்த்தக்  குளக்கரையில் அமரவைத்துவிட்டு சிவபாதகிருதயர் குளத்தில் மூழ்கி மந்திரத்தை ஜெபித்தபடி நீராடினார். சிறிதுநேரம் ஆகியும் தந்தை வெளிவராததைக் கண்டு சம்பந்தர் மலை மீது காட்சியளிக்கும் தோணியப்பரை நோக்கி அம்மே, அப்பா என்று அழுதார்.

இதனைக் கண்ட சிவபெருமானும், பார்வதிதேவியும் ரிஷப வாகனத்தில் அழும் குழந்தையருகே வந்தனர். அப்போது சிவபெருமான் பார்வதிதேவியிடம் உனது குமரன் அழுகிறான். இவனுக்கு உன்னுடைய தனத்திலிருந்து பாலூட்டுவாயாக என்று திருவாய் அருளினார். அதேபோன்று பார்வதிதேவியும் தனத்திலிருந்து பாலைப் பொற்கிண்ணத்தில் எடுத்து குழந்தைக்கு ஞானப்பாலை ஊட்டினார். அது முதல் சம்பந்தராக இருந்தவர் திருஞானசம்பந்தராக  போற்றப்பட்டார். பின்னர் சுவாமி - அம்மன் ஒருசேரக் காட்சி தந்து மறைந்தனர்.

தேவாரப் பாடல் தோன்றிய தலம்

நீராடி வந்த சிவபாதகிருதயர், திருஞானசம்பந்தர் கடைவாயில் பால் ஒழுகுவதைக் கண்டு யாரிடம் பால் வாங்கிக் குடித்தாய் என்று கிண்ணத்தைப் பறித்துத் தூக்கியெறிந்தார். அந்த பொற்கிண்ணம் எதிரில் உள்ள சுவரில் மோதி நின்றது. தற்போதும் அந்த சுவடைக் கோயிலில் காணலாம். பின்னர் ஒரு சிறுகுச்சியால் திருஞானசம்பந்தரை அடித்து யாரிடம் பால் குடித்தாய் என்றார். 

அப்போது திருஞானசம்பந்தர் தனது சுட்டுவிரலால் அம்மையுடன் தோன்றிய அப்பனை சுட்டிக்காட்டி 'தோடுடைய செவியன்' என்று தொடங்கும் முதல்  திருப்பதிகத்தைப் பாடினார். இதனை பார்த்த சிவபாதகிருதயர் தெய்வக் குழந்தையான திருஞானசம்பந்தரை வணங்கிக் கொண்டாடினார். அது முதல் வேதநெறி தழைத்தோங்க தலங்கள்தோறும் சென்று திருஞானசம்பந்தர்  சிவனை நோக்கித் திருப்பதிகங்கள் பாடிவரலானார். 

இந்தக் கோயிலுக்கும் செல்லலாம்..  கண்நோய்களைத் தீர்க்கும் திருக்காரவாசல் கண்ணாயிர நாதர் கோயில்

ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவாதிரை தினத்தன்று ஞானப்பால் வழங்கிய நிகழ்வு திருமுலைப்பால் விழாவாக லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வெகுவிமரிசையாக 10 நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிவேதித்த பாலை பக்தர்கள் உண்டு மறுமுலைப்பாலுண்ட பேறு பெறுகின்றனர்.

இந்தப் பாலை வாங்கிக் குடிக்கும் கர்ப்பிணிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஞானக் குழந்தையாகவும் அறிவாற்றலுடனும் உலகம் போற்றுபவராகவும், கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

கோயில் அமைப்பு

சீர்காழி பெரிய கோயில் எனும் சட்டநாதர் கோயில் தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமானது. இக்கோயில் நான்கு கோபுர அமைப்புகளுடன் உள்ளது. இங்கு பிரம்மபுரீஸ்வர், திருநிலைநாயகி அம்மன், சட்டநாதர், தோணியப்பர், உமாமகேஸ்வரி, திருஞானசம்பந்தர் ஆகிய சுவாமிகள் தனித்தனி  சன்னதிகளில் அருள்பாலித்து வருகின்றனர். 

மேலும் திருஞானசம்பந்தர் சன்னதியில் பெருமான் லிங்க வடிவமாகவும் அம்மையார் ஸ்திரசுந்தரி என்ற திருநாமத்திலும் அருள்பாலிக்கிறார். மூன்று மூர்த்தங்களை உடையது திருக்கயிலாயத்தைத் தனக்கு சிறப்பிடமாகக் கொண்டு வீற்றிருக்கின்ற சிவபெருமான். குருமூர்த்தமாக மக்களுக்கு உபதேசம் செய்தும், லிங்க மூர்த்தமாக பல தலங்களில் கோவில் கொண்டருளியும் சங்கமமூர்த்தமாக அன்பர்களுக்கு வேண்டுவன அளித்தும் அருள்செய்து வருகிறார்.

இம்மூன்று மூர்த்தமாக பல கோயில்களில் தனித்தனியே எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் இங்கு மூன்று மூர்த்தங்களாக ஒருங்கே அருள்பாலிப்பது சிறப்பு.

கோயிலின் சிறப்பு

சிவன் - பார்வதி உருவ வழிபாடாகக் கயிலாய காட்சியாக வேறு எங்கும் காண முடியாத அற்புத தரிசன காட்சியாகும். தோணியப்பர், உமாமகேஸ்வரி சுவாமிகளுக்கு ஆண்டுக்கு 8 முறை தைலக் காப்பு எனும் சாம்பிராணித்  தைலம் சாத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும்தான் இப்பெருமான் வீதியுலா எழுந்தருள்வார்.

இந்தக் கோயிலின் மலை மீது ஏறுபவர்கள் ஆண்களாக இருந்தால் சட்டை அணியாமலும், பெண்கள் தலையில் பூ அணியாமலும் செல்வது ஐதீகம்.

இவ்வாலயத்துக்கும் செல்லலாமே.. சனி தோஷம் நீக்கும் நள்ளாற்று நாயகன் - திருநள்ளாறு திருக்கோவில்

திருஞானசம்பந்தர் இக்கோயிலில் சுவாமி சன்னதிக்கு இடப்பாகத்தில் அம்மன் சன்னதிகளுக்கு நடுவில் தனி சன்னதியில் மூலவராக அருள்பாலிக்கிறார். இவ்வமைப்பு அம்மையப்பருக்கு இடையே முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற சோமாஸ்கந்தவடிவை நினைவூட்டுவதாக உள்ளது. அதேபோல் உற்சவர் திருஞானசம்பந்தர், பிரம்மபுரீஸ்வர சுவாமி சன்னதியில் அருள்பாலிக்கிறார். திருஞானசம்பந்தர் சன்னதியில் பக்தர்களுக்கு நாள்தோறும் ஞானப்பால் வழங்கப்படுகிறது. அதே போல்  திருஞானசம்பந்தருக்கு ஆண்டுக்கு 7 முறை சிறப்பு வழிபாடு, புறப்பாடு நடைபெறுகிறது.


அஷ்ட பைரவர்கள்

காசிக்கு அடுத்தபடியாக அஷ்டபைரவர்கள் அருள்பாலிப்பு இக்கோயிலில் அமையப் பெற்றுள்ளது. தெற்குக் கோபுரவாசல் அருகே அஷ்டபைரவர்கள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். சண்டபைரவர், சம்ஹாரபைரவர், ருதுபைரவர், குரோதனபைரவர், அசிதாங்கபைரவர், உன்மத்தபைரவர், கபாலபைரவர், வீபிஷ்ணபைரவர் ஆகிய அஷ்ட பைரவர்கள் ஆவர். இங்கு வெள்ளிக்கிழமை மாலையில் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்று  வருகின்றன.

அஷ்ட பைரவர் பூஜையில் தொடர்ந்து எட்டு வாரம் பங்கேற்றால் கண் திருஷ்டி, வியாபாரத்தில் அல்லது தொழிலில் நஷ்டம் போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை.

இக்கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் அஷ்ட பைரவர் பூஜை மாலை 6.30  மணிக்குத் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெறும்.  இதில் பங்கேற்க விரும்புவோர், அபிஷேகப் பொருள்களை வாங்கிக் கொடுத்தும், கோயில் நிர்வாகத்தில் பணம் செலுத்தியும் பங்கேற்கலாம். இந்த அஷ்ட பைரவர் பூஜையிலும் ஆண்கள் சட்டை அணியாமலும், பெண்கள் தலையில் பூ அணியாமலும் பங்கேற்பது வழக்கம்.

அதேபோல் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி நாள்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அஷ்டபைரவர்களைத் தரிசனம் செய்து செல்கின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் சுக்கிரவாரபூஜை

சீர்காழி கோயிலில் சிவபெருமான் சட்டநாதர், வடுகநாதர், தண்டபாணி, ஆபத்துதாரணர் எனப் பல திருநாமங்களோடு விளங்கிவருகிறார். முன்பு ஒரு காலத்தில் எலி ஒன்று சிவன் சன்னதியில் சுற்றி திரிந்தபோது அதன் வால் நுனிபட்டு அணைய இருந்த திருவிளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. அந்தப் பயனால் எலி பிற்காலத்தில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறவி எடுத்தது. மகாபலி மன்னனிடம் வாமன அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு மூன்றடி மண் கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்று தெரியாமல் மகாபலி மன்னனோ, மூன்றடி மண்தானே என  எடுத்துக்கொள்ளுமாறு கூறுகிறார். பூமியை ஓரடியாகவும் வானத்தை இரண்டாவது அடியாகவும் அளந்த பெருமாள் மூன்றாவது அடியை அளக்க மகாபலி மன்னன் தலை மீது கால் வைக்கிறார். அப்போது மன்னன் பூமியில் புதைந்து மறைகிறார். 

இதன் மூலம் உலகில் தானே பெரியவன் என்ற எண்ணம் மகாவிஷ்ணுக்கு ஏற்பட்டு ஆக்ரோஷம் அடைந்து, இடையூறு செய்கிறார். இதனால் தேவர்கள் சிவபெருமானிடம் ஓடிச் சென்று முறையிடுகின்றனர். சிவபெருமான் மகாவிஷ்ணுவை அழிக்கிறார். இதனால் வருத்தம் அடைந்த மகாலட்சுமி, சிவபெருமானை நோக்கித் தவம் இருக்கிறார். சிவபெருமான் தவத்தை ஏற்று மீண்டும் மகாவிஷ்ணுவை உயிர்ப்பிக்கிறார். 

அப்போது மகாவிஷ்ணு தனது தவறை உணர்ந்து தனது தோலினைச் சட்டையாகவும், எலும்பைத் தண்டாயுதமாகவும், நரம்புகளை மாலையாகவும் அணிந்துகொள்ள சிவபெருமானிடம் வேண்டுகிறார். அதன்படி மகாவிஷ்ணுவின் தோலைச் சட்டையாக அணிந்துகொண்டு சட்டநாதராக  மலை மீது சிவபெருமான் காட்சி தருகிறார். சட்டநாதரை வழிபட்டால் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

சட்டநாதருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பூஜை நடைபெறும்.  இது சுக்கிரவார பூஜை என்றழைக்கப்படுகிறது. இரவு 9 மணியளவில்  தொடங்கும் பூஜை நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடையும். முன்னதாகக் கீழ்ப்  பிரகாரத்தில் உள்ள பலிபீடத்திற்கு 21 வகையான வாசனைத்  திரவிய பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெறும். பின்னர் அலங்காரம், தீபாராதனை நடக்கும். தொடர்ந்து உற்சவமூர்த்தி சட்டநாதருக்கு அலங்காரம், தீபாராதனை நடைபெறும். பின்னர் மலை மீது அருள்பாலிக்கும் சட்டநாதர் சுவாமிக்கு புனுகு சட்டம் சாத்தி பச்சைப்பயறு பாயாசம், உளுந்துவடை நிவேதனம் செய்து தீபாராதனை காட்டப்படும்.

இதனைத் தொடர்ந்து பள்ளியறை சாமிக்கும், அஷ்ட பைரவர்களுக்கும் தீபாராதனை வழிபாடு நடக்கும். இந்த புனுகு சாத்திய விபூதியை இட்டுக்கொள்பவர்களுக்கு சகல வியாதிகளும் நீங்கும் என்பது ஐதீகம். சுக்கிரவார வழிபாட்டில் வாரந்தோறும் கலந்துகொண்டு வழிபட்டால் நினைத்த காரியம் கூடிய விரைவில் நடைபெறும். எதிரிகள் தொந்தரவு நீங்கும். பில்லி, சூனியம் அண்டாது. உயர் பதவிகளை அடையலாம். நீதிமன்ற வழக்குகளில் நமக்கு சாதகமான வெற்றி அமையும். அனைத்து நன்மைகளும் வந்துசேரும்.

உடைக்காத தேங்காய்

இந்த சுக்கிரவார பூஜையின்போது, பக்தர்கள் கொண்டுவரும் அர்ச்சனைப் பொருளில் இருக்கும் தேங்காயை, அர்ச்சகர்கள் பூஜித்து, குடுமியை மட்டும் நீக்கிவிட்டு உடைக்காமல் கொடுப்பார்கள். பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை, மனவேதனை, சட்ட சிக்கல் போன்ற தொல்லைகள் இருப்பவர்கள் அந்த தேங்காயை பூஜித்து வீட்டுக்கு எடுத்து வந்து, வேறு எந்த சமையலிலும் சேர்க்காமல், துருவி சர்க்கரையிட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும். இது ஒரு பரிகாரமாகக் கருதப்படுகிறது.

வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் சுக்கிரவார பூஜையில் பங்கேற்று, பலி பீடம், உற்சவர், மூலவருக்கு நடக்கும் அபிஷேகம் மற்றும் தீபாராதனையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் சட்டநாதர் கோயில் தேவஸ்தானத்தை வெள்ளிக்கிழமைக்கு 5 நாள்களுக்கு முன்பு அல்லது அதற்கும் முன்பு தொடர்பு கொண்டு, தங்களது பெயர், ராசி, நட்சத்திரத்தைச் சொல்லி ரூ.600 செலுத்தி பூஜையில் கலந்துகொள்ளலாம். 

குறைந்தபட்சம் 3 வாரங்கள் தொடர்ந்து சுக்கிரவார பூஜையில் பங்கேற்றால், சட்ட சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கி, நல்வாழ்வு பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தக் கோயிலுக்கு, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் வந்து இறைவனை வேண்டி நலம்பெற்றுச் செல்கிறார்கள்.


கோயில்நடை திறந்திருக்கும் நேரம்

நாள்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.45 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

தல விருட்சம்

சட்டைநாதர் கோயிலின் தலவிருட்சம் மூங்கில்.

எவ்வாறு செல்வது?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலும் ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும் சட்டநாதர் கோயில் அமைந்துள்ளது. விமானம் மூலம் வருவோர்  திருச்சி வந்து அங்கிருந்து சாலை அல்லது ரயிலில் வரலாம்.

கோயில் தொடர்பு எண்: 04364 - 270235

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT