பரிகாரத் தலங்கள்

பித்ரு, மாத்ருஹத்தி தோஷம் நீக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோவில்

கு. வைத்திலிங்கம்

பித்ருஹத்தி, மாத்ருஹத்தி தோஷ நிவர்த்தி தலமாகவும் சாம வேதியர்களுக்கான தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது லால்குடி திருமங்கலத்தில் அமைந்துள்ள லோகநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு சாமவேதீசுவரர் திருக்கோயில்.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திருமங்கலத்தில் அமைந்துள்ள இக்கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார் பெருமான் ஆகியோரால் பாடல் பெற்ற இத்திருக்கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்புப் பெற்றது.

திருமங்கலம் அருள்மிகு லோகநாயகி அம்மன் உடனுறை சாமவேதீசுவரர் திருக்கோயில் ராஜகோபுரம்.

பரசுராமேசுவரம் என்று முன்பு அழைக்கப்பட்ட இந்த ஊர், திருமகள் வந்து சுவாமியை வழிபட்டதால் திருமங்கலம் என ஆயிற்று.  பரசுராமர் தனது தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஹத்தி தோஷம் நீங்கவும், சண்டிகேசுவரர் தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பித்ருஹத்தி தோஷம் நீங்கவும் இக்கோயில் இறைவனை வழிபட்டு, தோஷ நிவர்த்தி பெற்றிருக்கின்றனர். 

இதைத் தவிர 63 நாயன்மார்களில் ஒருவரான ஆனாய நாயனார் அவதரித்து, முக்தியடைந்தது இத்திருமங்கலத்தில்தான்.  மேலும் நான்கு வேதங்களில் ஒன்றான சாமவேதத்தைக் கொண்டு இங்குள்ள இறைவன் சாமவேதீசுவரர் என்றழைப்பதும் தனிச்சிறப்புடையது.

சாமவேதீசுவரர் சன்னதியில் வழிபடுவோருக்கு பிரசாதம்

சோழமன்னன் பரகேசரிவர்மன் என்னும் திரிபுவன சக்கரவர்த்தியின் மூன்றாவது ஆட்சி ஆண்டில் இத்திருக்கோயில் கட்டப்பட்டது. இரண்டாம் ராஜராஜசோழப் பேரரசுக்குப் பின்பாக திருமழுவுடைய நாயனார் திருக்கோயில் என்ற தமிழ்ப்பெயருடன் விளங்கிய இக்கோயில்,17-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தற்போது வழங்கப்பட்டு வரும்  சாமவேதீசுவரம் (திருமங்கலம்) என்ற திருப்பெயருடன் அழைக்கப்பட்டு வந்ததாக  கல்வெட்டுகள் உள்ளன.

லோகநாயகி அம்மன் சன்னதி

இறைவன் சாமவேதீசுவரர்

இக்கோயிலில் எழுந்தருளிய இறைவன் சாமவேதீசுவரர் லிங்க ஸ்வரூபியாகக் காட்சியளிக்கிறார்.  இத்திருக்கோயில் இறைவன் அருளால் ஜைமினி முனிவர் சாம வேதத்தை 1000 சாகைகளாகப் பிரித்தார். அதனால் இவ்விறைவனுக்கு சாமவேதீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. பெரியபுராணத்தில் சேக்கிழார் சுவாமிகள், இசை விரும்புக்கூத்தன் என்று இத்திருக்கோயில் இறைவனையும் குறிப்பிட்டிருக்கிறார்.

நான்கு வகை வேதங்களில் மூன்றாவது வகை வேதமாக இருப்பது சாம வேதம். இந்த வேதத்தின் நடையே சங்கீத - இசை வடிவிலானது. எனவேதான் இந்த ஊரில் அவதரித்த ஆனாய நாயனாரின் இசைக்கு மயங்கி, அவருக்கு இறைவன்  இடப வாகனத்தில் காட்சியளித்ததும் சிறப்புக்குரியது.  இந்தியாவில் சாமவேதத்துக்கு என்றுள்ள ஒரே கோயில் திருமங்கலம்  சாமவேதீசுவரர் திருக்கோயில்தான். மூன்று கோடி சிவலிங்கத்தைத் தரிசனம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன் திருமங்கலம்  சாமவேதீசுவரரைத் தரிசித்தால் கிடைக்கும் என்கிறது புராணம்.

சண்டிகேசுவரர் உள்ளிட்ட தெய்வத் திருமேனிகள்

இத்திருக்கோயிலில் பரசுராமர், சண்டிகேசுவரர், இரயிக்குவ மகரிஷி, உதங்கரிஷி, ஜைமினிய ரிஷி, இந்திரன், குபேரன், லட்சுமி ஆகியவர்கள் பூஜித்துள்ளனர்.

இறைவி லோகநாயகி அம்மன்

இத்திருக்கோயில் இறைவி லோகநாயகி அம்மன்.  இவர் தனி சன்னதி  கொண்டு பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். இறைவனுக்கு நடைபெறும் அனைத்து பூஜைகளும் இறைவிக்கும் நடத்தப்பட்டு வருகிறது.

பூஜை செய்த லிங்கம், முக்தி கொடுத்த லிங்கம்

கோயிலின் உள் பிரகாரத்தின் தென் திசையில் பரசுராமர் பூஜை செய்த லிங்கமும், ஆனாய நாயனருக்கு முக்தி கொடுத்த சிவலிங்கமும் உள்ளது.  இதற்கு அருகிலேயே ஆனாய நாயனருக்கு முக்தி கொடுத்த அம்மன் சன்னதியும்  அமைந்துள்ளது.

ஆனாயநாயனாருக்கு முக்தி கொடுத்த அம்மன் தனி சன்னதி.

மாத்ருஹத்தி தோஷ நிவர்த்தி

பரசுராமர் தனது தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஹத்தி என்னும்  தோஷம் நீங்க, இத்திருக்கோயில் இறைவனை வழிபட்டார். இறைவன் அருளால் பரசுராமருக்கு அத்தோஷம் நீங்கப்பெற்றது.  இதனால் கோயிலிலுள்ள தீர்த்தம் பரசுராமர் தீர்த்தம் என்றும், இவ்வூர் பரசுராமேசுவரம் (திருமங்கலம்) என்றும் அழைக்கப்படுகிறது.

கோயிலிலுள்ள நவக்கிரகங்கள்.

மேலும் முன்னோர்கள் விட்ட சாபங்கள், தோஷங்கள், ஏழேழு ஜன்மங்களாக இருந்த தோஷங்கள் நீங்க இக்கோயில் வந்து  சுவாமி, அம்மனுக்கு  11 நெய் தீபங்கள் ஏற்றி, 11 முறை சிவனை வலம் வந்துசென்றால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.

கோயிலின் கம்பத்தடி

பித்ருஹத்தி தோஷ நிவர்த்தி

சண்டிகேசுவரர் தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பித்ருஹத்தி  தோஷம் நீங்க பல்வேறு திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட்டார். எங்கு சென்றும் தோஷம் நீங்காததால், இறைவன் இத்தலத்தில் வந்து தன்னை வணங்கும்படி அவரது கனவில் கூற சண்டிகேசுவரரும் இறைவனின் சன்னதியில் இடதுபுறம் இருந்து வணங்கி, பித்ருதோஷம் நிவர்த்தி பெற்று இறைவனடி சேர்ந்தார்.

திருமங்கலம் அருள்மிகு லோகநாயகி அம்மன் உடனுறை சாமவேதீசுவரர் திருக்கோயில் ராஜகோபுரம்

இத்திருக்கோயில் இறைவனின் அர்த்தமண்டப நுழைவுவாயிலில்  சண்டிகேசுவரரின் திருமேனியைக் காணலாம். இது வேறு எந்த  திருக்கோயிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.

சண்டிகேசுவரர் தோஷ நிவர்த்தி பெற்ற இத்திருக்கோயிலில் சுவாமி சன்னதியின் இருபுறத்திலும் விநாயகரும், சண்டிகேசுவரரும்  காட்சியளிக்கின்றனர். இது வேறு எத்திருக்கோயிலிலும் இல்லாத ஒன்றாகும்.

கோயிலின் கருவறைக் கோபுரம்

இரயிக்குவ ரிஷி என்ற முனிவர் பித்ரு சாபம் நீங்க இத்திருக்கோயில் இறைவனை வணங்க வந்தார். இங்கு நதி இல்லாததால் காசி, கயாவுக்குச் செல்ல சங்கல்பித்தார். உடனே இறைவன் அசரீரியாக வந்து உனக்காக இங்கேயே நதியை உருவாக்குகிறேன் என்று அருளினாராம். இந்த ரிஷிக்காக இறைவன் உண்டுசெய்த நதி கயாபற்குனி (தற்போது பங்குனி நதியாக அழைக்கப்படுகிறது) என்ற நதியாகும். இந்த நதி இவ்வூரை வளமாக்குகிறது.

காசிக்கு சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன் இங்கு உனக்கு கிடைக்கும் என இறைவன் ரிஷிக்கு அருளினாராம்.  எனவே நீத்தார் கடன்களைக் காசியிலும், கங்கையிலும் செய்தால் என்ன பலனோ அப்பலன் இந்நதியிலும் நீராடி, இறைவனை வழிபட்டால் கிடைக்கும். பித்ரு கடன்கள், பித்ரு சாபங்கள் நீங்கி நன்மை பெறலாம்.

கோயில் உள்கோபுரம்

அபயமுத்திரையுடன் தட்சிணாமூர்த்தி

பொதுவாக சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தி  சின்முத்திரையுடன்தான் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆனால், திருமங்கலம் கோயில் இதிலிருந்து வேறுபட்டிருக்கிறது.
 

அபயஹஸ்தத்துடன் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி

இத்திருக்கோயிலில் தட்சிணாமூர்த்தி அபயமுத்திரை காட்டி பக்தர்களுக்குக்   காட்சியளிக்கிறார். இதனால் இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு  சகல  தோஷங்களும் நீங்கப் பெற்று  குழந்தைகளுக்கு கல்விச் செல்வமும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வியாழக்கிழமையன்று எண்ணெய், பால்,  தேன் அபிஷேகம் செய்து, தயிர் சாதம், சுண்டல் நைவேத்தியம் செய்து 11 நெய் தீபமிட்டு விளக்கேற்ற வேண்டும்.  11 வாரங்கள் வியாழக்கிழமைகளில் விரதமிருந்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது இத்திருக்கோயிலுக்கு வந்து பலனடைந்தவர்கள் கூற்றாக உள்ளது.

ஆனாய நாயனாருக்கு முக்தி கொடுத்த லிங்கம்

கோயிலில் இறைவனுக்கு அபிஷேகம் செய்த தேனை தினந்தோறும் சாப்பிட வேண்டும். அவ்வாறு செய்தால் வாய் திக்கிப் பேசுவது குணமடைவதுடன், நல்ல ஞானம், கல்வி ஆற்றல் உயர்ந்து வரும்.

மயிலாசனத்தில் வள்ளி

வள்ளியுடன் திருமணமான பின்னர் முருகப்பெருமான் வந்த கோயில்  திருமங்கலம். அதனால் மற்ற திருக்கோயில்களில் இல்லாத சிறப்பு இங்கு உண்டு. அதாவது முருகப்பெருமானும், தேவசேனாவும் நின்ற கோலத்தில் இருக்க, மயிலின் மேல் அமர்ந்த கோலத்தில் வள்ளி காட்சியளிப்பது இத்திருக்கோயிலில்தான். அதாவது வள்ளிக்கு மயிலாசனத்தை முருகப்பெருமான் வழங்கியது இங்குதான்.

மயிலாசனத்தில் வள்ளி, அருள்மிகு முருகன், தெய்வசேனா

இங்குள்ள முருகப்பெருமான் மற்ற கோயில்களில் உள்ளது போன்று இல்லாமல் ( ஆறுமுகமும் 12 கரங்களும் இல்லாமல்) ஆறுமுகமும், நான்கு கைகளுடன் சம்ஹார மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். கணவன் - மனைவி ஒற்றுமைக்கு இத்திருக்கோயில் முருகனை வழிபடுவது சிறப்பு. பிரிந்த தம்பதியினர் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் கூடி வாழக்கூடிய நிலை ஏற்படுமாம்.

தனி சனீசுவர பகவான் 

பொதுவாக சனீசுவர பகவான் தெற்கு நோக்கிய காக வாகனத்தில்தான் காட்சியளிப்பார். ஆனால், இத்திருக்கோயிலில் சனீசுவர பகவான் வடக்கு நோக்கிய காக வாகனத்தில் தவற விட்ட பொருள், பதவி, செல்வம் ஆகியவற்றை வழங்கும் வகையில் காட்சியளிக்கிறார். இதுவும் மிக சிறப்புக்குரியதாகும்.

வடக்கு நோக்கி காக வாகனத்தில் காட்சியளிக்கும் சனீசுவர பகவான்

கனரக இரும்பு, உருக்காலை, பெட்ரோல், வாகன உதிரிப் பொருள்கள் விற்பவர்கள் வியாபார மேன்மை அடையவும், ஜன்ம சனி, பாத சனி, அஷ்டம சனி தோஷங்கள் நீங்கவும் சனி பகவானை வழிபட்டால் அனைத்தும் நீங்கி, குபேர ஸ்தம்பத்தை அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பைரவரும் - காலபைரவரும்

பொதுவாக சிவாலயங்களில் பைரவர் காட்சியளிப்பார் அல்லது காலபைரவர் காட்சியளிப்பார். ஆனால் திருமங்கலம் திருக்கோயிலில்தான் பைரவரும், காலபைரவரும் சேர்ந்து இருப்பது மிக விசேஷமாகும்.  

கோயிலில் அமைந்துள்ள பைரவர், காலபைரவர், சூரியன், சனீசுவர பகவான்.

இக்கோயிலின் அர்த்தசாம பூஜையின் போது பைரவர் பாதத்தில் வைத்த விபூதியை பூசுவதால், சகல நோய்களும், பூச்சிக் கடிகளும் நீங்கி ஆரோக்கியம் பெறலாம்

அதிகார நந்தி

பிரதான சன்னதிக்கு முன்பாக உள்ள இரண்டாம் நுழைவுவாயிலில் துவார பாலகருக்குப் பதிலாக தென்புறம் சுவரிலுள்ள மாடத்தில் அதிகார நந்தி தனது துணைவியாருடனும், வடபுற சுவரிலுள்ள மாடத்தில் ஆக்கு கணபதியும் வீற்றிருப்பது வேறு எந்த திருக்கோயிலிலும் இல்லாத தனிச் சிறப்பாகும்.

தம் துணைவியாருடன் அதிகார நந்தி

சிம்ம வாகனத்தில் விஷ்ணு துர்க்கை

இக்கோயிலில் அமைந்துள்ள விஷ்ணு துர்க்கை மஹிச வாகனமின்றி சிம்ம வாகனத்தில் இருப்பது தனிச் சிறப்பாகும். திருமணமாகாத பெண்கள் 11 வெள்ளிக்கிழமை வழிபட்டு, முடிவில் மஞ்சள் காப்பணிந்து நேர்த்தி செய்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

சிம்ம வாகனத்தில் விஷ்ணு துர்க்கை

சிறப்பு வாய்ந்த கஜலட்சுமி

 கஜலட்சுமி (திருமகள்)

கஜலட்சுமி அதாவது திருமகள் சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டு வந்த தலம். அதனால்தான் இந்த ஊர் திருமங்கலம் என அழைக்கப்பட்டது. இத்திருக்கோயிலில் தனி சன்னதி கொண்டு கஜலட்சுமி காட்சியளித்து வருகிறார்.

ஆனாய நாயனார்

திருமங்கலத்தில் ஆயர் குலத்தில் பிறந்தவர் ஆனாயர். தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர். புல்லாங்குழலில் வேதப்பொருளாகிய திருஐந்தெழுத்தைத் தம்மை மறந்து வாசித்த ஆனாய நாயனாரை நின்ற நிலையில் நம்புவாய் அணைவாய் என்று சிவபெருமான் அருளினார்.

இவரது இசை உணர்வில் கட்டுப்பட்ட விலங்குகள், பாம்பும், மயிலும், சிங்கமும், யானையும், புலியும், மானும் தமது பகைமையை மறந்து ஒன்று சேர்ந்து கூடின. காற்று, மரம், அருவி, காட்டாறு, வான்முகில், ஆழ்கடல் அனைத்தும்  அந்த இசைக்கு மயங்கி நின்றன. அவரது இசை இடப வாகனத்தில் இருந்த சிவபெருமான் காதுக்கு எட்டியது. இதையடுத்து சிவபெருமான் பார்வதி தேவியுடன் எதிர்நின்று காட்சியளித்தார்.

ஆனாய நாயனார்

அந்தக் குழல் வாசனையை என்றும் கேட்பதற்கு, இன்நின்ற நிலையே பூமழை பொழிய, முனிவர்கள் துதிக்க, குழல் வாசித்துக் கொண்டே நின்ற நிலையோடு ஆனாயர் அரனாருடன் ஐக்கியமானார். அது முதற்கொண்டே ஆனாய நாயனார் என்ற பெயருடன், 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

ஆனாய நாயனார்  இறைவனுடன் இரண்டறக் கலந்த கார்த்திகை மாதம், அஸ்தம் நட்சத்திரத்தில் இக்கோயிலில் குருபூஜை விழா நடைபெறுகிறது.

மகம் நட்சத்திரத் தலம்

கோயிலில் வரையப்பட்டுள்ள அம்மன் படம்

ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு சிறப்பை அல்லது நட்சத்திர சிறப்பைப் பெற்றிருக்கும். அந்த வகையில் திருமங்கலம், மகம்  நட்சத்திரக்காரர்களுக்கான கோயிலாகும்.

தலவிருட்சம்

இத்திருக்கோயிலின் தல விருட்சம் பலா மரம். உதங்க முனிவர் தவம் செய்து, அமிர்தம் பெற்ற திருக்கோயில். ஆதலால் தல விருட்ச பூஜை  ஆயுள் விருத்தியையும், ஆயுஷ்ம செய்த பலனையும் தரும்.  மகம் நட்சத்திரத்தன்றும், சனிக்கிழமையன்றும் இக்கோயிலை 11 முறை வலம் வந்து, தேனில் ஊறிய பலாச்சுளைகளை தானம் செய்தால் நீண்ட ஆயுள் அபிவிருத்தி பெறலாம்.

திருக்கோயிலின் தலவிருட்சம் பலாமரம்


தலத் தீர்த்தமாக பரசுராமத் தீர்த்தம் உள்ளது.

குடமுழுக்கு

இக்கோயிலில் 1939, ஜூன் 26-ஆம் தேதியும்,  1963, ஜூன் 23 ஆம் தேதியும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டில் திருமங்கலம் கோயிலில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்திலுள்ள விநாயகர்கள்

நடை திறந்திருக்கும் நேரம்

இக்கோயில் காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது ?

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், சத்திரம் பேருந்து  நிலையத்திலிருந்தும் வருபவர்கள் நெ.1.டோல்கேட், வாளாடி, மாந்துறை வழியாகவும், லால்குடி சந்தைப்பேட்டை வழியாகவும்  சென்று  அங்கிருந்து  4. கி.மீ. தொலைவிலுள்ள திருமங்கலம் கோயிலை அடையலாம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில்  கோயில் அமைந்துள்ளது. தென் மாவட்டங்களிலிருந்தும், மேற்கு மற்றும்  வடக்கு மாவட்டங்களிலிருந்து கார், வேன் போன்ற வாகனங்களில் வருபவர்கள் நெ.1. டோல்கேட் வந்து வாளாடி, மாந்துறை வழியாக கோயிலைச் சென்றடையலாம்.

சுவாமி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும், லால்குடியிலிருந்தும் நகரப் பேருந்து வசதிகள் உண்டு. லால்குடியிலிருந்து ஆட்டோ வசதியும் உள்ளது. ரயில், விமானம் மூலம் வருபவர்கள் திருச்சியிலிருந்து கார் மூலம் கோயிலுக்கு வரலாம்.

இக்கோயிலுக்கு வருபவர்கள் தொடர்புக்கு: டி.பி. ஞானஸ்கந்த குருக்கள் - 98654 22027, பாலசுப்ரமணிய குருக்கள்- 98655 42227.

கோயில் முகவரி

செயல் அலுவலர்,
அருள்மிகு லோகநாயகி அம்மன் உடனுறை சாமவேதீசுவரர் திருக்கோயில்,
திருமங்கலம், லால்குடி வட்டம், 
திருச்சி மாவட்டம்,
செயல் அலுவலரின் செல்லிடப்பேசி எண் :94867 27797

படங்கள் : எஸ். அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT