பரிகாரத் தலங்கள்

சந்திரனால் நேரிடும் சங்கடங்களைப் போக்க திங்களூர் கைலாசநாதர் திருக்கோவில்

தினமணி

நவகோள்களில் முதலிடத்தில் இருப்பவர் சூரியன். இரண்டாம் இடத்தில் இருப்பவர் சந்திர பகவான். வேதங்களிலும் சந்திரனைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

'சந்திரமா மனஸோ ஜாத' என்ற புருஷ ஸூக்தம் சந்திரனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதாவது, பரம்பொருளாகிய இறைவனுக்கு மனமாக இருப்பவர் சந்திர பகவான் என்பதே இதன் விளக்கம்.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் 'திங்களைப் போற்றதும், திங்களைப் போற்றதும்' எனச் சந்திரனைப் போற்றுகிறார்.

சுந்தரர் தம் பாடலில் 'பித்தா பிறைசூடி பெருமானே! அருளாளா!' என அழைக்கிறார். கிராமப்புறங்களில் தலையில் தூக்கி வச்சுகிட்டு ஆடுரான்யா என சில பேரைச் சொல்வர். அப்படி இறைவனும், இறைவியுமே சந்திரனை இளம்பிறையாகத் தலையில் சூடிக் கொண்டு ஆடுகின்றனர் என்றால் அவன் எத்தனை பெருமையுடையவன் எனத் தனது பாரதத்தில் வில்லிபுத்தூரார் சந்திரனின் பெருமையைப் பலபடச் சொல்கிறார். மேலும், ஞானசம்பந்தரும் தனது பாடலில் 'தூவெண்மதி சூடி' என்ற அடைமொழியோடு இறைவனை அழைக்கிறார்.

திங்களூர் கோயில் வாயில்

ஏற்கெனவே குறிப்பிட்டது போல பரம்பொருளுக்கே மனமாக உள்ள சந்திரன் நம் மனித மனங்களையும் ஆட்டுவிப்பதில் வியப்பேதும் இல்லை. உடல், மனது சந்திரனின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இதை இன்றைய விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது.

பெளர்ணமி நாள்களில் ஜீவராசிகள் மட்டுமல்லாமல் கடல் போன்ற நீர் நிலைகளிலும் சந்திரனின் நிலையையொட்டி மாறுதல் அடைகின்றன. மனிதனுடைய வாழ்க்கைத் தரமும் சந்திரனுடைய அருள் இல்லை என்றால் உயராது. இதற்கு இன்னொரு காரணமும் கூறுவர்.

பெரிய நாயகி

பாற்கடலில் மகாலட்சுமியுடன் பிறந்ததால் லட்சுமியின் சகோதரர் ஆகிறார் சந்திரன். எனவே, சந்திரன் அருள் பெற்றவர்களிடம் சகோதர வாஞ்சையோடு மகாலட்சுமி நீடித்து நிலைத்து இருப்பாள் என்பது பெரியோர் வாக்கு.

அத்திரி - அனுசுயா தம்பதியினரின் மகனாகப் பிறந்த சந்திரன் தேவ குருவான பிரகஸ்பதியிடம் கல்விக் கற்றுக் கலைகளில் சிறந்து விளங்கினார். திருமாலை நோக்கித் தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றார். நவக்கிரக பதவியும் பெற்று கோலோச்சினார்.

இதைக் கண்ட தட்ச பிரஜாபதி என்ற அரசன் தன் 27 பெண்களையும் அவருக்குத் திருமணம் செய்து தர சம்மதித்தார். அதற்கு 27 பெண்களையும் சமமாக நடத்த வேண்டும் என ஒரு நிபந்தனையும் விதித்தார். இதன் பின்னர் திருமணம் நடைபெற்றது.

சந்திரன்

அசுவினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களே அப்பெண்கள். சிறிது காலம் கடந்த பிறகு வேறு சில காரணங்களால் கார்த்திகை, ரோகிணி ஆகிய இரு மனைவிகளிடம் மட்டும் அதிக அன்பு செலுத்தினான் சந்திரன். இதைக் கேட்டு கோபமடைந்த தட்சன் தினம் ஒரு கலையாகத் தேய்ந்து 15 நாள்களில் அழிந்துபோகும்படி சந்திரனுக்கு சாபம் இட்டார்.

சிவபெருமானின் அருளால் தப்பித்த சந்திரன் திங்களூரில் எழுந்தருள வேண்டும் என்றும், அத்தலம் தன் பெயரால் திங்களூர் என வழங்கப்பட வேண்டும் எனவும் வேண்டினார். இதன்படி, திங்களூரில் இறைவன் கைலாசநாதராக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். சந்திரன் ஏற்படுத்திய தீர்த்தம் சந்திர தீர்த்தமாக விளங்குகிறது.

அப்பூதி அடிகள் வசித்த திங்களூர்

குடும்பத்துடன் அப்பூதி அடிகள்

பல்வேறு சிறப்புகள் கொண்ட திங்களூரில் அப்பூதியடிகள் நாயனார் வாழ்ந்து வந்தார். இவர் திருநாவுக்கரசர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவர். அந்நாளில் திருநாவுக்கரசரின் சிவத்தொண்டை அறிந்து அவர் மீது பக்தி கொண்டார். அதனால் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் படைத்தல், சத்திரம் அமைத்தல், நீர் கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்து வந்தார். ஒரு முறை திருநாவுக்கரசர் அப்பூதி அடிகள் வசித்த ஊருக்கு சென்றபோது, அங்கு தன்னுடைய பெயரால் தர்மங்கள் நடப்பதைக் கண்டு வியந்தார். அப்பூதி அடிகளார் பற்றிக் கேள்விப் பெற்று அவரது இல்லத்துக்குச் சென்றார் திருநாவுக்கரசர்.

அப்பூதியடிகளைச் சந்தித்த திருநாவுக்கரசர், ஏன் உங்கள் பெயரில் தர்மச் செயல்களைச் செய்யாமல் திருநாவுக்கரசரின் பெயரில் செய்கிறீர்கள் எனக் கேட்டார். அதற்கு அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் சமண சமயத்தில் பெரும் துறவியாய் இருந்ததையும், சிவனருளால் அச்சமயம் விட்டு சைவ மதமேற்று தொண்டுகள் புரிந்து வருவதையும் எடுத்துரைத்தார். இறைவனின் மீது அன்பு கொள்வதை விடவும், அவனுடைய அடியார்கள் மேல் அன்பு கொள்ளுதல் மேலும் சிறப்பானது என்று எடுத்துரைத்தார். அதன் பின்பு, தானே திருநாவுக்கரசர் எனத் தன்னை வெளிப்படுத்தினார் திருநாவுக்கரசர். திருநாவுக்கரசரே தன்னுடைய இல்லம் வந்திருப்பதை அறிந்து மகிழ்ந்த அப்பூதி அடிகள் உணவு உண்ண அழைத்தார்.

தட்சிணாமூர்த்தி

வாழை இலையை அறுக்கச் சென்ற அப்பூதி அடிகளின் மூத்த மகனான மூத்தத் திருநாவுக்கரசர் பாம்பு தீண்டி இறந்தார். திருநாவுக்கரசர் வந்திருக்கும்போது மகன் இறந்து போனதால், அதைக் கூறி திருநாவுக்கரசர் உணவு உண்ணுவது தடையாகி விடக்கூடாது என அப்பூதி அடிகளும், அவரது மனைவியும் துயரத்தை மறைத்து உணவு இட்டனர். ஆனால் திருநாவுக்கரசர் தன்னுடன் அப்பூதியடிகளின் மகனையும் உணவருந்த அழைத்து வருமாறு கூறினார். அப்பூதி அடிகள் தன்னுடைய மகன் பாம்பு தீண்டி இறந்த உண்மையைக் கூறி கண்ணீர்விட்டு அழுதார். தங்கள் மகன் விரும்பியவாறு தடையேதும் சொல்லாமல் விருந்து ஏற்க வேண்டும் என வேண்டினார்.

திருநாவுக்கரசர் பிரம்மித்துவிட்டார். இப்படியும் தன்மேல் ஒருபக்தியா? பெற்ற மைந்தன் இறந்ததைக்கூட மறைத்து, வந்த விருந்தினருக்கு அமுது படைக்கும் இயல்பா? பரிதாபத்துடன் நிற்கும் தன்னுடைய பக்தர்களை நோக்கி மெய்யன்பர்களே! இவருடன் சென்று அரவம் தீண்டியிருந்த அவரது மைந்தனை அருகிலிருக்கும் கயிலைநாதன் கோயிலுக்கு எடுத்து வாருங்கள் எனக் கட்டளையிட்டுக் கோயிலை நோக்கிச் சென்றார்.

விநாயகர்

விடம் தீண்டிய அச்சடலம் கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவன் சன்னதியின் முன் வைக்கப்பட்டது. இவ்விட பதிகத்தைப் பாடியவுடன் அப்பூதி அடிகளாரின் மகன் மூத்த திருநாவுக்கரசர் உறக்கத்திலிருந்து எழுந்தவனைப் போல் எழுந்தான். தன் முன் நிற்கும் ஞான குருவான திருநாவுக்கரசரின் திருவடிகளை வணங்கினான். அதைக் கண்ட அப்பூதி அடிகளாருக்கும், அவரது மனைவிக்கும் பேரானந்தம் என்றாலும், முகத்தில் சிறிது வருத்தம்.

நாவுக்கரசப் பெருமான் உணவருந்துவதற்குத் தடையாக இச்சம்பவம் நடந்துவிட்டதே என்ற வேதனை. அவர் தன்னைச் சமாளித்துக் கொண்டு நாவுக்கரசரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவருக்கு அமுது படைத்தார்.

அப்பூதியாரின் குருபக்தியை மெச்சிய நாவுக்கரசனார் மீண்டும் திருப்பழனம் சென்று அக்கோயில் இறைவனின் சன்னதியில் 'சொன்மாலை மயில்கிற குயிலினங்கள் சொல்வீரே' என ஒரு பதிகம் பாடி அப்பூதி அடிகளாரின் தொண்டின் பெருமையைச் சிறப்பித்துப் பாடினார். அத்தகைய சிறப்புப் பெற்ற திருத்தலம்தான் திங்களூர்.

கோயில் வாயில்

இந்தக் கோயில் திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் உள்ள திங்களூரில் உள்ளது. தஞ்சாவூரிலிருந்து ஏறத்தாழ 16 கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயில் கிழக்கு நோக்கியது. இங்கு மூலவர் கைலாசநாதர் கிழக்கு நோக்கியுள்ளார். தெற்கு பிரகாரமாகச் சென்றால் தென் திசை நோக்கி அம்மன் பெரியநாயகி உள்ளார். தனி சன்னதியில் சந்திர பகவான் மேற்கு நோக்கி சிறப்பு மூர்த்தியாக எழுந்தருளி அருள் பாலிக்கிறார். தமிழகத்தில் சந்திரனுக்கு உரிய பரிகாரத் தலமாக விளங்கி வருவது திங்களூர் கோவிலே.

பைரவர்

தொடர்ந்து பிரகாரத்தை வலம் வந்தால் பிள்ளையார் சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி, தவக்கோலத்தில் அமர்ந்த நிலையில் தட்சிணாமூர்த்தி சன்னதி, கஜலலட்சுமி சன்னதி, சண்டிகேசுவரர் உடன் சண்டிகேசுவரி சன்னதி, பைரவர் சன்னதி ஆகியவை உள்ளன.

பரிகார பூஜைகள்

ஜாதகத்தில் சந்திரனின் நிலை சரியில்லாதபோது சந்திர தோஷம் ஏற்படுகிறது.

ஜாதகத்தில் ஒருவருக்கு சந்திரனின் நிலை கெட்டிருந்தால் அவருக்கு மனநிலைக் கோளாறுகள், தாயுடன் கருத்து வேறுபாடு, நீரில் கண்டம், வெளிநாட்டு பயணத் தடை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

எனவே, சந்திர திசை மற்றும் சந்திர புத்தி நடைபெறும்போது ஏற்படும் தீங்குகளில் இருந்து நிவர்த்திக்காக சென்று வழிபட வேண்டிய சந்திர பரிகார தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது திங்களூர் கைலாசநாதர் திருக்கோவில்.

இந்தத் திருக்கோயிலுக்கு வருகிற பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இக்கோயிலில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நேரில் சென்று தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத பக்தர்கள் இத்திட்டங்களின் மூலம் சந்திர பகவானுக்கு தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே அபிஷேகம், அர்ச்சனை, பூஜை ஆகியவை செய்து அஞ்சல் மூலம் பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.

இலட்சார்ச்சனைக் கட்டணம் ரூ. 100:

இது ஆண்டுதோறும் பங்குனிப் பெளர்ணமியை ஒட்டி பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளுக்காக இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. இதில் பங்குபெற விரும்புகிறவர்கள் ரூ. 100 (நூறு மட்டும்) மணியார்டர் அல்லது டிராப்ட் மூலம் அனுப்பினால் அவர்களின் ஜென்ம நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

சுப்பிரமணியர்

அபிஷேக கட்டணம் ரூ. 500:

சந்திர பகவானுக்கு அபிஷேகம் செய்ய விரும்புகிறவர்கள் ரூ. 500 கட்டணம் செலுத்தினால் திருக்கோயில் மூலமாக அனைத்து அபிஷேகப் பொருள்களும் வழங்கப்பட்டு அபிஷேகம் செய்விக்கப்படும்.

நேரில் வர முடியாதவர்கள் திருக்கோயில் செயல் அலுவலர் என்ற பெயரில் ரூ. 500-க்கு மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் (டி.டி.) அனுப்பினால் அவர்கள் ஜென்ம நட்சத்திரத்துக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து அஞ்சல் மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நித்ய ஆராதனைக் கட்டளைத் திட்டம் ரூ. 2,000:

இந்தத் திட்டத்தில் சேர விரும்புகிறவர்கள் ரூ. 2,000 செலுத்தினால் அத்தொகை வங்கியில் நிரந்தர முதலீடு செய்யப்பட்டு, அதில் கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் விரும்பும் நாளில் அவர்களது பெயரில் இரண்டு கால பூஜைகள் செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

சூரியன்

கட்டளை அர்ச்சனை ரூ. 180:

மாதந்தோறும் சந்திர பகவான் அருட்பிரசாதம் பெற விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு ரூ. 180 செலுத்தினால், ஒவ்வொரு மாதமும், ஒரு திங்கள்கிழமை, பெளர்ணமி அல்லது அவர்கள் குறிப்பிடும் நாளில் அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

சண்டீகேசுவரியுடன் சண்டீகேசுவரர்

அன்னப் பிராசனம் குழந்தைகளுக்கு திருவமுது (சாதம் ஊட்டுதல்) ரூ. 100:

குழந்தையின் நான்காவது மாதம் அல்லது ஆறாவது மாதம் அசுவனி, மிருகசீரிஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி எனும் நட்சத்திரங்களில் அல்லது சந்திர ஹோரையில் சந்திரனையும், பசுவையும் குழந்தைக்குக் காட்டி வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை ஊட்ட வேண்டும்.

உணவு உண்ணும் குழந்தைகளுக்கு ஜல தேவதையின் அருளும், ஒளஷதி தேவதையின் அருளும் இருந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். குழந்தைக்கு அன்னப் பிராசனம் செய்ய முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

துர்க்கை

மணியார்டர் அல்லது டி.டி. அனுப்புகிறவர்கள் தங்களுடைய முகவரியை பின் கோடு எண்ணுடன் தெளிவாக எழுத வேண்டும். எந்தத் திட்டத்துக்கு என்பதையும் குறிப்பிட்டு எழுத வேண்டும். மேலும் தங்கள் பெயர், நட்சத்திரம் ராசி, லக்னம் இவற்றுடன் குறிப்பிட்ட நாளில் அர்ச்சனை வேண்டுமானால், அது பற்றியும் விவரம் தெரிவிக்க வேண்டும். நேரில் வருபவர்கள் கோயில் அலுவலகத்தில் தொகையைச் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

திருவையாறு - கும்பகோணம் சாலையில் இருக்கும் திங்களூர்க் கோவிலுக்கு சாலைவழி தஞ்சாவூர் அல்லது கும்பகோணம் வந்து செல்லலாம். விமானத்தில் வருவோர் திருச்சி விமான நிலையம் வந்திறங்கி, தஞ்சாவூர் வழி கோவிலுக்குச் செல்லலாம். திருச்சியிலோ, தஞ்சையிலோ தங்கிக்கொள்ள வசதிகள் இருக்கின்றன.

கோவில் முகவரி:

செயல் அலுவலர், சந்திரன் பரிகார ஸ்தலம், அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில், திங்களூர், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,  தமிழ்நாடு - 613 204. தொடர்புக்கு : கோயில் செயல் அலுவலர் - 
9944415585.

படங்கள் - எஸ். தேனாரமுதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT