பரிகாரத் தலங்கள்

திருமணத் தடை நீக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர் திருக்கோயில்

11th Dec 2020 04:00 AM | வி.என். ராகவன்

ADVERTISEMENT


சோழ நாட்டுத் தேவாரத் தலங்களின் வரிசையில் காவிரித் தென்கரைத் தலங்களில் 14-ஆம் தலமாகத் திகழ்கிறது திருவேதிக்குடி. 

தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள கண்டியூரை அடைந்து, அங்கிருந்து கிழக்கே வீரசிங்கம்பேட்டை வழியாக 4 கி.மீ. தொலைவு சென்றால் இருக்கிறது திருவேதிக்குடி வேதபுரீசுவரர் கோயில். தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் நெடார் கிராமத்திலுள்ள வெட்டாற்றுப் பாலம் அருகிருந்து மேற்கே 2 கி.மீ. பயணித்தாலும் இத்தலத்தை அடையலாம்.

திருவேதிக்குடி கோயில் ராஜகோபுரம்

வேதபுரீசுவரர்

இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனின் திருநாமம் அருள்மிகு வேதபுரீசுவரர். வாழைமடுநாதர் என்றும், ஆராவமுதுநாதர் எனவும் அவருக்குப் பெயர் உண்டு. இறைவியின் திருநாமம் மங்கையர்க்கரசி. தல விருட்சம் வில்வம். கோயில் எதிரிலுள்ள திருக்குளமே தலத்தீர்த்தமாக விளங்கும் வேத தீர்த்தம்.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாம்: கோள்களின் குற்றம் நீக்கிய திருக்குவளை கோளிலிநாதர் - நவ கிரகங்களின் தோஷம் அகலும்

ஊரின் நடுவே கிழக்கு நோக்கியுள்ள இந்தக் கோயிலில் மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது. அம்மன் சன்னதி தெற்கு நோக்கியுள்ளது. இந்தக் கோயிலில் நுழைந்ததும் இடதுபுறமுள்ள மகா மண்டபத்தில் வேத விநாயகர் எழுந்தருளியுள்ளார்.

வேத விநாயகர்

இவருக்கு வேதம் கேட்ட விநாயகர் என்பது உள்பட பல பெயர்கள் உண்டு. சிரசை ஒரு புறமாகச் சாய்த்துக் காதைச் சற்று உயர்த்தி வேதம் கேட்கும் பாவனையில் கணபதி அமர்ந்துள்ளார். மிக நேர்த்தியான பல்லவர் காலத்துத் திருமேனி இது. வேதங்கள் வழிபட்ட தலம்.

அர்த்தநாரீசுவரர்

பொதுவாக அர்த்தநாரீசுவரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பர். ஆனால், இந்தக் கோயில் அர்த்த மண்டபத்திலுள்ள அர்த்தநாரீசுவரர் கோலம் சற்று வித்தியாசமானது. இங்கு அம்மன் வலது புறமும் சிவன் இடதுபுறமும் இணைந்துள்ள அர்த்தநாரீசுவரரைக் காணலாம்.

அருள்மிகு வேதபுரீசுவரர்

கருவறையில் திகழும் லிங்கத் திருமேனியின் பாணமானது சாளக்கிராமத்தை ஒத்த நீள்வட்ட வடிவமுடையது. அர்ச்சகர் காட்டும் தீபஒளி திருமேனியில் தெரியும் வண்ணமுடையது. வேத நாயகரான பிரம்மன் வழிபட்ட தலமானதால் வேதிக்குடி எனப் பெயர் பெற்றது. வேதி, பிரம்மன், சூரியன், இந்திரன், மகாவிஷ்ணு உள்ளிட்டோர் வழிபட்ட தலம். வியாசர் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்த இடம் இது.

மங்கையர்க்கரசி

எப்போதும் வேதியர்கள் வேதம் ஓதிக் கொண்டிருந்த இடம். வேதபுரீசுவரர் ஆக வேதத்தின் பொருளாக சிவபெருமான் விளங்குகிறார் என்றால் வேதத்தின் சொல்லாகவும், அதன் இனிமையாகவும் மங்கையர்க்கரசி அம்மன் உள்ளார்.

மங்கையர்க்கரசி அம்பாள்

108 சிவ லிங்கங்கள்

மேலும், இந்தத் திருக்கோயில் பிரகாரத்தைச் சுற்றி 108 சிவ லிங்கங்கள் வரிசையாக அமைந்துள்ளன. எனவே, இந்தத் தலத்தை ஒரு முறை வலம் வந்து தரிசனம் செய்தால் 108 சிவாலயங்களைத் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. சூரியன் வழிபட்ட தலம். இப்போதும், ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் 13, 15 ஆம் தேதிகளில் சூரிய பகவான் தன் பொற் கிரணங்களால் வேதபுரீசுவரரை அர்ச்சிப்பதைக் காணலாம். மேலும், செல்வங்களுக்கு அதிபதியான குபேரனும் இத்தல இறைவனை வழிபட்டு வரம் பெற்றுள்ளார்.

கோயில் நுழைவுவாயில் வளைவு

சப்தஸ்தான தலங்களில் ஒன்று

நந்தியெம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் ஒரு பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம் கூடிய சுப நாளில் திருமழபாடியில் திருமணம் நடத்த முடிவு செய்கிறார் அய்யாரப்பர். அதற்காகச் சுற்றியுள்ள ஏழு ஊர்களில் இருந்து பொருள்களைச் சேகரிக்கிறார். திருமணத்துக்குத் தேவையான பழங்கள் கொடுத்த ஊர் திருப்பழனம். விருந்துக்குத் தேவையான அனைத்து பொருள்களையும் கொடுத்த ஊர் திருச்சோற்றுத்துறை. கண்டாபரணங்கள் வழங்கிய ஊர் திருக்கண்டியூர். மலர்களும் மாலைகளும் வழங்கிய ஊர் திருப்பூந்துருத்தி. ஹோமங்களுக்குத் தேவையான நெய்யை வழங்கிய ஊர் திருநெய்தானம். திருமணச் சடங்குகளுக்குத் தேவையான வேதம் அறிந்த வேதியர்கள் திருவேதிக்குடியிலிருந்துதான் சென்றனர்.

இதையும் படிக்கலாம்: சர்வதோஷ நிவர்த்தி தலமான திருவாரூர் தியாகராஜர் கோயில்

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அறம் வளர்த்த நாயகியுடன் அய்யாரப்பர் சித்திரை மாதத்தில் புது மணமக்களான நந்தியெம்பெருமான் - சுயசாம்பிகை தலத்துக்கு அழைத்துவந்து நன்றி தெரிவிக்கிறார். இது ஏழூர் வலம் என்ற சப்தஸ்தானத் திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நந்தியெம்பெருமானுக்கே திருமணம் நடத்திவைக்கக் காரணமாக இருந்த தலம் என்பதால் இது திருமணத் தடை நீக்கும் தலமாக இருக்கிறது.

அர்த்தநாரீசுவரர்

திருமணம் கைகூடும்

ஜாதக ரீதியாகத் திருமணத் தடைக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம், சயன தோஷம், சுக்கிர தோஷம், நாக தோஷம், குரு பலமின்மை என எந்த தோஷமாக இருந்தாலும், வரன் அமையவில்லையே என மனதிற்குள் மருகாமல் நம்பிக்கையுடன் திருவேதிக்குடி வந்து வேதபுரீசுவரரையும், மங்கையர்க்கரசியையும் வழிபட்டு நலம் பெறலாம்.

அதன் பிறகு வீட்டுக்குச் சென்று இத்தலத்தில் சம்பந்தர் பாடிய பதிகத்தில் உள்ள "உன்னி இருபோதும்" எனத் தொடங்கும் பாடலை 48 நாள்களுக்குத் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடி வரும். இது, நூற்றுக்கணக்கானவர்கள் அனுபவ ரீதியாகக் கண்ட உண்மை. திருமணம் நடந்த பிறகு கணவன், மனைவி இருவருமாக வந்து பிரார்த்தனையை நிறைவு செய்யலாம்.

தனது மகளுக்குத் திருமணம் தடைப்பட்டு வந்ததால் சோழ மன்னன் ஒருவன் தன் மனைவியுடன் வந்து அம்பாள் மங்கையர்க்கரசியை வழிபட்டிருக்கிறான். அவள் அருளால் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெற, மன்னனும் அரசியும் திருக்கோயிலுக்குத் திருப்பணிகளைச் செய்ததுடன், தன் மகளுக்கு மங்கையர்க்கரசி என்ற நாமத்தைச் சூட்டி மகிழ்ந்தான்.

பிரம்மா

தம்பதியரின் மனக்கசப்பு நீங்கும்

ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள் தங்களது குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு கணவன் - மனைவி விரிசல் இருந்தாலும், ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டிருந்தாலும் இங்கு வந்து வழிபட தம்பதிகளுக்கு இடையே மனக் கசப்பு நீங்கி ஒற்றுமையும் அரவணைப்பும் உண்டாகும்.

இதை திருஞானசம்பந்தப் பெருமான் இத்தலத்தைப் பற்றிப் பாடல்களில் வலியுறுத்தியுள்ளார். இத்தலத்தில் வாழும் உயிரினங்கள் யாவும் இணை பிரியாமல் வாழ்கின்றன எனத் தனது பதிகத்தில் பாடுகிறார் சுந்தர பெருமான்.

நல்ல திருமணத்தை விரும்புகிறவர் இங்கு வந்து திருமண மங்கலச் சடங்குகளைச் செய்தால் பதினாறு பேறுகளும் பெற்று நிறைவாழ்வு வாழலாம் என சம்பந்தப் பெருமான் கூறுகிறார். எனவே, திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடத் தடங்கல்கள் நீங்கித் திருமணம் நடந்து நன்மக்கட் பேறு அமையும் என்பது உறுதி.

சிவலிங்கங்கள்

பல்லவர் கால கோயில்

திருஞானசம்பந்தப் பெருமான், திருநாவுக்கரசர் ஆகிய இருமுது குரவர்களின் பதிகம் பெற்ற இக்கோயில் 1,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. திருவையாற்றை மையமாகக் கொண்ட சப்த ஸ்தான கோயில்களில் இதுவும் ஒன்று. 

இதையும் படிக்கலாம்: பதவி, ஊதிய உயர்வு பெற குரு பரிகாரத் தலம் திட்டை கோயில்

கல்வெட்டுககள் இத்தல இறைவனை திருவேதிக்குடி மகாதேவர் என்றும், பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர் எனவும் குறிப்பிடுகின்றன. திருநாவுக்கரசு சுவாமிகள் 'ஐயனை ஆராவமுதினை நாமடைந்து ஆடுதுமே' எனப் பாடுகிறார். தற்போதுள்ள இக்கோயில் பல்லவர்களின் இறுதிக் காலத்தைச் சார்ந்தது. மூன்றாம் நந்திவர்மன், நிருபதுங்கன் போன்ற பல்லவர்களால் கற்றளியாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இருதளக் கற்றளியாகத் திகழும் இதன் கீரிவமும், சிகரமும் வட்டமானவை. கருவறை 18.5 அடி பக்கமுடைய சதுரம்.

கோயில் பிரகாரம்

அர்த்த மண்டபம் 15 அடி முன்னோக்கி நீண்டுள்ளது. இங்குள்ள தேவகோஷ்ட சிலைகளில் துர்க்கை, அர்த்தநாரீசுவரர், பிரம்மன் ஆகிய மூன்றும் மிகப் பழைமையானவை. தேவகோஷ்டங்களைத் தாங்கும் அரைத்தூண்கள் வட்டமாக உள்ளன. ஓரங்களின் அரைத்தூண்கள் பட்டையுடையவை. அவற்றின் கும்பங்களும், குழைவுகளை உடைய போதிகைகளும் உள்ளன. கொடுங்கையில் அரை வட்டமான கூடுகள் உள்ளன. கொடுங்கையின் மேல் யாளி வரிமானத்தைக் காணலாம்.

ஸ்ரீ விமானத்துத் தென்புற கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும், மேற்புறம் அர்த்தநாரீசுவரரும் வடபுறம் பிரமன் மற்றும் துர்க்கை திருவுருவங்களும் உள்ளன. விமானத்தின் மேல் தளத்தில் துவாதச ஆதித்தர் என்கிற பன்னிரு சூரியன் திருவுருவங்கள் உள்ளன.

 கோயில் எதிரில் உள்ள திருக்குளமான வேத தீர்த்தம்

திருச்சுற்று மாளிகை (பிரகார சுற்று மண்டபம்) பிற்காலத்தில் எடுக்கப் பெற்றது. அதில் சுப்பிரமணியர் போன்ற பரிவாராலயங்கள் திகழ்ந்த போதும், தெற்கிலும், வடக்கிலும் பல சிறிய சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இச்சுற்று மண்டபத்தில் காணப்படும் லிங்கங்களும் அம்மன் சன்னதி முன் காணப்படும் லிங்கங்களும் பண்டைய நந்திபுரத்தில் (வீரசிங்கம்பேட்டை) ஆயிரம் சிவலிங்கம் இடம் பெற்றிருந்த ஆயிரத்தளி எனும் கோயில் அழிந்த பிறகு, அங்கிருந்து எடுத்து வரப்பட்டு இங்குப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

இதையும் படிக்கலாம்: சனி தோஷம் நீக்கும் நள்ளாற்று நாயகன் - திருநள்ளாறு திருக்கோவில்

நடை திறப்பு நேரம்

இக்கோயிலுக்கு திருவையாற்றிலிருந்து நகரப் பேருந்தில் செல்லலாம். கண்டியூரிலிருந்து ஆட்டோ வசதி உள்ளது. தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் வருபவர்கள் நெடார் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் 2 கி.மீ. தொலைவில் கோயிலை அடையலாம். இக்கோயில் நாள்தோறும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இக்கோயில் அர்ச்சகர் வெங்கடேஸ்வர குருக்களை (மோகன்) 8973387839 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

திருமணத் தடையை நீக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர் தரிசனம்!

படங்கள்: எஸ். தேனாரமுதன்

Tags : பரிகாரத் தலங்கள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT