மார்கழி உற்சவம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 30)

தினமணி

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 30

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கு அப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவை

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்:

திருப்பாவையின் நிறைவுப் பாசுரம் இது. நோன்புக்கு அழைத்து, நோன்பு விதிகளை விவரித்து, நோன்பியற்றி, நோன்பை நிறைவேற்றியும் விட்டவர்கள், இப்போது பாவைப் பாட்டின் பெருமையைப் பகர்கிறார்கள். "மாபெரும் கடலைக் கடைந்தவனான மாதவனை, கேசவனை, ஆய்ச்சிகளான நாங்கள் சென்று சேவித்துப் பாடி, பரிசுகள் பெற்ற பெருமையை,  பசுமைமிக்க தாமரை மலர்களால் ஆன மாலைகளைக் கட்டிக் கொடுக்கும் திருவில்லிப்புத்தூர் பெரியாழ்வாரின் மகளான கோதை உரைத்த இந்தப் பாமாலையை ஓதுபவர்கள், மலை போன்ற நான்குத் திருத்தோள்களையும், செம்மைமிக்க திருக்கண்களையும், நிறைந்த செல்வத்தையும் கொண்ட எம்பெருமான் திருமாலின் அருளைப் பெற்று மகிழ்ச்சி கொள்வார்கள்.'

பாசுரச் சிறப்பு:

மா+தவன் - திருமகள் நாதன். பாற்கடலிலிருந்து பிறந்தவள் திருமகள். பாற்கடல் கடைந்ததை உரைக்கும் பாசுரத்தில், கண்ணனை "மாதவன்' என்றழைப்பதன் பொருத்தம் எண்ணுதற்குரியது. நோன்புக்குள் புகும்போது "பரமனடி பாடி' என்றவர்கள், இப்போது "கேசவன்' என்று எம்பெருமான் திருமுடியைப் (கேசம் -கூந்தல்; அனைத்துக்கும் யாவர்க்கும் தலைவனாய் நிற்பவன் கேசவன்) பாடுகிறார்கள். பாதாதிகேச முறையில் பரமனைஅனுபவிக்கிறார்கள். புதுவை -திருவில்லிப்புத்தூர். வில்லி என்பவரால் புதியதாக நிர்மாணிக்கப்பட்ட  ஊர் என்பதால் அக்காலத்தே புதுவை என்று வழங்கப்பட்டது. பட்டர்பிரான் - பெரியாழ்வார். சங்கத் தமிழ் - கூட்டமாக இருந்து அடியாருடன் கூடி அனுபவிக்க வேண்டிய பாமாலை. மாதவன் என்னும் நாமமும் செல்வத் திருமால் என்னும் நாமமும் ஒரே பொருளைச் சுட்டுபவை; மா, செல்வம் - திருமகள்; தவன், மால் - திருமால். அதிகாலை எழுந்து அனுஷ்டானம் செய்து நோன்பியற்றி அதனால் கிட்டும் பலன்களை, இப்பாமாலையை ஓதுவதன் வழியாகவே பெற்றுவிடலாம் என்பது பெருஞ்சிறப்பு. 

******

ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி - பாடல் 10

ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்

புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்

போக்குகின் றோம்அவ மேயிந்தப் பூமி

சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்

திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்

அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்

படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே! 

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

 
பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

விளக்கம்: 

திருப்பள்ளியெழுச்சியின் நிறைவுப் பாடல் இது. மானுட வாழ்வின் பெருமிதத்தையும் இறைவனின் பரம கருணையையும் விளக்க முற்படுகிற பாடல். "திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! சிவபெருமானால் உய்யக் கொள்ளப்பட வேண்டுமானால் பூமியில் பிறக்க வேண்டும்; அவ்வாறு பிறக்காமல், வேறு உலகங்களில் இருந்துகொண்டு, நாள்களை வீணாகப் போக்குகிறோமே என்றெண்ணித் திருமாலும் பிரம்மாவும் பூமியில் பிறப்பதற்கு விருப்பம் கொள்கிறார்கள். வான்கருணையோடு பூமிக்கு இறங்கிவந்து எங்களை ஆட்கொள்கிற அமுதமே, இறைவா, எழுந்திருக்கவேணும்' என்னும் கோரிக்கையைச் செப்பும் பாடல். 

பாடல் சிறப்பு:

நிலவுலகில் மனிதப் பிறவி எடுப்பது பெருமைக்குரியது. ஏன்? இப்பிறவியில் இறைவனை முழுமையாகவும் முறையாகவும் வழிபட முடியும். அது மட்டுமில்லாமல், நிலவுலகில் மனிதர்களாகப் பிறந்த அடியார்களுக்கு அருள்வதற்காகப் பற்பல வடிவங்களிலும் அவதாரங்களிலும் ஆண்டவன் இறங்கி வருகிறான். ஆக, மனிதப் பிறவி மேன்மைக்குரியது. இதன் உண்மையை இருவர் உணர்ந்து கொண்டனர். யார் யார்? திருமாலும் நான்முகனும்! வைகுந்தவாசனானதிருமாலும் சத்யலோக வாசனான பிரம்மாவும்,  தத்தம் உலகங்களில் இருப்பது வீண் என்றெண்ணி, எம்பெருமானுடைய அருளைப் பெற வேண்டுமானால் பூமியில் பிறக்க வேண்டும் என்று விருப்புறுகிறார்கள்.

இன்னொரு நயமும் உண்டு. இவர்கள் இருவரும் அடியும் முடியும் தேடியவர்கள். ஆனால், இரண்டையும் இவர்கள் இருவராலும் காணமுடியவில்லை. இவர்கள் தேடியவை, எந்தவித இடைஞ்சலோ இறைஞ்சுதலோ இல்லாமல் வந்து கொண்டிருக்கின்றன. எங்கே? பூமியில்! தாங்கள் தேடியவை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் பூமியில் கிடைக்கின்றன என்பதைக் கண்டு வியப்படைகிற இவர்கள், இந்த பூமியில் பிறக்காமல் விட்டுவிட்டோமே என்று வருந்துகிறார்கள். இறைவன் மாத்திரம் அல்ல, இறைவனின் கருணை இறைவனுக்கு முன்னால், கட்டியம் கூறிக்கொண்டு வருகிறது. மெய்க்கருணை -  இறைவனின் அருள். அருள் பொழிபவள் அன்னை என்னும் கருதுகோளை எடுத்துக் கொண்டால், மெய்க்கருணை என்னும் பதம், அம்மையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அம்மையும் அப்பனுமாக அவனிக்கு வந்து ஆட்கொள்கிறார்கள். 

ஆதியும் அந்தமும் இல்லாத சோதியில் தொடங்கிய திருவெம்பாவையும், சிவனாரின் அருள்வதனப் பேரொளியில் தொடங்கிய திருப்பள்ளியெழுச்சியும், தீத்தூணாக நின்ற பேரொளிப் பிரகாசத்தில் வந்து நிறைவடைவது, பரமானந்த நயத்தைப் புலப்படுத்துகிறது. 

ஸ்ரீமாணிக்கவாசகர் திருவடிகளே சரணம்

-டாக்டர் சுதா சேஷய்யன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT