மார்கழி உற்சவம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 29)

13th Jan 2021 04:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 29

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்!

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ

ADVERTISEMENT

குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

பாடியவர் - பவ்யா ஹரி

 

விளக்கம்:  

நோன்பு தொடங்கிய நாள் முதல், பறை என்று பரிசுகளைப்பற்றிக் கூறிக்கொண்டேயிருந்த பெண்கள், இப்பாசுரத்தில்தான், தாங்கள் நாடுகிற பரிசு என்ன என்பதைத் தெளிவாக உரைக்கிறார்கள். "அதிகாலைப் பொழுதில் வந்து உன்னை வணங்கி, உன்னுடைய திருவடிகளைப் போற்றி நாங்கள் நிற்பதற்கான காரணத்தைக் கேளாய். பசுக்கூட்டத்தை மேய்க்கும் ஆயர்குலத்தில் பிறந்துள்ள நீ, எங்களை உனக்கான தொண்டர்களாகக் கொள்ளாமல் விட்டுவிடாதே. ஏதோ இப்போதைக்குப் பரிசு பெறுவதற்காக வந்தோம் என்று எண்ணாதே. எந்தக் காலமானாலும், எத்தனைப் பிறவிகளானாலும் உன்னோடு உறவு கொண்டவர்களாக இருப்பதையே யாசிக்கிறோம். என்றென்றும் உனக்கு அடிமைகளாக இருப்போம். இவைதவிர வேறு ஏதேனும் விருப்பங்கள் எங்களுக்கு இருக்குமானால், அவற்றை மாற்றிவிடு' என்று கோருகிறார்கள். 

பாசுரச் சிறப்பு:

நோன்பைத் தலைக்கட்டுகிற (நிறைவேற்றுகிற) நிலையில் வைக்கப்படுகிற விண்ணப்பம் இது. குற்றேவல் என்பது சிறு சிறு ஏவல் கூவல் பணிகள். அந்தரங்கக் கைங்கர்யம் (தனித் தொண்டு) என்பார்கள். ஏழேழு என்பதனை 7, 7+7, 7+7 என்று எவ்விதமாகவேனும் கொள்ளலாம். என்றைக்காக இருந்தாலும் எம்பெருமானுக்கு அடிமைகளாகவும் எம்பெருமானின் உடைமைகளாகவும் இருக்க வேண்டும் என்பதே நிரந்தர விண்ணப்பம். செயல் பெரியதா சிறியதா என்பதைக் காட்டிலும், அது செய்யப்படுகிற நோக்கம் முக்கியமானது. எந்தச் செயலாக இருந்தாலும், அளவுக்கும் பார்வைக்கும் சிறியதாகவே இருப்பினும், அச்செயலுள் இருக்கும்  அன்பும் பக்தியும் அறமும் ஆர்வமும் முக்கியமானவை. ஆங்கிலக் கவிஞர் மில்டனின் They also serve who stand and wait என்னும் வரியை நினைவூட்டுகிற பாசுரம் (இதே உணர்வைத் திருப்பள்ளியெழுச்சியின் 7ஆவது பாடலில், எது எமைப் பணி கொள்ளும் ஆறு என்னும் வரியில் காணலாம்). நோன்பை நிறைவேற்றிய நிலையில், நோன்பின் பலனை இப்பெண்கள் பெற விருக்கிறார்கள். ஒரு செயலின் பலனை அனுபவிக்கும்போது, அந்தச் செயலைச் செய்ததற்கான பெருமையும், செயல் பலனுக்கான ஆனந்தமும், ஒருவகையான மதர்ப்பைத் தரும். அந்த ஆனந்தமே சுயநலமாக மாறும்; ஆணவமாகத் தலைதூக்கும். இதற்குப் பிராப்ய விரோதம் என்று பெயர். இப்படிப்பட்ட  சுயநலம் இல்லாமல், நோன்பென்னும் செயலையும், நோன்பின் நற்பலன்களையும்கூட இறைவனின் திருவடிகளில் அர்ப்பணிக்கிற பாசுரம் இது. 

******

ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி - பாடல் 9

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்

மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!

வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்

கண்ணகத் தேநின்று களிதரு தேனே!

கடலமு தேகரும் பேவிரும் படியார்

எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

 


பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

 

விளக்கம்:

உள்ளம் உருக எம்பிரானைப் பள்ளியெழுந்தருள வேண்டுகிறார்கள். "வானுலகத்து தேவர்கள்கூட அணுக முடியாதவனே, உன்னுடைய அடியார்களான நாங்கள் மண்ணுலகில் வாழும்படியாக இறங்கிவந்து அருள்பவனே, திருப்பெருந்துறை இறைவனே, கண்ணிற்குள் தேனாக நிற்பவனே, பாற்கடல் அமுதம் போன்றவனே, கரும்பின் இனிமையே, உலகுக்கெல்லாம்  உயிரானவனே, உன்னை விரும்பும் அடியார்களின் உள்ளங்களில் வசிப்பவனே, எம்பெருமானே, எழுந்திருக்கவேணும்' என்றே அடிபணிகிறார்கள். 

பாடல் சிறப்பு:

அடியார்களின் அன்பையும் பெருமையையும் மையப்படுத்துகிற பாடல். தொழும்பு என்பது தொண்டு; இங்கு இறைத்தொண்டு என்னும் சிறப்பு சேர்கிறது. தொழுப்படியோங்கள் = இறைத்தொண்டில் ஈடுபட்டுள்ள அடியார்கள், இறையடிமைகள். உடலால் தொண்டு செய்து அடிமைகளாக இருக்கலாம். இது சாதாரண நிலை. மனிதர்களுக்கு மனிதர்கள் அடிமைகளான பழங்காலங்களில் இது நடந்திருக்கும். ஆனால், உள்ளத்தாலும் உணர்வாலும் அடிமைப்படுவது என்பது சிறப்பு நிலை. ஆண்டவனுக்கு ஒருவர் அடிமைப்படுகிறார் என்றால், உடல் மட்டுமின்றி, உள்ளமும் உணர்வும் அடிமைப்படுகின்றன. இதுவே தொழும்பு அடியார் நிலை. தொழுப்படியோங்கள் என்பதையும் வழியடியோம் என்பதையும் இணைத்து நோக்கினால், இப்பாடலின் பெருஞ்சிறப்பு தெளிவாகும். "இன்றைக்கு நேற்று அல்ல, காலங்காலமாக, தலைமுறை தலைமுறையாக ஆண்டவனுக்கு அடிமைகள்' என்பதே அடியார்களின் பெருமை. என்றைக்கும், எத்தனைக் காலமானாலும், எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் ஆண்டவனுக்கு அடிமையாக இருக்க வேண்டுமென்றே அடியார்கள்ஆசைப்படுகின்றனர். இந்த ஆசையோடே இறைவனை நாடுகின்றனர்.

இவ்வாறு அன்போடு நாடுகையில், அந்த அன்புக்காக, அடியார்களின் உள்ளங்களைத் தேடி இறைவனே வந்துவிடுகிறான். விரும்பு அடியார் எண்ணகத்திற்கு வந்துவிடுகிறான். திருவெம்பாவை 10ஆவது பாடலில் "தொண்டர் உளன்' என மொழிந்திருப்பதை ஒப்பு நோக்கலாம். இறைவனுக்கு ஆட்பட வேண்டும் என்னும் ஆசையைத் தொழுப்படியோங்கள், வழியடியோம்,  விரும்படியார் போன்ற பலவகையான சொற்களில், மணிவாசகப் பெருமான் மீண்டும் மீண்டும்சொல்லப் புகுந்திருக்கிறார். ஆண்டவனுக்குக் குற்றேவல் புரிய வேண்டும் என்கிற விருப்பம் வெளிப்படுகிறது. எண்ணகம் என்னும் சொல், எண்ணங்களின் உள்ளே என்றும் எண்ணங்களின்அகமான நெஞ்சம் என்றும் இரு வகைகளில் பொருளுரைக்க வழி செய்கிறது.

"உற்றோமே ஆவோம் உனக்கே ஆட்செய்வோம்' என்று ஆண்டாள் நாச்சியாரும் "வழியடியோம் என்று மாணிக்கவாசகரும்' இன்றைய பாசுரங்களில் ஒருசேர விழைந்திருக்கும் விந்தை, எண்ணி எண்ணி மகிழ்தற்குரியதாகும்.

-டாக்டர் சுதா சேஷய்யன்

Tags : திருப்பாவை மார்கழி வழிபாடு திருப்பள்ளியெழுச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT