மார்கழி உற்சவம்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 25)

9th Jan 2021 04:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 25

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர

தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த

ADVERTISEMENT

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பாடியவர் - பவ்யா ஹரி

 

விளக்கம்: 

கண்ணனைப் போற்றித்துதித்து, பரிசு தருமாறு கோருகிற பாசுரம். "தேவகியின் மகனாகப் பிறந்து, அன்றிரவே யசோதையின் மகனாக வளரச் சென்று, உன்னையே நீ ஒளித்துக் கொண்டபோதும், அதைக்கூடப் பொறுக்காமல், உன்னைக் கொல்லுவதற்காகப் பல வகைகளிலும் தீங்கிழைத்த கம்சனுடைய எண்ணங்களைப் பொய்யாக்கி, அவனுடைய வயிற்று நெருப்பாக நின்ற பெருமானே! உன்னைத் துதித்து யாசிப்பவர்களாக வந்திருக்கிறோம். (எங்கள் எண்ணத்தை ஈடேற்றி) எங்களுக்குப் பரிசு தருவாயென்றால், விரும்பத்தக்க செல்வமும் வீரமும் பெற்றவர்களாவோம். எங்கள் வருத்தமும் தீரும்; நாங்களும் மகிழ்ச்சியடைவோம்' என்பது நோன்புப் பெண்களின் வேண்டுகோள். 

பாசுரச் சிறப்பு:

கஞ்சன் - கம்சன். நெடுமால் - திருமால். திருமாலின் அவதாரமே கண்ணன் என்பதால், இவ்வாறு கூறுவர். வடமதுரையில் பிறந்த கண்ணன், ஆயர்பாடிக்குச் சென்றது எதற்காக? கம்சனிடத்திருந்து தப்பிப்பதற்காக என்பது மேலோட்டமான பார்வை. அப்படியானால், கம்சனுக்குக் கண்ணன் அச்சப்பட்டது போலாகும். உண்மையில், கண்ணன் ஆயர்பாடிக்குச் சென்றது, கம்சனுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு. தவறு செய்பவர்கள் தாமே தம்மைத் திருத்திக் கொள்வதற்காகக் கொடுக்கப்படுகிற வாய்ப்பு. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கம்சன் தவறியதுதான், அவனுடைய "பொறுக்காத தன்மை'. துஷ்டனைக் கண்டு தூர விலகுவது அச்சத்தால் அன்று; துஷ்டன் தானாகத் திருந்திக் கொள்ளட்டுமே என்னும் கரிசனம். "ஒளித்து' என்பது "மறைத்து' என்பதாகும். வசுதேவ வம்சம் என்பதை மறைத்துக்கொண்டு, பெருமான் என்னும் தன்னுடைய பெருமைகளை மறைத்துக்கொண்டு, ஆயர் சிறுவனாகத் தன்னுடைய சுயம்பிரகாசத்தை மறைத்துக் கொண்டு, மாட்டுக் குச்சிக்குள் சங்கு சக்கரப் பஞ்சாயுதங்களை மறைத்துக்கொண்டு... இப்படியாக எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு நின்ற கருணை. கம்சன் எண்ணத்தை ஈடழித்த பெருமான், எங்கள் எண்ணத்தை ஈடேற்ற வேண்டும் என்பது கோரிக்கை. 

******

ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி - பாடல் 5

பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்

போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்

சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா

சிந்தனைக் கும்அரி யாயெங்கள் முன்வந்து

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே! 

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

 

பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

 

விளக்கம்: 

"குளிர்ச்சிமிக்க வயல்களால் சூழப்பெற்ற திருப்பெருந்துறையில் உறையும் பெருமானே! ஐம்பூதங்களுக்குள்ளும் அவற்றின் உள்ளுறையாய் விளங்குபவனே. பிறப்பும் இறப்பும் இல்லாதவனே. நீ இவ்வாறு பஞ்சபூதங்களுக்குள் திகழ்வதையும் பிறப்பிலி, இறப்பிலி என்பதையும் செந்நாப்புலவர்கள், இசைப் பாடல்கள் வாயிலாகவும் தோத்திரங்கள் வாயிலாகவும் போற்றுகின்றனர். உன்னை உணர்ந்த ஞானியர், பாடியும் ஆடியும் உன்னைத் தொழுகின்றனர். இவற்றையெல்லாம் கேட்டுள்ளோம். ஆனால், உன்னைக் கண்டு அறிந்தவரைப் பற்றி நாங்கள் கேட்டதில்லை. சிந்தனைக்கும் அப்பாற்பட்டவனே! தானாக இறங்கி வந்து, எங்களின் குற்றங்களைப்போக்கி, எங்களை ஆட்கொண்டருளும் பெருமானே! எழுந்திருக்கவேணும்' என்னும் கோரிக்கையாகவே இப்பாடல் மலர்கிறது. 

பாடல் சிறப்பு:

எம்பெருமானின் பெருமைகளை எடுத்துரைக்க முற்படும் பாடல் இது. இறைவனுக்குப் பிறப்புமில்லை, இறப்புமில்லை. உயிர்கள் பிறக்கின்றன } இது வரத்து; இறக்கின்றன - இது போக்கு. தோன்றுவதாலும் (ஜ}வருதல்) மறைவதாலுமே (கதி-செல்லுதல்), உலகமானது "ஜகத்' எனப்பட்டது. இவை இல்லாத இறைவன், போக்கிலன், வரவிலன் ஆகிறான். ஐம்பூதங்களின் உள்ளுறையாயும் அனைத்துப் பொருள்களின் உள்ளுறையாயும் இறைவன் இருப்பதை ஞானியர் உணர்கின்றனர். இவ்வுணர்வால் போற்றிப் பாடி ஆடுகின்றனர். "கண்டறிவாரைக் கேட்டறியோம்' என்னும் தொடர், இப்பாடலின் சிறப்புத் தொடராகும். இறைவனைக் கண்டவர்களை நாங்கள் கேட்டதில்லை என்பது மேலோட்டமான பொருள். ஆழமான பொருளும் உண்டு. இறைவனைக் கண்ட ஞானியர் பலர் உண்டு. ஆனால், கண்டாலும் முழுமையாக அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. ஏனெனில், இறைவன் "தன் பெருமை தான் அறியாத் தன்மையன்'; பிறர் யார், இவனை அறிய முடியும்? எனவே, "கண்டு அறிந்தவரை நாங்கள் கேட்டதில்லை' என்று சிவனின் தன்னேரில்லா பெருமையை மாணிக்கவாசகர் பேசுகிறார். 

- டாக்டர் சுதா சேஷய்யன்

Tags : திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி மார்கழி வழிபாடு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT