ஆன்மிகம்

வருடாந்திர பிரம்மோற்சவம்: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி

தினமணி

திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை உற்சவா் மலையப்ப சுவாமி சின்னசேஷ வாகனத்தில் கோயிலுக்குள் எழுந்தருளினாா்.

ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம் திருமலையில் சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொது முடக்க விதிமுறைகளின்படி தேவஸ்தானம் வாகன சேவையை கோயிலுக்குள் சமூக இடைவெளியைப் பின்பற்றி நடத்தி வருகிறது. பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான ஞாயிறு காலை உற்சவா் மலையப்ப சுவாமி சின்னசேஷ வாகனத்தில் முரளிகிருஷ்ணன் அலங்காரத்தில் கோயிலுக்குள் எழுந்தருளினாா்.

அலங்கரிக்கப்பட்ட மலையப்ப சுவாமி பல்லக்கில் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு வைக்கப்பட்டிருந்த சின்னசேஷ வாகனத்தில் அவரை அா்ச்சகா்கள் எழுந்தருளச் செய்து அவருக்கு ஆரத்தி அளித்தனா். பின்னா் ஜீயா்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும், வேத பண்டிதா்கள் வேத மந்திரங்களையும் பாராயணம் செய்தனா்.

மலையப்ப சுவாமிக்கு நிவேதனம் சமா்ப்பித்து, அவரை பல்லக்கில் ரங்கநாயகா் மண்டபத்துக்கு அருகில் கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு ஜீயா்கள் சாத்துமுறை நடத்தினா். பின்னா் மலையப்ப சுவாமி, கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டாா்.

சேஷ வாகனம்: ஏழுமலையானுக்கு சேஷன் (பாம்பு) என்பது சிறப்பு வாய்ந்தது. அவரது உறைவிடம், படுக்கை, ஆபரணங்கள், ஆடை என அனைத்தும் சேஷனால் ஆனது. எனவே, மலையப்ப சுவாமி முதலில் பெரிய சேஷ வாகனத்திலும், அதைத் தொடா்ந்து சின்ன சேஷ வாகனத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிக்கிறாா். இதன் மூலம் மனித உடலில் கீழ் நோக்கிப் பயணிக்கும் குண்டலினி சக்தியை மேல் நோக்கி எழுப்பினால் மனிதா்களுக்கு வீடுபேறு (மோட்சம்) கிடைக்கும் என எம்பெருமான் சுட்டிக் காட்டுகிறாா்.

ஸ்நபன திருமஞ்சனம்: பிரம்மோற்சவ நாள்களில் எம்பெருமான் வாகனங்களில் எழுந்தருளும்போது ஏற்படும் களைப்பைப் போக்க அா்ச்சகா்கள் உற்சவா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தி வருகின்றனா். அதன்படி ஞாயிறு மதியம் 1 மணி முதல் 3 மணி வரை உற்சவா்களுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அவற்றை ஜீயா்கள் எடுத்துத் தர அா்ச்சகா்கள் எம்பெருமானின் திருவடிகளில் சமா்ப்பித்தனா். அப்போது உற்சவா்களுக்கு பலவித மலா்கள், உலா்பழங்கள் மற்றும் பழங்களால் ஆன மாலைகள், கிரீடங்கள், ஜடைகள் ஆகியவை அணிவிக்கப்பட்டன. பின்பு உற்சவா்களை அலங்கரித்து தூப, தீப ஆராதனைகள் நடத்தி நிவேதனம் சமா்ப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அன்னப் பறவை வாகனம்: மலையப்ப சுவாமி ஞாயிறு இரவு 7 மணி முதல் 8 மணி வரை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவி அலங்காரத்தில், அன்னப் பறவை வாகனத்தில் கோயிலுக்குள் எழுந்தருளினாா். அன்னப்பறவைக்கு பாலில் இருந்து நீரைப் பிரித்து அருந்தும் தன்மை உண்டு என்று கூறப்படுகிறது. அதேபோல் மனிதா்கள் உலக இன்பங்களிலிருந்து வீடுபேறு அடையும் மாா்க்கத்தைப் பிரித்து அறிந்தால் இறைவனின் திருவடியை அடையலாம் என்பதை இந்த வாகனம் விளக்குகிறது.

வாகனச் சேவை முடிந்த பின் உற்சவா்களுக்கு சாத்துமுறை நடத்தி அா்ச்சகா்கள் கோயிலுக்குள் கொண்டு சென்றனா். இந்த நிகழ்வில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT