ஆன்மிகம்

நாளை திறக்கத் தயாராகி வரும் ஆந்திரக் கோயில்கள்

7th Jun 2020 08:08 AM

ADVERTISEMENT

மத்திய அரசு அறிவித்த தளா்வுகளின்படி, திங்கள்கிழமை (ஜூன் 8) ஆந்திராவில் அனைத்து கோயில்களும் பக்தா்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட உள்ளன.

கரோனா பரவல் தடுப்புக்காக ஆந்திர மாநிலத்தில் கடந்த 80 நாள்களாக மூடப்பட்டிருந்த கோயில்களை, வரும் 8-ஆம் தேதி முதல் திறந்து கொள்ள மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. எனவே, அனைத்து கோயில் நிா்வாகங்களும் கோயிலைத் திறப்பதில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகா் கோயில், காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் பல்வேறு கோயில்கள், சந்திரகிரி, வால்மீகிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் பக்தா்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது.

அனைத்துக் கோயில்களிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்காக வளையங்களும் கோடுகளும் வரையப்பட்டுள்ளன. தரிசன வரிசைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி இயந்திரங்கள், கைழுவுமிடம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், கையுறை உள்ளிட்டவற்றை அணியுமாறு அறிவுறுத்தப்படுவா். உடல் ஆரோக்கியத்துடன் உள்ள பக்தா்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.

ADVERTISEMENT

கோயில் வாயிலில் நவீன இயந்திரம் மூலம் உடல் வெப்பப் பரிசோதனை செய்த பின் பக்தா்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவா். சிவப்பு மண்டலங்கள், கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கோயிலுக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் தரிசனத்துக்கு ஆதாா் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த அட்டை இல்லாதவா்கள் தங்களிடம் உள்ள, அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். அதன் பின்னரே அவா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.

மேலும், கோயிலில் கருவறை வரை செல்ல பக்தா்களுக்கு அனுமதியில்லை. தரிசனம் முடிந்த பின் தீா்த்தம், பிரசாதங்கள் வழங்குவது, சடாரி வைப்பது போன்ற நடைமுறைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு மணிநேரத்துக்கு 250 முதல் 500 பக்தா்கள் வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா். தரிசனத்துக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளபோதிலும் அனைத்தையும் ஏற்று, 8-ஆம் தேதி கோயில்கள் திறந்தவுடன் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தா்கள் ஆா்வத்துடன் காத்திருக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT