ஆன்மிகம்

செவ்வாய்க் கிழமைகளில் முடி, நகம் வெட்டக்கூடாது ஏன்? 

4th Nov 2019 12:41 PM

ADVERTISEMENT

 

நம் முன்னோர்கள் காரணமில்லாமல் எதையும் சொல்லி வைப்பதில்லை. செவ்வாய்க்கிழமையில் முடி, நகம் வெட்டினால் வீட்டிற்கு நல்லதல்ல என்றும் தரித்திரம் சூழ்ந்துகொள்ளும் என்றும் சொல்லிவைத்துள்ளனர். அதைச் சிலர் பின்பற்றுவதும், பலர் அதையெல்லாம் நம்பாமல், அது வெறும் மூடநம்பிக்கை, கட்டுகதை என்றும் உதாசினப்படுத்தவும் செய்கின்றனர். 

சில குடும்பத்தில் பெரியோர்கள் சொல் ஏற்புடையதாய் இருக்கும். எதற்காக நம் முன்னோர்கள் செவ்வாய்க் கிழமையில் மட்டும் இதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்கின்றனர். இதற்கு எதாவது காரண காரியங்கள் இருக்குமா என்றால் நிச்சயம் இருக்கிறது என்றே சொல்லலாம். 

ஜோதிட ரீதியாக செவ்வாய்க்கிழமைகளில் முடி, நகம், முகச்சவரம் ஆகிய செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளிலிருந்து 8 மாதங்கள் குறைவதாகச் சொல்லப்படுகிறது. ஒருசில ஜோதிட நுணுக்கங்களை வைத்து ஜோதிடர்கள் இதனைச் சொல்கின்றனர். 

ADVERTISEMENT

மனித உடலில், இரத்ததின் காரகனாக செவ்வாயைச் சொல்வதுண்டு. இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே, செவ்வாய்க் கிழமைகளில் கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி முடி, நகம், முகச்சவரம் செய்யும்போது தேவையற்ற கீறல், வெட்டுப்படுதல் போன்ற காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஒருவேளை செவ்வாய்க் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்கூடும்.

மேலும், இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏன் என்றால் அன்றைய தினம் துர்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. செல்வத்தை வாரிவழங்கும் அன்னை மகாலட்சுமி நம் இல்லத்திற்குள் வாசம் செய்வதாக ஐதீகம்.

இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வதோ, வீட்டில் உள்ள பொருட்களைத் தூக்கி வெளியில் எறியவோ மாட்டார்கள். இந்நாளில் மற்றவருக்கு தானம் செய்தால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையை மக்களிடையே உண்டு. இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள்.

இவ்வாறு பல்வேறு காரணங்களால் செவ்வாய்க்கிழமைகளில் முடி, நகம், முகச்சவரம் செய்ய வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்ததோடு மட்டுமல்லாமல் அதை நம்மிடம் வலியுறுத்தியும் வருகின்றனர். முன்னோர்களின் வார்த்தைகளை நாமும் பின்பற்றி நல்வழியில் நடப்போம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT