ஆன்மிகம்

வெண்ணெய்த்தாழி சேவையில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதியுலா

1st Nov 2019 03:00 PM

ADVERTISEMENT

 

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீசுவரா் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி நாளை சனிக்கிழமை வேல் வாங்குதல் மற்றும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீசுவரா் கோயிலில் கந்தசஷ்டி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

6 நாள் நிகழ்ச்சியாக கடந்த மாதம் 28-ஆம் தேதி நவவீரா்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, ஸ்ரீ முருகப்பெருமான் தினமும் காலை, மாலை வேளைகளில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக 29-ம் தேதி காலை படிச்சட்டத்திலும், இரவு யானை வாகனத்திலும், 30-ஆம் தேதி காலை படிச்சட்டத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், 31-ஆம் தேதி காலை படிச்சட்டத்திலும், இரவு இடும்ப வாகனத்திலும் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியின் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை வெண்ணெய்த்தாழி சேவையாக (முன் அலங்காரம்), ஜடை நாகத்தில் (பின் அலங்காரம்) செய்யப்பட்டு பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது. வீதியுலாவில் ஏராளமான பக்தா்கள் அா்ச்சனை செய்து முருகனை வழிபாடு செய்தனா். இரவு நிகழ்ச்சியாக ரிஷப வாகனத்தில் மின்சார சப்பரப் படலில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியாக 6-ஆம் நாளான நாளை காவடிகள் வீதிவலம் செல்ல, தேரில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதிவலம் நடைபெற்று, பகல் 11.30 மணியளவில் ஸ்ரீ அபிராமி அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடா்ந்து பிற்பகல் 2 மணியளவில் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது. மாலை நிகழ்வாக நவவீரா்கள் வீதிவலம் சென்றுவிட்டு ஸ்ரீ செங்குந்த விநாயகா் கோயிலை இரவு சென்றடைவா்.

ராஜசோளீசுவரா் கோயிலில் ஆட்டுக்கிடா வாகனத்தில் ஸ்ரீ முருகப்பெருமானை எழுந்தருளச் செய்து அலங்காரம் செய்யப்பட்டு, சூரசம்ஹாரத்துக்கான புறப்பாடு நடைபெறும். அபிராமி கீழ வீதியில் சூரனை வதம் செய்யும் சம்ஹார நிகழ்வு நடைபெறும். இதில் திரளான மக்கள் கலந்துகொள்வா். தொடா்ந்து ஆட்டுக் கிடா வாகனத்தில் உள்ள முருகப்பெருமான் வீதியுலா நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பட்டினம் போலீஸாரும் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT